சனநாயகத்தின் முதன்மைக்கூறு என போற்றப்பட்டே, தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அவ்வாறே, தமிழ்நாடு சட்டப் பேரவைக்கானத் தேர்தலும் நடைபெற்றது.
சனநாயக அடிப்படையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதென்றால், அவர் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது தற்போது நடைபெறும் தேர்தலின் அடிப்படை விதி! ஆனால், உண்மையில் இங்கு இதுதான் நடக்கிறதா என்பது மிகப்பெரும் கேள்விக்குறி!
இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் மொத்தம் 5.77 கோடி பேர் (5,77,33,574). அதில், தேர்தலில் பங்கேற்றவர்கள் 4.28 கோடி பேர் (4,28,73,674). அதாவது, மொத்தமுள்ள வாக்காளர்களில் 74.26 விழுக்காட்டினர் மட்டுமே தேர்தலில் பங்கேற்றனர். இவையெல்லாம் நாம் அறிந்த செய்தி தான். அறிந்து கொள்ளாத இன்னொரு செய்தியும் இருக்கிறது!
தேர்தலில் வாக்களித்த 4.28 கோடி பேரில், முதலமைச்சர் செயலலிதா மீதுள்ள வெறுப்பால் - செயலலிதா ஆட்சியில் தொடர வேண்டாம் என்ற முடிவின் பேரில், தாங்கள் விரும்பிய வேறு கட்சிகளுக்கும், எந்தக் கட்சிக்கும் வாக்கில்லை என நோட்டாவுக்கும் வாக்களித்த மக்களின் எண்ணிக்கை சற்றொப்ப 2.56 கோடி (2,55,90,775). அதாவது 59.2 விழுக்காட்டினர்!
ஆனால், “செயலலிதாவே ஆட்சியில் தொடர வேண்டும்” என வாக்கு அளித்தவர்களோ, 1.76 கோடி பேர் தான் (1,76,17,060). அதாவது, 40.8 விழுக்காட்டினர். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 44.34 விழுக்காடு (1,79,83,168) வாக்குகள் பெற்ற அ.தி.மு.க., தற்போது அதிலிருந்து 4 விழுக்காடு சரிந்து, 40.8 விழுக்காடு வாக்குகளே பெற்றுள்ளதையும் கவனிக்க வேண்டும்.
இப்படி, “பெரும்பான்மையினரின் தேர்வு” என்ற பெயரில், சிறுபான்மை வாக்குகள் வாங்கிய ஒருவரால், தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் பதவியில் அமர முடியும் என்பது மீண்டும் ஒருமுறை நம் கண்முன்னேயே மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வழியிலேயே, இந்தத் தேர்தலில் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்படாத செயலலிதா, ஓட்டை உடைசல்கள் வழியே தற்போது மீண்டும் முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். போகட்டும்!
தமிழ்நாட்டு உரிமைகளை இந்திய அரசின் காலடியில் வைக்கப் பயன்படும் அடிமைப் பதவிக்கு, பெரும்பான்மை வாக்கு வாங்கினால் என்ன - சிறுபான்மை வாக்கு வாங்கினால் என்ன? இரண்டும் ஒன்றுதான்!
ஆனால், போலி சனநாயகத்துடன் நடத்தப்படும் - அதிகாரமற்ற இந்த சட்டப் பேரவைக்கானத் தேர்தலில், பணபலமிக்க திராவிட அரசியல் கட்சிகளை வீழ்த்திவிட முடியும் என்றும், “மாற்று அரசியல்” என்ற பெயரிலும், தேர்தல் அரசியல் களத்தில் கடுமையாக உழைத்த நம் நண்பர்கள் பலர் தோற்றுள்ளது வருத்தத்தையேத் தருகிறது.
அணு உலைக்கு எதிரானப் போராட்டத்தில் முதன்மைப் பங்காற்றிய முனைவர் சுப. உதயக்குமார், பொதுநல வழக்குகளில் அறியப்பட்ட டிராபிக் இராமசாமி, மணல் கொள்ளைக்கு எதிரான போராளித் தோழர் பிரபாகரன் என, தேர்தலுக்கு வெளியே உழவர் போராட்டம் - மணல் கொள்ளை எதிர்ப்பு - மதுக்கடை எதிர்ப்பு - சூழலியல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சிக்கல்களில் போராடிய பலரும், தேர்தல் அரசியலின் இன்றைய யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல், நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம். எனப் பல்வேறு கட்சிகளின் சார்பில் பல தொகுதிகளில் போட்டியிட்டுத் தோற்றுள்ளனர்.
உண்மையான சமூக மாற்றத்திற்குப் போராடுபவர்கள், தேர்தல் அரசியலில் சிக்கிச் சீரழியக் கூடாது என்பதே எங்கள் விருப்பம் – எம் கோரிக்கை! ஏனெனில், உண்மையான மாற்று, இதற்கு வெளியில்தான் இருக்கிறது.
கொள்கைகள் பேசி – தேர்தல் களத்தில் மிகப்பெரும் மாற்றங்களை உருவாக்கிட முடியாது. ஏனெனில், இன்றையத் தேர்தல் களம் என்பதே, ஆதிக்க சக்திகள் நம்மை நாமே வீழ்த்திக் கொள்ள உருவாக்கப்பட்ட ஏற்பாடுதான்! ஆங்கிலேயர்கள் இதை அறிமுகப்படுத்தினர். அவர்களுக்குப் பின் நம்மை ஆண்டு கொண்டிருக்கும் ஆதிக்க இந்தியத் தேசியவாதிகள் இதை கடைபிடிக்கின்றனர்.
அன்னா அசாரே போன்ற ஊழல் எதிர்ப்புத் தன்னார்வளர்களை, முனைவர் உதயக்குமார் போன்ற சூழலியல் செயல்பாட்டாளர்களை, மாவோயிஸ்ட்டுகளை எனப் பலரையும் – அவர்களது போர்க்குணமிக்கப் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் விதமாக, எம்மோடு “சனநாயகப் பாதையில்” - தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்டுங்கள் என இந்திய அரசு சவால் விடுவது, தற்செயலானதல்ல!
சீரழிந்த நிலையிலுள்ள தேர்தல் அரசியலின் எதார்த்த நிலையைப் புரிந்து கொள்ளாமல், தேர்தல் அரசியல் சகதிக்குள் சிக்குபவர்கள், தமது (முழு) ஆற்றல் அனைத்தையும் தேர்தலில் செலவிட்டு, பணபலமிக்க எதிரிகளிடம் தோற்றுப்போய், அந்த விரக்தியின் காரணமாக சோர்வுற்று - பொது வாழ்விலிருந்தே விலகிக் கொள்ளும் அபாயத்தை நோக்கித் தள்ளப்படுவர். இதுவே, இன்றைய வருந்தத்தக்க மெய்நடப்பு!
மக்களுக்கான உண்மையான களம், தேர்தல் அரசியலுக்கு வெளியே இருக்கிறது! அதை வளர்த்தெடுப்பதே, இன்றையத் தலையாயக் கடமை – தலையாயத் தேவை!
“மாற்று அரசியல்” என்பது தேர்தல் அரசியலில் பதவி வெல்வதில் கிடையாது. “மாற்று அரசியல்” என்பது வெறும் ஆளை மாற்றும் – ஆட்சியாளர்களை மாற்றும் அரசியல் கிடையாது அது, மக்களிடையே உருவாக்கப்பட வேண்டிய புதிய எழுச்சி - புதிய மறுமலர்ச்சி - புதிய போக்கு! அதை தேர்தல்களின் மூலம் வென்றெடுக்க முடியவே முடியாது.
அடுத்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா – பணம் கிடைக்குமா – பதவி கிடைக்குமா என எதிர்ப்பார்ப்பவர்களை சேர்த்து வைத்துக் கொண்டு, “மாற்று அரசியல்” – “இலட்சிய அரசியல்” என்றெல்லாம் பேசினால், அது தோல்வியில்தான் முடியும்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்தியத்திடம் உரிமைகளை இழந்துவரும் தமிழ்நாட்டுக்கு, தற்போதையத் தேவை, புதிய முதல்வரோ – புதிய மாநில அரசோ அல்ல! பதவி – பணம் – விளம்பரம் – இவற்றையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு இலட்சியத்திற்காக களத்தில் நிற்கத் துணியும் இலட்சக்கணக்கான இளைஞர்களே, இன்றைய தேவை!
அவர்களை உருவாக்குவது – வழிநடத்துவது ஒன்றே எதிர்காலத் தமிழ்ச் சமூகத்திற்குப் பயனளிக்கும் செயல். அதுவே மாற்று அரசியல்! அந்தப் பாதையில் உருவாகும் இலட்சிய மனிதர்களே மாற்று அரசியலின் அடிப்படை அலகு! அவர்களே நம் இலக்கு!
இது நீண்ட நெடிய காலமெடுக்கும் கடினமான செயல்தான்! இருப்பினும் வேறு வழியில்லை! தனிநபர் தொடங்கி பெரும் அரசியல் கட்சிகள் – ஆட்சியாளர்கள் வரை, புரையோடிப் போயிருக்கும் பிழைப்புவாத மனநிலையை விரட்ட, இலட்சியத்தை நோக்கி சமூகத்தை உந்தித்தள்ளும் மாற்று அரசியல் சக்திகளே இன்றைக்குத் தேவை!
இத்தேர்தலில் வாக்களிக்க மறுத்தோர் இடையேயும் “யாருக்கும் இல்லை” என நோட்டாவில் பதிவு செய்தோரிடையேயும் இதற்கான மாற்று முயற்சிகள் தொடங்கினாலே போதும்! அதுவே எதிர்காலத்தில் மாற்று ஆற்றலாக வளர வாய்ப்புள்ளது.
இவற்றையெல்லாம் உணர்ந்து, தமிழ் மக்களை போராட்டக் களங்களுக்கு அணிதிரட்டும் அடிப்படைப் பணிகளில் நாம் ஈடுபடுவோம்! அதுவே இச்சமூகத்தை மாற்றும்!
- க.அருணபாரதி