corona death in usகொரொனாவினால் அம்பலமாகும் நவதாராளவாதமெனும் புதியப் பொருளாதாரக் கொள்கை

“நோய்நாடி நோய்முதல் நாடி” என்கிறார் வள்ளுவர். ஒரு நோய்க்கான மருத்துவத்தின் அடிப்படை அதன் காரணத்தைக் கண்டடைவதுதான். இன்றைக்கு கொரொனா தொற்றுநோய் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய்த் தொற்று ஆரம்பத்தில் எப்படி மனிதர்களுக்குள் பரவத் தொடங்கியது என்பது இன்றுவரை உறுதியாகவில்லை. ஆனால், இப்படியான ஒரு நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை அறிஞர்கள் தொடர்ந்து எச்சரித்தே வந்தனர். அதுவும் கடந்த சில வருடங்களில் தொற்றுநோய் பற்றியான எச்சரிக்கைகள் அதிகரித்தன.

உலக சுகாதார அமைப்பு அதனுடைய 2018-ற்கான வருடாந்திர அறிக்கையில் ஒவ்வொரு மாதமும் 7000 பொது சுகாதார அச்சுறுத்தல் சமிக்ஞைகளைப் பெறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் உலக சுகாதார அமைப்பின் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய நோய்ப்பட்டியலில் இருக்கும் எட்டில் ஆறு நோய்களின் பரவலை இந்த உலகம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இன்றைக்கு உலகம் கொரொனா என்கிற தொற்றுநோயில் மிக மோசமாக சிக்குண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா! இந்த கட்டுரை எழுதும் வரையில் (2.5.2020) உலகம் முழுவதும் 33.6 லட்சம் மக்களும் அமெரிக்காவில் 13 லட்சம் மக்களும் கொரொனாவினால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்; உலகம் முழுவதும் கொரொனாவால் இறந்த 2,39,000 பேரில் 65,605 பேர் அமெரிக்கர்கள். அதாவது, உலகக் கொரொனோ நோயாளிகளில் 33.6% சதம் அமெரிக்கர்கள்; கொரொனாவால் இறந்தவர்களில் மூன்றில் ஒருவர் (27.4%) அமெரிக்கர்; என்றால், அமெரிக்காவின் மருத்துவக் கட்டமைப்பின் பலவீனத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். சுதந்திர உலகம் எனப்படும் அமெரிக்காவின் உண்மையான பலத்தை இந்தக் கொரொனோ அப்பட்டமாக அம்பலப்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவின் பரிதாப நிலைக்கு காரணம்:

அமெரிக்கா போன்ற மிகப்பெரிய வல்லரசிற்கு ஏன் இந்தநிலை ஏற்பட்டது? இதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அமெரிக்காவின் சுகாதார ஏற்பாட்டினை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 19 ஆம் நூற்றாண்டில் காசநோய், மஞ்சல் காமாலை போன்ற தொடர் நோய்ப்பரவலால் அமெரிக்காவின் பொது சுகாதாரத்துறை அபரிமிதமாக வலிமைப் படுத்தப்பட்டது. நோய்த் தொற்றுக்கான காரணத்தைக் கண்டறியா விட்டாலும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வலிமையினை சுகாதாரத் துறைகள் பெற்றிருந்தன. இது குழந்தைகள் மற்றும் நடுத்தர வயதினரிடம் தடுக்கக் கூடிய மரணங்களை (preventable deaths) கட்டுப்படுத்த உதவியது.

மக்களின் சுகாதாரத்திற்குத் தேவையான சட்டங்கள், உணவு, நீர், காற்று மாசுகளைத் தடுக்கக் கூடிய சட்டங்கள் ஆகியவை சராசரி ஆயுள் காலத்தை 50-ல் இருந்து 80 ஆக மாற்றியது. பொதுச் சுகாதாரத்தின் மூலம் குறைவான செலவில் அரசாங்கம் பல்லாயிரம் பேரின் உயிரைக் காப்பாற்றியது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவம் என்பது தனியார் மயப்படுத்தப்பட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான சட்டங்கள் அவர்கள் கொள்ளை லாபத்தினை சம்பாரிக்க வழிவகை செய்தன.

காப்பீட்டுக் கொள்ளை:

அமெரிக்காவில் இன்றைக்கு மருத்துவம் மிகவும் விலை உயர்ந்தது. அதாவது, பிரசவத்திற்கு மட்டும் சராசரியாக ரூபாய் 7,58,310 (10000 டாலர்கள்) செலவு செய்ய வேண்டும். உங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்துக் கருத்தடை செய்ய விரும்பினால் ரூ 98,580 (1300 டாலர்கள்) அளவிற்குச் செலவாகும். நோயாளிகளுக்கு அவசரத்திற்கு ஆம்புலன்சை அழைக்க ஆகும் செலவு ரூ1,89,577 (2500 டாலர்கள்). எனில், மருத்துவம் என்பது சாமானியர்களுக்கு எவ்வளவு எட்டாக்கனி என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு அமெரிக்கரின் சராசரி மாத வருமானம் ரூ 3,80,000 (5264 டாலர்கள்) என்பதை வைத்து ஒப்பிட்டால் ஒருமுறை ஆம்புலன்சை வரவழைக்க அவரது மாத சம்பளத்தில் பாதியைச் செலவழிக்க வேண்டியிருக்கும். நான்கு முறை அழைக்க நேர்ந்தால் அவரது இரண்டுமாத சம்பளத்தைத் தாரைவார்க்க வேண்டி வரும். மேலே குறிப்பிடப்பட்டவை அனைத்துமே சராசரியான விலைதான். இப்படியாக இயங்குகின்றன கார்ப்பரேட் மருத்துவமனைகள் மற்றும் மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள். இச்சூழலிலேயே அமெரிக்கர்கள் வாழ்கிறார்கள். அனைத்தையும் கார்ப்பரேட்டும், அவர்களது லாப நோக்கமுமே இயக்குகின்றன.

இப்படியாக லாபவேட்டையில் இயங்கும் மருத்துவத் துறையில் காப்பீட்டு நிறுவனங்களின் (இன்சூரன்ஸ் நிறுவனம்) தலையீடு என்பது மிக முக்கியமானது. ஒரு அமெரிக்கர் வேலைப் பார்க்கும் நிறுவனமே அவரது மருத்துவக் காப்பீட்டில் 70% பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், இதைப் பெரிய நிறுவனங்கள் மட்டுமே செய்கின்றன. அவ்வாறு அவர் வேலை செய்யும் நிறுவனம் காப்பீடு தரவில்லையெனில் தனியே தம்முடைய வருமானத்திலேயே தனக்கானக் காப்பீட்டைப் பெறவேண்டும். இதற்கு ஒவ்வொரு மாதமும் காப்பீட்டுத் தொகையினைக் கட்ட வேண்டும்.

சராசரியாக மாதம் ஒன்றிற்கு, ஒரு தனிநபருக்கான காப்பீடு என்பது ரூ24,341 (321 டாலர்கள்) மற்றும் குடும்பங்களுக்கு ரூ63,167.22 (833 டாலர்கள்) இருந்து தொடங்கும். அதாவது ஒரு அமெரிக்கரின் சராசரி வருமானத்தில் ஏழில் ஒரு பங்கினை இந்த காப்பீட்டிற்காக ஒதுக்கி வைக்க வேண்டி வரும். ஒரு தம்பதியினர் குழந்தைப் பெறுவதிலிருந்து அக்குடும்பத்திற்கான மருத்துவக் காப்பீட்டைப் பெற்றுக்கொள்ளும் வரையிலான செலவு என்பது யோசிக்க முடியாத அளவில் பெரும் சுமையாக இருக்கிறது. மேலும், காப்பீடு பெறுபவருடைய வயது, நோய் வரலாறு, வாழும் பகுதி (தங்கி இருக்கும் மாகாணம், அதன் சட்டங்கள் மற்றும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் வேறுபடும் வரிகள்) ஆகியவற்றைப் பொறுத்துக் காப்பீட்டின் தொகை அதிகரிக்கும்.

மிகவும் குறைவான வருமானம் இருக்கும் மக்களுக்கு அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட அளவு சலுகைகளுடன் காப்பீட்டினை (medicaid) வழங்குகிறது. ஆனால், அதிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரை அந்தத் தனிநபர் கட்ட வேண்டும். இதைப் பல மாகாணங்கள் பின்பற்றுவதில்லை. மேலும், அரசாங்கம் அளிக்கும் சலுகைக்கு விண்ணப்பிக்கப் பல்வேறு நிபந்தனைகளுக்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும். இவைக் காப்பீடு முக்கியமாகத் தேவைப்படும், ஏழை-நடுத்தர மக்களுக்குச் சாதகமானதாக இல்லை.

ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் Obamacare என்ற திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். இதன்கீழ்க் காப்பீடு இல்லாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மேல் நிறையக் குற்றச்சாட்டுக்களை வைக்கலாம் என்றாலும், அது மிகச்சிறிய அளவிலான மாற்றத்தினை ஏற்படுத்தியது. ஆனால், ட்ரம்ப் அரசாங்கம் அந்தத் திட்டத்தை நீர்த்துப் போகச்செய்தது.

இதுமட்டுமல்லாமல், வேலை இழந்தவர்களுக்காகக் குறைவான காலத்திற்கு கோப்ரா (COBRA) திட்டத்தின் கீழ் அரசாங்கம் குறைவான விலையில் காப்பீட்டினைத் தருகிறது. அதாவது, ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கானக் காப்பீட்டுத் தொகை, அரசாங்க சலுகைகள் போக 15,16,620 ரூபாய் (20000 டாலர்கள்)!

விளம்பரங்களில் முதலீடுகள் பற்றிச் சொல்லிவிட்டு, நம்மால் விளங்க முடியாதபடி வேகமாக “முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உள்பட்டது” என்று பேசுவதைப் போலவே இந்த காப்பீடுகளும் நிபந்தனைகளுக்கு உள்பட்டது. அதாவது, இப்படிப் பல லட்சம் ரூபாயினைக் கொடுத்து மருத்துவக் காப்பீட்டினைப் பெற்றாலும், (காப்பீட்டின் நிபந்தனைகளைப் பொறுத்து) குறிப்பிட்ட அளவு பணத்தினைத் தனிநபர் செலவிட வேண்டும். மருத்துவம் விலையுயர்ந்தது என்பதற்காகப் பல்லாயிரக்கணக்கில் செலவுசெய்து காப்பீட்டினை மக்கள் வாங்குகிறார்கள். ஆனாலும், சிகிச்சைக்கான பணத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கினை மக்கள் கொடுக்கவேண்டும்.

மக்களைக் காப்பீட்டு நிறுவனங்கள் எவ்வளவு தொகை வரை செலவு செய்ய வைக்க முடியும் (Out of Pocket Maximum) என்று வரைமுறை இருக்கிறது. அமெரிக்க அரசின் ஆணைப்படி, மக்களை 599064 ரூபாய் (7900 டாலர்கள்) மேல் தனிநபர் காப்பீட்டிலும் 1198129 ரூபாய் (15800 டாலர்கள்) மேல் குடும்ப காப்பீட்டிலும், காப்பீட்டு நிறுவனங்கள் செலவிடக் கட்டாயப் படுத்தக்கூடாது. அதாவது, இவ்வளவு தொகையினை மக்களிடம் இருந்து காப்பீட்டு நிறுவனங்கள் உருவிக் கொள்ளலாம்.

இதுமட்டுமல்ல, காப்பீட்டு நிறுவனங்கள், காப்பீட்டின் தனித்தனி நிபந்தனைகள் மற்றும் அவர்களுடையச் சட்டங்களின்படி எந்த மாதிரியான மாத்திரைகளைக் காப்பீட்டினைப் பயன்படுத்தி வாங்கலாம் - வாங்க முடியாது என்கிற பட்டியலையும் வைத்திருக்கின்றன. அப்படியே மத்திரைகள் அவர்களது ‘வாங்கக் கூடிய பட்டியலில்’ இருந்தாலும், அவற்றை வாங்க ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தினை (காப்பீட்டு நிபந்தனைகளைப் பொறுத்து) அந்த தனிநபர் கொடுத்தாக வேண்டும். இப்படித்தான் கார்ப்பரேட்டுகள் லாபங்கள் கொழிக்க மக்களின் ரத்தத்தைப் பிழிந்து கொண்டிருக்கின்றன.

சாவிலும் லாபம் தேடும் கார்ப்பரேட்டு கூட்டணி:

2018 கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் வாழும் 3 கோடி மக்களிடம் மருத்துவக் காப்பீடு கிடையாது. அதில் பெரும்பாலானவர்கள் பலநூறு வருடங்களாக அடிமைகளாகச் சுரண்டப்பட்ட கருப்பினத்தைச் சேர்ந்தவர்களும், அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்த ஸ்பானிய (Hispanic) பின்புலத்தைக் கொண்டவர்களும், மத்திய கிழக்கு நாடுகளில் போரிலிருந்து தப்பித்து இடம்பெயர்ந்தவர்களும்தான். அமெரிக்கப் பத்திரிக்கைகள் வெளியிடும் செய்திகளின்படி, பல பகுதிகளில் கொரொனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட 70% பேர் மேலே குறிப்பிட்டிருக்கக்கூடிய சிறுபான்மை மக்கள்தான்.

கடந்த பத்து வருடங்களை மட்டும் எடுத்துக் கொண்டால், அமெரிக்கா சுகாதாரத் துறையில் 52% வரை நிதி ஒதுக்கீட்டினைக் குறைத்துள்ளது. 2008-2017 வரையான காலத்தில் சுகாதாரத் துறையில் வேலை பார்க்கும் 50,000 நபர்கள் வேலையினை விட்டு நீக்கப் பட்டிருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு நாட்டின் பொதுச் சுகாதாரக் கருவிகளை நவீனப்படுத்த 1 பில்லியன் டாலர்கள் வேண்டும் என்ற கோரிக்கை வந்த போது 50 மில்லியன் டாலர் (கேட்ட நிதியில் 5%) மட்டுமே ஒதுக்கப்பட்டது.

கொரொனா வைரஸ் பரவாமல் இருந்திருந்தாலும், அமெரிக்காவின் சுகாதாரம் மிக மோசமான சரிவைக்கண்டுதான் வந்தது. குறிப்பாகத் தட்டம்மை, சிஃபிலிஸ் போன்ற நோய்களின் அளவு மிக மோசமாக அதிகரித்து வந்தன. அமெரிக்காவில் வசதியானவர்களின் ஆரோக்கியம் - ஆயுள் காலத்திற்கும், ஏழைகளின் ஆரோக்கியம் - ஆயுள் காலத்திற்குமான இடைவெளி மிகப்பெரிய அளவில் அதிகரித்திருந்தன. ஏழைகளே அதிக அளவில் இதயநோய் போன்ற நோயினால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் உறுதி செய்கின்றன. 2009 ஆம் ஆண்டு American Journal of Public Health என்ற இதழில் வெளிவந்த ஆய்வு, மருத்துவக் காப்பீடு இல்லாததோடு தொடர்புடைய 45,000 மரணங்கள் ஒவ்வொரு வருடமும் நிகழ்வதாகச் சொல்கிறது.

இன்றைக்கு கொரொனா, அமெரிக்காவின் லாபத்திற்காக இயங்கும் மனிதநேயமற்ற கார்ப்பரேட்-அரசு கூட்டணியை வெளியே கொண்டு வந்திருக்கிறது. ஆனால், அதற்குப் பல்லாயிரம் அப்பாவி மக்கள் பலியாகியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கு எல்லாமே லாபம் பற்றியானது தான். கொரொனா வைரசுக்கு முன்பே, அரசாங்கத்தின் கீழ் பொதுச் சுகாதாரம் வழங்கப்பட வேண்டும் என்பது பற்றியான விவாதங்கள் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில் பெரும்பங்கினை வகித்து வந்தது. எனவே, இதற்கு எதிரான பிரச்சாரங்களில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களைக் கார்ப்பரேட்டுகள் செலவளித்து வருகின்றன.

எடுத்துக்காட்டாக, கொலராடோ என்கிற அமெரிக்க மாகாணத்தில், அந்த மாகாண அரசு திட்டமிட்டுவரும் ஒற்றைமுனைக் காப்பீட்டுத் திட்டத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கு மார்ச் மாதம் மட்டும் 3 மில்லியன் டாலர்களை Partnership for America’s Health Care Future என்கிற தனியார் மருத்துவமனைகள் - காப்பீட்டு நிறுவனங்கள் - மருந்து உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இணைந்து பொதுசுகாதாரக் காப்பீட்டிற்கு எதிராக இயங்கும் கார்ப்பரேட்டுகளின் கூட்டமைப்பு செலவிட்டிருக்கிறது. ஆம். கொரொனாவினால் பல்லாயிரம் மக்கள் மடிந்து வந்த நேரத்தில், தனது பெரும்லாபத்திற்கு பாதிப்பு வரக்கூடாது என்பதில்தான் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு வந்திருக்கின்றன கார்ப்பரேட்டுகள்! [இதில் ஒற்றைமுனைக் காப்பீட்டுத் திட்டம் என்பது காப்பீட்டுத் திட்டங்களையும் காப்பீட்டு நிறுவனங்களையும் நிர்வாக ஒழுங்குக்காக ஒரு குறிப்பிட்ட துறையின்கீழ் கொண்டு வருவது மட்டும்தான். ஆனால், அரசாங்கத்தின் கீழ் சுகாதாரம் செல்ல வாய்ப்பிருக்கும் சிறிய புள்ளி அளவிலான வாய்ப்பினையும் இந்த நிறுவனங்கள் விரும்பவில்லை.]

அதுமட்டுமல்ல, கொரொனாவினால் ஏற்படும் நட்டத்தினை ஓரளவு ஈடுசெய்து பொருளாதாரத்தைப் பாதுகாப்பாக (floating) வைத்திருக்க அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட அவசர நிதியிலிருந்து பல மில்லியன்களைப் பெற்றிருக்கிறார்கள் இதே கார்ப்பரேட் நிறுவனங்கள்.

இந்தக் கொள்ளைகளையும் அரசாங்கத்தின் தோல்வியையும் மூடி மறைக்கத்தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ‘சானிடைசர்களை குடிங்க, இது கொரொனா வைரஸ் கிடையாது. இதன் பெயர் சைனா வைரஸ்’ என்று உளறிக்கொண்டிருக்கிறார். (இந்தியாவில் பெருநிறுவனங்களின் கடன் தள்ளுபடிகளை மூடி மறைக்க இஸ்லாமியர்களால் பரவுகிறது கொரொனோ வைரஸ், மக்களைத் திசை திருப்பக் கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதுபோல ட்ரம்பும் இதே திசைதிருப்பல் யுக்திகளைப் பயன்படுத்துகிறார்)

தனியார்மயமும் கொரொனா தொற்றும்:

“ஏன் கொரொனா பிரச்சனை வந்தது? இது மிகப்பெரிய சந்தையின் தோல்வி. மிருகத்தனமான புதிய தாராளமயமாக்கத்தின் விளைவாகத் தீவிரப்படுத்தப்பட்ட ஆழ்ந்த சமூக -பொருளாதார பிரச்சனைகளால் அதிகரிக்கப்பட்ட சந்தைகளின் சாராம்சத்தின் வெளிப்பாடுதான். தொற்றுநோய்கள் உலகம் முழுவதும் பரவ வாய்ப்பிருக்கிறது என்பது பலகாலமாக அறியப்பட்டாலும், அவை குறைத்து மதிப்பிடப்பட்டன.

சார்ஸ் வைரசிலிருந்து சற்றே வேறுபட்ட கொரொனா வைரஸ் போன்றதொரு தொற்றுநோய் பரவும் என்பது 15 வருடங்களுக்கு முன்பே அறியப்பட்டதுதான். அந்த நேரத்தில் [சார்ஸ் பரவியபோது] அதிலிருந்து மீண்டாயிற்று. அந்த வைரசை அடையாளம் கண்டு அதற்கான தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குப்பின், உலகம் முழுக்க இருக்கும் ஆய்வகங்கள், கொரொனா வைரஸ் போன்று பரவ வாய்ப்பிருக்கும் ஒரு தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பினை உருவாக்குவதில் ஈடுபட்டிருக்கலாம் இல்லையா? ஏன் அவர்கள் அதனைச் செய்யவில்லை? அப்போது அதற்கான சந்தை சமிக்ஞைகள் இல்லை.

நாம் நமது விதியினை கார்ப்பரேஷன்கள் என்றழைக்கப்படக்கூடிய தனியார் கொடுங்கோன்மைக்குக் கொடுத்து விட்டோம். அவர்கள் பொதுமக்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. அவர்களுக்குப் பலரைக் கொல்ல வாய்ப்பிருக்கக் கூடிய தொற்றுநோய்க்கு மருந்தினைக் கண்டுபிடிப்பதைவிட, உடல்களில் தடவக்கூடிய க்ரீம்களைத் தயாரிப்பது முக்கியமானதாகி விட்டது.” என்கிறார் நோம் சாம்ஸ்கி.

அமெரிக்கா மட்டுமல்லாமல், இத்தாலியும் இந்தக் கொரொனா வைரசால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணமாக தனியார்மயத்தையே அறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது, இந்தக் கொரொனா மாதிரியான நோயினைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணுவது அவசியம். ஆனால், மருத்துவம் தனியார்மயப் படுத்தப்பட்டதால், அரசாங்கங்களினால் இதனைத் துரிதமாகச் செய்ய முடியவில்லை.

இரண்டாவதாக மருத்துவ - சுகாதாரத் துறைகளில் வேலை செய்பவர்களை இது மாதிரியான தொற்றுநோயினை எதிர்கொள்ளத் தயார் செய்வதை அரசாங்கத்தினால் (தனியார்மயத்தின் காரணமாக) தலையிட்டுச் செய்ய முடியாமல் போனது என்கின்றன முதற்கட்ட ஆய்வுகள். (உதாரணமாக அமெரிக்காவில் அரசாங்கம் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தலைவர்களுடனான சந்திப்பினை ஏற்படுத்தி, அவர்கள் மூலமே வேலைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடிந்தது.) உலக சுகாதார அமைப்பும், ‘சர்வதேச சமூகம் பொதுச்சுகாதாரத்தில் திறம்படச் செயல்படுவதற்குத் தயாராக இல்லை’ என்று தனது அறிக்கையில் (WHO-China joint mission on Covid-19 final report) குறிப்பிடுகிறது. 

தைவான் நாடு, கொரொனா தொற்றை மிகச்சிறப்பாகக் கையாண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. தைவான் அரசாங்கத்தின் தனியுரிமை குறுக்கீட்டில் நாம் எதிர்முனையில் நின்றாலும், தைவான் அரசின் செய்தித் தொடர்பாளர் “தைவானின் சுகாதாரக் காப்பீட்டினால் மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல அஞ்சுவதில்லை. ஒருவர் தனக்கு கொரொனா இருக்கலாம் என்று சந்தேகப்பட்டால், அவர் பரிசோதனை செய்துகொள்ள ஆகும் செலவினைப் பற்றி அஞ்சத் தேவையில்லை” என்று பெருமிதமாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். தைவானில் முழு மருத்துவக் காப்பீட்டினையும் அரசாங்கமே வழங்குகிறது. தைவான் மட்டுமல்லாமல், கொரொனா வைரசினை சரியாகக் கையாண்ட நாடுகளைப் பார்த்தாலே, ஏன் தனியார்மயம் என்பது உயிர்க்கொல்லி என்பது புரிந்துவிடும்.

கொரொனாவை வென்ற பொதுச்சுகாதாரம்:

டென்மார்க்: மருத்துவமனைகள் நகராட்சிகள் மூலம் அதிகாரம் பரவலாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. மொத்த நாட்டில் 1% மருத்துவப்படுக்கைகள் மட்டுமே தனியார் வசம் உள்ளது.

ஐஸ்லாந்து: கிட்டத்தட்டத் தனியார் மருத்துவமனைகளே கிடையாது. சுகாதாரத்தை அரசு வரிகளில் வரும் வருமானத்தின் மூலம், அதிகாரத்தினை பரவலாக்கிப் பார்த்துக்கொள்கிறது.

நார்வே: அதிக அளவில் அதிகாரம் பரவலாக்கப்பட்டு அரசாங்கத்தினால் சுகாதாரம் பார்த்துக் கொள்ளப்படுகிறது. மிகக் குறைந்த அளவே மருத்துவமனைகள் தனியார் வசம் இருக்கின்றன.

கியூபா: சோசியலிச க்யூபா, மிகச்சிறப்பாகத் தனது நாட்டில் கொரொனா வைரசைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல், கொரொனா வைரசை எதிர்கொள்ள மருந்து மற்றும் உபகரணங்களோடு 28,628 மருத்துவர்களை உலகம் முழுக்க அனுப்பி, அவர்கள் இந்த நோய்க்கு எதிராக பணிபுரிந்து வருகிறார்கள்.

மேலே, குறிப்பிட்டுள்ள அனைத்து நாடுகளிலும் அதிகாரம் பரவலாக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் - மருத்துவம் அரசால் வழங்கப்படுகிறது. பூஜ்ஜியத்திலிருந்து வெகுக்குறைவான அளவே மருத்துவத்துறை தனியார் வசம் உள்ளது. இவற்றில் எந்த நாடுமே இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்யும் நாடுகள் பட்டியலில் இல்லை. (மேலும், இவையனைத்துமே கியூபாவைத் தவிர தற்போது பெண்களால் நிர்வகிக்கப்படும் நாடுகள்).

2014-ல் தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் மருத்துவத்துறை நிர்வகிக்கப்படும் நாடுகளுக்கும் அரசால் மருத்துவத்துறை நிர்வகிக்கப்படும் நாடுகளுக்கும் இடையில் நடத்தப்பட்ட ஆய்வு, ‘தனியார் மருத்துவமனைகள் சுத்தமாகவும், மிகச்சிறப்பான முறையிலும் மருத்துவம் வழங்குகின்றன என்று நம்பப்படுவது பொய்’ என்பதை ஒப்பீட்டளவில் நிரூபிக்கிறது.

அதேபோல், 2014-ல் வெளியிடப்பட்ட The influence of (public) health expenditure on longevity என்கிற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆய்வு, பொதுத்துறை மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும்போது, பொது மருத்துவமனைகள் ஆயுள்கால அளவில் (Life Expectency) நேர்மறையான (கூட்டுவதாக) தாக்கத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறது.

உலகம் முழுவதும் மருத்துவ-சுகாதாரத் துறைகள் பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளைச் சேர்த்து 2012-ல் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்று மருத்துவத்துறையில் தனியார்மயம் அதிக அளவிலான ஊழலுக்கு வழிவகுப்பதாகத் தெரிவிக்கின்றது. மேலும், அரசாங்கத்தினால் வழங்கப்படும் பொது மருத்துவம், மக்களுக்குக் குறைந்த செலவில் சிறப்பான சுகாதாரத்தை வழங்குவதாகவும், காசநோய், மஞ்சல் காமாலை போன்ற நோய்களுக்கு எதிராக அரசாங்கப் பொது மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும்போது சிறப்பாகச் செயல்படுவதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இதுமட்டுமல்லாமல், மருத்துவத்தில் தனியார்மயம் மிகப் பெரிய அளவிலான ஏழை-பணக்காரர்கள் வித்தியாசத்திற்கு இட்டுச்செல்வதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை நடைமுறையோடு ஒப்பிட்டுப்பார்த்தால் பொதுத்துறை சுகாதாரத்தினால் மருத்துவத் துறையில் சிறப்பான முன்னேற்றம் கண்டதில் மிக முக்கிய உதாரணம் தமிழ்நாடு.

உயிர்காக்கும் தமிழ்நாட்டு மாடலும் தோற்றுப் போன குஜராத் மாடலும்:

மோடியின் குஜராத் மாடலை இந்தியா முழுவதும் செயல்படுத்தப் போவதாகச் சொல்லி ஆட்சியைப் பிடித்தது பாஜக அரசு. ஆனால், குஜராத் மாடல் மீண்டும் ஒருமுறை வெற்று புஸ்வானமாகி இருக்கிறது. இன்றைக்கு வரை குஜராத் மாநிலத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5000 ஐ தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. கொரொனாவிலிருந்து மீண்டவர்களது விகிதம் (recovery rate) 17.5% ஆகவும் உயிரிழப்பின் விகிதம் (mortality rate) 10.5% ஆகவும் இருக்கிறது. அதேவேளைத் தமிழ்நாட்டில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2526 ஆகவும் கொரொனாவிலிருந்து மீண்டவர்களது விகிதம் 47% ஆகவும் உயிரிழந்தவர்களது விகிதம் 1.1% ஆகவும் இருக்கிறது. 

உண்மையில், குஜராத்தின் நிலை இவ்வளவு மோசமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. குஜராத்தில் நான்குமுறை ஆட்சியமைத்த மோடி அரசாங்கமே இதற்கானக் காரணம் என்பதைப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. குஜராத்தில் தற்போதைய நிலையின்படி ஆயிரம் பேருக்கு 0.33 மருத்துவப் படுக்கைகள் தான் இருக்கின்றன. இது பீகார் மாநிலத்தின் ஆயிரம் பேருக்கு 0.55 மருத்துவப்படுக்கைகள் என்ற எண்ணிக்கையை ஒத்ததாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரப்படி பொதுத்துறையில் முதலீடு செய்யும் 18 பெரும் மாநிலங்களின் பட்டியலில் குஜராத் 17 ஆவது இடத்திலிருக்கிறது. குஜராத், தனது மொத்த பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 31.6% மட்டுமே பொதுத்துறையில் செலவிடுகிறது. குறிப்பாக சுகாதாரத்துறையில் கடந்த இரண்டு தசாப்தங்களாகவே குஜராத் செலவிடும் தொகை கிட்டத்தட்ட 1% ஜிடிபி அல்லது அதற்கும் குறைவு.

அதேவேளைத் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு 1.1 என்ற விகிதத்தில் மருத்துவப் படுக்கைகள் இருக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி இந்தியாவிலேயே ஆயிரம் பேருக்கு 0.77 மருத்துவப் படுக்கைகள்தான் உள்ளன. (பிறந்த) குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது 1.9% ஆக இருக்கிறது. இது இந்தியாவின் தேசிய இறப்பு விகிதத்தை (2.7%) விட மிகக்குறைவு. தாய்வழி (பேறுகால) இறப்பு விகிதமானது தமிழ்நாட்டில் 0.062% ஆகவும் இது இந்திய அளவில் .167% ஆகவும் இருக்கிறது. இப்படி நாட்டிலேயே சிறப்பான வகையில் சுகாதாரத்துறையில் குறிப்பாக ஆரம்பச் சுகாதாரத்தில் முன்னோடியாகியிருக்கிறது தமிழ்நாடு. இதுவரை மூன்று மாநிலங்களில் மட்டும்தான் கொரொனாவிற்கான சோதனை ஒரு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. அதில் தமிழ்நாடும் ஒன்று.

உயர்கல்வியில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 7 கோடி பேருக்கு 52 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதில் 22 பல்கலைக்கழகங்கள் மாநில அரசால் நடத்தப்படுகின்றன. குறிப்பாகத் தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. மொத்தம் 6850 இளங்கலை மருத்துவச்சீட்டுகள் தமிழ்நாட்டில் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிற்குச் சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டுப் பயணிகள் 45% பேர் சென்னைக்குத்தான் வருகிறார்கள். இந்தியாவிற்குள் வெளிமாநிலங்களுக்குச் சிகிச்சை பெறச் செல்பவர்களில் 30-40% பேர் சென்னை வருகிறார்கள். சென்னையை இந்தியாவின் Medical Hub என்றும் மருத்துவ தலைநகரம் என்றும் சொல்கிறார்கள். 

“69% இடப்பங்கீட்டின் வழியாகத் தமிழக கல்லூரிகளில் படித்தவர்கள் 80 சதவிகிதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் தான் பணி புரிகிறார்கள். இங்கு அதிகமாகப் படிப்பவர்கள் பல்வேறு சமூகத்தில் இருந்து வருவதால் அவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்குப் பணிசெய்யச் செல்வது இல்லை. இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள்; தனியாக கிளினிக் வைத்துள்ளார்கள். இதனால் தான் தமிழகத்தில் மருத்துவ திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த முடிகிறது. வட இந்தியாவில் படிப்பவர்களில் 80% சதவீதம் மேல் சாதிக்காரர்கள். மற்றவர்கள் நுழையவே முடியாது. எய்ம்ஸ் ஒரு மத்திய அரசு நிறுவனம். 550 கோடி ஒவ்வொரு ஆண்டும் அதுக்கு ஒதுக்குகிறார்கள். 1996 ஆம் ஆண்டு வரை அங்கு இட ஒதுக்கீடு கிடையாது. ஒரு ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது என்றால் எய்ம்ஸில் படித்தவர்கள் 56% பேர் இந்த நாட்டில் இல்லை. அமெரிக்காவிற்கும், லண்டனுக்கும் மேல் படிப்புக்காகச் சென்று அங்கேயே பணிபுரிவதாகச் சொல்லுகிறது.” என்கிறார் மருத்துவர் எழிலன். 

தமிழகத்தின் ஆரம்பச் சுகாதாரம் என்பது வலுவானது. 1980-க்குப் பிறகு தமிழகத்தில் கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளுக்கும் முக்கியமான மாடல் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது இங்கு நடந்த 60 ஆண்டுக்கால திராவிட சித்தாந்தப் போராட்டத்தின் மிக முக்கியமான பலன்.

மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழ்நாட்டில் நடந்த சமூகநீதி ஆட்சியானது அதிகாரப் பரவலாக்கலைச் சாத்தியப் படுத்தியிருக்கிறது; தமிழ்நாடு முழுவதும் பொதுத்துறைக் கட்டமைப்பு வலுவாக இருக்கிறது. லாபமற்ற அனைத்து மக்களுக்குமான வாய்ப்புகளைக் கொண்டு சேர்க்கும் சமூகநீதி திட்டங்களாலேயே தமிழ்நாடு வளர்ந்த நாடுகளுக்கு இணையான மருத்துவ சுகாதார கட்டமைப்பினைப் பெற்றிருக்கிறது.

நீட் தேர்வினை மத்திய அரசு திணிக்கும்முன் வரை, இளங்கலை மருத்துவம் முடித்த பின்னர் ஒருவருடம் கிராமப்புறங்களில் வேலை பார்க்கும் மருத்துவர்களுக்கு மேற்படிப்புகளில் சலுகைகள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருக்கும் மருத்துவர்கள், தன்னிடம் வரும் நோயாளிகளை ‘அம்மா அப்பா’ என்று அழைத்து நேரடியான கவனிப்பினை வழங்குகிறார்கள். இன்றைக்கு கொரொனாவிற்கு எதிராகத் தமிழ்நாட்டின் போரினை நடத்தி வருபவர்களும் இட ஒதுக்கீட்டில் படித்த ஏழை மக்களுக்காகப் பணிபுரிந்த அரசுத்துறை மருத்துவர்கள்தான். 

இந்திய அரசு கல்வியைப் பொது பட்டியலுக்கு மாற்றி, தற்போது நீட் தேர்வுகள் மூலம் அனிதா போன்ற தகுதிமிக்க, மக்களுக்காக மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் கனவை, உயர்சாதி-பணக்கார மாணவர்களுக்கு விற்றும் அதன் லாபத்தைத் தனியாருக்கும் தாரைவார்த்திருக்கிறது. இதுவரை தமிழ்நாடு சேர்த்து வைத்ததை (பொது மருத்துவம்-சுகாதாரத்துறை வளர்ச்சி) நீட்டின் மூலம் போட்டு உடைத்திருக்கிறது இந்திய அரசு. நோயாளி பேசுவது மருத்துவருக்கும் மருத்துவர் கேட்பது நோயாளிக்கும் புரியாதநிலை, அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவு, குறிப்பாகக் கிராமப்புறங்களில் மருத்துவர்கள் இல்லாத நிலை, தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை பெருக்கம் இவற்றின் விளைவாக சுகாதாரத் துறை அடையப் போகும் வீழ்ச்சி போன்ற நீட்டின் எதிர்விளைவுகளை இனி வரும் வருடங்களில் எதிர்நோக்கவிருக்கிறோம்.

இந்தநேரத்தில் சுகாதாரத்தையும் பொது பட்டியலுக்கு மாற்றும் வேலையை ஜனவரியிலிருந்து தீவிரப்படுத்தியிருக்கிறது மோடி அரசு. கொரொனா பரவலிலும் சுகாதாரத்தைப் பொது பட்டியலுக்கு மாற்றும் முயற்சி, பரிசோதனைக் கருவிகளை பறித்து வைத்துக் கொண்டு மத்திய அரசுதான் பிரித்துக் கொடுக்கும் என்று சொல்வது, மத்திய அரசுக்கு நெருக்கமான மாநிலங்களுக்கு அதிக நிதியைக் கொடுப்பது என்று பைத்தியக்காரத்தனங்களை ராஜதந்திரம் என்று நினைத்து மோடி அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இவை அனைத்துமே இந்த நோயின் தீவிரத்தை இன்னும் அதிகரிக்கும்.

சுகாதாரத்தைப் பொருத்த அளவில் அதிகாரம் (மாநிலப்பட்டியலில் இருப்பதால்) சிறிய அளவு பரவலாக்கப்பட்ட நிலையிலேயே இந்தியா கொரொனாவின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் தவித்து வருகிறது. சுகாதாரத்தைப் பொது பட்டியலுக்கு மாற்றி அடுத்து தனியார்வசத்தில் மொத்தமாக ஒப்படைக்கத் தொடங்குமானால், அடுத்த தொற்றுநோய் என்று ஒன்று வந்தால், ஓட்டு கேட்பதற்கு மோடியும் அமித்ஷாவும் மயானங்களுக்குத்தான் வரவேண்டும்!

கொரொனா பரவலுக்கு தனியார்மயத்தோடு அரசுகளின் நிர்வாகத் தோல்வி, இயலாமை என்று பல்வேறு சிக்கலான காரணங்கள் இருந்தாலும் உண்மையில் இந்த கொரொனா வைரஸ் அதனோடு ஒரு எச்சரிக்கை மணியையும், செய்தியையும் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது தனிநபர் லாபத்தை மையமாகக் கொண்ட தாராளமயத்தின், தனியார்மயத்தின் படுபயங்கரமான தோல்வி!

அனைத்துமே தனியாரின் லாபத்திற்கான வணிகமாக மாற்றிய புதியப் பொருளாதாரக் கொள்கை இன்று ஒட்டுமொத்த மனித இனத்தைப் பெரும் நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. நவதாராளவாதம் எனப்படும் இந்த புதிய பொருளாதாரக் கொள்கையின் மையம் கொண்ட அமெரிக்காவில் அடித்தட்டு மக்கள் கொத்து கொத்தாக இறந்திருக்கிறார்கள். மருத்துவம், சுகாதாரம் என்பது மக்களுக்கானது; வணிகத்திற்கானது அல்ல; லாபத்திற்கானது அல்ல எனும் அடிப்படை சமூகநீதியான சோசலிச கொள்கைக்கு எதிரான இந்த நவதாராளவாதம் எனும் தாராளமயம், தனியார்மயம் மக்களைப் புதைகுழிக்குள் தள்ளி இருக்கிறது. இந்தக் கொள்கையால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் மக்களைக் காக்கத் தடுமாறிக் கொண்டிருப்பதைத்தான் குஜராத் நமக்குச் சொல்கிறது.

கடந்த காலத்தில் திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கை சார்ந்து இயங்கியதாலேயே தமிழ்நாடும், சோசலிச வழியில் செயல்பட்ட கேரளமும் இன்று ஓரளவு வெற்றி பெறுவதற்குக் காரணம். ஆனால், இந்தக் கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு தனியார்மயம், லாபமயம், தாராளமயமெனும் வேட்டையைக் கட்டவிழ்த்திருக்கும் மோடி அரசின் புதிய பொருளாதார கொள்கையின் தீவிர நடைமுறை நம்மை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் முன்னர் சமூகநீதி காக்க அணி திரள வேண்டும். இந்தத் தாராளமயக் கொள்கைக்கு எதிராக மக்களைத் திரட்டி தமிழ்த் தேசிய சிந்தனை எனும் முற்போக்கு பெரியாரின் வழி நின்று சமூகநீதியை நிலைநாட்டுவோம்.

காப்பீட்டுக் கொள்ளைக்கான உதாரணம்:

காப்பீட்டில் இரண்டு வார்த்தைகள் மிகவும் முக்கியம். ஒன்று விலக்கு (deductible) மற்றொன்று இணைக்காப்பீடு (Coinsurance). இது மருத்துவமனையில் எப்படிப் பயன்படும் என்பதைப் பார்க்கலாம்.

ஒரு அமெரிக்கர் ரூ.80,000 விலக்குடன் (deductible) மருத்துவக் காப்பீட்டினை வைத்திருக்கிறார். வருடத்தின் முதல் மாதம் மருத்துவரிடம் செல்கிறார்; 6000 ரூபாய் செலவாகிறது. இரண்டாவது மாதம் மீண்டும் மருத்துவமனை செல்கிறார்; 4000 ரூபாய் செலவாகிறது.

இதன்பின் வருட முடிவிற்குள் ஒருநாள் அவசரமாகச் சிறிய அறுவை சிகிச்சை செய்வதற்கான தேவை வருகிறது. அறுவை சிகிச்சையுடன் மருத்துவமனைக்குக் கட்ட வேண்டிய மொத்தக் கட்டணமாக மூன்று லட்சம் தேவைப்படுகிறது.

அந்த வருடத்தில் ஏற்கனவே இரண்டு முறை மருத்துவமனை சென்றுவந்த செலவு (6000 ரூபாய் + 4000 ரூபாய்) 10,000 ரூபாய். அவருடைய மொத்த விலக்குத் தொகை 80,000 ரூபாய். இந்த நிலையில் அவர் இன்னும் அவரது விலக்குத் தொகையினை அடையவில்லை. 10,000 ரூபாய் போக, மீதம் 70,000 ரூபாய் இருக்கிறது.

medical insuranceமருத்துவக் காப்பீட்டினைப் பயன்படுத்துவதற்குமுன் அவர் 70,000 ரூபாயினை செலவு செய்ய வேண்டும். அதன் பிறகுதான் மருத்துவக் காப்பீட்டினைப் பயன்படுத்த முடியும். மீதம் தேவைப்படும் 2,30,000 ரூபாயில் 10%-20% - அதாவது 23000 ரூபாய் முதல் 46000 ரூபாய் வரை அவர் செலுத்த வேண்டும். மீதமிருக்கும் தொகையைக் காப்பீட்டு நிறுவனம் செலுத்தும். அதாவது கிட்டத்தட்ட 30% அல்லது மருத்துவச் செலவில் 3/1 பங்கு அந்த அமெரிக்கர் செலுத்த வேண்டும்.

- மே 17 இயக்கக் குரல்

Pin It