பல ஆண்டுகளுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து அடிமைகளாக அழைத்து வரப்பட்ட கறுப்பின மக்களுக்கு காலப்போக்கில் தங்கள் சொந்த ஊரின் பெயர், தாங்கள் சார்ந்த பிரிவின் பெயர், என தங்களைப் பற்றிய உண்மையான அடையாளங்கள் எல்லாமே மறந்து போயிற்று. பின் தங்கள் முதலாளிகளான அமெரிக்கர்களின் குடும்பப் பெயர்களையே தங்கள் பெயருக்கு பின்னால் வைத்துக்கொண்டார்கள். கறுப்பினத்தவர்களின் குடும்பப் பெயர்களாக இன்று இருக்கும் Williams, Henry போன்ற ஆங்கிலப் பெயர்கள், அவர்களின் முதலாளிகளாக இருந்தவர்களின் குடும்பப்பெயர்கள் தாம். நாம் நன்கு அறிந்த அமெரிக்க கறுப்பினத்தவர்களான வில் ஸ்மித், டென்செல் வாஷிங்டன், லூயிஸ் ஆர்ம்ஸ்ட்ராங், ஏன் கறுப்பினத்தவர்களுக்காக அமைதி வழியில் போராடிய மார்ட்டின் லூதர் கிங் என அனைவரின் கடைசி பெயருமே ஒருகாலத்தில் அவர்களுக்கு முதலாளியாக இருந்த அமெரிக்கர்களின் குடும்பப் பெயர்கள்தான். கறுப்பர்களின் அடிமை வரலாற்றை இன்னும் அந்த பெயர்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இதை முறித்து ஒரு மாபெரும் புரட்சியை  கறுப்பினத்தவர்களின் மனதில் எழுப்பியவர் புரட்சியாளர் மால்கம்X! 

மால்கம்Xன் இயற்பெயர் மால்கம் லிட்டில் (Malcolm Little). வெள்ளையர்களின் ஆதிக்கத்தையும், ஆளுமையையும் கண்டு தாங்கள் வெள்ளையினத்தில் பிறந்திருக்க கூடாதா என பல கறுப்பின இளைஞர்கள் தங்கள் உடையலங்காரம் முதல், முடியின் நிறம் வரை வெள்ளையர்களைப் போல் மாற்றிக்கொண்டு தாழ்வுமனப்பான்மையுடன் அலைவதை பழக்கமாக வைத்திருந்தார்கள். ஒரு மனநோய் போல பரவிய இந்த அடிமைக் கலாச்சாரம், மால்கம் லிட்டிலையும் விடவில்லை. தன் சுருட்டை முடியை வெள்ளையர்களைப் போல முடிந்தவரை நீட்டிவிட்டுக்கொள்வதும், முடியின் நிறத்தை சிகப்பாக மாற்றிக்கொள்வதும் அவருக்கு வழக்கமாய் இருந்தது. பின்னர் ஒரு கைகடிகாரத்தை திருடிய குற்றத்திற்காக முதல்முறையாக சிறையில் அடைக்கப்பட்ட மால்கம், அங்குதான் அவர் வாழ்வையே மாற்றி அமைத்த ஜான் பேம்ப்ரியை (John Bambry) சந்தித்தார்.

மால்கமின் அடிமைத்தனமான தோற்றத்தைக் கண்டு, "நீ ஏன் உன்னைப் போல் இல்லாமல், அவனைப் போல் இருக்க வேண்டும்?" என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் மால்கமிடம் ஆங்கில அகராதியைக் காட்டிய ஜான், அதில் 'Black' என்பதற்கு "அழுக்கு, சுத்தமின்மை, தீயது" என அர்த்தம் கூறப்பட்டிருந்ததையும், 'White' என்ற வார்த்தைக்கு 'பரிசுத்தம், தூயது' என்றும் அர்த்தம் சொல்லப்பட்டிருந்ததையும் காட்டினார். ஆங்கிலேயர்கள் கறுப்பர்களை அடிமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், எப்படி கறுப்பினத்தையே அவமானகரமானதாக மாற்றி வருகிறார்கள் என்பதையும் எடுத்துச் சொன்னார். இதுதான் மால்கமின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட சம்பவம். அதுவரை மால்கம் லிட்டில் ஆக இருந்தவர், தன் இனத்தின் அடிமை வாழ்க்கையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் 'லிட்டில்' என்ற பெயரை தூக்கி எறிந்தார். மேலும் அமெரிக்க மண் தனக்கு இழைத்த அநீதியால் தன் இனம் அடையாளத்தை இழந்து தவிப்பதை உலகுக்கு உணர்த்தும் வண்ணம்  தன் பெயருக்குப் பின் குடும்பப்பெயர் இருக்கும் இடத்தில் 'X' என்ற குறியை இணைத்துக்கொண்டார்!

ஜான் பேம்ப்ரி மால்கமிற்கு காட்டிய அகராதி இன்னமும் நம் மனதிலும், புழக்கத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. கெட்ட செயல்களை செய்தவனுக்கு கருப்பு மனம் என்றும், நல்லவர்களுக்கு வெள்ளை மனம் என்றும் நாம் பேசுவதும், எழுதுவதும் அதனால் தான்! இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மால்கம்X, மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களின் புரட்சிகரமான வாழ்க்கைக்குப் பின் கறுப்பினம் தன் அடையாளத்தை நிலை நிறுத்திக்கொண்டிருக்கிறது. ஆங்கிலேயர்களைப் போல தங்களை உருமாற்றிக்கொள்ளும் அவலம் அவர்களால் அங்கு முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் வெளிநாடுகளில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன் பூர்வீகத்தின் அடையாளமாக விளங்கும் 'குடும்பப் பெயர்' என்னும் அடையாளத்தை மட்டும் அவர்களால் இன்னும் மீட்டெடுக்க முடியவில்லை. தொலைந்த பூர்வீக தொடர்பு தொலைந்ததாகவே இருக்கிறது!

அப்படியே 1960களின் மத்திய கால அமெரிக்காவில் இருந்து ஒரு 'யூ டர்ன்' எடுத்து தற்போதைய தமிழகத்துக்குள் எட்டிப்பாருங்கள். நம்மைச் சுற்றி சிகப்பழகு பூச்சு விளம்பரங்களும், சிதேஷ், விதேஷ், வர்ஷா, ஸ்ருதி, பூஜா போன்ற பெயர்களும் வியாபித்திருக்கின்றன!

தமிழகத்தைப் பொறுத்தவரை பிற்கால ராஜராஜ சோழர்கள், இடைக்கால பல்லவர்கள் காலத்தில் இருந்தே ஆட்சியாளர்களின் பலத்த ஆதரவுடன் தமிழர்களுடைய அடையாள இழப்பு மெல்ல துவங்கிவிட்டது. ஆங்கிலேயர்கள் போல எந்த விதமான பகிரங்க அடிமைத்தனமும் இங்கு தமிழர்கள் மேல் திணிக்கப்படவில்லை. மாறாக தமிழர்களே விரும்பி ஏற்றுக்கொண்ட அடையாள அழிப்பு தான் இங்கு இன்றும் நிலவுகிறது. சமஸ்கிருதக் கடவுள்களை தமிழ்க்கடவுள்களாக, சமஸ்கிருத மதமான இந்து மதத்தை தமிழர்களின் மதமாக ஆக்கியதில் தொடங்கி சமஸ்கிருத பெயர்களே நவீனப்பெயர்கள் என்ற மறைமுகப் பரப்புரையை தொடர்ந்து செய்ததன் மூலம் தமிழரின் அடையாளங்கள் தமிழர்களாலேயே புறந்தள்ளப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு கிறித்தவ, இஸ்லாமிய மதங்களின் நுழைவுக்குப் பின் அம்மதத்தைச் சேர்ந்த மக்களும் தங்கள் மத அடையாளத்தை நிலைநிறுத்தும் வண்ணம் மதப்பெயர்கள் வைப்பதையே காலம் காலமாக பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, சிவப்பாய் இருத்தலே அழகு, சிவப்பாய் இருந்தால்தான் திருமணம் நடக்கும், சிவப்பாய் இருந்தால்தான் வேலை கிடைக்கும், சிவப்பாய் இருந்தால்தான் ஏழாம் இடத்தில் குரு உட்காரும் என்றெல்லாம் வரும் விளம்பரங்கள், திரைப்படங்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு சிவப்பாய் ஆவதற்கு அலைந்துகொண்டும், மறுபுறம் ராஹுல், சுமேஷ் என சமஸ்கிருத பெயர்களை சுமந்துகொண்டும் அலைகிறார்கள் தமிழர்கள்! அடிமைப்பட்டிருந்த, புத்தி தெளியாத மால்கம் லிட்டிலைப் போல!

தற்கால தமிழர்களை, குறிப்பாக தமிழ்ப்பெண்களைப் பொருத்தவரை சிதேஷ், விதேஷ் என்ற பெயர்கள் எல்லாம் புதுமையான பெயர்கள், தமிழ்ச்செல்வன், வேந்தன் என்பதெல்லாம் பழமையான பெயர்கள்! சமஸ்கிருதமும், தமிழும் கிட்டத்தட்ட ஒரே காலச்சூழ்நிலையில் தோன்றிய மொழிகள் எனும்போது ஒருமொழிப் பெயர் புதியதாக, நவீனமானதாகவும் மற்றொரு மொழிப்பெயர் பழமையானதாகவும் எப்படி இருக்கமுடியும்? உலகிலெயே மிகவும் நவீனமான மொழி ஆங்கிலம். அதுமட்டுமல்லாது மிக அழகாக காலம்காலமாக தன் நவீனத்தையும் அது தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

200 வருடங்களுக்கு ஒருமுறை பாம்பு தோலை உரிப்பதைப் போல, தன் பழமையை உரித்துப் போட்டுவிட்டு புதுமைக்குள் புகுந்து கொள்ளும் பெருமையுடையது ஆங்கிலம்! தமிழோ மாறவே இல்லை. சங்க இலக்கியத்தைக் கூட இன்றைய தமிழறிவு அவ்வளவாக இல்லாத தமிழனால் புரிந்துகொள்ள முடியும்! சரி தமிழ் பழைய மொழி, சமஸ்கிருதம்? அது புழக்கத்திலேயே இல்லாத செத்த மொழி அல்லவா? புதுமையேதான் வேண்டுமென்றால் ஆலன் டொனால்டு, அர்னால்டு ஸ்வார்ச்சனேக்கர் என்று பெயர் வைத்தாவது ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் செத்த மொழியில் எதை எதையோ அல்லவா வைக்கிறார்கள்!! உயிரோடில்லாத மொழியில் பெயர் வைக்கும் தமிழர்களுக்கு, பழமையான மொழியில் பெயர் வைப்பது கசப்பது தான் வியப்பு!

தமிழ்ச்சமூகத்தின் இந்த மனநிலைக்கு படைப்பாளிகள் ஒரு மிகமுக்கிய காரணம். எழுத்தாளர்கள், திரைத்துறையினர் படைக்கும் கதைமாந்தர்களின் பெயர்கள், ஒரு சமகாலச் சமூகம் (contemporary society) தங்கள் குழந்தைகளுக்கு என்ன பெயர் இடுகிறது என்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. கடைசியாக ஒரு தமிழ்ப்படத்தில், தமிழ்ப்பெயர் கொண்ட கதாநாயகனையோ, கதாநாயகியையோ எப்போது பார்த்தோம் என்பது மறந்தே விட்டது! ஸ்ருதி, கார்த்திக், பூஜா, ஷிவா இதைத்தாண்டி இயக்குனர்களால் சிந்திக்கவே முடியவில்லை! இந்த விஷயத்தில் பிரபுதேவாவை பாராட்டலாம், 'எங்கேயும் காதல்' கதாநாயகிக்கு 'கயல்விழி' என பெயரிட்டிருந்தார். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு என் அத்தை ஒருவர், தன் பெண்ணுக்கு இந்த பெயர் வைத்தபோது, "அய்யயே.. பழைய பெயரா வச்சிருக்கீங்க!" என பல தமிழர்களால் 'புகழப்பட்ட' பெயர் இது!  மனிதர்கள் தானே பழையதாவார்கள், பெயர்கள் எப்படி பழையதாகும் என்பது எனக்கு பலகாலமாக புரியவேயில்லை. இந்த பழசு, புதுசு என பெயர்களை நம் மக்கள் தரம் பிரிப்பது அவர்கள் காலகட்ட கதைமாந்தர்களின் பெயர்களை வைத்துதான் என்பதை பலப்பல வருடங்களுக்குப் பின் புரிந்துகொண்டேன். அதாகப்பட்டது, இதன்படி 'கேசவ்' என்றால் 'மயிர்' என்று அர்த்தம், ஆனால் தமிழர்களைப் பொருத்தவரை இது நவீனப்பெயர். தேன்மொழி என்றால் 'தேன்போன்ற மொழியினை பேசுபவள்' என்று அர்த்தம், ஆனால் இது பழைய பெயர்!

என் வீட்டருகே இஸ்த்ரி வண்டி வைத்திருக்கும் ஆறுமுகத்தின் மகன் பெயர் ராகுல். 'லோடுமேன்' முனிச்சாமி தன் மகளுக்கு பூஜா என பெயரிட்டிருந்ததாக சொல்லி என்னிடம் இனிப்பு கொடுத்தார். இந்த வடமொழிப் பெயர் மயக்கம், சமூகத்தின் அனைத்து தரப்பையும், வகுப்பையும், கலைஞர் அரசின் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியைப் போல செவ்வனே சென்றடைந்திருக்கிறது. வடமொழியில் பேசிக்கொண்டு, வடமொழி பெயர்களோடு வலம் வரும் சிகப்பான வட இந்தியர்கள் மத்தியில், தமிழ் பேசிக்கொண்டு, வடமொழி பெயர்களோடு, சூர்யா கூவிக் கூவி விற்கும் சிகப்பழகு க்ரீம்களை தடவியபடி நம் தமிழ் இளைஞர்கள் பரிதாபமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், தாங்கள் மறைமுக, 'தன்னார்வ' அடிமைகள் என்பது தெரியாமலேயே! எனக்கு தெரிந்து, அன்புச்செல்வன் என பெயர் வைத்திருக்கும் வட இந்தியனை நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோ இல்லவே இல்லை! ஆனால் முனியாண்டியின் மகன் ராகுல் என்றும், அறிவழகனின் மகன் ஸ்வராஜ் என்ற பெயருடனும் வாழ்ந்து வருகிறார்கள்! இது என்ன மாதிரியான ஒரு சூழ்நிலை!!!

மால்கம்Xயிற்கு ஒரு ஜான் பேம்ப்ரி இருந்தார். பெயரட்டையில் வடமொழிப் பெயருடன், சிகப்பழகு க்ரீமை பூசிக்கொண்டு நிறத்தின் மேல் வெறுப்புடனும், இயற்கையின் மேல் கடுப்புடனும், மால்கம் லிட்டில் போல மனம் நிறைய தாழ்வுமனப்பான்மையோடும் அலைந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு யார் இருக்கிறார்கள்? மால்கம் லிட்டில் தன் தனித்தன்மையை உணர்ந்த போது, அவர் இனம் முற்றிலும் தன் அடையாளத்தை இழந்திருந்தது. அதனால் 'X'ஐ சேர்த்துக்கொண்டார். நம் இனத்திற்கு இன்னும் கொஞ்சம் அடையாளம் எச்சமிருக்கிறது. அது 'X' ஆக மாறுவதற்கு முன், நம் அடுத்த தலைமுறையையேனும் தமிழ்ச்செல்வனாகவோ, யாழினியாகவோ, இனியனாகவோ, முகிலனாகவோ ஆக்கிக்கொள்வோம்!

Pin It