விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடும் தொகுதியில் பா.ம.க.வினர் திட்டமிட்ட கலவரத்தில் இறங்கி தலித் மக்களின் வீடுகளைத் தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்கு உரியது. தொல் திருமாவளவன் சின்னம் பானை என்பதால் பானைகளை வீதிகளில் போட்டு பா.ம.க.வினர் உடைத்துள்ளனர்.  இதைத் தட்டிக் கேட்டார்கள் என்பதற்காக தலித் மக்களின் வீடுகளை பொன்பரப்பி கிராமத்தில் கும்பலாகச் சென்று தாக்கியுள்ளனர். பா.ம.க.வுடன் இந்து முன்னணியினரும் இதில் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ‘கீழ் விஷாரம்’ வாக்குச் சாவடியைக் கைப்பற்ற பா.ம.க.வினர் உள்ளே நுழைய முயன்றபோது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்துள்ளனர்.

அன்புமணி இராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நத்தமேடு கிராமத்தில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டுகளை பா.ம.க.வினர் போட்டுள்ளனர். ‘இந்து’ ஆங்கில நாளேடு ஆதாரங்களுடன் செய்தியை வெளியிட்டுள்ளது. வீடியோ பதிவுகளும் வெளி வந்துள்ளன.

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் திருப்போரூரில் நடந்த கூட்டத்தில் பேசும்போது “நாம் மட்டும்தான் ‘பூத்’தில் இருக்க வேண்டும்; சொல்வது புரிகிறதா?” என்று பேசினார். மருத்துவர் இராமதாஸ், “வாக்குச்சாவடிகளில் சிங்கங்கள் மட்டுமே இருக்க வேண்டும்; குட்டிகள் இருக்கக் கூடாது” என்று பேசினார். இந்த ஆணைகளைத் தொண்டர்கள் நிறைவேற்றிக் காட்டியுள்ளனர்.

தேர்தல் களத்தில் ஜாதிவெறியைத் தூண்டிவிட்டு தலித் மக்கள் மீது தாக்குதலை நடத்தும் பா.ம.க.வின் இந்த  சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் ஜாதி வெறி செயல்பாடுகளை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொன்பரப்பியில் தலித் மக்கள் வீடுகளைத் தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.