விடுதலைக்குப் பிறகு இத்தனை ஆண்டுகள் ஆகியும், ஷெட்யுல்ட் வகுப்பினர் அனுபவித்து வரும் கொடுமைகள் எள்ளளவும் குறையவில்லை. கிராமங்களில் இன்றும் ஷெட்யுல்ட் மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும், தீண்டாமைக் கொடுமைகளும் மிக மிக அதிக அளவில் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. பல கிராமங்களில் ஷெட்யுல்ட் இனத்தவர் பேருந்துகளில் அமர்ந்து பயணிக்க முடிவதில்லை.

தீண்டாமையை ஒழிப்பதற்காகவும், ஷெட்யுல்ட் இனத்தவருக்கு எதிரான வன்முறையாட்டங்களை ஒழிப்பதற்காகவும், அவர்களை ஆதிக்க சாதியினரிடமிருந்து காப்பதற்காகவும்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கிறது. ஆனால், அந்த சட்டமோ நம் நாட்டில் ஐந்து சதவிகிதம்கூட அமுல்படுத்தப்படவில்லை என்கிறது ரிபோர்ட். "அச்சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டு, தண்டனையும் அதிகமாக்கப்பட வேண்டும்" என்று ஷெட்யுல்ட் வகுப்பினருக்கான தேசிய ஆணையம் பரிந்துரைக்கிறது. "ஷெட்யுல்ட் இனத்தவர் அச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள்” என்று ஆதிக்க உணர்வோடு பேசுபவர்களை சட்ட ரீதியாக தண்டிக்க வழிமுறைகளை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.

மொத்த மக்கள் தொகையில் முப்பது சதவிகிதம் உள்ள செட்யுல்ட் இனத்தைச் சார்ந்த ஒருவரையாவது கண்டிப்பாக ஒவ்வொரு (தனியார் மற்றும் பொது) கோவிலிலும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று சட்டம் போட்டு, அதைச் செயல்படுத்துவது பகுத்தறிவு பூமியான தமிழகத்தில் மிக மிக எளிது. ஆனால் அதைப்பற்றி மூச்சு விடக் கூட எந்த கட்சியும் தயாரில்லை. ஷெட்யுல்ட் இன மக்கள் தினமும் சந்திக்கும் கொடுமைகளை நீக்க எந்த ஒரு வளர்ந்த அரசியல் கட்சியும் முன் வருவதில்லை என்பது வருத்தமளிக்கிறது!

ஆத்திகராக இருந்தாலும், நாத்திகராக இருந்தாலும் ஷெட்யுல்ட் இன இளைஞர்கள் ஒரே மாதிரியான சமூகக் கொடுமைகளைத்தான் சந்திக்க வேண்டி உள்ளது. இந்த ஜனநாயக அவலம் இன்றும் அப்படியே மாறாமல் இருப்பதுதான் கவலை அளிக்கிறது.

(1) ஒரு ஆதிக்க சாதி ஆத்திகன் இன்னொரு ஆதிக்க சாதி நாத்திகன் வீட்டில் திருமணம் செய்வான்; ஆனால், அவன் மகள் ஒரு ஆத்திக ஷெட்யுல்ட் இன இளைஞனை திருமணம் புரிய விரும்பினால் அவளைக் கொலை கூட செய்வான்.

(2) ஒரு ஆதிக்க சாதி ஆத்திகன் இன்னொரு ஆதிக்க சாதி நாத்திகனுக்கு வீடு வாடகைக்கு கொடுப்பான்; ஆனால், ஒரு ஆத்திக ஷெட்யுல்ட் இனத்தவருக்கு வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டான்

(3) ஒரு ஆதிக்க சாதி (வியாபாரி) ஆத்திகன் இன்னொரு ஆதிக்க சாதி நாத்திகனுக்கு தன் கம்பெனியில் வேலை கொடுப்பான்; ஆனால் இன்னொரு ஆத்திக ஷெட்யுல்ட் இனத்தவருக்கு வேலை தருவதை வெறுப்போடு தவிர்ப்பான்.

இதுபோன்ற உண்மைகளை எவ்வளவு காலம்தான் மூடி மறைக்க முடிகிறது? இந்த உண்மைகளை முழுமையாக உணர்ந்த ஷெட்யுல்ட் இன தலைவர்கள் மட்டுமே அந்த சமூக இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமைய முடிகிறது. திருமாவளவன், அதியமான், கிருஷ்ணசாமி, லதா பிரியகுமார், சிவகாமி, ஜான் பாண்டியன், கிருஷ்ணப் பறையனார் போன்ற தலைவர்கள் இவ்வுண்மைகளை மிகச் சாதாரணமாகப் புரிந்துகொண்டு, தனது அறிவார்ந்த பேச்சுக்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அதனால்தான், பெருவாரியான ஷெட்யுல்ட் இன சிந்தனையாளர்கள் இந்த தலைவர்களைப் போற்றுகின்றனர்.

நாட்டின் விடுதலைக்குப் பிறகு இவ்வளவு காலமாகியும் ஷெட்யுல்ட் மக்களுக்கு இழைக்கப்படும் சமூகக் கொடுமைகள் ஏறத்தாழ 2 சதவிகிதம்தான் குறைந்துள்ளது. ஷெட்யுல்ட் மக்களுக்கு எதிராக அனைத்து தளங்களிலும் கடுமையாக உள்ள இந்த துன்பியல் நிலை மாறிட ஷெட்யுல்ட் மக்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும். 'அரசியல் ஆலோசகர்கள்' எனும் பெயரில் ஆதிக்க மனம் கொண்டவர்கள் வேண்டுமென்றே தவறான ஆலோசனைகள் கூறினால், தன் நுண்ணறிவால் உண்மைகளை உணர்ந்து சரியான முடிவெடுக்கும் அரசியல் ராஜதந்திரம் கொண்ட மாயாவதியைப் போன்ற தலைவர்கள் மேலும் பலர் உருவாக வேண்டும்!

புரட்சிகரமான படைப்பாளியாகவும், அதே நேரத்தில் ஆதிக்க சாதி உணர்வாளனாகவும் அங்கீகாரம் பெற எளிதில் முடிகிறது! முற்போக்காளனாகத் தன்னைக் காட்டிக் கொண்டு ஆதிக்க சாதி சங்கங்களிலும் செயல்படுவது நியாயமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆபத்தான போக்கு தீவிரமாகக் களையப்பட வேண்டும்!

இரட்டை குவளை முறை ஷெட்யுல்ட் இளைஞர்களை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கிறது. இந்த மாதிரியான கொடுமைகள் ஷெட்யுல்ட் இளைஞர்களின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் நிச்சயமாக தடுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே, ஷெட்யுல்ட் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் நம் சமூகம் முனைந்து செயல்பட வேண்டும். ஷெட்யுல்ட் மாணவர்களும், மாணவிகளும் அனுபவித்து வரும் சமூக வலிகள் அவர்களது எதிகாலத்தை பாதிப்பதை ஒரு ஜனநாயக நாடு அனுமதிக்கலாமா?

- தஞ்சை வெங்கட்ராஜ்

Pin It