seeman latestபிரதமர் மோடி தனக்கு தூது அனுப்பி ஆதரவு கேட்டதாக நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

“பிரதமர் மோடியின் சார்பில் ஒரு சீக்கியர் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். மோடிக்கு உங்களை மிகவும் பிடிக்கும்; பா.ஜ.க. அணியில் நீங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்; அது மட்டுமின்றி ‘நான் ஒரு பிராமின் அல்ல’ என்பதையும் சீமானிடம் கூறுங்கள்” என்று மோடி கூறியதாக என்னிடம் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். தூதர் ஒருவரும் பேசினார், எனது ஆதரவைக் கேட்டார். என்னை மாநிலங்களவை உறுப்பினராக்குவதாக உறுதியளித்தார்கள்” என்று சீமான் கூறியிருக்கிறார். இது குறித்து ஜெகத்கஸ்பரிடம் ஒரு ‘யூ டியூப்’ அலைவரிசையில் கேட்டபோது அவர் அளித்த பதில்:

ஆர்.எஸ்.எஸ்.சும் மோடியும் சீமானிடம் ஆதரவு கேட்க வந்திருப்பதே அவரது கொள்கை பலவீனத்தைக் காட்டுகிறது. இதேபோல் தி.க. தலைவர் கி. வீரமணி அவர்களிடமோ, கொளத்தூர் மணியிடமோ, கோவை இராமகிருட்டிணமிடமோ வந்து கேட்க முடியுமா?” என்று பதிலடித் தந்துள்ளார்.

அதே தந்தி தொலைக்காட்சி பேட்டியில் சீமான் மற்றொரு கருத்தையும் கூறினார். “திராவிட கட்சிகளை எதிர்க்கப் புறப்பட்டிருக்கும் நீங்கள், சிறையிலிருந்து விடுதலயான சசிகலாவை நேரில் சென்று சந்தித்தது ஏன்”? என்பது கேள்வி. அதற்கு சீமான், “சிறையில் துன்பப்பட்டு வந்திருக்கிறார்.

மனிதாபிமானத்துடன் சென்று பார்த்தேன். அத்துடன் எனது மாமனாரின் (முன்னாள் அமைச்சர் காளிமுத்து) உறவினர்” எனபதில் கூறினார். அ.தி.மு.க. வுடன் சசிகலாவையும் அ.ம.மு.க.வையும் இணைப்பது குறித்து ஏதேனும் சசிகலா பேசினாரா என்ற கேள்விக்கு, “அவர் எதையும் பேசவில்லை; நான் தான் கேட்டேன்; இணைப்பு முயற்சிகளை நான் ஏதேனும் செய்யலாமா என்று; அவர் அமைதியாக இருந்து விட்டார்” என்றார் சீமான்.

திராவிடக் கட்சிகள் நாட்டை சீரழித்து விட்டன என்று மேடைகளில் ‘முழங்கும்’ சீமான், அ.தி.மு.க. ஒன்று பட வேண்டும் என்பதில் இவ்வளவு முனைப்பு ஏன் காட்ட வேண்டும் என்ற கேள்வியை பலரும் கேட்கிறார்கள்.

“தி.மு.க.வை வீழ்த்திட வேண்டும் என்ற ஒரே கொள்கை தான் சீமானிடம் இருக்கிறது. அதைப் புரிந்து கொண்டுதான் பா.ஜ.க. அவருக்கு தூது விடுகிறது; அவரே சசிகலா - அ.தி.மு.க. இணைய வேண்டும் என்று விரும்புகிறார்” என்று சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It