ஒருமுறை கிளிநொச்சியிலிருந்து மன்னார் பகுதிக்கு மாவீரர் நாள் நிகழ்வுக்காக, வீரச்சாவடைந்த தளபதி அறிவமுது ரமேஷ் என்று அழைக்கப்படும் இளங்கோ அவர்களுடன் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது தமிழக அரசியல் குறித்தும் தமிழகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்தும் விவாதித்துக்கொண்டே சென்றோம். விடுதலைப்புலிகள் அமைப்பு தொடங்கியபோது தமிழீழத்தில் சாதியரீதியான பிரச்சனையை அணுகிய விதம் குறித்து இரண்டு முக்கிய பதிவுகளை என்னோடு பகிர்ந்துகொண்டார். தளபதி ரமேஷ் அவர்கள் கொளத்தூர் பகுதியில் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் தோட்டத்தில் இருந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டபோது தமிழகத்தின் சாதியப் பிரச்சனைகள் குறித்து அதிகம் தெரிந்துகொண்டதாகவும் கூறினார்.

thirumavalavan_404

(தளபதி தீபனுடன் கைகுலுக்கும் தொல்.திருமாவளவன். தொல்.திருமாவளவனுக்கு வலப்பக்கத்தில் நிற்பவர் தளபதி அறிவமுது ரமேஷ்)

“புலிகள் அமைப்பின் ‘பேஸ்’ என்று அழைக்கப்படும் ராணுவ முகாம்களில் ஆரம்பத்தில் உணவு பிரச்சனை இருந்து வந்துள்ளது. மரக்கறியும் பயன்படுத்தி வந்துள்ளனர்; இறைச்சியும் பயன்படுத்தியுள்ளனர்.

ஒரு முகாமிலிருந்து திடீரென இறைச்சி வேண்டாம் என்று மறுத்துள்ளனர். காரணம் கேட்டபோது. 'மாட்டுக்கறி சாப்பிட மாட்டோம், எங்களுக்கு ஒத்துக்காது' என்று கூறியுள்ளனர். கூடுதலான விசாரனையில் ஈடுபட்டபோதுதான் உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்தார்கள். அதாவது, வெள்ளாளக் குடியைச் சார்ந்தவர்கள் 'மாட்டுக்கறியைச் சாப்பிடமாட்டோம்; தாழ்த்தப்பட்டவர்கள் சாப்பிடும் உணவைச் சாப்பிட்டால் தீட்டுப்பட்டுவிடும்' என்று கூறியுள்ளார்கள். இது தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது. சம்மந்தப்பட்ட ‘புலிகள்’ மீது கடுமையான நடவடிக்கைகளைக் கையாண்டார்.

பிற்பாடு அடேல் பாலசிங்கம் சாதியக் கொடுமைகள் குறித்து ஆய்வு செய்து நூலாகவே வெளியிட்டார். ரகசியமாக சிலவற்றை மேதகு பிரபாகரன் அவர்களின் பார்வைக்கும் முன்வைத்தார். அந்தளவுக்கு சாதியப் பிரச்சனைகள் குறித்து அக்கறைப்பட்டவர் மேதகு பிரபாகரன் அவர்கள். சாதியற்ற தமிழீழம் அமைக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்” என்ற தளபதி ரமேஷ் தொடர்ந்து,

“தனித்தனியாக இருந்த போராளிக் குழுக்களை மேதகு பிரபாகரன் தலைமையில் ஒரே அமைப்பாகக் கட்டுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்த நேரம். அறவழியில் ஈழத்தந்தை செல்வா வழியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அமிர்தலிங்கம் அவர்களைச் சந்தித்து மேதகு பிரபாகரன் அவர்களின் முயற்சி குறித்தும், அதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ள 4 போராளிகள் அமிர்தலிங்கத்தின் வீட்டுக்குச் சென்றார்கள். இதைப் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே கொதித்துப்போன அமிர்தலிங்கம் ‘ஒரு கரையான் தலைமையில் என்னைச் சேரக் கதைக்கிறீங்களா? அது முடியாது!’ என்று தனது சாதிவெறியை வெளிப்படுத்தி முடிக்கும் முன் அவர் ரத்த வெள்ளத்தில் ‘அமைதி’யானார்” என்று பழைய சாதி ஒழிப்புச் சம்பவங்களையும் நினைவு கூர்ந்தார்.

அந்தளவுக்கு சாதிய இறுக்கமான மண்ணிலிருந்துதான் மேதகு பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்படிப்பட்ட மகத்தான போராளித் தலைவர் பிரபாகரனையும் அவரது போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசி வருகிறார் ‘அட்டைக் கத்தி’ சீமான் அவர்கள். 19-9-2012 ‘ஆனந்தவிகடன்’ இதழில், “ஈழத்தமிழர் நலனுக்காக வைகோ, திருமாவளவன் போன்றோருடன் இணைந்து செயல்படுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?” என்ற கேள்விக்கு, “முடியாது. இந்திய தேசிய, திராவிட, சாதியக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாங்கள் நிற்கிறோம். இனியும் தமிழ்ப் பிள்ளைகளான நாங்கள் இவர்கள் பின்னால் செல்ல முடியாது” என்று புதிய தத்துவத்தை உளறியிருக்கிறார் அட்டைக் கத்தி சீமான்.

இந்த பதில் மூலம் அவர் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்களை மட்டும் அவமதிக்கவில்லை; தமிழீழ மண்ணில் சாதிஒழிப்புக் களத்தில் களமாடிய மேதகு பிரபாகரன் அவர்களையும்தான் அவமதித்துள்ளார். 2001ஆம் ஆண்டு வன்னியில் மேதகு பிரபாகரன் அவர்களை தொல்.திருமாவளவன் அவர்கள் சந்தித்தபோது, “திண்ணியத்தில் எப்படி சக மனிதன் வாயில் மலத்தைத் திணிக்கிறார்கள். அவர்களைச் சிறுத்தைகள் சும்மாவா விட்டீர்கள்?” என்று மிகுந்த வலியோடு கேட்டவர் மேதகு பிரபாகரன் அவர்கள். அப்படி சாதியப் பிரச்சனையில் ஒடுக்குண்ட மக்கள் மீது அக்கறை கொண்ட மேதகு பிரபாகரன் அவர்களது பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் சீமான், தமிழகத்தில் தலைவிரித்தாடும் சாதிய வெறியாட்டத்தைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. மாறாக, சாதி ஒழிப்பில் தொடர்ந்து களமாடும் களப்போராளி தொல்.திருமாவளவன் அவர்களைப் பார்த்து ‘சாதியவாதி’ என்று சொல்வது, அவரை மட்டுமின்றி மேதகு பிரபாகரன் அவர்களையும் சேர்த்துத்தான்

அவமானப்படுத்துவதாகும். இதில் ‘தமிழ்ப்பிள்ளைகள்’ என்று புதிய கண்டுபிடிப்பை வேறு சொல்லியுள்ளார். அப்படியென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் தமிழ்ப் பிள்ளைகள் இல்லையா?

தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாக தமிழர் ஒற்றுமையைச் சிதைத்து வருவது சாதிதான். அந்த சாதிதான் சமூகத்தின் பெரும்பான்மை மக்களான தலித்துகளை பொதுநீரோட்டத்திலிருந்து அப்புறப்படுத்தியது.

பேருந்துகளில், பள்ளிகளில், தெருக்களில், சந்தைகளில், வேலைவாய்ப்புகளில், பணியிடங்களில் எங்கெங்கு பார்த்தாலும் சாதியம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. சாதியின் பெயரால் சக மனிதன் வாயில் மலத்தைத் திணித்த கொடுமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதனால் அய்யன் வள்ளுவன்,

“பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” என்றார்.

மூதுரை வழங்கிய ஔவையார்,

“சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்
பட்டாங்கில் உள்ளபடி” என்றார்.

“பறச்சி என்பதேதடா
பார்ப்பனத்தி என்பதேதடா” என்று போர்க்குரல் கொடுத்தனர் சித்தர்கள்.

“சாதிகள் இல்லையடி பாப்பா
குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்றார் பாரதி.

“இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி
இருக்கிறது என்பானும் இருக்கிறானே” என்று நொந்து வேதனைப்பட்டார் பாரதிதாசன்.

“பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு” என்று சாதியத்தின் முகத்தில் உமிழ்ந்தார் அறிவுமதி.

“காட்டுமரங்களிலே
கள்ளர் மரம்
அய்யர் மரம்
தோட்டி மரம்
உண்டாடா தோழா?
நாட்டு மனிதர்களில்
வேற்றுமை காட்டுகிறாய்
நட்டமரம்
உன்னைவிட மேலா?”

என்று கோபத்தின் கொதிநிலையில் நின்று குமுறியவர் அய்யா காசிஆனந்தன் அவர்கள்.

தமிழ்மண்ணில் புரையோடிக் கிடக்கும் சாதிய நச்சு வேர்களை அழித்தொழிக்கத்தான் இத்தனை சமூகப் புரட்சியாளர்களும் அவரவர் களத்தில் நின்று களமாடினார்கள்... களமாடிவருகிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் உச்சநிலையில் நின்று வாழ்நாள் முழுக்க சாதி ஒழிப்புக்காகத் தங்களையே ஒப்புக்கொடுத்தார்கள்.

இவர்களுடைய கருத்தியலைச் சுமந்துதான் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் ‘சாதியை மற; சமூகத்தை நினை’, ‘சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை’ என்கிற முழக்கத்தோடு தமிழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் களமாடி வருகிறார். இப்படிப் போராடி வருபவரின் தலைமையிலான கட்சியைத்தான் அட்டைக்கத்தி சீமான் ‘சாதிக் கட்சி’ என்று உளறுகிறார்.

seeman_253அப்படியென்றால் சீமான் சிந்தனைப்படி, சாதிஒழிப்பைப் பேசுகின்ற வள்ளுவரிலிருந்து காசிஆனந்தன் வரை சாதியவாதிகள்தானோ?

சிவகங்கைச் சீமையிலிருந்து சென்னை மாநகருக்கு வந்து அட்டைக்கத்தி தூக்கும் சினிமாவில் கதை, வசனம் எழுதி, இயக்குனராவதற்கு படாதபாடுபட்டவர் சீமான். 1983களில் இலங்கை மண்ணில் தமிழர்களுக்கெதிரான கலவரம் தொடங்கியபோது எந்தவித வலியும் கவலையும் இல்லாமல் சினிமா மோகத்தில் வாய்ப்புகள் தேடி சுற்றிக்கொண்டிருந்தவர்தான் சீமான். அந்த நேரத்தில் சட்டக் கல்லூரி மாணவராக இருந்த தொல்.திருமாவளவன் அவர்கள் சக மாணவர்களை ஒருங்கிணைத்து வீதிக்கு வந்து போராடினார். அப்போதெல்லாம் சினிமா வசனம் எழுதிக் கொண்டிருந்த சீமான் இப்போது புரட்சி செய்யத் துடிக்கிறார்; தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்த எந்தவித அரசியல், சமூகப் பார்வையும் இல்லாமல் புரட்சி செய்யத் துடிக்கிறார் - பாவம்.

சாதியம் என்றால் என்ன? மதம் என்றால் என்ன? நிலவுடைமை என்றால் என்ன? இந்துத்துவம் என்றால் என்ன? அம்பேத்கரியம், பெரியாரியம், தமிழ்த் தேசியம் என்பது குறித்த எந்த அடிப்படை அரசியல் அறிவும் துளிக்கூட இல்லாமல் தமிழகத்தில் ‘புரட்சி’ செய்யத் துடிக்கிறார் சீமான் அவர்கள். சாதியம் குறித்தும் தமிழகச் சிக்கல்கள் குறித்தும் விடுதலைச்சிறுத்தைகளின் முகாம் செயலாளரிடம்கூட விவாதிக்கத் தகுதியற்றவர்தான் சீமான். ஏனென்றால் சினிமாவில் எந்த ‘லாஜிக்கும்’ இல்லாமல் ஒரே பாடலில் பணக்காரன் ஆவது அல்லது ஒரே பாடலில் புரட்சி நடப்பதுபோல தமிழகத்தில் புரட்சி செய்யக் கிளம்பியிருக்கிறார். அதனால்தான் விடுதலைச்சிறுத்தைகளை சாதியக்கட்சி என்று அவரால் சொல்ல முடிகிறது.

சாதியின் பெயரால் அடிமைத்தனத்தை நிறுவ முயலுகிற ஆதிக்கத்துக்கு எதிராக, 'அடங்கமறு அத்துமீறு' என்று கலகக் குரலை எழுப்பிக் களமாடும் விடுதலைச் சிறுத்தைகளின் போராட்டம் அடிமைத்தனத்துக்கும், சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரானதுதான். மேதகு பிரபாகரன் அவர்களின் போராட்டமும் தமிழர்களுக்கு எதிரான சிங்களர்களின் ஒடுக்குமுறைக்கும் ஆதிக்கத்துக்கும் எதிரானதுதான்.

இரு தலைவர்களின் போராட்டங்களும் மக்கள் விடுதலைக்கான - ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டங்கள்தான். சுருக்கமாகச் சொன்னால் விடுதலைப் போராட்டம்தான். அதனால்தான் மேதகு பிரபாகரன் அவர்களால் - விடுதலைச்சிறுத்தைகளின் போராட்டத்தில் உள்ள அறத்தையும் வலியையும் புரிந்துகொண்டு - தமிழீழத்திற்கு அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட ஒரே தமிழகத் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மட்டும்தான். மேதகு பிரபாகரன் அவர்களால் தமிழ்த்தேசியத் தளத்தில் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் திருமாவளவன் அவர்களை சாதியத் தலைவராக - இன்னமும் ஓட்டை விழுந்த ‘ரிக்கார்டாக’ - உளறும் சீமானின் அரசியல் அறியாமையை என்னவென்று சொல்வது?
 
சரி.. சாதியப் பிரச்சனைகளில்தான் அடிப்படை அரசியல் அறிவு இல்லையென்றால், ஈழப் பிரச்சனையிலும் அரைவேக்காட்டுத்தனமாகப் பேசி வருகிறார். கருத்தியல்ரீதியாகப் பேசாமல் பிரபாகரன் என்னிடம் அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று அப்பாவி இளைஞர்களை ஏமாற்றுவது என்பது மேதகு பிரபாகரன் அவர்களையே ஏமாற்றுவதாகத்தான் அர்த்தம். அந்த வகையில்தான் அதே ஆனந்த விகடன் நேர்காணலில், “தமிழீழத்தை அடைய என்ன திட்டம் உங்களிடம் இருக்கிறது?” என்ற மற்றொரு கேள்விக்கு, “அரசியல் புரட்சி. 12 கோடித் தமிழரில் 50 ஆயிரம் பேரை ஒன்று திரட்டிவிட்டால்கூட மிகப் பெரிய புரட்சி. அட, ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேச விடுங்கள். நான் நாடு அடைந்து விடுவேன்.”

பாவம் தமிழீழ மக்கள். கால் நூற்றாண்டு காலம் மேதகு பிரபாகரன் அவர்களை நம்பி ஆயுதப் போராட்டத்திற்குத் தயாரானதற்குப் பதில் இந்த அட்டக்கத்தியை கால் நூற்றாண்டுக்கு முன்பே ஐ.நா. அவைக்கு எப்படியாவது அனுப்பி வைத்திருந்தால் இத்தனை ஆயிரம் பேர் செத்துப் போயிருக்க மாட்டார்கள்!! மேதகு பிரபாகரன் அவர்களின் போராட்டத்திற்கான தேவையே இருந்திருக்காது.

நடிகர் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவுடன் ஒரு முறை இலண்டன் சென்றபோது சங்கீதாவின் யாழ்ப்பாண உறவினர்கள் நடிகர் விஜய்யிடம் வன்னியில் நடைபெற்றுவரும் யுத்தம் குறித்து கவலையோடு பேசிக்கொண்டிருந்தபோது விஜய் சொன்னாராம், “இந்தச் சண்டையை நிறுத்த எவ்வளவு கோடி வேண்டும் சொல்லுங்கள். நான் ஏற்பாடு செய்கிறேன். உங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்” என்றாராம். நடிகர் விஜய் சொன்னதற்கும், நடிகர் சீமான் சொல்வதற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா? தமிழீழப் போராட்ட வரலாறு தெரியாத இந்த அட்டைக்கத்திகளின் உளறலை என்னவென்று சொல்வதோ!!
 
தமிழீழப் போராட்டத்தில் தொடர்ச்சியாக பங்களிப்புச் செய்துவரும் அண்ணன் சுபவீ அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுமளவுக்கு மனநோயாளியாகிக் கொண்டிருக்கிறார் அட்டைக்கத்தி சீமான். தமிழீழ விடுதலை அரசியலுக்காக பொடா சட்டமாகட்டும், தடா சட்டமாகட்டும் எந்தக் கொடுநெறி சட்டத்தையும் சந்தித்தவர்தான் அண்ணன் சுபவீ அவர்கள். திரைத்துறை சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட தமிழீழப் போராட்டத்திலும் தமிழகச் சிக்கல்களுக்காகவும் களமாடிக் கொண்டிருந்தாரே தவிர சினிமாக்காரர்கள் பின்னால் ஓடவில்லை. சீமானைப் போல சினிமா வாய்ப்புகளைத் தேடி அலையவில்லை. அப்படிப்பட்ட போராட்டக்காரரைத்தான் இந்த அட்டைக்கத்தி மிரட்டுகிறார். எத்தகைய அடக்குமுறைகளையும் சந்தித்த அண்ணன் சுபவீக்கு இது சாதாரணம்தான்.

ஆனாலும் ஒன்றை அழுத்தமாகச் சொல்லுவோம். ஜெயலலிதா, நடராஜன் போன்ற இந்துத்துவ சாதியவாதிகளின் பின்னால் நின்றுகொண்டு தொடர்ந்து தமிழர்களை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. சினிமா வாய்ப்புகள் இல்லையென்றால் சீமான் முன்புபோல் வாய்ப்புகளைத் தேடி சினிமாவில் மட்டுமே நடிக்க வேண்டும்; வசனம் பேச வேண்டும். மேடையில் வேண்டாம்!

- வன்னிஅரசு

Pin It