விஜயகாந்த் உடல்நிலையைப் பற்றி குறை சொல்கின்றார்கள் என்று நிறைய நண்பர்கள் ஆதங்கப்படுகின்றார்கள். இது குறை அல்ல, அக்கறை. தமிழ்நாட்டின் மீதான அக்கறை.

vijayakanth premalathaஒருவேளை பதவிக்கு வந்தால் இந்தியாவே அவரை காமெடியனாக பார்த்துவிடக் கூடாது என்கிற அக்கறை. அவர் காமெடியனானால் தமிழ்நாட்டு மக்களே காமெடியன்களாக மாறிப் போவார்கள். .

எந்த விதமான ஊழல்களுக்கும் சிக்காமல், தன்னைத் தேடி வந்தவர்களுக்கு உணவளிக்கின்ற சிறந்த மனிதர் விஜயகாந்த். அவரை அரசியலுக்கு இழுத்துவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றார்கள் சிலர். அவர் அதனை உணர வேண்டும்.

ரமணா படம் வந்தபொழுது விஜயகாந்தை இப்பொதுள்ள சகாயம் ஐஏஎஸ் போல நினைத்துக் கொண்டார்கள்... எழுதிக் கொடுத்ததை வாசிக்கின்ற கிளிப்பிள்ளைதான் என்று தெரிந்திருந்தாலும் இவரைப்போல ஒருவரால்தான் தமிழ்நாட்டிற்கு மாற்றம் வரும் என்று நினைத்தவர்கள் எல்லாம், அவரை வைத்து நடைபெறுகின்ற நாடகத்தை ரசித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவனுக்கு ஒரு குறிப்பிட்ட துறையில் நல்ல அனுபவம் இருக்கின்றது. திடீரென்று அவனது துறையில் சில பிரச்சனைகள் முற்றிலும் அவனுக்கு சம்பந்ததே இல்லாத இன்னொரு துறைக்கு மாற நினைக்கின்றான் என்றால் குறைந்தப்பட்ச தகுதியையாவது அந்தத் துறையில் தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்... இல்லையெனில் அவனை காலம் புறந்தள்ளிவிடும்..

அதுபோலத்தான் விஜயகாந்தும். ஒன்று , மக்கள் பிரச்சனைகளைப் பற்றி குறைந்த பட்ச அறிவு இருந்திருக்க வேண்டும். அல்லது குறைந்த பட்ச அறிவு உள்ள எவருடனாவது கலந்து ஆலோசித்து அதுபற்றியான விசயங்களையாவது மக்களிடம் பேச வேண்டும்... அதை விட்டு விட்டு தன்னுடைய இயலாமையை மறைப்பதற்காகவே பத்திரிக்கைகாரர்களிடமும், மக்களிடமும் எரிச்சல் படுகின்றார்.

அவர் எந்தப் பதவிக்கும் தகுதி இல்லாதவர் என்று அவருக்கு யாராவது பக்குவமாக சொல்ல வேண்டும். ஆனால் அவரைச் சுற்றி உள்ளவர்கள் அவரை வைத்து பணம் பண்ண ஆசைப்படுகின்றார்கள்; அதனால் வெற்றுப் புகழ்ச்சியில் அவரை மேடையேற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்...

தன்னுடைய தகுதியை உணர்ந்த முட்டாள் கூட புத்திசாலிதான்.

அவரால் ஒரு மாற்றம் வந்துவிடாதா என்றுதான் 5 ஆண்டுகள் எதிர்கட்சி அந்தஸ்து கொடுத்து மக்கள் அழகு பார்த்தார்கள். என்ன கிழித்தார் அவர்..?

எந்தப் பிரச்சனையைப் பற்றிக் கேட்டாலும் பத்திரிக்கையாளர்களை துப்புவதும், அடிக்க வருவதும்... எதற்கு முன்மாதிரியாக இருக்கின்றார் இவர்..?

பொதுப்பிரச்சனை பற்றிக் கேட்டால் "பேப்பர் படிக்கவில்லை" என்கின்றார். நாளைக்கு எங்க ஊர்லயும் ஒரு பிரச்சனை வரும்... அதற்கும் இப்படித்தான் பேப்பர் படிக்கவில்லை என்று அலட்சியப்படுத்துவாரா... எந்தத் தகுதியை வைத்து இவரை தமிழ்நாட்டின் பிரச்சனையை தீர்க்கப் போகின்ற மகா புருஷராக ஏற்றுக் கொள்வதாம்..?

2011 பொள்ளாச்சி பிரச்சாரத்தில் அவரிடம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு பிரச்சனையைப் பற்றிக் கேட்கின்றார்கள். "நீ யாருக்கு ஒட்டுப் போட்டியோ அவங்க கிட்ட போய் கேளு" என்கிறார்.... "நான் பேச வருவதைக் கேளுங்க" என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேசுகின்றார். 

சரி பொள்ளாச்சியின் அந்தப் பிரச்சனைக்கு ஏதோ தீர்வு வைத்திருக்கின்றார் என்று நினைத்தால் , "ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச" என்று பாட்டையே பதிலாக கூறுகின்றார். தமிழ்நாட்டு மக்களின் சவக்குழி சினிமாவுக்குள் இருக்கின்றது என்று தெரிந்த புத்திசாலி அவர்.

2012 டெல்லி ப்ரஸ் மீட்டில் "அப்துல்கலாம் தூங்கிக்கிட்டு இருக்கும்பொழுது கனவு காண்" என்று சொல்வதாக உளறுகின்றார். இன்னொரு மீட்டிங்கில் "ஊழல் எல்லாம் நல்ல விசயம்தான் சார்" என்கிறார். 
வார்த்தைப் பிழறல்களும், உளறல்களும் எல்லாருக்கும் இயல்புதான்... ஆனால் எப்பொழுதுமே உளறிக்கொண்டிருந்தால் என்னவென்பது..?

ஊடகங்களும் இவரைப் பேட்டி எடுப்பது இவர் பிரச்சனைக்கு தீர்வு தருவார் என்பதற்காக அல்ல. தங்களுடைய டிஆர்பி ரேட்டிங் அதிகப்படுத்தவதற்காக... கிடைக்கப் போகின்ற ஒரு காமெடி வீடியோவுக்காகத்தான். இவர் துப்புவார் என்று தெரிந்தே அவர்கள் கேள்விகள் கேட்கின்றார்கள். அவரைப் பகடைக்காயாக அவர்கள் நகர்த்தும் அரசியலைக் கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

vijayakanth comedy

ஒரு ஸ்டேட்டஸ் பேஸ்புக்கில் போடுவதற்கு முன்னால் எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கின்றது? 4 லைக் வாங்குற ஸ்டேட்டசுக்கே இப்படி மெனக்கெட வேண்டியதிருக்கின்றது என்றால், இத்தனை கோடி மக்களின் தலைவனாக தன்னை காட்டிக் கொள்ள முயற்சிக்கும் விஜயகாந்த், பேசுவதற்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு முன்பு, கொஞ்சமாவது தன்னை தயார் படுத்திக்கொண்டு வரவேண்டாமா..?

அவரது இயலாமை அவரைச் சுற்றி உள்ளவர்களுக்கு நிச்சயமாக தெரியும். ஆனால் அவற்றை மறைத்து அவரை சினிமா ஹீரோவாகவே மக்களின் முன் நிறுத்தி ஏமாற்றுகின்றார்கள்...ஊருக்கே ஹீரோவாக இருந்தாலும் மனைவிக்கு முன் நிறைய விசயங்களில் நாம் மொக்கை வாங்குவது சகஜம். மனைவிக்கு மட்டும்தான் நம்முடைய கோமாளித்தனம் தெரியும்...ஆனால் அந்த கோமாளித்தனம் தெரிந்தும் அவரது மனைவியும் அதனை மறைக்க முயற்சிப்பது மக்களை ஏமாற்ற வந்த ஒரு மாற்றமே…

மின்சாரம் பற்றி கேட்டால் "மின்மிகை மாநிலமாக மாற்றுவேன்" என்கிறார். "பெட்ரோல் விலையை அதிரடியாக குறைப்பேன்" என்கிறார். சரி நல்ல விசயம்தான், "அதனை எப்படிச் செய்வீர்கள்" என்றால் "ஓட்டுப் போடுங்க" என்கிறார்.

உண்மையாக மக்களுக்கு தொண்டு செய்யத்தான் அவர் வந்திருக்கின்றார் என்றால் ஓட்டு போட்டுதான் தொண்டு செய்ய வேண்டுமா என்ன..? அவர் என்ன திட்டம் வைத்திருக்கின்றார் என்று நடப்பு அரசாங்கத்திடம் சொல்லி மக்களுக்கு உதவலாம். உண்மையில் அவரிடம் எந்தத் திட்டமும் இல்லை. எப்படி நரேந்திர மோடி 15 லட்சம் தருகிறேன் என்று ஆசை காட்டி மக்களை ஏமாற்றினாரோ அதே பாணியில் இவரும்..

திமுக, அதிமுகவிற்கு உண்மையான மாற்று என்றால் வரவேற்கக் கூடியதே... ஆனால் திட்டம் என்ன? மக்களுடைய பிரச்சனைகளை எப்படி தீர்க்கப் போகின்றார்? மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றது? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அவரின் திட்டங்கள் என்ன? ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன? அவற்றுக்கு அவரது கட்சி என்ன தீர்வு வைத்திருக்கின்றது என்பதைப் பற்றியெல்லாம் பேசாமல்.....

"தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் நடக்கும் போர்"ன்னு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கார். "அவங்க கொள்ளையடிக்கிறாங்க இவங்க கொள்ளையடிக்கிறாங்க"...."நான் அவங்களுக்கு எதிரி " என்கிறார்.... மேடைக்கு தடுமாறி நடந்து வருகின்றார். ஆனால் "ஏய் ஏய் என்ன கீழே இறங்கி வரட்டா" என்கிறார்.

சபை நாகரீகம் தெரியாமல் கோமாளித்தனம் செய்கின்றார். "வரும்போது ரோடு சரியில்லை" என்கிறார். ஒன்றுமே பேசாமல், "நான் பேசவா வேண்டாமா" என்கிறார். அடிக்கடி மணி பார்க்கின்றார்...... "சொம்பைங்களா" என்கிறார்....

தமிழ்நாட்டில் இருக்கிற தலையாய பிரச்சனையே தனது தொண்டர்கள் விசில் அடிப்பதும் கத்துவதும் மட்டும்தானா.? பொது வாழ்வில் இருப்பவர்களின் முதல் தகுதியே சகித்துக் கொள்ளுதல். அந்தச் சகிப்புத்தன்மை அற்றவர்கள் நிச்சயமாய் பொறுப்பான பதவிக்கோ நிலையான திட்டத்தையோ நிறைவேற்ற முடியாது.....

சிவாஜி முதல் சிரஞ்சீவி வரை ரசிகர்களை தொண்டர்களாக மாற்றிய எல்லாருமே ஜெயித்து விடுவதில்லை ரசிகர்களை தொண்டர்களாக மாற்றியவர்கள் திரையில் உள்ளதைப் போலவே மக்களுக்கு முன்னால் கதாநாயகனாக தோன்றவில்லையெனில் அவனை காலமே காமெடியனாக்கிவிடும்... அதுதான் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது....

தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றார்கள்; ஆனால் அந்த தமிழ்நாட்டை கோமாளியிடம் கொடுத்துவிட்டு வேடிக்கைப் பார்க்க விரும்பவில்லை....

"உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி 
இடைக்கண் முரிந்தார் பலர்."

கூடுகின்ற கூட்டத்தைப் பார்த்து தனக்கு வலிமை இருப்பதாக கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டு சுற்றியுள்ளவர்களின் சுயநலத்தின் தூண்டுதலால் பதவிக்கு வர ஆசைப்பட்டு அரசியல் கட்சித் தொடங்கி அதனை கொண்டு செல்ல எந்தக் கொள்கையும் இல்லாமல் தன்னுடைய இயலாமையை மறைப்பதற்கு முடியாமல் மற்றவர்கள் மீது கோபப்பட்டு தன்னையே அழித்து கொண்டிருக்கின்றார் கேப்டன்.

அவருக்கு நோய் என்றால் அவர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். பதவி ஆசை என்றால் மக்களே சிகிச்சை அளித்து விடுவார்கள்.

Pin It