modi 366

மோடி இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்து விட்டார் என்பதற்காக குஜராத் மாநிலத்தில் நடந்த இனப்படுகொலைகளை மறந்து அவரை மன்னிக்க வேண்டும் என்று முசுலீம் சமூகத்தைப் பார்த்து அல்லது பாதிக்கப்பட்ட குஜராத் மக்களைப் பார்த்து திரும்பத் திரும்ப கூறுவது எவ்வளவு குரூரமானது. பெண்களின் வயிற்றைக் கிழித்து கருவை எடுத்து வீசிய குரூர மனம் கொண்ட காட்டுமிராண்டி கும்பலை ஆதரித்த ஒருவரை, அவர் பிரதமர் என்பதால் எப்படி மன்னித்து விட்டு கடந்து செல்ல முடியும்? அவரை மன்னிக்கக் கூடிய அதிகாரம் யாருக்கு இருக்கிறது? பாதிக்கப்பட்டவர்கள் மோடியை எளிதாக மன்னித்து விடுவார்களா? முகம் முழுவதும் விலையுயர்ந்த நறுமணப் பொருட்களை பூசிவிட்டு நாடுநாடாக சுற்றி, மீடியாக்கள் முன்னால் பல் இளித்தால் அவரின் உடலுக்குள் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தின் உருவம் மறைந்து விடுமா?

குஜராத் சம்பவங்களை பாதிக்கப்பட்ட மக்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட மாட்டார்கள். பாதிக்கப்பட்ட பல்கீஸ் பானு என்ற பெண் பத்திரிக்கையாளர்களிடம் சமீபத்தில் கூறிய வார்த்தைகள் யதார்த்தமானது. அவர் கூறினார், "எனது குடும்பத்தைச் சார்ந்த 4 ஆண்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். பெண்கள் ஆடைகள் களையப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். என்னையும் அவர்கள் பிடித்தார்கள். எனது 3 வயதான மகள் சலேஹா எனது கையில் இருந்தாள். எனது கையில் அவளைப் பறித்து தூக்கி வீசினார்கள். அந்த பிஞ்சுக் குழந்தையின் தலை ஒரு கல்லில் பட்டு சிதறியபோது எனது இதயமே தகர்ந்துவிட்டது....................

நான்கு பேர் எனது கை, கால்களை பிடித்து வைத்திருந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராக எனது உடலை சிதைத்தனர். அவர்களது ஆசை தீர்ந்த பிறகு காலால் உதைத்தனர். தலையில் தடியால் அடித்தனர். நான் இறந்துவிட்டதாக கருதி என்னை அவர்கள் அருகில் உள்ள புதரில் வீசிவிட்டுச் சென்றார்கள்.

அந்த கொடூரர்கள் என்னை மிகவும் மோசமான வார்த்தைகளால் வசைபாடினர். அந்த வார்த்தைகள் என்னவென்று என்னால் கூற இயலாது. எனது தாய், சகோதரிகள், 12 உறவினர்கள் ஆகியோரை அவர்கள் என் கண் முன்னால் கொலைச் செய்தனர். பாலியல் ரீதியாக மிக மோசமான வார்த்தைகளை அவர்கள் எங்களை தாக்கும்போது பயன்படுத்தினர். நான் ஐந்து மாத கர்ப்பிணி என்று கூட என்னால் கூற இயலவில்லை. காரணம், அவர்களது கால்களை எனது கழுத்திலும், வாயிலும் வைத்து அழுத்தினர்.

எனது மானத்தை சீர்குலைத்தவர்களை குற்றவாளிகளாக கண்டறிந்தும் சிறையில் அடைத்ததெல்லாம் அவர்களது வெறுப்பைக் குறைத்து விடும் என்பது பொருளல்ல. எனினும் நீதியால் வெற்றி பெற முடியும் என்பதை அது நிரூபிக்கிறது. எத்தனையோ காலங்களாக என்னை மானபங்கப்படுத்தியவர்களை எனக்குத் தெரியும். அவர்களுக்கு நாங்கள் பால் விற்பனை செய்து வந்தோம். அவர்களுக்கு வெட்கம் இருந்திருந்தால் என்னிடம் இவ்வாறு நடந்திருப்பார்களா?... அவர்களை என்னால் எவ்வாறு மன்னிக்க முடியும்?" என்று பல்கீஸ் பானு கேட்கிறார்.

பாதிக்கப்பட்ட இந்தப் பெண் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் தொடர் முயற்சியில் ஈடுபட்டார். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்த பின்பும் அவர்களை பல்கீஸ் பானுவால் மன்னிக்க முடியவில்லை. இந்த வார்த்தைகளைத்தான் பாதிக்கப்பட்ட மக்கள் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சில தொப்பி அணிந்த முசுலீம்களுடன் மோடி கைகுலுக்கிக் கொள்வதால் அவர் முசுலீம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டாரா?

இந்திய மக்களின் மறதித் தன்மை அல்லது கொடூர தன்மை கொண்டவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை, இந்திய மக்களின் பொதுப் புத்தியில் மீடியாக்கள் உதவியுடன் தொடர்ச்சியாக திணித்ததால் மோடி பிரதமராகி விட்டார். ஆனால் அவரது கரங்கள் இன்னும் ஆயிரம் கலவரங்களை வெற்றிகரமாக நடத்தத் தயாராகத்தான் இருக்கிறது. உலகத்திலேயே மிகப்பெரிய பயங்கரவாத இயக்கம் என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கமாகத்தான் இருக்க முடியும். இந்த இயக்கத்தில் இருந்து வரக்கூடிய ஒரு நபரிடம் ஜனநாயகத் தன்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? அவரிடம் எதிர்பார்ப்பது இந்திய மக்கள் மீதான தவறாகத்தான் இருக்க முடியும்!

2500க்கும் மேற்பட்ட முசுலீம் இனமக்களை படுகொலை செய்த கும்பலைச் சேர்ந்த ஒரு பிரதமர் ரம்ஜான் வாழ்த்து கூறினால் என்ன? கூறாவிட்டால் என்ன? அவரிடம் ரம்ஜான் வாழ்த்தை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய மோசடி. குஜராத் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உள்ளத்தில் மோடி என்ற குரூரமான அரக்கன் தோற்றம் அளித்துக் கொண்டுதான் இருக்கின்றான். அவர் பிரதமர் ஆகட்டும்... அல்லது ஜனாதிபதி ஆகட்டும்... ஒட்டுமொத்த உலக மக்களும் அவரை கொண்டாடட்டும்... என்றாலும் பாதிக்கப்பட்ட பல்கீஸ் பானுக்களின் வாரிசுகளின் உள்ளத்தில் இந்தக் கொடூரனின் வரலாறு கூறப்பட்டு கொண்டே இருக்கும். இதே போன்றுதான் ராஜபக்சே என்ற அரக்கனையும் மறக்க வேண்டும் என முதலாளித்துவ நாடுகளின் செய்திகளை வாந்தி எடுக்கும் மீடியாக்கள் கூறிக்கொண்டு இருக்கின்றன. கோஸ்வாமியை அப்படியே காப்பி அடிக்கும் தந்தி டிவியின் பாண்டே போன்ற மேதாவிகள் குஜராத்தை மறக்க வேண்டும் என திரும்பத் திரும்ப கத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரது உறவினர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தால் எளிதாக பாண்டேவால் மறக்க முடியுமா? அப்படி மறந்து விட்டுச் சென்றால் பாண்டேவை அந்த ஆன்மாக்கள் மன்னிக்குமா? மீடியாக்கள் முன்னால் யார் கத்தினாலும் குஜராத் கொடூரங்களுக்கும்... தமிழீழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும்... வரலாறு கண்டிப்பாக பதில் கூறும்.

- ஷாகுல் ஹமீது

Pin It