நாங்குநேரி நிகழ்வு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரையும் அதிர வைத்திருக்கிறது. மாணவன் சின்னத்துரையை வெட்டிய மாணவர்களின் பெற்றோர்களுள் சிலர் அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் என்பதோடு ஆர் எசு எசு வழி மதவெறி அரசியல் கொண்டவர்களும் ஆவர்....

1960 களில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் எல்லா மாணவர்களும் கைகோர்த்து இணைந்து தமிழ் மொழியின் விடுதலைக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடினர்... இன்று பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் கைகோர்த்து சாதியாய் இணைந்து ஆயுதங்கள் எடுக்கிறார்கள்,

ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் இன்னொரு ஆசிரியரிடம், ஒரு சில மாணவர்களைக் காண்பித்து 'இவர்கள் எல்லாம் எங்க ஆளுங்க பாத்துக்கங்க' என்று வெளிப்படையாகச் சொல்லும் நிலை இன்று உள்ளது. பெரும்பாலான ஆசிரியர்களிடையேகூட இந்தச் சாதிப் பாகுபாடு மேலோங்கி இருக்கிறது.

ஒரு ஆசிரியர் ஒரு பள்ளிக்குப் புதிதாகப் பணிபுரிய வந்தால் உடனே மற்ற ஆசிரியர்கள் அலுவலகத்திற்குள் சென்று புதிய ஆசிரியரின் பணிப் பதிவேட்டின் முதல் பக்கத்தில் அவரின் சாதி உள்ளிட்ட எல்லா தரவல்களையும் தேடிப் பார்க்கிறார்கள்.. ஆசிரியர்கள் பலர் அந்தக் காலத்தில் சாதி மறுப்புணர்வில், பகுத்தறிவுணர்வில் இருந்தனர்.. ஆனால் இன்று பலர் சாதிச் சங்கங்களிலும், சங்பரிவார் இயக்கங்களிலும் இருந்து சாதி, சமய வெறியினராக உள்ளனர்.

தலைமை ஆசிரியர் எந்தச் சாதியோ அந்தச் சாதி சார்ந்த ஆசிரியர்கள் செல்வாக்காக இருப்பார்கள். இந்த வகையில் மாணவர்களிடமும் இந்தச் சிக்கல் உருவாகியுள்ளது. சில பள்ளிகள் சேரிப் பகுதியிலும், சில பள்ளிகள் ஊர்ப் பகுதியிலும், இன்னும் சில பள்ளிகள் பொது இடங்களிலும் உள்ளன. ஊர் மற்றும் பொது இடங்களில் உள்ள பள்ளிகளில் ஆதிக்கச் சாதியினரின் செல்வாக்கு அதிகமாக இருக்கும். சேரி பகுதியில் உள்ள பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் செல்வாக்கு அதிகமாக இருக்கும். மாணவர்களிடத்தில் சாதிப் பாகுபாடு மேலோங்கி இருப்பதற்கு மிகப்பெரும் காரணம் சாதியச் சமுகமே.. இப்போதைய நிலையில் வெளிப்படையாகவே சாதியைச் சங்பரிவார் இயக்கங்கள் தூண்டி வளர்க்கின்ளன.. மாணவர்கள் சாதிஅடையாளங்கள் தெரிகிறபடி அடையாளப்படுத்திக்கொள்கின்றனர்.

பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்குச் சாதி மனநிலையை உருவாக்குகிறார்கள். ஆசிரியர்களும் இந்த மனநிலையைப் போக்குவதற்கு வழிவகை செய்வதில்லை. திருவள்ளுவர், வள்ளலார், பெரியார் அம்பேத்கர் குறித்தோ, சமுக விழிப்புணர்வோடோ பாடங்களைச் சரிவர நடத்துவதில்லை. காவல்துறையினரும் மாணவர்களிடத்தில் பாகுபாடு காட்டுகிறார்கள்.

பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு உள்ளன போல் இந்தச் சாதிய பாகுபாட்டைப் போக்க எந்த வகையான குழுவும் இல்லை.

1. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், பெற்றோர்கள், காவல் துறை ஆய்வாளர், நீதிபதி உள்ளிட்டோரைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும். அந்தக் குழு ஒவ்வொரு மாதமும் கூடி அந்தப் பள்ளியில் ஏதாவது சாதித் தொடர்பான பாகுபாடு நடந்ததா என்று கூடிப் பேசி ஆய்வு செய்ய வேண்டும்.

2. பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் கூடி எங்கள் பிள்ளைகள் படிக்கின்ற இந்த பள்ளியில் 'சாதிப் பாகுபாடு பார்ப்பதில்லை' என்கிற அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும்.

இப்படியான ஒடுக்கு முறைகள் நடக்கும்போது அதில் ஈடுபடுகின்ற ஆதிக்கச் சாதி மாணவர்களைப் பள்ளியை விட்டு நீக்க வேண்டும் என்ற ஒரு சிலரின் கருத்து ஏற்புடையதல்ல. அது மேலும் இந்தச் சிக்கலை அதிகமாக்கும். ஆகவே மேற்கண்ட குழுக்களை அமைத்து தமிழ்நாடு முழுக்க எல்லா ஊர்களிலும் இப்படியான நிகழ்வுகளை இனிமேல் நடக்கக்கூடாது என்று உறுதி ஏற்க வேண்டும். தமிழ் உணர்வும், குமுகப் பொறுப்புணர்வும் வளர்க்கப்படவேண்டும்

- அநிமண்

நாங்குநேரி - சிந்தனைக்குச் சில..

நாங்குநேரியின் தாக்கத்திற்குப் பிறகு குமுக அளவில் தேவையான சில நடைமுறை மாற்றங்கள் முன்மொழியப்படுகின்றன.. இவை குறித்த ஆய்வுகள் தேவை..

  •  கல்விக்கூடங்கள் அனைத்திலும் சாதி மத அடையாளங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும்..
  •  நல்லொழுக்கம் என்கிற பெயரில் கல்விக் கூடங்களில் மதப்பரப்பல் நிகழ்ச்சிகள் எவையும் இருத்தல் கூடாது..
  •  கல்விச் சான்றிதழ்களின் பதிவுகளில் சாதிப் பதிவுக்கு மாறாக குமுக, பொருளியலில் ஒடுக்கப்பட்டிருக்கிற, இடைநிலையிலிருக்கிற முன்னேறியிருக்கிற வகையினரைக் குறிக்கும் அளவில் வகுப்புக்குறியீடுகள் மட்டுமே அடையாளப்படுத்துதல் நல்லது...
  •  தீவிரச் செயல்பாட்டாளர்களைக் கவனிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் தனி உளவுத்துறைகள் இருப்பது போல் குமுகத்தைச் சீரழித்து வரும் சாதி, மத வெறி போக்குகளைக் கவனிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுப்பதற்கும் தனித்த உளவுத்துறை அமைக்க வேண்டும்
  •  ஒவ்வொரு கல்விக் கூட்டங்களையும் கவனிப்பதற்கு என்று ஆசிரியர், பெற்றோர், அரசுத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு ஒவ்வொரு மாதமும் கல்விக்கூடங்களை ஆய்வு செய்திடல் வேண்டும்..
  •  அறிவியல் கருத்துகள், குமுக ஒற்றுமைக்குரிய கருத்துகள், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் பாடத்திட்டங்களிலேயே கொண்டு வரப்பட்டு விரிவாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்

இவை மட்டுமின்றி கூடுதலாக அனைவரும் சிந்திக்கிற செய்திகளை 'தமிழ்நாடு' இதழ் எதிர் நோக்குகிறது.. அவற்றையெல்லாம் தொகுத்துச் சிறு வெளியிடாக்கி நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தத்தைக் கொடுத்தாக வேண்டும்.

Pin It