''பகைவர் பாராட்டும் பண்புகொண்ட பேச்சாளன்
 நகைமுகத் தோடிலங்கும் நந்தலைவர் செந்தமிழன்
 பன்னாள் நோன்பிருந்து பத்துமாதம் தான்சுமந்து
 இந்நாள் தமிழன்னை ஈன்றெடுத்தப் பேரறிஞன்
 அண்ணா என்று சொன்னால் போதும்
 அது தமிழ்போல் இனிக்கிறது;பனிபோல் குளிர்கிறது!''

என்று கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தன் பாடிய பாமாலைக்கு உரிய இவரை நாற்பதைத் தொட்ட இளைஞர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எப்படி இருப்பார்? தெரியாது! இதோ ஒரு காலத்தில் தி. மு. க வில் இருந்து, பிரிந்து, மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் அண்ணாவை இப்படி உருவகப்படுத்துகிறார்.

anna_480''குள்ளமான உருவம்! குறுகுறுத்தப் பார்வை! பரந்த நெற்றி! விரிந்த முகம்! அகன்ற கண்கள்! எடுப்பான மூக்கு! நகை தவழும் உதடுகள்! நறுக்கிவிடப்பட்ட மீசை! வலது புறமாக வகிடு எடுக்கப்பட்டுப் பறந்துகிடக்கும் தலைமயிர்!பரந்த மார்பு!கறைபடிந்த பற்கள்! சிறிதளவு புடைத்தத் தொந்தி! இடுப்பில் எட்டுமுழ வேட்டி! முழுக்கை சட்டை! தோளில் இருபக்கமும் தொங்கும் துண்டு! பையில் உறையோடு கூடிய மூக்குக்கண்ணாடி! கையிலே பொடிடப்பி! மடியில் வெற்றிலை பாக்கு! காலிலே செருப்பு! இந்த தோற்றப்பொலிவோடு காணப்பட்டவர்தான் அண்ணா!''

1935ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற ''செங்குந்த இளைஞர் மாநாட்டில்''தான் தந்தை பெரியார் அவர்களை அறிஞர் அண்ணா முதன்முறையாகச் சந்திக்கிறார். இந்த சந்திப்பானது திராவிட இயக்க வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. காரணம்,  'பெரியார் என்கிற ஒற்றைச் சொல் தூங்கியத் தமிழினத்தை தட்டி எழுப்பியது என்றால் 'அண்ணா' என்கிற ஒற்றைச் சொல் எழுந்த தமிழினத்தை தலைநிமிரச் செய்தது. 'பெரியாரின்' பேச்சு மூலிகைச்சாறு என்றால் 'அண்ணா'வின் பேச்சு தீங்கனிச்சாறு. 'பெரியார்' அரசியலுக்கு வராமல் திட்டங்கள் தீட்டினார் என்றால் 'அண்ணா' அத்திட்டங்கள் நிறைவேற சட்டங்கள் செய்தார். அதுநாள்வரை பாராண்டத் தமிழனை பதறவைத்த ஆரியம், இருவரின் வருகைக்குப் பின் பதுங்குகுழி தேடி ஓடலாயிற்று.

ஒரு காலத்தில் கலை, இலக்கியம், ஆட்சி, அரசியல், நிர்வாகத்திறன், போர்த்திறன், சமூக ஒழுக்கம் இவற்றுக்கெல்லாம் உலகத்திற்கே உதாரணமாய்த் திகழ்ந்தது இந்த தமிழ்ச்சமுதாயம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என மண் வேறுபட்டாலும், மனம் வேறுபடாமல் வாழ்ந்த தமிழரிடத்தில், பயன்படாதக் குளத்தில் பாசி படர்வதைப் போல் பரவியது பார்ப்பனியம்.

கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால், மநுதர்மத்தின் பெயரால், நான்கு வர்ணங்கள் (பிராமண, ஷத்ரிய, வைஷிய, ஸூத்ர) என்று சொல்லப்படுகிற ஜாதியின் பெயரால் நம்மைப் பிரித்து வைத்தது. பிரித்தது மட்டுமின்றி இன்னாருக்கு இதுதான் கர்மா(கடமை) என்று வகுத்து வைத்தது. வகுத்து வைத்தது மட்டுமின்றி இவனை இவன் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது, தீண்டக்கூடாது-பார்த்தால் பாவம், தொட்டால் தீட்டு என்று தடுத்து வைத்தது. தடுத்தது மட்டுமின்றி பிற வர்ணத்தார் (ஜாதியார்) செல்வத்தை சேர்க்கக் கூடாது, அறிவை-கல்வியை தேடக்கூடாது என்று அழுத்தி வைத்தது.

இப்படி அழுத்தப்பட்ட தமிழ்ச்சமுதாயத்தை எழுச்சி பெறச் செய்திட, பகுத்தறிவுப் பட்டாளத்தை உருவாக்கினார் பெரியார். அத்தகைய போர்ப்படைக்கு தளபதியாய் விளங்கினார் அண்ணா. நாடு முழுவதும் உலாவரத் தொடங்கினார். மேடைதோறும் உரையாற்றத் தொடங்கினார். அண்ணாவின் நாவிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாளாக மாறியது. தர்ப்பைப்புல் ஏந்திய தருக்கர்கள் கூட்டம் தலை தெறிக்க ஓடியது.

கேள்விக்கணைகள் தொடுத்தார் அண்ணா விடைப்பகர முடியாமல் கடவுள்கள் கதறியது; மதம் மண்டியிட்டது. சடங்கும், சம்பிரதாயமும், சனாதனப் பேய்களும் தன் சப்தநாடிகளையும் அடக்கிக் கொண்டன.

தமிழன் எப்படி தாழ்ந்தான்? விளக்குகிறார் அண்ணா:

''அக்கால இலக்கியங்கள் பெரும்பாலும் போதிக்கும் முதற்கருத்து, முக்கிய கருத்து, 'விதி' என்ற தத்துவமாகும். ! இந்த 'விதி' என்ற தத்துவம் இன்று மட்டுமல்ல என்றுமே மனிதனுக்கு மகத்தான தீங்கிழைக்கும், எக்காலமும் கேடு தரும் தத்துவமாகும். விதியை நம்பி மதியைப் பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மக்களாய் வாழ்வது மிக, மிகக் கேடு பயக்கும், வாழ்வு கெடுக்கும். நாட்டிலே, மக்கள் தமது இல்லாமைக்கும், இழிநிலைக்கும், 'விதி', 'கர்மவினை', 'ஆண்டவன் விட்டவழி' என்கிற வேதாந்தம் பேசி, ஏதோ இருப்பதைக்கொண்டு திருப்தியடைய வேண்டுமென்ற அளவிலே இருப்பதைக் காணமுடியும்! தமிழர் தாழ்ந்ததற்குக் காரணம், தமிழகத்தில், தமிழரது எண்ணங்களில் ஏற்பட்ட பக்தி, புராணம், மோட்சம், நரகம், மேலுலக வாழ்வு, கர்மம், வினை, விதி என்பன போன்றக் கருத்துகள், மனிதனது சிந்தனைக்குத் தடை செய்திடும் கருத்துகள் புகுந்து ஆதிக்கம் செலுத்தினதுதான் என்பது நன்கு விளங்கும்''

பணம் பாழ்! பகுத்தறிவு பாழ்!! என்கிறார் அண்ணா
 
''ஆலயங்களில் என்ன இருக்கிறது? அது ஆரியக்கோட்டை! கள்ளர் குகை! சனாதனச் சேரி! வைதீக வளை! எல்லாம் வல்ல இறைவனுக்குக் கோயில் ஏன்? குளம் ஏன்? குடும்பம் ஏன்? கூத்திகள் ஏன்? காணி ஏன்? பூமி ஏன்? மதம் ஏன்? சாஸ்திர, சம்பிரதாய, சடங்குகள் ஏன்? என்றுதான் கேட்கிறேன். இவைகளால் எவ்வளவு பணம் பாழ்! பகுத்தறிவு பாழ்! கருத்துப் பாழ்! உங்கள் வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் சிந்தியுங்கள்! இந்தக்கோயில், மதம், சாஸ்திரம், சம்பிர தாயம், இவற்றின் பேரால் நாட்டுமக்கள் செய்யும் செலவு எவ்வளவு என்று! கோயில்களின் பேரால் எத்தனைக்கோடிப் பணம் முடங்கிக் கிடக்கிறது என்று! அதனைக்கொண்டு எத்தனை எத்தனை திட்டங்கள் நிறைவேற்றலாம் என்று சிந்தியுங்கள்''

பார்ப்பனரும், பார்ப்பனீயமும் - எச்சரிக்கிறார் அண்ணா

''சமூகத்தைக் கவனித்தால் பார்ப்பனர்கள் சிறு தொகையினர். பார்ப்பனரல்லாதாரின் மூச்சு, பார்ப்பனரைத் திணற வைக்கும். அவ்வளவு அதிக எண்ணிக்கை உள்ளவர்கள்தான் பார்ப்பனரல்லாதார். இருப்பினும், மோட்ச நரகத் திறவுகோலும், ஆண்டவன் அருளை அளக்கும் அளவுகோலும் அவர்களிடம் இருப்பதாகவும், பிற சமூகத்தினரின் சேவையைப் பெறுவது அவர்களின் பிறப்புரிமை என்றும், அவர் களின் திருப்தி ஆண்டவனுக்கே திருப்தி அளிக்கும் என்றும் எண்ணற்ற ஏடுகள் எழுதப்பட்டு பன்னெடு நாட்களாக மக்கள் இரத்தத்திலே அந்த எண்ணம் கலக்கப்பட்டு விட்டதால், அந்தச் சமூகத்திற்கு, எண்ணிக்கைக்கு துளியும் பொருத்தமில்லாத அளவு அமோகமான செல்வாக்கு வளர மார்க்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே தான், நமது இயக்கம் அந்தப் பிரச்சினையை முக்கியமானதாகக் கருதுகிறது.

பக்தியா? பகல் வேஷமா? -வினவுகிறார் அண்ணா

''சிவனே, அப்பா! உன் பாதாரவிந்தம் எப்போது கிடைக்கும்? என்று சிலைக்கு முன் கதறுகின்ற ஒரு பக்தனிடம், ஒரு வேளை பரமசிவன் போல் யாராவது வந்து, 'பக்தா, பயப்படாதே, எழுந்திரு;உன் சிவநேசத்தைக் கண்டு உள்ளம் பூரித்தேன். இன்று முதல் நீ என்னுடன் இரண்டறக் கலந்து கொள்ளலாம் வா!' என்று அழைத்தால், போவதற்கு அவர் தயாராக இருப்பாரா? கேட்கிறேன். என்ன சொல்லுவார் அப்பொழுது, ''பிரபோ''தாங்கள் காட்சியளித்தது போதும் என்பார். தன் ஒரே மகளுக்கு நல்ல இடத்தில் மணம் முடித்து வைக்க வேண்டுமே என்று நினைப்பார். உண்மையில் அவர்கள் பக்தியில் அர்த்தமிருக்கிறதா?

கடவுள் எங்களைத் தண்டிப்பாரா? -சவால் விடுகிறார் அண்ணா

''நாங்கள் கடவுளிடத்தில் அன்பை செலுத்துகிறோம். அவர் எங்களுக்கு அன்பையும், அருளையும் கொடுக்கிறார். நாங்கள் நாஸ்திகர்கள் என்று எங்களிடத்திலே விரோதமும், பகையும் இருக்குமானால், நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே எங்கள் மண்டை பிளக்க என்று சாபமிடலாமே! அல்லது பேச முடியாமல் நாக்கு இழுத்துக்கொள்ளக் கடவது சொன்னால், நாக்கு இழுத்துக்கொள்ளுமே! 'கை கால்களை பிடித்துக்கொள்ளக் கடவது' என்று சொன்னால், பிடித்துக் கொள்ளுமே! சுலபமான வழிதான் -ஆனால், எங்கேயாகிலும் இந்தக் காலத்தில் இப்படி நடக்கிறதா?நடக்க முடியுமா? முடியாது!

மதம், ஜாதி, கடவுள் - இவற்றை மறுக்கிறார் அண்ணா

''ஜாதிமுறை சமுதாயப் பிற்போக்கிற்கும், தொழில் மந்தத்திற்கும் பிரதானக் காரணமாயிருக்கிறது. ஜாதிக்கொள்கையில் ஒரு வித கேவலமான இறுமாப்பு இருக்கிறது. அதனால் சிலர் பயனற்ற கர்வங் கொள்கிறார்கள். பலர் சிறுமையும், அதைரியமும் அடைகிறார்கள். இத்தகைய நிலையில் உழைப்புக்குள்ள உண்மையான மதிப்புப் போய்விடுகிறது.''

''மதம் என்பது இந்த உலகவாழ்க்கையைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அதன் கவலையெல்லாம் மறு உலகத்தைப் பற்றியதுதான். நமதுக் கடவுள்களைப் பற்றி மதத்தின் பேராலே கட்டப்பட்டுள்ள கற்பனைக் கதைகள், படித்துவிட்டு சற்றே சிந்திக்கும் எவருக்கும் அருவருப்பைத் தானே கிளறுவதாக இருக்கிறது. அறிவுக்குப் பொருந்தாத ஆபாசங்களை அல்லவா ஆண்டவனின் பெயருடன் இணைத்து இங்கே மத நூல்களாக்கி விட்டனர். மக்களின் பொதுஅறிவு வளர்ந்து ஆராயும் திறன் வளரும்போது எப்படி அந்தக் கதைகளைப் பக்தியுடன் படிக்கவோ, நம்பவோ முடியும்!''

அறிவுப் பிரச்சாரத்திற்கு அழைக்கிறார் - அண்ணா

''உரிமைப் போர்ப்படையின் ஈட்டிமுனைகளான நீங்கள் எல்லோரும் சேர்ந்து அறிவுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். நாட்டின் உயிர் நரம்புகளான நீங்கள், உங்கள் காரியத்தில் வெற்றிபெற, இடைவிடாது பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். நாட்டிலே எதை நீக்க வேண்டுமோ அதை நீக்க வேண்டும். முன்னேற்றப் பாதையில் செல்லும் நீங்கள் முதன்முதலாக செய்ய வேண்டிய கடமை யாதெனில், சமுதாயத்திற்கு உழைக்க வேண்டும். பாமரர்களுக்கு அறிவு புகட்ட வேண்டும். அஞ்ஞானத்தை அறவே இந்நாட்டைவிட்டு ஓட்ட நீங்கள் எல்லா வழிகளிலும் பாடுபட வேண்டும்.''

இத்தகைய மகத்தான சிந்தனைகளை தன்னுடைய அழகுத்தமிழ் எழுத்தாலும், ஆற்றல் மிகுப் பேச்சாலும் தமிழ் மாநிலம் தொடங்கி, மாநிலங்களவை வரையிலும் பரவச்செய்த மாபெரும் சிந்தனையாளர் அறிஞர் அண்ணா. அறுபத்தியேழில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும்''இந்த அரசு தந்தை பெரியாருக்குக் காணிக்கை' என்று சொன்னவர். அறுபது ஆண்டுகளே வாழ்ந்தாலும், அன்னை நிலத்திற்கு 'தமிழ் நாடு' எனப் பெயர் சூட்டிய அந்த அண்ணனை இத் தமிழகிலம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் போற்றும், புகழும், வாழ்த்தும் வணங்கும்.

Pin It