vote electionஎனது அருமை வாக்காளப் பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை... என்று சொல்லி ஒரு வாக்காளைனை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர வைத்து அவனை உச்சாணிக் கொம்பில் ஏற்றி அழகு பார்க்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்... சுமைதாங்கிகளே என்று ஒரு குரல் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கும் அதற்கானக் காரணத்தை இக்கட்டுரையின் நிறைவில் சொல்கிறேன்.

தேர்தல் திருவிழா:

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் மொழி, இனம் பாகுபாடின்றி சந்தித்தே ஆக வேண்டிய பொது திருவிழாவாக தேர்தல் இருக்கிறது. 234 இடத்திற்காக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டி, பல கோடிகள் கணக்கின்றி செலவு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், அரசியல் காமெடிகள் விதவிதமாக அரங்கேறும் போது இதை திருவிழா என்று சொல்வதில் தவறு ஏதும் இல்லையே!

ஒவ்வொரு வேட்பாளர்களும் அவரவர் களத்தில் வாக்குச் சேகரிக்கும் விதமோ மிக சுவாரசியமாக இருக்கிறது வாக்காளப் பெருமக்களை வேட்பாளர்கள் அணுகும் விதம் ரசிக்கவும், நகைகவும், நெளியவும், ஆத்திரப் படவும் வைக்கிறது என்று சொன்னால் அதை அணுவளவும் மறுக்க முடியாது!

ஒரு பிரபல ராயபுரம் வேட்பாளர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொடுக்கிறார், ஹோட்டலில் சமைத்துக் கொடுக்கிறார். ஆயிரம் விளக்கில் ஒரு பிரபல வேட்பாளர் தோசை சுட்டுக் கொடுக்கிறார். அனைத்து தொகுதியிலும் தனித்து நிற்கும் ஒரு கட்சியின் வேட்பாளர் வாக்காளருக்கு முகசவரம் செய்து விடுகிறார், ஒரு நட்சத்திர வேட்பாளர் ரேஷன் கடையில் பொருள் வாங்கி கொடுக்கிறார்.

ஒரு பிரபல அமைச்சர் வேட்பாளர் என்னை வெற்றி பெற வைக்கவில்லை என்றால் உயிரை விட்டுவிடுவேன் என்று தற்கொலை மிரட்டல் விடுகிறார். ஒரு தேசியக் கட்சியின் வேட்பாளர் இன்னொரு வேட்பாளரை அவர் உதட்டுக்கு சேவைச் செய்பவர் என்று சொல்லிக் கேட்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறார்.

காரணம் அப்படிச் சொன்னவர் ஒரு பெண் வேட்பாளர், எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு வேட்பாளர் சொன்னார் எனக்கு நீங்கள் ஓட்டு போட வில்லை என்றால் நீங்கள் நல்ல சாவு சாவ மாட்டீர்கள் என்று.

இப்படி ஒவ்வொரு வேட்பாளர்களும் வாக்காளர்களை ரசிக்க, சிரிக்க, சினக்க வைக்க வைப்பதில் போட்டி போடுகிறார்கள்!

ஏன்? எதற்கு ? எப்படி?

கோடிகளைக் கொட்டி வியர்வை சிந்தி வாக்காளர்களின் உள்ளம் கவர்ந்து இப்படியெல்லாம் பாடுபட வேண்டிய அவசியம் என்ன?

மாதம் 205000 ரூபாய் சம்பளம், தொகுதி முழுவதும் சுற்றிவர அரசு செலவு, செல்லும் இடமெல்லாம் மாலை சால்வை புகழ் போதை, அதிகாரிகளை பணியவைக்கும் அதிகார போதை, தொகுதி நலனுக்காக ஏன் எதற்கு என்று கேட்காமல் 5 வருடத்திற்கு 15 கோடி ஒதுக்கீடு, நின்றால் பணம் நடந்தால் பணம் கையெழுத்துப் போட்டால் பணம். சொன்னது கையளவு சொல்லாதது கடலளவு!

பிறகு ஏன் இருக்காது போட்டிக்கு பஞ்சம்!

தமிழக அரசின் தற்போதைய கடன் நிலுவை 4 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக இருப்பதன் காரணத்தால் எம்எல்ஏவின் சம்பளம் மற்றும் சலுகைகள் 50% குறைக்கப்படும், தொகுதி நிதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டு அவசியப்படும் இடத்தில் அரசே நேரடியாக செலவு செய்யும் என்று ஒற்றை அறிவிக்கை விட்டால் போட்டியிடுவதற்கு ஆள் கிடைக்காது என்பதுதான் உண்மை!

1980களில் காங்கிரஸ் அமைச்சர் கக்கனுக்கு பிறகு இன்றுவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எம்எல்ஏக்களை பட்டியலிட்டால் எத்தனை பேர் வருவார்கள்? மேன்மக்கள் மேன்மக்களே என்ற ஒரு சொல் இருக்கிறது அது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளுக்கு கச்சிதமாக பொருந்தும்!

வேட்பாளர் தேர்வு:

2005இல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்று பிரதமர் மன்மோகன் சிங்கால் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது அது என்னவென்றால் சாமானியன் கேள்வி கேட்கும் உரிமை!

உங்கள் தொகுதியில் இப்பொழுது எம்எல்ஏ வாக இருக்கும் நபருக்கு கடந்த ஐந்து வருடத்தில் ஒதுக்கப்பட்ட 15 கோடியை அவர் எப்படி செலவழித்தார் என்று கேள்வி கேட்கும் உரிமை ஓட்டு போட்ட ஓட்டு போடாத அனைவருக்கும் உண்டு.

அதை யார் செய்தார்? அப்போ மக்கள் தங்கள் உரிமையைப் பயன்படுத்தும் நிலையிலேயே பஞ்சம் நிலவுகிறது. பிறகு ஓட்டு என்னும் உரிமையை செலுத்துவதில் என்ன அக்கறை காட்டப் போகிறார்கள் என்பதுதான் பிரச்சனை!

அடுத்து தமிழக அரசின் கடன் சுமை அதைப்பற்றி எந்த மக்களும் கவலைப் படுவதில்லை. காரணம் அந்தக் கடனைப் பற்றி மக்களிடம் யாரும் கேட்கப் போவதில்லை.

உண்மைதான் அந்தக் கடன் சம்பந்தமாக மக்களிடம் அரசோ அரசியல்வாதியோ யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... தமிழக அரசின் கடன் சுமை காரணமாக... கேட்காமல் கேட்கப்படுவீர்கள்! தாக்கப்படாமல் காயம் அடைவீர்கள்! சப்தமில்லாமல் வேதனைப்படுவார்கள்!

என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? கடந்த முறை திமுகவின் தேர்தல் அறிக்கை மறக்கவே முடியாது. அதில் ஒரு நற்செய்தி இருந்தது. ஆம் "மதுவிலக்கு" .

கடந்த முறை திமுகவிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டு இருந்தால் இன்றைய தேதியில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும். மதுவால் ஏற்படும் உயிர் பலியும் குற்றங்களும் வெகுவாக குறைந்திருக்கும். நம் கண்ணுக்கு முன்னால் வந்த அந்த ஒரு வாய்ப்பை தவற விட்டது யார்?

சரி விடுங்கள் இப்பொழுது அதே கட்சி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால் அந்த மதுவிலக்கு என்ற விஷயத்தை முன் வைக்கவே இல்லை காரணம் என்ன? கடன் சுமை இலவசங்கள் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாய கடமை! தீர்வு?.

புதிதாக எந்த அரசு வந்தாலும் மேற்படி பொருளாதாரப் பிரச்சினைகளை சீர்செய்ய போக்குவரத்து, பால் வினியோகம், சேவை கட்டணம், மின்சார கட்டணம், சொத்துவரி, வணிகவரி, போன்ற இவற்றிலெல்லாம் ஊமை குத்து குத்தி, அதற்குமேல் போதாக்குறைக்கு மது விற்பனை என்று ஒருமாதிரியாக அரசின் வியாபாரத்தை நடத்த வேண்டியிருக்கும்! கடைசியில் பாதிக்கப்படப்போவது யார் என்றால்.. அரசுக்கு எத்தனை லட்சம் கோடி கடனில் இருந்தால் எனக்கென்ன?

ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன? எனக்கு ஒரு கவலையும் இல்லை!என்று சொன்ன அந்த அப்பாவி மக்களைத்தான் பாதிக்கும்! இதைத்தான் நான் ஆரம்பத்தில் சொன்னேன் சுமைதாங்கி வாக்காளப் பெருமக்களே!?

இறுதியாக நான் சொல்ல வரும் விஷயம் என்னவென்றால் தனக்கு அதிகாரமும் பணபலமும் வரும்போது தன்னுடைய சுபாவம் எப்படி மாறும் என்று உங்களிடம் ஓட்டு கேட்கும் வேட்பாளருக்கே தெரியாது. பிறகு எப்படி ஓட்டுப்போடும் உங்களுக்கு தெரியும்? ஆகவே முத்தான மூன்று விஷயங்களை மட்டும் மனதில் வையுங்கள்!

1. சுயமரியாதையோடு ஓட்டு போடுங்கள்!
2. வென்றவர் யாராக இருந்தாலும் உரிமையைக் கேட்டுப் பெறுங்கள்.
3. ஆட்சியாளர்களின் சுமைதாங்கி யாக இருக்காதீர்கள் முதுகெலும்பாக இருங்கள்!

- எம்.நெய்னார் முஹம்மது (கலீல்)

Pin It