புதுவிதக் கொரோனா என்னும் கொவிட்-19 நோய் உலகெங்கும் கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு திசம்பர் கடைசியில் சீனத்தில் தொடங்கிய நோய்த் தாக்கு தென் கொரியா, இத்தாலி, ஈரான், பிரான்ஸ், பிரிட்டன், வட அமெரிக்கா என்று நாடுநாடாகப் படர்ந்து இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கூட வந்து விட்டது.

உலகெங்கும் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளானவர்கள் தொகை இரண்டு இலட்சத்தைத் தாண்டி விட்டது. ஏழாயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்து விட்டனர். நாளுக்கு நாள், மணிக்கு மணி இந்தத் தொகை பெருகிச் சென்று கொண்டிருக்கிறது.

தொற்று நோய்கள், கொள்ளை நோய்கள் உலகிற்குப் புதியவை அல்ல என்றாலும் இது வரை எந்த நோயும் இந்த அளவுக்கு விரிவாகவும் விரைவாகவும் பரவியதில்லை என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். கொரோனாவை வருமுன் தடுக்கத் தடுப்பு மருந்தும் இல்லை, வந்த பின் விரட்ட நோய்நீக்க மருந்தும் இல்லை, இது வரை இல்லை என்பதே உண்மை. கொரோனா நோய்க் கிருமி தொடக்கத்தில் ஒரு விலங்கிடமிருந்து மாந்தர்க்குப் பரவியதென்று கூறப்பட்டாலும், பிறகு மாந்தரிடமிருந்து மாந்தர்க்குப் பரவி, பிறகு குமுகாயத்திற்குள் பன்மடங்காகப் பரவிச் செல்கிறது.

இந்தியாவும் தமிழ்நாடும் இப்போது இந்தக் கட்டத்தில் இருப்பதாக, அல்லது இந்தக் கட்டத்தை நெருங்கி விட்டதாக நம்பப்படுகிறது. உருப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லையேல் வெடித்துப் பரவும் நிலை மூள்வது உறுதி என்பதுதான் வல்லுநர் கருத்து. சீனத்துக்குப் பிறகு கொரோனா பரவிய நாடுகளின் பட்டறிவும் இப்படித்தான் உள்ளது.

முன்னெச்சரிக்கை என்பதில் முதல் நடைபடி கிருமித் தொற்றியவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நோய்காண் ஆய்வுகள் ஆகும். தென் கொரியா ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு ஆய்வு வசதிகளைப் பரவலாக்கியதால் நோய்ப் பரவலை ஓரளவு கட்டுப்படுத்தி விட்டது. நோய்ப்பரவலை வரைபடமாகக் காட்டும் வளைகோட்டை மேல்நோக்கிச் செல்ல விடாமல் தட்டையாக்கி விட்டது (flattened the curve) என்கின்றனர். ஈரான் அல்லது இத்தாலியால் இப்படிச் செய்ய முடியாததால் கொரோனாவின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பிரிட்டன், ஜெர்மனி போன்ற முன்னேறிய ஐரோப்பிய நாடுகளும் திணறிக் கொண்டிருக்கின்றன. பிரான்ஸ் நாடு முழுவதும் இழுத்துப் பூட்டப்பட்டு விட்டது. நாம் இங்கே என்ன எழுதினாலும் படிக்கப்படுவதற்குள் எல்லாம் பழைய செய்திகளாகி விடும் என்னுமளவுக்கு நிலைமை விரைந்து மோசமாகிக் கொண்டிருக்கிறது.

கொரோனாவின் விளைவுகளை உடல்நலத் தாக்கம், சமூகத் தாக்கம் என்று இரு தளங்களில் நோக்கிப் புரிந்து கொள்ளவும் மறுவினையாற்றவும் வேண்டும். உடல்நலத்தாக்கம் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பேசியும் எழுதியும் காட்டியும் வருகின்றன. உடல்நலத் தாக்கம் என்ற தளத்தில் சீன அரசும் உலக நலவாழ்வு அமைப்பும் (WHO) இது வரை சிறப்பாகப் பணியாற்றியுள்ளன. நேரடியாக நோய்த் தாக்குறாமலே கியூபா பெருமைக்குரிய பங்காற்றியுள்ளது.

கொரோனாவும் அதற்கு எதிரான நடைபடிகளும் பொருளியல், அரசியல், பண்பாடு என்ற மூவகையிலும் ஏற்படுத்தியுள்ள சமூகத் தாக்கம் இது வரை சிறு அளவிலேயே வெளிப்பட்டுள்ளது. அது முழு அளவில் வெளிப்படும் போது புவிக்கோளமே குலுங்கும் அளவில் இருக்கும் என அஞ்சுகிறோம்.

இந்தியாவில் கொரோனாவின் உடல்நலத் தாக்கம் போதிய அளவு வெளிப்படுமுன்பே சமூகத்தாக்கம் வெளிப்படத் தொடங்கி விட்டது. கேரளம், தமிழகம் உட்பட நாடெங்கும் கல்விக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குள் கொரோனா நுழைந்த செய்தி வருமுன்பே பங்குச் சந்தையில் சரிவு தொடங்கி விட்டது. நிதியமைச்சருக்கு மட்டும் தெரியாமல் ஏற்கெனவே நெருக்கடியில் சிக்கிச் சுணக்கத்தில் உள்ள இந்தியப் பொருளியலை கொரோனா எப்படியெல்லாம் குதறப் போகிறதோ? நினைத்தாலே நடுக்கமாய் உள்ளது. மனிதர்கள் ஒன்று கூடுவது தடைப்படுமானால், பெரும் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு, பொதுப் போக்குவரத்து அற்றுப் போய் பொருளாக்கத் துறையில் இதுவரை இல்லாத தேக்கம் ஏற்படும். ஏற்கெனவே பொருளியல் சுணக்கத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை இது மேலும் முற்றச் செய்யும். ஒரு மனிதனும் குடும்பமும் நாடும் எவ்வளவு காலத்துக்குப் புதிய ஆக்கமே இல்லாமல் செலவழிக்க முடியும்?

நெருக்கடிக்கு மேல் நெருக்கடி என்றாலும் சுமை முழுக்க உழைக்கும் மக்கள் மீதுதான் சுமத்தப்படும் என்பதில் ஐயமில்லை. நோய் ஏழை பணக்காரன் பார்க்காதுதான். ஆனால் நோயை எதிர்த்து நிற்கும் வசதி எல்லார்க்கும் ஒன்றில்லையே! இயல்பான நெருக்கடியின் சுமையோடு கொரோனா நடவடிக்கைகளுக்கான செலவுச் சுமையும் சேர்ந்து கொள்ளும்.

கொரோனா பரவல் தடுப்புக்காகக் கல்விக்கூடங்களும் திரையரங்குகளும் தொழிற்கூடங்களும் மூடப்பட்டு விட்டன. பொதுப் போக்குவரத்தும் இளைத்துப் போய்விட்டது. வானூர்திகள் தரையிட்டுக் கிடக்கின்றன. இந்த நடைபடிகளுக்கான நலவாழ்வுத் தேவையை மறுக்க முடியாது. அதே போது இதனால் ஏற்படும் வேலையிழப்புகளுக்கும், புதிய வேலைவாய்ப்புகளே இல்லாமற்போவதற்கும் யார் ஈடுசெய்வது?

வீட்டிலிருந்தபடி வேலை என்பது மிகச் சில துறைகளுக்கும் மிகச் சில பணிகளுக்கும் மட்டுமே பொருந்தும். அதுவும் கூட சிறிது காலத்துக்கு மட்டுமே. ஆலைகள் இல்லாமல் அலுவலகங்கள் மட்டும் இயங்க முடியாதல்லவா? தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யத் தொடங்கிய போது கொரோனா பற்றிய பேச்சே கிடையாதே! சண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கெனப் பெருங்குழுமங்கள் ஊழியர் குறைப்புக்கு கொரோனா நெருக்கடியையும் பயன்படுத்திக் கொண்டால் வியப்பில்லை. அரசும் அவர்களுடையதுதானே!

தொழிலாளர்களுக்கும் உழவர்களுக்கும் உழைப்பாளர்களுக்கும் ஒடுக்குண்ட மக்களுக்கும் தங்கள் மீதான சுமையைக் குறைத்துக் கொள்ளவே போராடுதல் தவிர வேறு வழியில்லை. ஆனால் கொரோனா ஆபத்தினால் ஒன்றுகூட முடியாது. ஒன்றுகூடாமல் போராட முடியாது. புதுவித கொரோனாவினால் ஏற்பட்டுள்ள இந்தப் புதுவித நெருக்கடி நமக்கு மட்டுமல்ல, உலகத்துக்கேதான்!

பிரான்சு நாட்டின் அதிபர் இமானுவேல் மக்ரோன் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முதலில் இரவு விடுதிகளையும் அருங்காட்சியகங்களையும், திரையரங்குகளையும் கலைக்கூடங்களையும் விளையாட்டரங்குகளையும் மூட ஆணையிட்டார். அப்போதும் மக்கள் பூங்காக்களில் கூடுவதைப் பார்த்த பின் நாட்டையே இழுத்துப் பூட்டி விட்டார். இது போர் என்று அறிவித்தார். யாரும் உரிய காரணமின்றி வீட்டை விட்டு வெளியே வர முடியாது. இந்த அறிவிப்பை வெளியிடும் போதே மக்களுக்குச் சிலபல சலுகைகளையும் அறிவித்தார். இன்னும்கூட முக்கியமாக, அரசிடம் தொழிலாளர்கள் எழுப்பிப் போராடி வந்த சில கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார். இதில் எல்லா நாடுகளுக்கும் ஒரு பாடம் உள்ளது எனக் கருதுகிறோம்.

கொரோனாவுக்கு எதிரான போரட்டம் என்பது அரசும் மக்களும் சேர்ந்து நடத்த வேண்டிய ஒன்று. பூசல்களால் பிளவுற்ற குமுகத்தால் இந்தப் போராட்டத்தை வெற்றியமாக நடத்த முடியாது. இயல்பிலேயே உட்பகைமையும் பாகுபாடுகளும் நிறைந்த இந்தியக் குமுகம் அரசியலிலும் முட்டி மோதிக் கொண்டிருப்பது கொரோனாவின் உயிர்மேய்ச்சலுக்கு வாய்ப்பாகி விடும். இந்திய அரசு இந்த உண்மையை உடனே உணர்ந்து மக்களை இணக்கப்படுத்த உருப்படியான நடைபடிகள் எடுக்க வேண்டும்.

சீனத்தின் ஹூபேய்-வூகானும் இத்தாலியின் லம்பார்டியும் பிரான்சு முழுவதும் இழுத்து பூட்டப்பட்டது போல் இந்தியாவிலும் மராட்டியம்-மும்பையை இழுத்துப் பூட்ட வேண்டியிருக்கலாம் என்ற குரல் கேட்கிறது. அப்படி ஏதாவது செய்தால்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்றால் செய்யுங்கள். ஆனால் அதற்கு முன்னதாக ஏழரை திங்கள் முன்பு அநியாயமாக இழுத்துப் பூட்டினீர்களே காசுமீரத்தை, பெருஞ்சிறை திறந்து அந்த மக்களை முதலில் விடுவியுங்கள். கொரோனா எதிர்ப்புப் போரில் குடியாட்சியம் போல் உதவக் கூடியது வேறில்லை.

இரண்டாவதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட சூலாய்தத்தால் இசுலாமிய மக்களைப் பிரித்துத் தனிமைப்படுத்தும் உங்கள் முயற்சி தோற்று விட்டது என்பதை இப்போதாவது உணர்ந்து அந்தப் பாசிச முனைவுகளைக் கைவிடுங்கள். அறவே கைவிட முடியாதென்றால் கொரோனா ஒழியும் வரை அவற்றைப் பிற்போடுங்கள். அதனால் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டீர்கள். கொரோனா ஆபத்தை அனைத்துப் பிரிவு மக்களுக்கும் அழுத்தமாக உணர்த்த அது உதவும். தெருவில் அமர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்களும் கொரோனா ஆபத்து கருதி அந்த வடிவத்தை காலவரம்பின்றி நீடித்துச் செல்ல இயலாது என்பதை எளிதில் விளங்கிக் கொள்வார்கள். இடைக்காலத்தில் பேசித்தீர்வு காணவும் முயலலாம்.

மறுபுறம் கொரோனா நெருக்கடி முற்ற முற்ற மக்கள் நலன் கருதிப் புதிய கோரிக்கைகள் எழுப்பவும் புதிய போராட்ட வடிவங்கள் காணவும் வேண்டிய தேவை எழும் என்பதை மனத்தில் கொள்வோம்.

பன்னாட்டரங்கில் அமெரிக்கப் பேரரசு எப்படி நடந்து கொள்கிறது பார்த்தீர்களா?

ஈரானின் 31 மாகாணங்களில் ஒவ்வொன்றும் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகித் தவிக்கிற இந்த நேரத்தில் அமெரிக்க வல்லரசு தன் பொருளியல் தடைகளைக் கடுமையாக்கி ஈரானின் துன்பத்தை மோசமாக்கியிருப்பதாக அந்நாட்டின் அயலுறவுத் துறை அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப் குற்றஞ்சாட்டுகிறார். ஒவ்வொரு நாட்டிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் என்பது மனிதகுலத்தைக் காப்பதற்கான போராட்டம் ஆகும் என்று அவர் டிரம்ப்புக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். கோவிட்-19 காய்ச்சலுக்கு மேல் டிரம்ப்பின் வல்லரசியக் காய்ச்சலும் ஈரானை வாட்டுகிறது.

கொரோனா சீனர்களுக்கு எதிராகப் பல நாடுகளில் இனவாதம் கக்குவதற்குப் பயன்பட்டதை அறிவோம். கொரோனா கிருமியே சீனக் கிருமி எனப்பட்டது. எப்போதோ அது உலகக் கிருமி ஆகி விட்டது. ஆனால் இப்போதும் டொனல்டு டிரம்ப் அதைச் சீனக் கிருமி என்று சொல்லி வம்பிழுக்கிறார். அமெரிக்காவில் கொரோனா ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பேரழிவை உணராதவராகவே இருக்கிறார்.

இதற்கு நேர் மாறாக, அருகிலிருக்கும் சின்னஞ்சிறு கியூபாவின் குமுகிய அரசும் மக்களும் எப்போதும் போலவே இப்போதும் உலகின் துயரம் துடைக்க இயன்றதனைத்தும் செய்து வருவது பெருமைக்குரியது. துயரமான சூழலிலும் கூட ஈரானை அமெரிக்கா நெருக்கி முறுக்கி இடர்ப்படுத்துவதும், இன்றளவும் அமெரிக்காவின் பொருளியல் முற்றுகைக்குள் சிக்கி உழலும் கியூபா மகாபிரிட்டனுக்கே உதவி வருவதும் உணர்த்துவது என்ன?

ஒவ்வொரு நாடும் தன்னைக் காத்துக் கொள்ள உலகைக் காக்க வேண்டும். உலகைக் காக்க எல்லா நாடுகளும் ஒவ்வொரு நாட்டையும் காக்க வேண்டும். இதுதான் உண்மையான பன்னாட்டுலகியம் (சர்வதேசியம்)!

ஒருவர் எல்லாருக்காகவும்!

 எல்லாரும் ஒருவருக்காக!

ஒவ்வொருவரும் அனைவருக்காகவும்!

அனைவரும் ஒவ்வொருவருக்காகவும்!

இதுதான் பொதுமைப் பண்பு! கொரோனாவை வெல்வதற்கான போராட்டத்தில் இந்தப் பொதுமைப் பண்பு வளரட்டும்!

 

Pin It