13.09.2012 அன்றைய ஆனந்த விகடன் இதழில் இயக்குனர் சீமான் அவர்களின் பேட்டியில் சில முரண்பாடான பதில்களையும் சேற்றை வாரி இறைக்கும் பதில்களையும் கூறி இருக்கிறார். கருத்தியல் புரிதல் இல்லாத அவருக்கு கருத்தியலோடு சில பதில்களை கூற விழைகிறேன்...

விகடன் : ஈழத்தமிழர் நலனுக்காக வைகோ, திருமாவளவன் போன்றோருடன் இணைந்து செயல்படுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

சீமான் : முடியாது. இந்திய தேசிய, திராவிட, சாதிய கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாங்கள் நிற்கிறோம். இனியும் தமிழ்ப்பிள்ளைகளான நாங்கள் இவர்கள் பின்னால் செல்ல முடியாது.

தமிழன் வேலு : வைகோ, திருமாவளவன் அவர்களோடு இணைந்து செயல்படக்கூடாது என்பது உங்கள் இயக்கத்தின் முடிவாக இருக்கலாம். அல்லது உங்கள் விருப்பமாகக் கூட இருக்கலாம். அதை விமர்சிக்க எமக்கு உரிமை இல்லை. ஆனால் திருமாவை சாதியத் தலைமை என்று சொல்ல சங்கபரிவாரத்தின் இளைய மடாதிபதியாக ஆக துடிக்கும் சீமானுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது? தமிழ்நாட்டில் யாரப்பா சாதி அரசியல் செய்யவில்லை? "இந்த தொகுதியிலே தேவர்கள் அதிகமாக இருக்கிறார்கள், ஆக இங்கே தேவர் சமுதாய வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெறலாம்" என்று ஜெயலலிதா யோசிப்பது சாதி அரசியல் இல்லையா? இந்த தொகுதியிலே நாடார்கள் அதிகமாக இருக்கிறார்கள், ஆக இங்கே நாடார்  சமுதாய வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று கருணாநிதி யோசிப்பது சாதி அரசியல் இல்லையா?

நாடார் சமுதாயத்தில் இருந்து அந்த சமுதாய வாக்குகளை குறிவைத்து நாடார் சமுதாய உணர்வைத் தூண்டும் ஒரு நடிகர்  பொதுப்பெயரில்  கட்சி வைத்து நடத்துகிறார். அதற்காக அது சாதியக் கட்சி இல்லை என்று ஆகிவிடுமா?

கருணாநிதியைப் பார்த்து உங்களால் சாதிய  தலைமை என்று சொல்ல முடியுமா? ஜெயலலிதாவைப் பார்த்து சாதிய  தலைமை என்று சொல்ல முடியுமா? மற்ற ஆதிக்க சாதித் தலைவர்களை சாதிய  தலைமை என்று சொல்ல முடியுமா? அவர்களை எல்லாம் சொல்லாமல் திருமாவை மட்டும் நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் உங்கள் புத்தி சாதிப் புத்தி தானே? உங்கள் சிந்தனை சாதிய சிந்தனை தானே? இதே ஆனந்த விகடன் பத்திரிக்கையில் விகடன் மேடையில் வாசகர் கேள்விக்கு திருமா அளித்த பதிலை சீமானுக்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்...

வாசகர் கேள்வி : தமிழ்நாட்டில் சாதிக்கட்சி என்றாலே நீங்களும் ராமதாசும் தானே நினைவுக்கு வருகிறீர்கள்?

திருமா : விடுதலை சிறுத்தைகள் கட்சி சாதிக்கட்சி அல்ல; சாதி ஒழிப்புக் கட்சி! விடுதலை சிறுத்தைகள் "சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை" எனும் முழக்கத்தை அடிப்படை கொள்கையாகக் கொண்ட பேரியக்கம். தமிழகத்தில் சாதி ஒழிப்பை ஓர் அடிப்படை கொள்கையாகவும் ஏற்று இயங்குகிற ஒரே இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமே.

எங்கள் சாதி உயர்ந்த சாதி; எங்கள் சாதி ஆண்ட சாதி என்று அரசியல்வாதிகள் மார்தட்டிக் கொள்வதைப்போல விடுதலை சிறுத்தைகள் சாதிப் பெருமைகளைப் பேசி சாதி மோதல்களை தூண்டி சாதி அரசியல் செய்ததாக ஏதேனும் ஒரு சான்று காட்டமுடியுமா?

இயக்குனர் சீமான் அவர்களே, திருமாவளவன் இந்த இடத்திலே சாதி அரசியல் செய்தார் என்று ஏதாவது சான்று காட்ட முடியுமா? இல்லை திருமா சாதிய தலைமை தான் என்று என்னோடு ஒரே மேடையில் விவாதித்து நிரூபிக்க முடியுமா? ஓர் உயர் சாதிக்காரன் கட்சிக்கு பொதுப்பெயரை வைத்துக் கொண்டு, சாதி அரசியல் செய்தாலும் அவன் சமூகப் போராளி!! அதுவே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து மக்களின் பொதுப் பிரச்சனைக்காகப் போராடினாலும் அவன் சாதித் தலைவனா? என்ன கேவலமான சிந்தனை?  தன்னை தமிழினப் போராளியாகக் காட்டிக் கொள்ளத் துடிக்கும் சீமானுக்கு இப்படிப் பேச வெட்கமாக இல்லையா?  நாம் தமிழர் கட்சி என்று பெயர் வைத்துக் கொண்டு மும்பையில் இருந்த தமிழர்களை அடித்து விரட்டிய சிவசேனாவை இந்துத்துவ வெறியரான சிவசேனாவை ஆதரித்த நீங்கள் தமிழினப் போராளி!! ஆனால்  அரசியல் சூழல் மாறினாலும் எந்த சூழலிலும் இந்துத்துவ பி.ஜே.பி.யை ஆதரிக்க முடியாது என்று களத்தில் நிற்கும் திருமா சாதித்தலைவனா?

தன்னுடைய கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கை ஆவணத்தில் சீமான் என்ன சொல்லி இருக்கிறார்? 40 ஆம் பக்கத்தில் மேல்சாதி - கீழ்சாதி, தீண்டாமைக்களானோர்- தீண்டாமை புரிவோர் இடையே உள்ள முரண்பாடு மேற்கட்டுமான முரண்பாடாம்!

ஒரு தலித், புது பக்கெட் வாங்கி பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது; புது செருப்பை போட்டுக் கொண்டு பொது சாலையில் நடக்க முடியாது;  சைக்கிளில் செல்ல முடியாது; நல்ல பெயர் வைக்க முடியாது; நல்ல சோறு சாப்பிட முடியாது; கை நிறைய காசு இருந்தும், கொட்டாங்குச்சியில்தான் தேநீர்; இதுதான் மேற்க்கட்டுமானமாம். இதை எது கட்டிக் காக்கிறது? சாதி. அந்த சாதியை கட்டி காப்பது எது? இந்துத்துவம். அந்த இந்துவத்தைத்தான் இன்று சீமான் பிடித்துக் கொண்டு தொங்குகிறார். இந்தியாவில் ஒவ்வொரு இந்து வீட்டிலும் ஆழமாக வேர் ஊன்றி நிற்கும் இந்துத்துவத்தின் கோர முகமான சாதியம் மேற்கட்டுமானம் என்று சொல்லும் சீமான் தமிழினப் போராளியா? கிருத்துவர்களையும், இசுலாமியர்களையும் தீவிரவாதி என்றும், தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள் என்றும் சித்தரித்து தன்னை முழுமையான இந்துத்துவவாதியாக அடையாளம் காட்டிக் கொண்டு திரியும் சீமானுக்கு என்ன யோக்கிதை இருக்கிறது விடுதலை சிறுத்தைகளை சாதிக்கட்சி என்று சொல்ல? வன்னியர் சங்கம், நாடார் சங்கம், முதலியார் பேரவை என்பது போல திருமா எங்காவது பறையர் சங்கம் நடத்தி இருக்கிறாரா?

அவர் அணு உலை வேண்டாம் என்கிறாரே! இதில் எங்கு சாதி இருக்கிறது தமிழனின் வாழ்வாதாரம் தானே இருக்கிறது; முல்லைப் பெரியாறு அணைக்காக போராடுகிறாரே இதில் எங்கு சாதி இருக்கிறது? அல்லது எந்த தாழ்த்தப்பட்டவனுக்கு அல்லது ஒடுக்கப்பட்டவனுக்கு முல்லை பெரியாறு பாய்ந்து வரும் பகுதிகளில் தோப்புக்களும் துறவுகளும் இருக்கிறது. பாலாற்றின் பிரச்சினைக்காக போராடுகிறாரே இதில் எங்கு சாதி இருக்கிறது? நீண்ட நாள் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடுகிறாரே, இதில் எங்கு சாதி இருக்கிறது? மானுட ஒன்றுகூடலுக்கு தேசிய தலைவரால் அழைக்கப்பட்டாரே எப்படி சாதிய தலைவராகவா? இந்திய தேசிய சட்டத்தின் தந்தையை நேருவின் அடிபொடிகள் கொச்சைப்படுத்துவதை தனியொரு ஆளாக எதிர்த்தாரே இதில் எங்கு சாதி இருக்கிறது?

ஈழ விடுதலைக்காக தன்னுயிரை துறக்க சித்தம்கொண்டாரே இதில் எங்கு சாதி இருக்கிறது? இப்படி தமிழின விடுதலை, தமிழ் மண்ணின் விடுதலை, ஈழ விடுதலை என எண்ணற்ற போராட்டங்களை ஒரு பொதுத் தலைவராகவும் பச்சைத் தமிழனாகவும் இருந்துதான் திருமா போராடியிருக்கிறார். அதனால்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பல்வேறு சாதியினரும் அவரின் தலைமையை ஏற்றுள்ளனர். திருமாவை கொச்சைப்படுத்த நினைக்கும் சீமான் போன்றவர்கள் விடுதலைச் சிறுத்தைகளின் மேடையில் தங்களை வளர்த்துக் கொள்ளும்போது திருமா சாதிக் கட்சித் தலைவராக தெரியவில்லையா? 2008 ஆம் ஆண்டு புல்லா அவென்யூவில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் திருமா தலைமையில் நடந்த கருத்துரிமை மாநாட்டில் சீமான் பேசிய பேச்சு சீமானுக்கு நினைவு இருக்கிறதா? இவன் சாதித் தமிழன் அல்ல, ஆதித்தமிழன்; இவன் சோரத்தமிழன், வீரத்தமிழன் என்று திருமாவுக்கு புகழ்மாலை சூட்டும் போது இவர் சாதித்தலைவர் என்று தெரியவில்லையா?

விகடன் பேட்டியில் ஈழத்தமிழர்களுக்காக தனி நாடு காணும் உங்கள் கனவு இந்தியத் தமிழர்களுக்காகவும் நீளுமா? என்ற கேள்விக்கு இல்லை என்று சொல்லி இருக்கிறார். தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத இந்த தேசத்தின் மீது எனக்கு எப்படி வரும் நேசம் என்று சொல்லி இருக்கிறார். இயக்குனர் சீமான் அவர்களே! ஈழத்தமிழர்களுக்காக போராட ஒரு இயக்கம் வைத்து நடத்துகிறீர்களே அதில் உள்ள தமிழர்கள் அனைவரும் இந்தியத் தமிழர்கள் என்பதை மறந்து விட்டீரோ? மேலும் ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்தது இந்தியத் தமிழர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள். முத்துக்குமார், செங்கொடி, கடலூர் அன்னவள்ளியை சேர்ந்த ஆனந்த், ஜெயங்கொண்டம் ராஜசேகர், புதுக்கோட்டை பாலசுந்தரம், நெல்லை குருவிக்குளம் கிருஷ்ணமூர்த்தி, கரூர் சிவானந்தம், சீர்காழி ரவிச்சந்திரன், கடலூர் சுப்பிரமணி, சிதம்பரம் ராஜேந்திரன் இவர்கள் ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்தவர்கள். இந்தியத் தமிழர்கள். ஈழத்தமிழர்களுக்காக உயிரை துச்சமென மதித்து வீதியில் இறங்கிப் போராடுபவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டாலும், அவர்களை அரசே சுட்டுக்கொன்றாலும், அந்தப் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதிகார வர்க்கம் அவர்கள் வாயில் மலத்தை திணித்தாலும், சாதி வெறியர்கள் அவர்கள் வாயில் சிறுநீர் கழித்தாலும் நான் காதில் போட்டுக் கொள்ளமாட்டேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்களே.... ஆக எப்படி ஈழ விவகாரத்தில் மட்டும் உங்கள் உணர்வு உண்மையாக இருக்க முடியும்?

பரமக்குடி அரச பயங்கரவாதத்தைக் கண்டிக்காத சீமானுக்கு, விழுப்புரம் வானூரில் தொழிலாளியின் வாயில் ஆதிக்க சாதிக்காரர் மலத்தை திணித்த போது குமுறாத சீமானுக்கு, மூன்று தமிழர்களுக்காக உயிர் விட்ட தோழர் செங்கொடி பிறந்த பழங்குடியின சமுதாயப் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்தபோது இந்த அரசைக் கண்டிக்காத சீமானுக்கு விடுதலைச் சிறுத்தைகளை சாதியக் கட்சி என்று சொல்லும் யோக்கிதை இருக்கிறதா? என்பதை இயக்குனர் சீமான் அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்...

இப்படிக்கு
விடுதலை சிறுத்தைகளின் கடைநிலைத் தொண்டன்
அங்கனூர் தமிழன் வேலு

Pin It