மலையாள நடிகர் செயராம் வீடு தாக்கப்பட்ட வழக்கில் சீமான் பெயரை நீக்க வேண்டும்; பாரதிராஜா அலுவலகத்தைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் - தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோரிக்கை

மலையாள நடிகர் செயராம், தன் வீட்டில் வேலை செய்யும் பெண்ணை “கருத்த தடித்த எருமை போன்ற தமிழச்சி அவளை எப்படி கண்ணடிக்க (சைக் அடிக்க) முடியும்” என்று தொலைக்காட்சி நேர்காணலில் கூறி பொதுவாகப் பெண் குலத்தையும் குறிப்பாகத் தமிழ்ப் பெண்களையும் இழிவுபடுத்தி குற்றம் புரிந்துள்ளார்.

இச்செய்தி தமிழ்நாட்டில் பரவியதும் தமிழகமெங்கும் தமிழ் இன உணர்வாளர்கள் மனம் கொந்தளித்தனர். கண்டனக் குரல் எழுப்பினர். இந்நிலையில் சென்னையில் உள்ள மலையாள நடிகர் செயராம் வீட்டை யாரோ சிலர் தாக்கியுள்ளனர். மிகவும் விரைந்து காவல்துறை நடவடிக்கை எடுத்து 16 பேரைக் கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் நாம் தமிழர் இயக்கத் தோழர்கள். நடிகர் செயராம் வீட்டைத் தாக்கத் தூண்டிவிட்டவர் என்று குற்றம் சாட்டி நாம் தமிழர் இயக்கத் தலைவர் இயக்குநர் சீமானை அவ்வழக்கில் சேர்த்து அவரை கைது செய்ய காவல்துறை தேடுகிறது. இது சனநாயக நெறிமுறைகளுக்கும், தமிழ் இன உணர்வுக்கும் எதிரான செயல்.

செயராம் வீட்டைத் தாக்கினால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். வேடிக்கைப் பார்க்க வேண்டியதில்லை தான். ஆனால் அந்த நிகழ்வில் பங்கெடுக்காத இயக்குநர் சீமானை வழக்கில் சேர்ப்பது தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும்.

ஒரு வீட்டில் வன்முறை நடக்கும்போது வேடிக்கைப் பார்க்கமாட்டோம் என்று இப்போது மலையாள நடிகர் செயராம் பாதிக்கப்பட்ட போது உறுமும் முதல்வர், தமிழ் இன உணர்வாளர் சீமான் கார் தீ வைக்கப்பட்ட போது, ஈழத்தமிழர்களைக் காக்கப் போராடிக் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் கார் எரிக்கப்பட்ட போது தமிழ் இன உணர்வுள்ள இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டு பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள கணிப்பொறி மற்றும் படப்பிடிப்புக்குரிய கருவிகள், அறைகலன்கள் நொறுக்கப்பட்ட போது தமிழகக் காவல்துறை வேடிக்கைதான் பார்த்தது. மேற்கண்ட மூன்று வன்முறை நிகழ்விலும் இன்றுவரை குற்றவாளி ஒருவரைக் கூடக் கைது செய்யவில்லை.

காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டது யார்? முதல்வர் கருணாநிதி விளக்கம் சொல்லவேண்டும்.

செயராம் வீட்டைத் தாக்கிய வழக்கிலிருந்து இயக்குநர் சீமானை விடுவிக்க வேண்டும் என்றும், சீமான், தா.பாண்டியன் ஆகியோர் கார்களுக்குத் தீ வைத்த குற்றவாளிகளையும் பாரதிராஜா அலுவலகத்தைத் தாக்கிய குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன்,

பெ.மணியரசன்,

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Pin It