எஸ். சி / எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதா இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய ஐக்கிய முற்ப்போக்கு கூட்டணி அரசு முடிவு செய்தது. இதில் பிர்ப்படுத்தப் பட்டோரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற வீண் வாதத்தை முன்வைத்து ஆளும் கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி, தி.மு.க வும், மதவாத பி.ஜே.பி யும் எதிர்த்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் பிற்டுத்தப்பட்டோரையும் சேர்த்துக் கொள்வது எந்த விதத்தில் சரியான அணுகுமுறை என்பதை பார்ப்பதற்கு முன்பு இட ஒதுக்கீடு பற்றிய புரிதலை நாம் தெரிந்து கொள்வோம்...

இட ஒதுக்கீடு ( சமூக நீதி)

தமிழ் அகராதியில் உள்ள தீண்டத்தகாத வார்த்தை எது என்று கேட்டால் கண்ணைக் கூடத் திறக்காமல் இட ஒதுக்கீடு இங்கே சிலர் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு ஆதிக்க சாதிகள், இந்துத்துவ கும்பல் கற்பித்து வைத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு பற்றிய புரிதல் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு, பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்டு, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையின் அடிப்படையில் தோன்றியது தான் இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீடு என்பது கேட்டுப் பெறும் பிச்சை அல்ல. மறுக்கப்பட்ட உரிமைகளை பெறுவதாகும். இட ஒதுக்கீடு என்ற பேரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சலுகை முறையில் ஏன் பதவிகளும் கல்வியும் அளிக்கப்படுகிறது என்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கல்வி வாடையே இல்லாத சமூகத்தில் இருந்து வந்தவனுக்கும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து ஆகிய அத்தனை அதிகாரங்களையும் சுவைத்துவிட்டு வந்தவனுக்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? அந்த அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இன்னும் சொல்லப் போனால் இட ஒதுக்கீடு என்பதே சாதியை ஒழிக்கும் மகத்தான கருவி தான். எப்படி என்போமானால் சாதி எதை அடிப்படையாக கொண்டுள்ளது? கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து இவைகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் சாதியை, இட ஒதுக்கீட்டின் மூலம்  தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு கல்வியை வழங்கினால், பொருளாதார ரீதியாக அவன் முன்னேறுவான். பொருளாதார ரீதியாக அவன் முன்னேறினால், சமூக அந்தஸ்து தானாகவே தேடி வரும். சமூக அந்தஸ்தில் எல்லோரும் சமம் என்ற நிலை உருவாகிவிட்டால்  இங்கே சாதிக்கு என்ன வேலை? அதே நேரத்தில் சாதியை ஒழிக்கும் கருவியான இட ஒதுக்கீட்டைக் கூட சாதியை வளர்க்கும் கருவியாக மாற்றிவிட்டார்கள் என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். அதைத்தான் சமாஜ்வாடி, பி.ஜே.பி, தி.மு.க போன்ற கட்சிகள் செய்துக் கொண்டு இருக்கின்றன.

ஒரு குடும்பத்திலே உள்ள உறுப்பினர்களில் இரண்டு வயதுக் குழைந்தைக்கு அதன் தேவைக்கு ஏற்பவும், முதியவருக்கு அவர் தேவைக்கு ஏற்பவும் உணவை எப்படி குடும்பத்தலைவி  பரிமாறுகிறாளோ அப்படித்தான் இந்த அரசும் செய்ய வேண்டும். யாருக்கு என்ன தேவையோ, எவ்வளவு தேவை இருக்கிறதோ அந்த அடிப்படையில் தான் உரிமைகளை பகிர்ந்து அளிக்க வேண்டும். சுருக்கமாக சொல்லப்போனால் உடன்பாடான ஓரவஞ்சனை தான் இட ஒதுக்கீடு. ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஒருவனது கால்களை கட்டியும், மற்றொருவனின் கால்களை அவிழ்த்துவிட்டும் ஓடவிடுவது என்பது எப்படி முரண்பாடானதோ, அப்படித்தான் கல்வி, பொருளாதரத்தில் உயர்ந்தவனோடு, கல்வி, பொருளாதரத்தில் பின்தங்கிய தாழ்த்தப் பட்டவனை மோதவிடுவதும் முரண்பாடானதே. இந்த முரண்பாடுகளை களைய நிச்சயம் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. அதே வேளையில் இட ஒதுக்கீடு சாதியை ஒழிக்கத்தான் வேண்டுமே ஒழிய ! சாதியை தற்காத்துக் கொள்ள கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு:

இந்திய முழுமைக்கும் 60 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால் அவை சரியான முறையில் உரியவர்களுக்கு பயன்படுகிறதா? என்பது கேள்வுக் குறியே. இப்போது இருக்கும் இட ஒதுக்கீடு எந்த விதத்திலும் தாழ்த்தப்பட்டவர்களை தரம் உயர்த்தாது என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க முடியாது. எதில் இட ஒதுக்கீடு கூட்டுகிற வேலைக்கும், கழுவுகிற வேலைக்கும் தானே இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதிகாரத்தை தீர்மானிக்கும் அளவுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை. இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று நாம் போராடுகிறோம். ஆனால் நமக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது, தாழ்த்தப்பட்டவர்கள், எப்போதும் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும் என்பதில், ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் விழிப்பாக இருக்கிறார்கள். அதன் சாராம்சம் தான் தனியார்மயமாதல் கொள்கை. இங்கே அரசுத்துறையில் மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு சட்டம் இல்லை. எனவே எல்லாவற்றையும் தனியார்மயமாக்கிவிட்டால் எப்படி இவனுங்க இட ஒதுக்கீடு கேட்ப்பானுங்க. என்ற ரீதியில் தான் தனியார் மயமாக்கி வருகிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

நாட்டில் 90 சதவிகிதம் தனியார்மயமாகிவிட்டது. மீதமுள்ள 10 சதவிகிதத்தில் 50 சதவிகிதம் தான் இட ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. அதிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 19 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. என்னைக் கேட்டால் குறைந்தபட்சம் அந்த 10 சதவிகிதம் முழுவதுமே இட ஒதுக்கீட்டு அடிப்படையில் வழங்குவதுதான் சரியான சமூக நீதியாக இருக்க முடியும் என நான் கருதுகிறேன். ஆக தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற நிலையில்தான் நாம் இன்னும் இருக்கிறோம்.

புள்ளிவிவரப்படி:

மத்திய பல்கலை கழகங்களின் எண்ணிக்கை 24
விரிவுரையாளர், ரீடர், பேராசிரியர் பதவிகளில் இட ஒதுக்கீடு எஸ்.சி. 15 % எஸ்.டி: 7.5%
விரிவுரையாளர் பணியிடங்கள் :
எஸ்.சி. இட ஒதுக்கீடு : 740
நிரப்பப்பட்டவை : 341 நிரப்பபடாதவை :399
ரீடர் பதவிகளில் எஸ்.சி / எஸ்.டி க்கான 84% சதவிகித
இடங்களும் நிரப்பப்படவில்லை.
பேராசிரியர் பதவிகளில் எஸ்.சி / எஸ்.டி க்கான 92%
சதவிகித இடங்களும் நிரப்பப்படவில்லை
------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசுப் பணியிடங்களில் கூட எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு சரியான முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை.  மத்திய அரசில் இருக்கும் 88 செகரட்டரி பதவிகளில் ஒருவர்க்கூட தலித் இல்லை. 66 அடிஷனல் செகரட்டரி பதவிகளில் ஒரே ஒரு தலித் மட்டுமே இருக்கிறார். 249 ஜாயின்ட் செகரட்டரி பதவிகளில் 13 பேர் மட்டுமே எஸ்.சி பிரிவை சார்ந்தவர்கள்.471 டைரக்டர் பதவிகளில் 31 பேர் மட்டுமே எஸ்.சி பிரிவை சார்ந்தவர்கள். இவைதான் மத்திய அரசு இட இதுகீட்டு முறையை நடைமுறைப் படுத்தும் லட்சணம்.

தமிழகத்தில் 2004 ஆம் ஆண்டு புல்லிவிவரத்தின்ப் படி குரூப் ஏ பதவிகளில் 10 விழுக்காடும்,  குரூப் பி பதவிகளில் 12 விழுக்காடும், குரூப் சி பதவிகளில் 15 விழுக்காடும் தான் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 19 விழுக்காடு கொடுக்க வேண்டிய இவர்களுக்கு அரசு நடைமுறைப் படுத்தியது இவ்வளவுதான். சமூக நீதிக்குப் பேர்போன தமிழகத்திலே தலித்துகளுக்கு  இந்த நிலை என்றால் மற்ற மாநிலங்களில் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

நாகராஜ் எதிர் இந்தியா என அறியப்படும் வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொண்டு மூன்று விஷயங்களை சுட்டிக் காட்டியது. பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கும் போது எஸ்.சி / எஸ்.டி பிரவினர் இன்னும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர் என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும், அவர்களது பிரிதி நிதித்துவம் போதுமான அளவில் இல்லை என்பதையும், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவதால் நிர்வாகத்திறன் பாதிக்கப்படவில்லை என்பதையும் மாநில அரசு உறுதிப் படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

( ரவிக்குமார் நன்றி : புதிய தலைமுறை வார இதழ் )
------------------------------------------------------------------------------------------------
ஒரு ஊராட்சி மன்ற தலைவர் அவருக்கு உரிய நாற்காலியில் கூட அமர முடியவில்லை. ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும் கூட தலித் தலைவர் இந்திய தேசியக் கொடியை ஏற்ற முடியவில்லை. இன்னமும் கிராமப் புறங்களில் தலித்துகள் சேரிகளில் தான் வாழ்கிறார்கள். கிராமப் புறங்களில் ஒரு தலித்,  புது பக்கெட் வாங்கி பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியாது, புது செருப்பை போட்டுக் கொண்டு பொது சாலையில் நடக்க முடியாது,  சைக்கிளில் செல்ல முடியாது, நல்ல பெயர் வைக்க முடியாது நல்ல சோறு சாப்பிட முடியாது, கை நிறைய காசு இருந்தும், கொட்டாங்குச்சியில்தான் தேநீர். பிறகு எங்கே தலித்துகள் பொருளாதார ரீதியில் முன்னேறிவிட்டார்கள் என்று சொல்வது? ஒரு ஊராட்சி மன்ற தலைவருக்கே இந்த நிலை என்றால் அங்கே குப்பை அல்லும் ஊழியரின் நிலை எப்படி இருக்கும் என்பதை நம்மால் யூகித்துக் கொள்ள முடியும். இந்த நிலையில் கொடுக்கப்படும் இட ஒதுக்கீடாவது சரியான முறையில் உரியார்களுக்கு பயன்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பயன்பட்டவர்கள் அந்த பதவியை நேர்மையாக நடத்தவும் முடியவில்லை.  இன்னமும் நாட்டில் 50 விழுக்காட்டினர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், அதிலே 75 விழுக்காட்டினர்கள் வறுமைக் கோட்டிற்கு உள்ளே உள்ளவர்கள். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கும் கல்வி முறைக்கும் இடையே பதினோரு விழுக்காடு இடைவெளி இருப்பதாக மத்திய அரசின் சர்வே கூறியுள்ளது.

பிற்பபடுத்தப்பட்டோரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை சரியானதுதானா?

எஸ். சி / எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதா இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருந்தது. அதை ஆளும் கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி, தி.மு.க, நேரடியாகவும், மதவாத பி.ஜே.பி மறைமுகமாகவும் எதிர்த்து வருகிறார்கள். சமாஜ்வாடி, தி.மு.க. வினரின் கோரிக்கை என்ன வென்றால் இதில் பிற்பபடுத்தப்பட்டோரையும்  சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயமானது. இவர்களின் இந்த நிலைப்பாடு இரண்டு சந்தேகங்களை நமக்கு எழுப்புகிறது. ஒன்று சாதியை ஒழிக்கும் இட ஒதுக்கீட்டை, சாதியை தற்காத்துக் கொள்ள பயன்படுத்துகிறார்களா? என்றும், இந்த கோரிக்கையின் மூலம் சாதி பிரிவினையை தூண்டுகிறார்களா? என்றும் நமக்கு ஐயம் எழுகிறது. பிற்பபடுத்தப்பட்டோரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்கிறவர்கள் முதலில் தாழ்த்தப்பட்டவர்களை ஊர்த்தெருவில் குடியேற அனுமதிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களை மனிதனாக மதிக்க வேண்டும். பிறப் படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களை மனிதனாக கூட மதிக்காத பிறப் படுத்தப்பட்டோருக்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீட்டில் எனக்கும் பங்கு கொடு என்று கேட்பது அயோக்கியத்தனம் தானே. இன்னும் சொல்லப் போனால் பள்ளர், பறையர்களும் அருந்ததியப் பிரிவு மக்கள் மீது திணிக்கும் வன்கொடுமைகளை நிறுத்துக் கொண்டு பிறகு இட ஒதுக்கீட்டைக் கேட்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது பிற்ப்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கும்  இட ஒதுக்கீட்டில் பங்கு வேண்டும் என்று கேட்பது சேரியில் வாழும் மக்களை மேலும் மேலும் தாழ்த்துவதேயாகும். இப்படித்தான் இரட்டை வாக்காளர் முறையை எதிர்த்தார்கள். அது தனித் தொகுதி முறையாக மாறியது. அதில் ஏதாவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எள்ளளவு பிரயோஜனம் உண்டா? ஆதிக்க கட்சிகள், முதலாளித்துவ கட்சிகள் தனக்கு வேண்டிய, தன்  சொல்பேச்சைக் கேட்கக்கூடிய தலித் ஒருவரை தனித் தொகுதியில் நிறுத்தி தன் காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். உதாரணமாக : இன்று  முலாயம் சிங் இதை எதிர்க்கும் போது அவர் கட்சியில் உள்ள தலித் ஒருவரால் முலாயம் சிங்கை எதிர்க்க முடிகிறதா? இதுதான் தனித்தொகுதியால் ஆதிக்க சாதிகள் அடைந்த லாபம்.

அறுபது ஆண்டுகால இட ஒதுக்கீட்டு நடைமுறையால் தாழ்த்தப்பட்ட மக்கள் சாதித்தது என்ன? அவர்கள் எந்த அளவுக்கு முன்னேறி உள்ளார்கள்? ஏன் சாதியை ஒழிக்க வேண்டும் என்று தொடங்கப்பட்ட அல்லது நடைமுறைப்படுத்த இட ஒதுக்கீட்டால் அதன் லட்சியத்தை அடைய முடியவில்லை என்று இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும் நமக்கே ஐயம் வருகிறதே. முலாயம் சிங் போன்றவர்களால் தான் இந்த நிலை வருகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீட்டில் எனக்கும் பங்கு கொடு என்று கேட்பதைத் தான் எதிர்க்கிறோம். எந்தக் காலத்திலும் முலாயம் சிங், கருணாநிதி போன்றவர்கள் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி சாதியை ஒழிக்க முனையமாட்டார்கள் என்றும், மேலும் அவர்கள் சாதியைத் தற்காத்துக் கொள்வார்கள் என்ற இரண்டு செய்திகளை நம்மால் இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது....

இட ஒதுக்கீடு சாதியை ஒழிக்கவே அன்றி - சாதியை வளர்க்க அல்ல என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதே நமது கோரிக்கை...

Pin It