கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

கோவை மாவட்டம், அன்னூர் ஒட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி என்ற விவசாயி, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்குச் சென்றபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும், கோபால்சாமியின் காலில் விழுந்து முத்துசாமி மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த முத்துசாமியை, மாற்று சமூகத்தைச் சேர்ந்த கோபால்சாமி சாதியைச் சொல்லித் திட்டியதால் இந்தச் சம்பவம் நடந்ததாக முதலில் தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து, விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு வழக்குகளில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், கிராம உதவியாளர் முத்துசாமி தான் அலுவலகத்தில் வைத்து கோபால்சாமியைத் தகாத வார்த்தையில் பேசியும் அடித்தும் இருக்கிறார். இதற்கான வீடியோ காட்சிகள் வெளி வந்தன.

உடனே ஆட்சியர் சமீரன் உத்தரவின்படி, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் விசாரணை நடத்தி, நடந்தது என்ன என்பதைக் கண்டறிந்தார். தவறு செய்தவர் கோபால்சாமி அல்ல; கிராம உதவியாளர் முத்துசாமியும், வி.ஏ.ஓ. கலைச் செல்வியும் தான்.

முதலில் கோபால்சாமியை தாக்கியது முத்துசாமி தான் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அடித்த முத்துசாமியே வீடியோ பதிவுகள் நடப்பதை அறிந்து, தானாகப் போய் காலில் விழுவதுபோல் ஒரு காட்சியை உருவாக்கினார் என்று விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து முத்துசாமி, கலைச் செல்வி இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இது குறித்து ஏற்கனவே வந்த செய்தியை வெளியிட்டிருந்தது. அந்த செய்தி உண்மையல்ல என்று இப்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும், அதற்கேற்ப வீடியோ காட்சிகளை தயாரிப்பதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும் ஜாதிவெறி சக்திகளை ஊக்கப்படுத்துவதாகி விடும் என்று ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நியாயம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கவலையுடன் சுட்டிக் காட்டுகிறது.

- பெ.மு. செய்தியாளர்