இந்திய பிரதமர் ஒருவருக்கும் (ராஜீவ் காந்தி) இலங்கை அதிபருக்கும் (ஜெயவர்த்தனா) இடையே உருவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை அரசு பதின் மூன்றாவது சட்டத்திருத்தத்தை ஒப்புக் கொண்டது.
மிகக் குறைந்த அதிகாரங்களை மட்டுமே வழங்கக் கூடிய அந்த ஒப்பந்தத்தைக்கூட நிறைவேற்ற இப்போது கோத்தபயே தலைமையிலான இலங்கை அரசு தயாராக இல்லை.
குதிரை கீழே தள்ளி குழியையும் பறித்தது என்று சொல்வதைப் போல, ‘மாகாண சுயாட்சி’ என்ற அதிகாரத்தைப் பகிர முன் வராத இலங்கை அரசு, இப்போது அந்தத் தீவில் மாகாணங்களையே முற்றாக ஒழித்து ஒற்றை ஆட்சியை உருவாக்கப் போவதாக கூறிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைப் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசினார். அவர் பேசி விட்டு இந்தியா திரும்பிய உடனேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குள்ளான மக்களின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னத்தை இடித்துத் தள்ள இலங்கை அரசு உத்தரவிட்டது.
கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் நினைவுச் சின்னத்தை நிறுவிட அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
முள்ளி வாய்க்கால் மனித உரிமை மீறல்கள் குறித்து அய்.நா.வின் மனித உரிமை ஆணைய விசாரணை வரம்புக்குள் இலங்கை அரசு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இலங்கை மற்றும் சர்வதேச பிரதிநிதிகளைக் கொண்டு ‘கலப்பு விசாரணை’ நடத்த அய்.நா. முடிவெடுத்து இலங்கையும் உடன்பட்ட நிலையில் அந்த விசாரணயில் ஒரு சிறு முன்னேற்றம்கூட தென்படவில்லை.
அய்.நா.வில் இந்தியாவும் ஒப்புக் கொண்ட கோரிக்கை இது. இந்த நிலையில் 13ஆவது சட்டத்திருத்தம், மனித உரிமை மீறல் விசாரணை பிரச்சினைகளை எழுப்பி, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு.
ஆனால், இந்தியா அப்படி அழுத்தம் ஏதும் தராததோடு, இது குறித்து இலங்கை அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று தட்டிக் கழிப்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கு இழைக்கும் துரோகம்.
இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக ‘நிலை மாற்றும் நீதி’ (Transitional Justice) என்ற கோட்பாட்டை அய்.நா. மனித உரிமை ஆணையம் முன் வைத்தது. ஆனால், தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல் இல்லை என்ற ஒன்றைத் தவிர, வேறு எந்த மாற்றமும் அங்கு ஏற்படவில்லை.
‘இனப்படுகொலை’ என்றால் ‘இனத்தைத் திட்டமிட்டு அழிப்பது’ என்ற ஒற்றை கொடுமை மட்டுமல்ல, இனத்தின் பண்பாடு, அதைக் காப்பாற்றக் கூடிய கட்டமைப்புகளை அழிப்பதும்கூட இனப்படுகொலை என்ற பட்டியலில்தான் வரும் (Structural Genocide) தமிழர்களின் அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.
தமிழர் பகுதிகளில் சிங்கள-பவுத்த கோயில்கள் கட்டப்படுகின்றன. வீதிகளுக்கு தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டு சிங்களப் பெயர்கள் சூட்டப்படு கின்றன. தமிழர்களுக்கான ‘மாகாண அடையாளங்களே’ ஒழிக்கப் போவதாக அரசு அறிவிக்கிறது.
இந்த நிலையில் வரலாற்று அடிப்படையில் தமிழர் களுக்கான தாயகம், மொழி, தேசிய இன அடையாளங்கள் என்ற அடிப்படையில் ஒரு இனம் தனக்கான சுய நிர்ணய உரிமை கோரும் உரிமையை சர்வதேச சட்டங்கள் ஏற்கின்றன என்றாலும், இப்போது இது காலத்தின் மாற்றத்துக்கு ஏற்ப புதிய கோட்பாடுகளோடு விரிவாக்கப்பட்டிருக்கிறது.
‘இழைக்கப் பட்ட அநீதிகளுக்கு நீதி கோருதல்’ (Remedial Justice) என்பதே இந்தக் கோட்பாடு. தமிழர்களுக்கான வரலாற்று ரீதியிலான தாயகத்தை சிங்களப் பேரினவாதம் ‘மகாவம்ச’ புராணங்களின் அடிப்படையில் மறுத்தாலும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும் உரிமையை மறுக்க முடியாது.
சர்வதேச விசாரணை வரம்புக்குள் இலங்கை வந்து விட்ட பிறகு அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை சர்வதேச கண்ணோட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதன் வழியாகவே அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்க முடியும்.
ஆனால், இலங்கையின் அதிபர் கோத்தபயே ஒரு பயங்கரவாத ஆட்சியை நடத்த விரும்புவதாகவே அண்மையில் அம்பாறையில் அவர் நிகழ்த்திய மிரட்டல் பேச்சு உணர்த்துகிறது. “பாதுகாப்புத் துறை செயலாளராக நான் இருந்தபோது தான் பயங்கரவாதத்தை (விடுதலைப் புலிகள்) ஒடுக்கினேன்.
அவர்கள் என்னை கொல்ல திட்டமிட்டார்கள். பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து கதையை முடித்து வைத்தேன். சிங்கள மக்களும் புத்த பிக்குகளும் நான் பாதுகாப்புத் துறை செயலாளராக மீண்டும் மாற வேண்டுமா? அல்லது இப்போதுள்ள அதிபராக செயல்பட வேண்டுமா என்று எதை விரும்புகிறார்களோ அது போல் செயல்படுவேன்” என்று திமிரோடு மிரட்டியிருக்கிறார்.
இலங்கையில் முதன்மை எதிர்க்கட்சியான மறைந்த பிரேமதாசா மகன் தலைமையில் செயல்படும் ‘சமாஜி ஜனே பாலவேகாயா’ (எஸ்ஜேபி) கட்சியும் இந்தப் பேச்சை வன்மையாகக் கண்டித்துள்ளது.
தான்தோன்றித்தனமாக எந்த சர்வதேச நெறிகளுக்கும் கட்டுப்பட மறுக்கும் சிங்களப் பேரினவாத ஆட்சிக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையே இலங்கை அரசின் செயல்பாடுகள் உணர்த்தி நிற்கின்றன.
- விடுதலை இராசேந்திரன்