அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

             மானம் உடைய தரசு. (குறள்:384)

   அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள். இப்படி ஒரு ஆட்சி திருவள்ளுவர் காலத்திலாவது இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் அவரது காலத்திலேயே அரசு என்ற அமைப்பு தோன்றிவிட்டதால் இந்தக் குறள் நிச்சயம் அரசு பற்றிய அவரின் ஏக்கத்தில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும். அரசு என்பது வரலாற்றில் எப்போதும் ஒரு வர்க்க ஒடுக்குமுறை கருவியாகவே இருந்து வந்திருக்கின்றது என்பார் மார்க்ஸ். அதனால் அரசு என்றாலே அதற்கு அறம், வீரம், மானம் போன்றவை எல்லாம் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இதை ஏன் சொல்கின்றோம் என்றால் ஒரு மானங்கேட்ட அரசையும் அதன் கொள்கைகளைத் தாங்கிப் பிடிக்கும் நீதிபதிகளையும் விமர்சனம் செய்வதற்காகவே.

tasmac 416

  சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு ஜீலை 14 தேதி அன்று ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை! வழங்கி இருக்கின்றது. அது என்னவென்றால் “மது விற்பனை என்பது அரசு மற்றும் சட்டப்பேரவையின் முடிவு என்பதால் அந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்க முடியாது. மது விற்பனைக்கான விதி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று சொல்ல முடியாது” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர். இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கும் இடத்திற்குப் பெயர் நீதிமன்றமா? அந்த தீப்பை வழங்குபவனுக்கு பெயர் நீதிபதியா? உங்களுக்கு எல்லாம் சட்டப்புத்தகம் ஒரு கேடா? லட்சக்கணக்கான மக்களை அரசே கொன்று குவிக்கும் போது அதைத் தடுக்க மாட்டோம் என்று சொல்கின்றாயே உனக்கு எதற்கு நீதிபதி தொழில்! போயஸ் கார்டனில் நாய்களை குளிப்பாட்டும் வேலை இருந்தால் போய் செய்!

 இந்த நீதிபதி எஸ்.கே. கவுல் சாதாரண ஆள் அல்ல; குற்றவாளி ஜெயாவின் படத்தை அகற்றக்கோரி வழக்கு தொடுத்தபோது ஜெயாவின் படத்தை நீக்குவது என்பது இயலாத காரியம் என தீர்ப்பு சொல்லி தனது அடிமை விசுவாசத்தைக் காட்டி ஜெயாவையே அசர வைத்தவர்தான் இவர். யார் எக்கேடு கேட்டால் நமக்கென்ன நம்முடைய கல்லா நிறைந்தால் சரி என்று நினைக்கும் இதுபோன்ற நீதிஅரசர்கள் இந்தியாவில் இருக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் நிரம்பி வழிகின்றார்கள். ஜெயாவைப் போன்ற பெரிய கைகள் மாட்டும் போது முடிந்தவரை பேரம் பேசி ஆட்டையை போட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகின்றார்கள். இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுப்பதால் ஊரே நம்மீது காரித் துப்புமே என்ற மான உணர்ச்சி எல்லாம் கிஞ்சித்தும் இவர்களிடம் இருக்காது. ஏன் என்றால் இவர்கள் எல்லாம் கவரிமான்கள் அல்ல ‘கவரில்’ வாழும் மான்கள்!.

 “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது. ஆனால் மதுபானங்கள் மட்டும் எல்லா இடங்களிலும் தாராளாமாகக் கிடைக்கின்றது. மதுபானக்கடைகளை அரசு திறந்திருப்பது வருமானத்தை கருத்தில்கொண்டுதான் என்பது விளங்குகின்றது. தமிழ்நாட்டில் சுமார் 6850 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் மூலம் ஆண்டுக்கு ரூ 30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கின்றது. மது அருந்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதால் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றது. கடந்த 2013ம் ஆண்டில் மட்டும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் 20,290 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 6463 பேர் இறந்துள்ளனர். 20081 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு 2764 விபத்துகள் மதுவால் ஏற்பட்டுள்ளன. இதில் 718 பேர் பலியாகியுள்ளனர். 2957 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவற்றுக்கெல்லாம் காரணம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதுதான் என்ற முடிவுக்கு வர முடிகின்றது”.  இதை எல்லாம் நாம் சொல்லவில்லை, 03/12/2014 ஆண்டு விபத்துக்கான இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் தீர்ப்பு கூறிய உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மேற்கூறிய தகவல்களைச் சொன்னார். சொன்னதோடு அல்லாமல் அரசுக்கு 16 கேள்விகளையும் கேட்டார். அவற்றில் முக்கியமான சில

1)            மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 185-ல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது குற்றம் என்று இருக்கும்போது எப்படி மாநில அரசுகள் மதுக்கடைகளையும், பார்களையும் திறக்கின்றன.

2)            மது விற்பனையால் கிடைக்கும் பணத்தால்தான் மக்களின் வாழ்க்கைக்கு அரசுகள் பாதுகாப்பு அளிக்கின்றவா?

3)            மது பார்களை ஏன் அரசுகள் மூடக்கூடாது?

 நீதிபதி கிருபாகரன் போன்றவர்கள் இது போன்ற கருத்துக்களை சொல்லி இருப்பது பராட்டுக்குரியதாக இருந்தாலும், அரசின் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. மதுவால் நாட்டில் என்ன என்ன சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது என்று பட்டியல் போட்டு சொல்லும் நீதிபதியால் அதற்குத் தடை விதிக்க முடியவில்லை என்றால் இவர்களைப் பின்னிருந்து இயக்குவது எது? அது பதவி ஆசையும், பண ஆசையும்தான்.

 கோடிக்கணக்கான தமிழ் மக்களை குடி நோயாளிகளாக மாற்றி, பெண்களை விதவைகளாக்கி, இளைஞர்களை சிந்திக்கும் திறனற்ற, தன்மானமற்ற, அரசியல் அற்ற, வாழ்வதற்கே தகுதியற்ற அற்ப மனிதர்களாக மாற்றும் இந்த அரசையும் ஆட்சியாளர்களையும்  நாம் என்ன செய்யப் போகின்றோம்? அரசு முடியாது என்கின்றது. நீதிமன்றமும் முடியாது என்கின்றது. நம்முடைய தந்தையும், நம்முடைய அண்ணனையும், நம்முடைய தம்பியையும், நாம் எப்படிக் காப்பாற்றப் போகின்றோம்? அவர்களை மதுவுக்கு சாக கொடுக்கப் போகின்றோமா இல்லை அரசுக்கு எதிராக சண்டை போடப் போகின்றோமா?

 இப்போதுதான் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கத் துவங்கி இருக்கின்றன. சில இடங்களில் மதுக்கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. அரசிடம் மனுகொடுப்பது, ஊர்வலம் போவது, மது ஒழிப்பு பிரச்சாரம் செய்வது போன்றவை இனி எந்தப் பயனையும் தராது. மதுபான தொழிற்சாலைகளை சொந்தமாக வைத்துக்கொண்டு அரசு எந்திரத்தின் துணையோடு தன்சொந்த நாட்டு மக்களை குடிக்க வைத்துக் கொல்லும் இந்த அரசு எந்திரத்தையும், அது திறந்து வைத்திருக்கும் மதுக்கடைகளையும் அடித்து நொறுக்குவோம். இது ஒட்டு மொத்த தமிழ்மக்களின் கொள்கை முடிவு என்பதை ஒன்றுபட்டு பறைசாற்றுவோம்!

- செ.கார்கி

Pin It