methaguஓர் மனித உயிரைப் பறிப்பதற்கு ஒரு தனி மனிதருக்கோ, அரசாங்கங்களிற்கோ அல்லது நிறுவனமயப் படுத்தப்பட்ட எந்த அமைப்புக்களுக்கோ எந்த உரிமையும் கிடையாது என்று பொத்தம் பொதுவாக பெரு நாகரிகக்காரர்கள் போல் நாம் பேசி விடலாம்.

ஆனால் யதார்த்த உலக நிலமை அதுவல்ல. இதற்குப் பெருஞ் சாட்சியாக “வாழுதல் என்பது ஆதார உரிமை” என்று போதிக்கிற வத்திக்கானின் அதிகார மையத்தால் கொன்று புதைக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கானகனேடிய ஆதிக்குடிகளின் அப்பாவிக் குழந்தைகளின் எச்சங்கள் இதனை நான் எழுதிக் கொண்டிருக்கிற வேளையில் புதை குழிகளிலிருந்து தோண்டப்பட்டுக் காட்சிப் படுத்தப்படுகின்றன.

கனேடிய மூத்த குடியின் பிள்ளைகளை ஆங்கிலேயப் பள்ளிகள் பதைக்கப்பதைக்க கொன்று புதைத்த சான்றாக 215 பேரை அண்மையில் பிரிட்டிஸ் கொலம்பியாவிலும், தற்போது 751 பேரை ஸ்கற்சுவான் மாநிலத்தின் புதைகுழியிலிருந்தும் தோண்டியெடுத்திருக்கின்றார்கள்.

இதனால் கோபம் கொண்ட கனேடியப் பழங்குடியினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவான மனிதாபிமானமுள்ளோர் யூலை 1 ன் கனேடியத் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை புறக்கணிக்குமாறும், “கொன்றவர்களின் கொடு ஆட்சியைக் கொண்டாட வேண்டாம்” என்றும் ஆர்ப்பாட்டக் குரல்களை தேசமெங்கும் எழுப்புகின்றார்கள்.

வெள்ளைய ஆதிபத்திய வாதிகளின் பெயர்களில் இருந்த பல்கலைக் கழகங்களின், பாடசாலைகளின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. வதிவிடக் கல்விக் கூடங்களை உருவாக்கியவர்களின் சிலைகள் அடித்து நொறுக்கப் படுகின்றன.

கலாச்சாரத்தை மொழியை, மதத்தை அழித்து மூத்த குடிக் குழந்தைகளை இனவழிப்புச் செய்த கனேடிய தேசத்தின் தேசியக் கொடிகள் இன்றைய நாட்களில் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுகின்றன.

தன் சொந்த மணமான...
செவ்விந்திய மணத்தைத்
தொலையக் கொடுத்துவிட்டு
வந்த மணம் போர்த்தி
ஏதும் அறியாததைப் போல்- நடிக்கும
நந்திக்கடலெனவே
நீண்டு கிடந்துறங்கும்
என் ஒன்ராறியோ வாவி...

அத்திலாந்திக் கடலைக் கடந்து
சென் லோறன்ஸ் ஆற்றுச் சுவடுகள் ஓடி
செவ்விந்தியரின் கண்ணீர்க் கடலாம்
ஒன்ராறீயோவினுள் அன்னியக் கப்பலை
ஓட்டிய முதல் மாலுமிக்கென் வாழ்த்து!

செவ்விந்தியரின் சாக்குரல் தன்னை
நாவறண்டு ஓயுமட்டும்
கேட்டுத்தொலைத்த - முதிர்ந்த
மரங்களும் இன்று இல்லை
சாட்சியின்றித் தறிக்கப்பட்டன.

பனிச் செதில் போர்த்து
விறைத்துக் கிடந்த
கனேடியக் காட்டையும்,
நீதி கேட்கும் வல்லமையிழந்து
மனிதப் புழுவாய்
நசிபட்டிறந்த செவ்விந்தியரையும்,

நந்திக்கடல் போல் சாட்சியகற்றி
துடைத்து மினுக்கிப்
பல்லின மக்களின் பூந்தோட்டமாக்கிப்
புதுப்பித்துப் போன
வந்தேறு குடிகளை
வாழ்த்திப் பாடவா???
வருந்தித் தூற்றவா???

இப்படித்தான் நாடு பிடிக்க வந்தவர்கள் அங்கிருந்த மூத்த இனங்களை அழித்து விட்டு தாங்களே அந்நாடுகளைக் கண்டு பிடித்ததாக வரலாற்றை எழுதி தங்கள் அரசுகளை அங்கு தக்க வைத்துக் கொண்டார்கள்.

இதற்கு உதாரணம் தான் கிறிஸ்தோப்பர் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிற வரலாற்றுக் கட்டுக்கதை.

இப்படித்தான் இலங்கையிலும் விஜயனும் அவன் தோழர்களுமாகிய சிங்கள குலத்தோன்றல்கள் கப்பலில் வந்து இலங்கையில் இறங்கிய போது இலங்கையில் இயக்கர் இனத் தலைவி குவேனி வரவேற்றாள் என்கின்ற செய்திமகாவம்சத்தில் உண்டு.

ஆனாலும் குவேனி என்றறியப்பட்ட தமழிச்சியான கவினியும் அவளது இனமும் இலங்கையை ஆண்ட பெரும் செய்தியை இலங்கை வரலாறு பெரிதும் சொல்வதில்லை.

1956-ல் விஜயனின் வருகை" என்ற தலைப்புடன் சிறப்பு தபால் தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது. குவேனி ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது போலவும், கப்பலில் வந்த விஜயன் அவளிடம் அடைக்கலம் கோருவது போலவும் இந்த தபால் தலை அமைந்திருந்தது. தபால் தலையை பார்த்த சிங்கள தலைவர்கள், அதற்கு கடும்எதிர்ப்பு தெரிவித்தனர்.

”விஜயன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தவன்” என்ற கருத்தை மறுதலித்த அவர்கள் விஜயன் வந்தபோதே இங்கு குவேனி என்ற தமிழ்ப்பெண் இருந்திருக்கிறாள் என்று கூறினால், இலங்கையின் பூர்வகுடிகள் தமிழர்கள் என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும். எனவே, இந்த தபால் தலையைமீளப் பெற வேண்டும்" என்று போராட்டம் நிகழ்த்தி அந்தத் தபால் முத்திரையை சிங்களத் தலைவர்கள் மீளப்பெற்ற இழிந்த வரலாறு இலங்கையில் உண்டு .

ஒரு மனிதன் சமூகத்திற்கு ஆபத்தானவனாக இருந்து கொடிய பாவத்தைப் புரிகின்றானென்றால் சமூக நலன்கருதி அவனைக் கொன்றுவிட வேண்டுமென இத்தாலிய மதகுருவும் த்த்துவ ஞானியுமான புனித தோமஸ் அக்குவைனஸ் Thomas Aquinas, அவர்களின் கருத்தில் கருத்தூன்றிப் போனவர்கள்தான் மரண தண்டனை வேண்டுமென்று இற்றைவரை வாதிட முனைகின்றார்கள்.

மொசப்பட்டேமிய நாகரிகம் வளர்ந்த காலத்தே ஹிமுராபி என்பவன்தான் பழிக்குப் பழி, கண்ணுக்கு கண், கொலைக்குக் கொலை எனகின்ற கோரப் பழியுண்ர்வை தரணிக்கு முதன் முறையாக உருவாக்கிக் கொடுத்தபாதகன் என்கின்றது வரலாறு.

மரண தண்டனையானது மனுக்குலத்தின் கெளரவத்திற்கும் மனித உரிமைகளுக்கும் முரணானது மட்டுமல்ல அவமானகரமாதாகும். இன்றைய பெருந்தொற்றிற்கு மருந்து கண்டு பிடித்திருக்கிற பைசர் நிர்வாகம் பல ஆண்டுகளுக்கு முன்னதாக அமெரிக்காவில் ஊசிகள் மூலம் விஷம் கலந்த மருந்துக் கலவையை பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற உத்தி முறைக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்த போது நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கே நாம் மருந்துகளை தயாரிக்கின்றோமேயன்றி மனிதஉயிர்களை பறிப்பதற்காக அல்ல என்று காட்டமாக ஃபைஸர் நிறுவனம், அன்று மறுத்தமை மனங்கொள்ளத்தக்கது.

மரணதண்டனை என்பது கொலையை விடக் கொடிய குற்றம் என்று கூறிக்கொண்டே அவற்றைச் சர்வசாதாரணமாகப் புரிந்து போகின்றன எம் அரசுகளும் அவற்றின் அதிகாரப் பெருந்திமிரும்.

இவ் உலகில் நியாயம் என்ற ஒன்று உண்டா என நானறியவில்லை. ஏனெனில் எல்லா நியாங்களிலும் அவரவருக்கான சலுகைகளே முகாமிட்டிருக்கின்றது. இதே போல் தான் உண்மை என்ற ஒன்று இருப்பதாகவும் நான் உணரவில்லை.

ஏனென்றால. எல்லாப் பொய்யும்தான் இங்கு உண்மையாகவிருக்கின்றன எனக்குப் பொய்யாகப் படுவது அவனுக்கு உண்மையாயும் அவனுக்குப் பொய்யாகப் படுவதுஎனக்கு உண்மையாகவும் இருந்து தொலைக்கிறது.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் என்று நீதிக்காகப் போரிட்ட பலரும் அரச வன்மத்தால் தூக்கிலிடப்பட்டார்கள். அதை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அது நீதியாகவே இற்றை வரை தெரிகின்றது.

இந்நிலையில் லட்சக்கணக்கான தமிழர்களை வகைதொகையின்றி ஈழத்தில் கொன்றொழித்தது இலங்கையரசு. இன்றைவரை அதைக் கூட சிலர் நீதியென்றே பேசி வருகின்றார்கள்.

இலங்கையரசின் கொடுஞ் சிறைகளில் மரண தண்டனைக் கைதிகள் அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக்குங்கள் என்று கொலைகார அரசோடு இன்றும் போராடி வருகின்றார்கள்,

எத்தனையோ அப்பாவித் தமிழ் மக்கள் அரசப் படைகளால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு சத்தமில்லாமல் மரணித்துப் போனார்கள். பலர் காணாமல் ஆக்கப் பட்டார்கள். எல்லோர் கண்களின் முன்னாலும் அந்தரித்துப் போன தமிழர்கள் மேல் குண்டு போட்டு அழித்தார்கள். மிகுதியானோர் அகதிகளாகினர்.

இதே போன்றே இந்தியாவிலும் பல தரப்பட்டவர்களும் மரண தண்டனைக்கு எதிராகப் போராடும் கருத்தாடல் மிக்கவர்களாக இருந்த போதும் அங்கு மரண தண்டனை இன்னமும் நடைமுறையில் இருக்கிறது.

பல ஆட்சிமாற்றங்களுக்குப் பின்னரும் ராஜீவ் காந்தியவர்களின் கொலையாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாக்கப் பட்டவர்கள் இன்னமும் மரண தண்டனைக் கைதிகளாகவே உள்ளார்கள்.

ராஜீவ் காந்தியின் பிரியத்திற்குரிய மனைவி சோனியா கூட அந்தக் கைதிகளில் எனக்கு எந்த வன்மமும் இல்லை என்ற பிறகும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் அவர்களை வைத்தே அரசியல் செய்கின்றார்கள்.

இந்திய நீதவான்களின் செவிகளுக்கு தமிழகஅரசின் குரல் இன்னமும் எட்டவில்லை என்பது எத்துணை அபத்தம்?? மரண தண்டனையை நீக்குமாறு பல்வேறு நாடுகளும் போராடி அதில் வெற்றியும் கண்டுள்ளன.

ஆனாலும் மரண தண்டனையை நீக்கினால் மட்டும் நாகரிக முதிர்ச்சி ஒரு நாட்டிற்கு வந்து விடுமா ? என்பதும்வெறும் சட்டங்களை நீக்குவதால் மட்டும் நம்மை மனிதகுல நாகரிகத்தின் உச்ச மனிதர்களாக உயர்த்திக் கொள்ள முடியுமா? என்பதும் கூட நியாயமான கேள்விகள்.

அரசாங்கத்தின் சட்டங்களை அரசாங்கமே நிலை குலைத்து கொலையாளிகளை சிறையிலிருந்து தப்பவைத்து அப்பாவிகளை அழிக்கிற இராணுவ கெடுபிடியான எம் இலங்கை போன்ற நாடுகளில் அவ்வாறான சட்டங்கள் இருந்தும் ஒன்றுதான் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான்.

இலங்கையில் சட்டமும் நீதியும் பெரும்பான்மைக்கு வேறு சிறுபான்மைக்கு வேறாக இருக்கிறது. இத்தகு அரசவன்மத்தின் ஈனத்தனமான இழிசெயல்களால் நிலை குலைந்து நிற்பவர்கள் ஈழத்தமிழர்கள்.

இந்நிலையில்தான் இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டு அவர்கள் காலங்காலமாக ஏமாற்றப்பட்டு அவர்களுக்கு எங்வாறு அநீதி இழைக்கப்பட்டது என்பதையும், அதனை தனது சிறுவயது முதல் பார்த்து கோபமடைந்த ஒரு சாதாரண தமிழ்ச் சிறுவன் தாங்கள் திருப்பி அடிக்காவிட்டால் இனிதமக்கு வாழ்வில்லை எனத் தனது இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தும் முடிவுக்கு வருகின்றான் என்பதை பற்றிய யதார்த்தத்தைப் பேசுகிற படமாக விரிவது மேதகு!

90-களில் மதுரையில் நடக்கும் ஒரு தெருக்கூத்து வழியாக பிரபாகரனின் வாழ்க்கைச் சரித்திரத்தைச் சொல்ல முயற்சிக்கிற முயற்சி அது. பிரபாகரனின் பிறப்பு முதல் அவரது முதலாவது புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவானகாரணம் வரை இந்த தெருக் கூத்து சொல்ல முயல்கிறது.

இதில் செல்வாவின் அகிம்சைப் போர், பண்டார நாயககிழித்தெறிந்த ஒப்பந்தம், இலங்கை மண்ணில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அத்துமீறல்கள், கல்வி தரப்படுத்துதல் சட்டம் 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் மற்றும் TNT எனும் தமிழ்ப் புதியபுலிகள் உருவானதற்கான காரணங்கள் என்று நிறையவே பேசப்படுகின்றது.

படம் வரலாற்றின் பக்கம் நின்றுகதை சொல்கின்றது சினிமா உத்திகளோடு. கதை சொல்ல முயல்கிற இச் சினிமாவிலும் சில வரலாற்றுப் பிசகுகளும், பிணக்குகளும் உண்டு. பிரபாகரன் அவர்களுக்கு முன்பும் சம காலத்திலும் ஈழத்தில் பல ஆயதம்தாங்கிய போராட்டங்கள் நிகழ்ந்ததாக வரலாறு உண்டு.

அவை எவையும் மேதகுவில் பதிவாகவில்லை என்கின்ற விசனம் எழுப்பப் படுகின்றது. ஈழ வரலாற்றை அப்படியே மெய்ப்பிக்கின்றோம் என்றெழுந்த வரலாற்று ஆவணங்களில் கூட அத் தவறுகள் இல்லாமலில்லை.

தமீழழத் திரைக்களம் என்ற பெயரில் பொறியியலாளரும் தமிழ் உணர்வாளருமான கிட்டு அவர்களின்இயக்கத்தில் உருவாகியிருக்கும் மேதகு வெளியீட்டு நாளில் அவரோடு மெய்நிகர் செயலியூடாகப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

அப்போது அவர் ஈழத்தில் நடந்த பிரச்னைகளை மையமாக வைத்து எந்தவித திரிபுகளும் இல்லாமல் முழுமையான திரைப்படம் இதுவரை வெளியாகவில்லையே என்கிற வருத்தமே என்னை இதை எடுக்கத் தூண்டியது என்றார்.

அதில் தெருக்கூத்து மூலம் கதை சொல்லுதல் மிக நன்றாக வந்திருக்கிறது. அந்த கூத்துக் கலைஞர்களும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள் என்ற எம் பாராட்டிற்கு என்னுடைய தாத்தா ஒரு கூத்தாடி.

இதற்கு முன்பு கூத்து கலைகளை பெரும்பாலும் வீர்ர்களின் வரலாற்றை சொல்வதற்கும், கடவுளர்கள்சார் வரலாறு சொல்வதற்கும் பயன்படுத்தினார்கள் என்பதை நாமறிவோம். அவ் வகையான ஓர் முயற்சியே இது என்றார் அவர் அண்மையில் வெளியாகி ஈழத்தமிழரைக் கொச்சைப்படுத்திய ஃபேமிலி மேன், ஜகமே தந்திரம் போன்ற வியாபாரப் படங்களால் துவண்டு போயிருந்த ஈழத் தமிழர்களுக்கும் மேதகு புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளதாகப் பார்த்த பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள்.

- மா.சித்திவினாயகம்

Pin It