திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் உள்ள புளியுரம்பாக்கம் தலித் கிராமத்தின் மீது 23.7.2017 அன்று இரவு 7 மணியளவில் பாமகவின் சாதிவெறி குண்டர் படையினரால் திட்டமிட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வீச்சரிவாள், கத்தி, கோடாரி, கட்டைகளோடும் 30 வண்டிகளில் 70-க்கும் மேற்பட்ட சாதி வெறிக் கும்பல் (வன்னியர் சமூகம்) நுழைந்து தலித் இளைஞர்களை தூக்கிச் சென்று சரமாரியாக வெட்டியுள்ளது. தாக்க வந்திருந்த அனைவருமே இளைஞர்கள். பாமகவின் மஞ்சள் சட்டை அணிந்து அடையாளத்துடன் வந்திருக்கிறார்கள். இத்தாக்குதலில் வெங்கடேசன் (வயது 35) என்கிற இளைஞர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். ஆதிகேசவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். விஜி, தயாளன், கணபதி ஆகியோர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்கொடுந்தாக்குதல் நடந்த விதத்தைப் பார்க்கும் போது ஏற்கனவே முடிவு செய்து, உள்ளூர் காவல் துறைக்கும் தெரிந்தே இந்த வன்முறை செயல் அரங்கேறி இருக்கிறது.
வன்முறைக்குப் பின்பு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஊருக்குள் புகுந்து இரு சக்கர வண்டியை கொளுத்திவிட்டு ஓடியிருக்கிறார். அவரை தலித் மக்கள் பிடித்துக் கொடுத்தும் காவல்துறை அவரை விடுவித்துள்ளது. காரணம் பெண் காவல் ஆய்வாளர் ஜோதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர், அவர் பாமகவின் முக்கிய பொறுப்பில் உள்ள முரளியின் உறவினர் என்று கூறுகிறார்கள். இத்தாக்குதலுக்கு உதவி செய்து வருபவர்கள் செய்யாறு அதிமுக எம்எல்ஏ மோகன், பாமகவில் பொறுப்பில் உள்ள முரளி, செஞ்சி கணேசன் இளைஞர் அணி பொறுப்பில் உள்ளவர், கணேசன் என்பவர்தான் திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் வன்முறைக்கு அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்துவருவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இந்த கொலைவெறிச் செயலுக்குக் காரணமான சக்திகளை கேள்விக்குட்படுத்தாமல் காதல் விவகாரம், ஒரே பெண்ணை இரு இளைஞர்கள் காதலித்ததில் மோதல் என்று பெண்ணை கொச்சைப்படுத்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகள் தமிழகத்தில் தலித் விரோத கூட்டணி கட்டி சாதி அரசியல் செய்யும் கட்சிகளுக்கு மேலும் வலு சேர்ப்பதாகவே அமையும் என்பதை ஊடகங்கள் கவனத்தில் கொள்வதில்லையோ எனத் தோன்றுகிறது.
உண்மையில் நடந்தது என்ன?
புளியுரம்பாக்கம் தலித் கிராமம் பொருளாதாரத்தில் மக்கள் எண்ணிக்கையில் வலிமை மிகுந்த கிராமம். 1000 குடும்பங்கள், ஒவ்வொரு வீட்டிலும் அரசு ஊழியர்கள் உள்ளனர். அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிலங்கள் உள்ளன. யாரையும் சார்ந்து வாழும் தேவை இல்லை. சுயபொருளாதாரத்தோடு வர்க்க தளத்தில் முன்னேறிய சமூகமாக வாழ்ந்துவருகிறார்கள். குறிப்பாக இக்கிராமத்தில் மட்டும் இதுவரை 30க்கும் மேற்பட்ட சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்திருக்கின்றன. இதுபோன்ற வன்முறைகள் காதலுக்காக நடந்ததில்லை. செய்யாறில் சிப்காட் இயங்கி வருவதால் இளைஞர்கள், இளம் பெண்கள் அங்கு அதிகளவு வேலை செய்கிறார்கள். முன்பைவிட தற்போது காதல் திருமணங்கள் அதிகரித்திருக்கின்றன என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். புளியுரம்பாக்கத்திற்கு அருகில் உள்ள ஊரில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வசிக்கிறார்கள். இந்த ஊருக்கும் புளியுரம்பாக்கம் கிராமத்தின் மீதான வன்முறைக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறினர். ஆக தாக்கியவர்கள் யார்? எங்கிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்? அவர்களை யார் ஒருங்கிணைத்தது? என்றால், வந்திருந்த இளைஞர்கள் தீச்சட்டி, சிங்கம் உருவம் பொறித்த மஞ்சள் சட்டை அணிந்த பாமகவின் சமூக விரோத குண்டர் படை என்பதை நேரில் கண்ட மக்கள் பதிவுசெய்கிறார்கள். இன்னொன்று காஞ்சிரத்தில் உள்ள முக்கியப் புள்ளி ஸ்ரீதர் என்பவரை அணுகி ரவுடி கும்பலின் உதவியோடு மஞ்சள் சட்டை அணிந்த குண்டர் படை இறங்கியிருக்கிறது.
காதல் காரணமல்ல
இத்தாக்குதல் நடப்பதற்கு முன்பே புளியுரம்பாக்கம் கிராம இளைஞர்களுக்கும் செல்வப் பெரும்புலி என்கிற வன்னியர் கிராம இளைஞர்களுக்கும் இடையில் கிரிக்கெட் தொடர்பாக சண்டை நடந்திருக்கிறது. இரு சமூக இளைஞர்களும் மாறி மாறி அடித்துக் கொண்டதாகவும் காவல்துறை அவர்களை அழைத்து சமாதானம் செய்ததாகவும் கூறினர். இந்த சண்டையைப் பயன்படுத்திதான் பாமக குளிர்காயத் துடித்திருக்கிறது. சமூக விரோத கும்பலை இறக்கிவிட்டிருக்கிறது. தொடர்பே இல்லாத இளைஞன் வெங்கடேசன் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். கிரிக்கெட் குழுவிலுள்ள இன்னும் 3 பேர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். காதல் காரணமல்ல சாதி மாறிய காதல் வாழ்க்கையும் அக்கிராமத்திற்கு புதிதும் அல்ல, தலித் மக்களின் பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கையின் தரத்தினை அடித்து நொறுக்குவதும், அவர்களின் ஆளுமையை பலவீனப்படுத்துவதுமே இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்திருக்கிறது. இருந்தும் வருகிறது. இதனை வைத்து சுற்றுவட்டாரங்களில் உள்ள வன்னியர் உள்ளிட்ட மற்ற சமூகத்தினரை அணிதிரட்டுவதற்குக் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஒவ்வொரு வன்முறைச் சம்பவங்களிலும் வர்க்க முரண்பாடும் சாதி ஆதிக்க முரண்பாடும் அரச அதிகார வர்க்கத்தின் பலமும் இணைந்தே இயங்குகிறது என்பதற்கு புளியுரம்பாக்கம் இன்னொரு எடுத்துக்காட்டு. இருதரப்பு மக்களின் வர்க்க ஒற்றுமையை வலியுறுத்தி தூண்டும் எதிரியை தனிமைப்படுத்துவதே நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி.
தாக்குதலுக்கான தொடக்கப் புள்ளி
அண்மையில் செய்யாறில் கடந்த 15.07.2017 அன்று அன்புமணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. வந்திருந்த கூட்டத்தினர் வழக்கம் போல் வன்முறைத் திட்டத்தோடு வந்துள்ளனர். ஊர் திரும்பும்போது மஞ்சள் சட்டை குண்டர்கள் புளியுரம்பாக்கம் கிராமத்தின்மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். அன்று முதலே இத்தகைய கொலைவெறிச்செயலை செய்ய திட்டம்போட்டிருக்கிறது பாமக. இதனை நினைத்திருந்தால் காவல்துறை தடுத்திருக்க முடியும். ஆனால் வன்முறை அரங்கேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு காஞ்சிபுரம் கீழம்பி கிராமம் சூறையாடப்பட்டது. இன்று புளியுரம்பாக்கம். தாக்கியவர்கள் 19 பேரை காவல்துறை கைது செய்திருக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பதிந்திருக்கிறது. இன்னொருபுறம் அரசும் காவல்துறையும் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் போராடக்கூடாது, நீதி கேட்டு வீதிக்கு வந்துவிடக்கூடாது என அச்சுறுத்தலை அடக்குமுறையை கையாண்டு வருகிறது.
ஒவ்வொரு வன் கொடுமைகளுக்குப் பின்னும் சாதி ஆதிக்கம், ஆட்சி அதிகாரம் நேரடியாக தலித் மக்களை நசுக்குகிறது. அனைத்து தந்திரங்களையும் அரங்கேற்றி பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கும் நீதிக்கும் முற்றுப்புள்ளி வைத்து முடக்கி விடுகிறது. இதுதான் இன்றைய புளியுரம்பாக்கம் கிராமத்தின் மீதான வன்முறையிலும் நடந்திருக்கிறது. தாக்கியவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவதற்கு பதிலாக இரு தரப்பிலும் வழக்கு பதிவுசெய்து அச்சுறுத்துவது அதனை நீர்த்துப்போக செய்வது என்கிற அப்பட்டமான அநீதியை நிர்வாகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. அத்தோடு சாதி ஆதிக்க பயங்கரவாத அடக்குமுறையை அரசும் இணைந்தே ஏவுகிறது. தற்போது பேருக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலித் மக்களோ பொருளாதாரம் இழந்து உயிர் பலி கொடுத்தத் துக்கத்தில், பாதுகாப்பு இல்லாத அச்சத்தில் இருக்கின்றனர், குற்றவாளிகள் ராமதாஸ் அன்புமணி உள்ளிட்ட சக்திகளோ சாதி ஓட்டு, அணிதிரட்டல் அறுவடைக்குத் தயாராகிவிட்டனர்.
கடந்த 2014 முதல் இன்றுவரை தமிழகம் முழுக்க தொடர்ந்து பாமகவின் சாதிவெறி அரசியலால் 100க்கும் மேற்பட்ட தலித் கிராமங்கள் சூறையாடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 100 ஆக இருந்த ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை இன்று 300 ஆக அதிகரித்திருக்கிறது. பல தலித் இளைஞர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் திட்டமிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது காவல்துறை. ஆனால், வன்முறையை நிகழ்த்தும் முதன்மைக் குற்றவாளிகள் எந்த இடத்திலும் தண்டிக்கப்படவில்லை. அதிமுக, திமுகவோ என்றும் வாய் திறந்ததில்லை. மாறாக ஊட்டி வளர்க்கும் சூழலே நிலவுகிறது. பல இடங்களில் சாதி ஆதிக்கமும் காவி பயங்கரவாதமும் ஒருங்கே இணைந்து இதுபோன்ற வன்முறைகளை நிகழ்த்திவருகிறது பிஜேபியின் ஆட்சியிலே இவை தற்போது வலுப்பெற்றுவருவது என்பது ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்நிலையை கேள்விக்குறியாக்கியிருக்கிறது. ஆக குற்றத்தில் ஈடுபடுபவர்களை கைதுசெய்வதோடு மட்டுமே இத்தகைய தலித் மக்கள் மீதான தாக்குதலை வன்முறையை தடுத்துவிட முடியாது. ஒட்டுமொத்தமாக ஆதிக்க சாதி மக்களை எதிரியாக நிறுத்துவதும் தவறான ஒன்று. புளியுரம்பாக்கம் கிராமத்தின் மீதான தாக்குதல் என்பது இரு சாதிகளுக்குமான மோதலோ வன்முறையோ கிடையாது. திட்டமிட்டு ஒரு கட்சியால் முன்னெடுக்கப்பட்ட வன்முறைத்தாக்குதல். இதற்கு திட்டம் வகுத்துத் தரும் பாமக தலைமையை, அதற்கு துணைபோகும் உள்ளூர் சாதிவெறி கும்பலை, அதிமுக போன்ற அரசியல் கட்சிகளிலுள்ள குற்றவாளிகளை அம்பலப்படுத்துவதும், அரசியலிலிருந்து அவர்களை அப்புறப்படுத்துவதும் அதற்கானத் தொடர் இயக்கமும் செயல்பாடுமே இன்றைக்கு அவசியம்.
- ரமணி, சாதி ஒழிப்பு முன்னணி