கம்பெனிகளை எதிர்த்துப் போராடிய நிறுவனத்தை கம்பெனிகளின் கருணைக்கு விடுகிறார்கள்.
பாரம்பரிய அறிவு தரவுகள் நூலகம் (Traditional Knowledge Database Library -TKDL), என்ற ஒன்றை அறிவியல்- தொழிலக ஆய்வுக் கழகம் (Council of Scientific and Industrial Research) என்ற அரசு நிறுவனம் நடத்திக் கொண்டு வந்தது. TKDL என்று அந்த நூலகத்தை சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள்.
இந்தியாவின் பாரம்பரிய அறிவைத் திருடி தங்கள் பெயரில் காப்புரிமை வாங்கும் அந்நிய- இந்திய முதலாளிகளின் முயற்சிக்கு தானே முன்வந்து, முன்னின்று போராடி தோற்கடித்த நிறுவனம் TKDL. அது ஒரு வலைமனை களஞ்சியம். ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவ முறைகளில் உள்ள 300,000 க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்புகள் பற்றிய விவரங்கள் கொண்டதாக TKDL வலை மனை களஞ்சியம் (online repository) உருவாக்கப்பட்டிருந்தது. 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு சமஸ்கிருதம், அராபி, உருது மூலங்களை ஸ்கேன் செய்து, கணினி மயமாக்கி வைத்திருக்கிறது. அதனை எந்த ஒருவரும் தேடி தனக்கானதைப் பெற முடியும். இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் உள்ள காப்புரிமை வழங்கும் அமைப்புகள் காப்புரிமை வழங்குவதற்கு முன்பு TKDL வலைமனையில் தேடி, அங்கே பதிக்கப்பட்டிருந்தால், கம்பெனிகளுக்கு காப்புரிமை வழங்க மறுப்பார்கள். அது பாரம்பரிய அறிவுச் சொத்து. அதனால், தனியார் லாபத்துக்கான காப்புரிமை கிடையாது என்பார்கள். இப்படியாக, இந்தியாவின் பாரம்பரிய மருந்துகள், பூசு பொருட்கள், கலவை மருந்துகள் காப்பாற்றப்பட்டு இந்திய மக்களின் சொத்தாக இருப்பதற்கு TKDL தான் காரணம்.
TKDL உருவாக்கப்படுவதற்கு முன்பு, வேம்பு, மஞ்சள் தயாரிப்புகளுக்கு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பெறப்பட்ட காப்புரிமைகளுக்கு எதிராக இந்தியா போராட வேண்டியிருந்தது. ஆனால், TKDL அமைக்கப்பட்ட பின்னர், 2009 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் இந்திய- அன்னிய கம்பெனிகள் கோரிய 219 காப்புரிமைகள் இக்களஞ்சியத்தின் காரணமாக மறுக்கப்பட்டன. யுனிலீவர், கோல்கேட்- பால்மலைவ், அவஸ்தான்ஜென், அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகம், இந்திய அரசின் யுனானி மருந்து ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட கம்பெனிகள்/ நிறுவனங்கள் எழுப்பிய காப்புரிமை கோரிக்கைகள் தவறானவை என்று TKDL சண்டைக்கு நின்றது. அந்த காப்புரிமை கோரிக்கைகளை தோற்கடித்தது.
இப்படியாக உயிரித் திருடுகளையும் (biopiracy) TKDL தடுத்து வந்தது. அந்த அமைப்பு வரும் மார்ச் 31க்குப் பின்னர் இருக்காது. அதற்கான நிதி ஒதுக்கீடு இல்லை என்று இந்திய அரசு நடத்தும் அறிவியல்- தொழிலக ஆய்வுக் கழகம் ( CSIR) அறிவித்து விட்டது. அதன் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள்.
இந்திய - அன்னிய மருந்துக் கம்பெனிகள் காப்புரிமையைத் தடுக்கும் அமைப்பு என்று TKDL மீது கடும் கோபத்தில் இருந்தனர். TKDLன் செயல்பாட்டால் லாபத்தைப் பறிகொடுத்த கம்பெனிகள் TKDLலை வீழ்த்த வேண்டும் என்ற கொலை வெறியில் இருந்தனர். இறுதியில் வரும் மார்ச் 31 அன்று அதன் கதையை முடிக்க இருக்கின்றனர்.
TKDLல் 100 + ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்தனர். அவர்களை சாதாரணமாக மதிப்பிட்டு விட கூடாது. அவர்களில் பலர் ஆயுர்வேதத்தில் நிபுணர்கள். தகவல் தொழில்நுட்பத்துறை விற்பன்னர்கள். சம்பள உயர்வு கூட இல்லாமல் நாட்டின் அறிவுச் சொத்தைப் பாதுகாக்கும் போர்ப்படையாக இருந்தவர்கள்.
இப்போது, மோடி அரசின் புதிய கொள்கைப்படி, ஆய்வுகள் அனைத்தும் கம்பெனிகளிடம் கொடுக்கப்பட்டுவிடும். அரசு ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாது, குறுக்கீடு செய்யாது. கம்பெனிகள்தான் இனி TKDL செய்யும் வேலைகளுக்குப் பணம் தர வேண்டும். அரசு இந்த நிதியாண்டுடன் நிதி ஒதுக்கீட்டை முடித்துக்கொள்கிறது.
இனி திருட்டைத் தடுக்கும் TKDLக்கான நிதியை திருடர்களே வழங்குவார்கள். திருட்டைத் தடுத்து வந்த அறிவுச் சமூகத்தினர், அரசுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
யானைத் தலையை ஒட்ட வைத்து கணபதி ஆக்கிய ஆதி பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி பேசிய மோடி, இந்தியாவின் பாரம்பரிய அறிவை கம்பெனிகளுக்கு விற்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திவிட்டார்.
இனியும் நாம் தூங்கக் கூடாது. காவிகளை அனுமதிக்கக் கூடாது.
- சி.மதிவாணன்