அண்மையில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்ட கத்தோலிக்க திருஅவைத் தலைவர் போப். பிரான்சிஸ் உலகின் முன்னணி பணக்கார நாடுகளுக்கும், வரைமுறையின்றிச் சொத்துக்களை குவித்துவரும் தனி நபர்களுக்கும் எதிராக ஒரு மிகப்பெரிய புனிதப் போரை பிரகடனம் செய்துள்ளார். நடைமுறையிலிருக்கும் பொருளாதாரக் கொள்கையின் விளைவாக ஒரு சிலரின் கைகளில் குவிந்து வரும் செல்வத்தை “சாத்தானின் சாணி”(Dung of the Devil) என்று வர்ணித்துள்ளார். உலகின் செல்வங்கள் அனைத்தும் ஒரு சிலரிடம் குவிந்து வருவதையும், அதன் விளைவாக பல கோடி மக்கள் வறுமையில் உழலுவதையும் மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்த நிலையை மாற்றியமைக்க நல்லுள்ளம் படைத்தோர் அனைவரும் அணிதிரள அறைகூவல் விடுத்துள்ளார். அவர் தொடுத்துள்ள இந்தப் போர் உலகில் சமூகநீதிக்கான புனிதப் போராகும். அவரது இந்த முயற்சியை பணக்கார நாடுகளும், பெருமுதலாளிகளும், வர்த்தக நிறுவனங்களும், அவர்களுக்குத் துணை நிற்போரும் கடுமையாக எதிர்க்கின்றனர். கத்தோலிக்கத் திருஅவைக்குள்ளும் பகட்டு வாழ்க்கை வாழ்வோரும், பொதுச் சொத்துக்களை திருடி சொத்து சேர்த்துக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழும் சபைகளும், தனி நபர்களும் இதை எதிர்க்கின்றனர். அவர்களுக்கெல்லாம் போப் ஒரு நெருடலாக இருக்கின்றார். இந்தியத் திருஅவையில் முக்கியப் பதவிகளை வகிக்கும் பலரும் போப்பின் நடவடிக்கைகளை விரும்புவதாகத் தெரியவில்லை. ஆனால், உலகின் ஒட்டுமொத்த ஏழைகளும் அவருடைய இந்த முயற்சியை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கின்றனர்.

pope francisஉலக அளவில் போப் இந்தப் பிரகடனத்தை செய்துள்ள நேரத்தில், இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ல் முடிக்கப்பட்ட சமூக, பொருளாதார, சாதி வாரி கணக்கெடுப்பு நிறைவு பெற்றுள்ளது. 1931 க்குப் பிறகு நமது நாட்டில் எடுக்கப்பட்ட முக்கியமான கணக்கெடுப்பு இது. அதில் சமூக, பொருளாதார நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மட்டும் 03.07.2015 அன்று மத்திய அரசு வெளியிட்டுவிட்டு சாதிவாரியான புள்ளிவிவரங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளது. அதற்கு பல காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்த முயல்கிறது. ஆனால், உண்மையான காரணங்களை பலரும் அறிந்திருக்கிறார்கள்.

சமூகநீதிக்கு வித்திடும் சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள்:

சாதிவாரி புள்ளிவிவரங்கள் இந்தியாவின் உண்மை நிலையை அப்படியே படம்பிடித்துக் காட்டிவிடும். இந்திய சனநாயகம் ஒரு “போலி சனநாயகம்” என்பதை உலகிற்கு அறிவித்துவிடும். கடந்த 67 ஆண்டுகளாக இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டார்கள்? யாரால் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள் அரசு அதிகாரத்திலும், அரசு நிர்வாகத்திலும் ஏன் பங்கு பெற முடியவில்லை? தொடர்ந்து இந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிறு கும்பல் எது? இந்த நாட்டின் திட்டங்களும் சட்டங்களும் ஏன் பெரும்பான்மை மக்களை சென்றடையவில்லை? போன்ற பல புதிர்களுக்கு இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு விடையாக அமைந்துவிடும். இப்போது கூட இந்திய நாட்டின் சுக்கான் பார்ப்பன உயர்சாதி இந்துக்களிடமே இருக்கிறது. நாட்டிற்காக முடிவெடுக்கும் முக்கிய 8 துறைகள் பார்ப்பனர்கள் வசம்தான் உள்ளன. இந்து பார்ப்பனர்கள்தான் மத்திய அமைச்சரவையின் 66 இடங்களில் 40 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

அது மட்டுமல்ல ஆட்சி நிர்வாகத்தில் மேல்மட்டத்தில் உள்ள அதிகாரிகளில் பெரும்பான்மையினர் பார்ப்பனர்களே!. நீதித்துறையும் அவர்கள் வசமே. எனவே, இந்நாட்டு பூர்வகுடிகளாகவும், மண்ணின் மைந்தர்களாகவும் இருக்கின்ற ஆதி திராவிடர்களுக்கும், பழங்குடியினருக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும், மத சிறுபான்மையினருக்கும் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 90 சதவீத மக்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள அநீதமான அரசமைப்பால், அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் கொடுமை. இவையெல்லாம் சாதிவாரிக் கணக்கெடுப்பில் வெளிப்பட்டுவிடும். சாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டால் மக்கள் விழித்துக்கொள்வார்கள். தங்களது உரிமைகளை, பங்கை, நியாயத்தை கேட்டு கிளர்ந்தெழுவார்கள். ஒவ்வொரு சாதியினரும் தங்கள் எண்ணிக்கைக்கேற்ப எல்லாவற்றிலும் பங்கு கேட்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால்தான் நாட்டின் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் உயர்சாதி இந்துக்கள் இதை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர்.

உலகளாவிய அமைப்புகளின் ஆய்வு முடிவுகள்:

1. சாதிவாரிப் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், கடந்த 8.7.15 அன்று ‘வெல்த் எக்ஸ்’(Wealth X) நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அந்த ஆய்வின்படி, இந்தியாவில் பல இலட்சம் டாலர் சொத்துக்களை உடைமையாகக் கொண்டுள்ள தனி நபர்களின் எண்ணிக்கை 2013-ல் 1.96 இலட்சத்திலிருந்து 2014-ல் 2.5 இலட்சமாக அதிகரித்துள்ளது. இது 27 சதவீத வளர்ச்சியாகும். அடுத்த 3 ஆண்டுகளில் - 2018-ல் இந்தியாவில் இவர்களின் எண்ணிக்கை 4.37 லட்சமாக உயரும் என்றும் இந்த எண்ணிக்கை அதற்கடுத்த 5 ஆண்டுகளில் - 2023-ல் அப்படியே இரட்டிப்பாகும் என்றும் தெரிவிக்கிறது.

2. இதை நிரூபிக்கும் வகையில் ‘நியூ வேர்ல்ட் வெல்த்’ என்ற மற்றொரு உலகளாவிய அமைப்பின் ஆய்வறிக்கை அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு வேகமாக அதிகரித்திருக்கிறது என்பதை பட்டியலிட்ட அந்த ஆய்வறிக்கை, பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை புனேவில் மட்டும் 317 சதவீதம் அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதே ஆய்வுப்படி, 2014-ல் இந்தியாவில் 30 மில்லியன் டாலர்களுக்கும் மேல் (600 கோடி ரூபாய்) சொத்துக்களை உடைமையாகக் கொண்டுள்ள பெரும் பணக்காரர்கள் 8595 பேர் என்றும் அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1.01 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் (ரூபாய். 50 இலட்சம் கோடி) என்றும் கணக்கிட்டுள்ளது.

3. இந்த புள்ளிவிவரங்களெல்லாம் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகளை ஆய்வு செய்துவரும் “பாஸ்டன் கன்சல்டிங் குழுமம்” என்ற அமைப்பு உலக நாடுகளின் “வளர்ச்சி விளையாட்டில் வெல்வது: உலகின் செல்வம் 2015”(Winning the Growth Game: Global Wealth 2015) என்ற தனது 15 ஆவது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை இந்திய நாட்டின் வளர்ச்சி குறித்து கண்டறிந்துள்ள முடிவுகள் நம்மை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கையின் பின்னணியில் “வளர்ச்சி” என்ற பெயரில் இங்குள்ள அரசுகள் தொடர்ந்து நடத்திவரும் மிகப்பெரிய மோசடியை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையின் சாராம்சம் என்னவென்றால்,“ஆட்சியாளர்களின் மோசடித் திட்டங்களினால், இந்திய நாட்டின் வளங்கள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டு, செல்வம் ஒரு சிலர் கைகளில் மொத்தமாக குவிந்து வருகிறது. இதனால், 90 சதவிகித மக்கள் மிகக் கொடூரமாக வஞ்சிக்கப்படுகின்றனர்.” என்பதே.

வளர்ச்சி என்பது மோசடியே

மேற்சொன்ன ஆய்வு முடிவுப்படி 2000-ஆம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த சொத்தில் 66 சதவீதத்தை உடைமையாகக் கொண்டிருந்த முதல் 10 சதவீத பணக்காரர்கள், 2015 ல் 74 சதவீத சொத்துக்களையும், 2000-ல் 37 சதவீதத்தை உடைமையாகக் கொண்டிருந்த 1 சதவீத பெரும் பணக்காரர்கள் 2015-ல் 49 சதவீத சொத்துக்களையும் உடைமையாக்கிக் கொண்டுள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வெறும் 928 குடும்பங்கள் மட்டும் 20 சதவீத சொத்துக்களை உடைமையாக்கிக் கொண்டிருக்கின்றன. 1 சதவீதத்திற்கும் குறைவான பெரும் பணக்காரர்கள் இந்தியாவின் 49 சதவீத சொத்துக்களை உடைமையாக்கிக் கொண்டிருக்கும் போது 99 சதவீத இந்தியர்கள் மீதமுள்ள 51 சதவீதத்தை பகிர்ந்து கொண்டுள்ள கொடுமை. மேலும் முதல் 10 சதவீதம் பேர் 74 சதவீத சொத்துக்களை உடைமையாகக் கொண்டிருக்க, 90 சதவீதம் மக்கள் வெறும் 26 சதவீத சொத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. அதேவேளையில், உலக அளவில் மிகக் கொடூரமான ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களில் 20 சதவீதம் பேர் இந்தியாவிலும், 3 சதவீதம் பேர் சீனாவிலும் உள்ளதாக அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது. இந்திய நாடு அபரிமிதமான வளர்ச்சியடைகிறது. ஆனால், அந்த வளர்ச்சியில் 99 சதவீதம் மக்களுக்குப் பங்கில்லை என்பதுதான் அந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டும் செய்தி.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நிலை:

மேலும் இந்த அநீதியான பொருளாதார நிலையினால், கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பவர்கள் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரே என்றும் கண்டறியப்பட்டுள்ளது. “வளர்ச்சிக் குறியீட்டில் உள்ள அனைத்து தளங்களிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் இந்நாட்டின் பழங்குடிமக்களே” என்பதை மிக அழுத்தமாக இந்த ஆய்வு முன்வைக்கிறது. வருமானம், சமூகப்பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், சத்துணவு, கட்டமைப்பு மற்றும் நிர்வாகம் போன்ற அனைத்திலும் பழங்குடியினர் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ‘வளர்ச்சி’ என்ற போர்வையில் இவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. 'வளர்ச்சி' திட்டங்களுக்காக கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் தங்கள் சொந்த மண்ணிலிருந்து 6 கோடி மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அந்த 6 கோடி மக்களில் 40 சதவீதம் பேர் பழங்குடியினராகவும், ஏனையோர் தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர். 90 சதவீத நிலக்கரி சுரங்கமும், 50 சதவீத பலதரப்பட்ட கனிமங்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்தொழில்களும், பேரணைத்திட்டங்களும் பழங்குடியினரின் வாழ்விடங்களில்தான் நடந்தேறி வருகின்றன. பழங்குடி மற்றும் ஆதிவாசி மக்களை விரட்டியடித்துவிட்டுதான், நாட்டின் வளர்ச்சி கட்டமைக்கப்படுவதாக அந்த ஆய்வு புலப்படுத்துகிறது. போதாக்குறைக்கு இப்போது ஆட்சியிலிருக்கும் அரசு பெரு முதலாளிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை வலிந்து திணிக்க முயல்கிறது.

உலகின் அதிமுக்கிய பிரச்சனை:

ஓட்டுமொத்த வளர்ச்சியில் அனைவருக்கும் நியாயமான பகிர்வும் பங்கீடும் கிடைக்காததுதான் இன்றைய உலகின் அதிமுக்கியமான பிரச்சனை. இதுவே இந்தியாவின் பிரச்சனையும் கூட. அதனால்தான், உலக அளவில் இந்த தீவிரமான பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார் போப் பிரான்சிஸ். ஏற்கனவே இவ்வுலகின் பல்வேறு மதத்தலைவர்களையெல்லாம் ஒன்றுகூட்டி இவ்வுலகில் வேகமாக வளர்ந்துவரும் 'நவீன அடிமைத்தனத்தை' ஒழிப்பதில் இணைந்து செயல்படுவது என்று ஒரு கூட்டு முயற்சியை தொடங்கி வைத்தார். அப்போதே அவர்கள் அனைவரும் ஒன்றித்த குரலில்,“இந்தியாவில்தான் உலக அளவில் அடிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம்” என்பதைக் கோடிட்டுக் காட்டினார்கள். அதன் தொடர்ச்சியாக இப்போது உலகின் செல்வம் வெகு சிலரிடம் குவிந்து வருவதை கண்டித்து போப் அறிவித்துள்ள இந்தப் புனிதப்போர் முக்கியத்துவம் பெற்றதாகிறது.

இதுவரை எந்த போப்பும், எந்த சமயத் தலைவரும் நினைத்துக்கூடப் பார்க்காத வகையில், மிகுந்த துணிச்சலுடன் இந்தப் புனிதப்போரை உலக அளவில் பிரகடனம் செய்துள்ளார் போப் பிரான்சிஸ். இதன்மூலம்‘போப்’ என்றால், வழக்கமாக தமது சமயம் சார்ந்தவர்களின் ஆன்மீகம் குறித்த செயல்பாடுகளில் மட்டும் ஈடுபட்டு ஒதுங்கிக் கொள்வது என்று இருந்த நிலையை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளார். உலகின் எல்லா சமயத்தலைவர்களும் தத்தமது சமயம் சார்ந்த செயல்பாடுகளைத் தவிர பெரும்பாலும் உலக நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியே வாழ்கிறார்கள். அல்லது தங்களது சமயத்தின் கோட்பாடுகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் முழுக் கவனமும் தாங்கள் சார்ந்திருக்கும் சமய நிறுவனத்தைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே இருக்கும். அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, உலகின் கடைநிலை மக்களுக்கான சமூகநீதியை உறுதிசெய்ய, அதற்கான செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கு சமயங்களுக்கு உள்ள பெரும் பொறுப்பை வலியுறுத்தி, அதற்கான சிறந்த கருவியாக சமயங்கள் இருக்க வேண்டும் என்பதை தனது இந்தப் போர்ப் பிரகடனத்தின் மூலம் உலகிற்கு அறிவித்துள்ளார். இந்த முயற்சியில் இசுலாமிய மதத் தலைவர்களையும், புத்த மதத் தலைவர்களையும், யூத மதத் தலைவர்களையும் பிற கிறித்தவ திருஅவைகளின் தலைவர்களையும் இணைத்துக் கொண்டுள்ளார். அவர்களும் போப்புக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர். இந்த அறைகூவலின் பொருட்டு அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் இருக்கும் சில புராட்டஸ்டண்ட் சபைகள் போப்பின் தலைமையை மீண்டும் ஏற்பதாக அறிவித்து ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்த உலகின் அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமாயின், போப் பிரான்சிஸின் கரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். அவர் தொடங்கியிருக்கின்ற இந்தப் போரினை சமூகநீதிக்கான 3 ஆம் உலகப்போராக இவ்வுலகின் அடித்தட்டு மக்கள்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவரை நடந்த போர்களெல்லாம், ஆதிக்க வெறியுடன், நாடு பிடிக்கும் ஆசையுடன் நிகழ்த்தப்பட்டவை. அல்லது தமது மதவெறியைப் பரப்பி தமது மேலாதிக்கத்தை உறுதிசெய்வதற்காக நிகழ்த்தப்பட்டன. அவையாவும் இவ்வுலகில் பேரழிவுகளை ஏற்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான உயிர்களையும் பறித்தன. ஆனால், போப் பிரான்சிஸ் தொடங்கி வைத்திருக்கும் இந்தப் புனிதப்போர் சமூகநீதிக்கான போர். இவ்வுலகின் பல நூறு கோடி மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தையும், மனித மாண்பையும் மீட்டெடுப்பதற்கான போராகும். –வெல்லட்டும் அவரது முயற்சி!. மலரட்டும் சமூகநீதி! தவறாது இருக்கட்டும் நமது பங்களிப்பு!

- அ.சகாய பிலோமின்ராஜ்

Pin It