14 அக்டோபர் 2011 அன்று கீற்று இணைய தளத்தில் வெளியான தொடர் கட்டுரையின் மறு பிரசுரம் இது. 9 ஆண்டுகளுக்கு முன் மே17 இயக்கம் எடுத்த நிலைப்பாடுகளை இன்றைய நிலையோடு பொறுத்திப் பார்த்து உண்மையை அறிந்து கொள்ளவே மறு பிரசுரம் செய்கிறோம். இக்கட்டுரை வெளிவந்தது அமெரிக்காவும் மேற்குலகமும் இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுத் தருகிறோம் என்று பிரச்சாரம் செய்த காலகட்டம். தமிழர்களுக்காக ஐ.நாவில் தீர்வினை முன்மொழிகிறோமென தமிழர்களை மேற்குலக நலனுக்காக வளைத்துக் கொண்டிருந்த காலத்தில் வெளியிடப்பட்டது.

Eelam protest162012லேயே ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கான தீர்மானம் முன் மொழியப்பட்டது. இத்தீர்மானம் தமிழர்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி முன் வைக்கப்பட்டது. இதை எதிர்பார்த்தே 2011இலேயே மே17 இயக்கம் மேற்குலகின் சதிகளை அம்பலபடுத்தும் பிரச்சாரங்களை மேற்கொண்டது. 2012இல் துவங்கிய மேற்குலகின் ஐநா மனித உரிமை அவை நாடகம் 2015இல் முழுவதுமாக இலங்கைக்கு சாதகமாகவும், தமிழர்கள் எனும் வார்த்தைகளே அற்ற தீர்மானமாகவும் நிறைவேறியது.  

இதை வைத்துக் கொண்டு இலங்கையில் தனக்கு சாதகமான ஆட்சியை மேற்குலகம் உருவாக்கியது. இதை முன் கூட்டி கணித்த மே17 இயக்கம் தனது வாதங்களை 2011 மே மாதத்திலேயே வெளியிட்டது. இதை தொகுத்து சிறுபிரசுரமாக 2011 அக்டோபரில் இணையத்திலும் பின் அச்சிலும் வெளியிட்டது.

2011 ஏப்ரலில் ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கையில் நடந்தது ஒரு போர்க்குற்றமாக அறிவித்தது. இனப்படுகொலை என்பதை முழுவதுமாக மறைக்கவே போர்க்குற்றமென ஐநா மனித உரிமை அவை திரிக்கிறது என மே17 இயக்கம் குற்றம் சாட்டியது. தமிழ்நாட்டிலும் இதை போர்க்குற்றம் எனப் பிரச்சாரம் செய்த திரிபுவாதிகளை எதிர்த்து பிரச்சாரத்தை முன்னெடுத்து 50,000 பொது மக்கள் திரண்ட நினைவேந்தலை சென்னையில் நடத்தியது.

ஈழத்தில் நிகழ்ந்தது போர்க் குற்றமல்ல, அது ஒரு இனப் படுகொலை எனும் முழக்கத்தை தொடர்ந்து வலுப்படுத்தியது. ஐநாவின் மனித உரிமை அவையில் மேற்குலகம் கொண்டு வந்த பிரச்சாரங்களையும், தீர்மானத்தையும் எதிர்த்து பல அரங்குகளில் போராடியது. தமிழர்களின் போராட்டத்தினை தனக்கு சாதகமாக ஏகாதிபத்திய அரசு இந்திய அரசின் துணையோடு திசை திருப்ப முயன்றதை தமிழகத்தில் மே17 இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்களின் துணையோடு வெற்றிகரமாக முறியடித்தது.

2011இல் ஈழத்தில் நிகழ்ந்தது போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றமென ஆரம்பித்த ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கை பின்னர் அமெரிக்காவினாலும், இங்கிலாந்தினாலும் முன்மொழியப்பட்ட தீர்மானத்தில் வெறும் போர்க் குற்றமாக 2012இல் மாற்றப்பட்டு, பின்னர் படிப்படியாக வார்த்தைகள் இலங்கைக்கு சாதகமாக 2013, 2014இல் மாற்றப்பட்டன. இதனடிப்படையில் போர்க்குற்றம் எனும் வார்த்தை பின் நீக்கப்பட்டு மனித உரிமை மீறல் என சேர்க்கப்பட்டது, தமிழர்கள் எனும் வார்த்தையே அறவே நீக்கப்பட்டு இலங்கை மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறலாக திரிக்கப்பட்டது.

பின்னர் இன வெறி தாக்குதல் என்பது முழுமையாக மறைக்கப்பட்டு மதங்களுக்கு எதிரான வன்முறை என மாற்றப்பட்டது. இத்தீர்மானங்கள் ஒன்றுபட்ட இலங்கையை பாதுகாக்கும் தீர்மானம் என்ற வரையரையுடனேயே வரையப்பட்டது. இத்தீர்மானம் 2015இல் நிறைவேறும் பொழுது ஐநா மனித உரிமை அவையில் மே17 இயக்கம் தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. மேற்குலக ஆதரவு ஈழ புலம்பெயர் அமைப்புகளும், தமிழ்த் தேசக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், சம்பந்தன் ஆகியோரும், தமிழ்நாட்டில் திமுகவும் அதன் ஆதரவு அமைப்புகளும் இந்த தீர்மானத்தை வரவேற்றன.

இந்த திரிபு அரசியலை 2011 ஏப்ரலில் இருந்து அம்பலப்படுத்திய கருத்துக்களின் தொகுப்பாக வெளியிடப்பட்ட பதிவினை மீண்டுமொறு முறை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி பல பிரச்சாரங்களை மேற்கொண்ட மே17 இயக்கம், ஐநாவின் வழியே மேற்குலகம்-ஏகாதிபத்திய அமெரிக்கா மேற்கொண்ட சதிகளை அம்பலப்படுத்த கொண்டு வரப்பட்டது. இப்பிரசுரம் மேற்குலகின் குறிப்பாக அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன் குறித்து பேசிய பதிவு. 2009 இனப்படுகொலையில் அமெரிக்காவின் பங்களிப்பினைப் பற்றி வெளிவந்த முதல் பதிவு.

Eelam protest17அய். நா அறிக்கையினை வைத்துக் கொண்டு தனது பிராந்திய நலனை வலுப்படுத்திக் கொள்ள வல்லரசுகள் முயற்சிப்பது தமிழீழ விடுதலையை மேலும் தள்ளிப்போட அல்லது மறுப்பதற்கான முயற்சியை சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்துவதும் அதிலும் முக்கியமாக தனது பசிபிக் கட்டளை கடற்படைக்கு வலுவான ஒரு தளத்தினை உருவாக்கும் அமெரிக்காவின் 30 ஆண்டுகால் முயற்சியின் வெற்றியின் இறுதி கட்டத்தினை நாம் பார்க்கிறோம்.

புலிகள் இருக்கும் வரை தனது பிராந்திய கனவான திரிகோணமலையை வசப்படுத்துவதும் இலங்கையின் கிழக்கு கடற்கரையை தனது கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெறாது என உணர்ந்த அமெரிக்க அரசு புலிகளை இலங்கை அரசினை கொண்டு வீழ்த்தியதை பல்வேறு தகவல்கள் நமக்கு உறுதி செய்கின்றன. அமெரிக்காவின் இந்த திட்டத்தினுடனேயே இந்தியா தனது தமிழர் எதிர்ப்பு நிலைப் பாட்டின் காரணமாக களத்துணை கொண்டு இந்த இனப்படு கொலையை நடத்தியது. இலங்கையே விரும்பாமல் இருந்திருந்தாலும் இந்தப் போர் நடந்தே இருக்கும்.

விடுதலைப் புலிகளை வீழ்த்த பெரிதும் பயன்பட்ட இராசபக்சே தற்போது முழு அதிகாரத்துடன் இலங்கையை வசப்படுத்துவதும், சீன நலன்கள் முன்னுக்கு தள்ளப்படுவதும் விரும்பாத அமெரிக்கா புலிகளை ஒடுக்க பயன்படுத்திய பிறகு ராசபக்சேக்கள் தேவையில்லை எனும் நிலையை எடுத்து இருக்கிறார்கள். அதாவது இராசபக்சேவை தண்டிப்பது அவசியம் ஏனெனில் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பல குற்றம் புரிந்தார்கள்; அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும்; அதுவே பலி கொடுக்கப்பட்ட தமிழர்களுக்கு அளிக்கப்படும் நீதி எனும் வாதம் முன் வாசல் வழியாக நமக்கு வைக்கப்படுகிறது. பின் வாசல் வழியே அமெரிக்காவின் இராணுவ நலனும், இந்தியாவின் தரகு முதலாளிகளின் வர்த்தக நோக்கமும் மட்டுப்படுத்தப்பட்ட சீனாவின் ஊடுருவலோடு வைக்கப்படுகிறது.

இதன் அடிப்படையிலேயே மனித உரிமை மீறல்கள் மட்டுமே பேசப்பட்டு விடுதலை கோரிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டதை நாம் இங்கு காண்கிறோம். மனித உரிமையைப் பற்றி மட்டும் பேசுவதானால் புலிகளின் மீதும் சில அவதூறுகளை வைப்பதன் மூலமாக விடுதலைப் போரை நடத்திய தமிழர் பிரதிநிதிகளான அந்த தியாகப் போராளிகளை குற்றவாளிகளாக மாற்றிவிட்டு, அந்த போராளிக் குழு எந்த அடிப்படை காரணத்திற்காய் தமிழர்களின் ஆதரவோடு தமிழர்களுக்காகப் போராடியதோ அந்தக் காரணத்தை பின்னுக்கு சுலபமாகத் தள்ளிவிடலாம். சுருக்கமாக பார்த்தால் ’இராசபக்சே தண்டிக்கப்படலாம்; ஆனால், தமிழர்களுக்கு விடுதலைத் தமிழீழம் இல்லை’ என்பதே. இதற்கான காரணங்களாய் ஏராளமான ஆதாரங்களை நாங்கள் வைக்கமுடியும்.

ஐ. நாவிற்கான நிபுணர் குழு போரில் இலங்கை புரிந்த குற்றங்களை மிகச் சரியாக பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று பட்ட இலங்கை அரசின் நீதி பரிபாலனைகளுக்கு ஏற்ப நடைபெறுமாவெனில் அதற்கான சாத்தியப்பாடும் இருக்கிறது. அதாவது இராசபக்சே தூக்கி ஏறியப்பட்டு அந்த இடம் வேறொரு தலைமை மூலம் நிரப்பப்பட்டு அது இந்த விசாரனையை மேற்கொள்ளலாம். புதிய இலங்கை அரசானது போர்க் குற்றவாளிகளாக சிலரைப் பிடித்து விசாரணையை சர்வதேச கண்காணிப்புடன் நடத்தி பின் தண்டிக்கும். மேலும் தமிழர்களுக்கு வழங்கப்படும் நீதியாக ’வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைப்பதற்கான சட்ட வரைவு கொண்டு வரப்பட்டு இலங்கை அரசே முன்வந்து தமிழர்களுக்கான நீதியை பேரினவாதத்தை எதிர்கொண்டு நடத்தி காட்டும்’ இதை நடத்திக் காட்ட தோதாக ஒரு வரதராசப்பெருமாளை இந்தியா முன்னிருத்தலாம்.

அமெரிக்காவிற்கு நேர்மையான சுய இராணுவ துணையற்ற தமிழர்களுக்கு ஒரு பொம்மை தலைவரை வைப்பதன் மூலம் திரிகோணமலையிலும் இதர கிழக்கு கடற்கரையிலும் அமெரிக்கா தனது கப்பற்படைக்கான கடல் தளம், பொழுதுபோக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட கேளிக்கை வசதிகளை அமைத்து தனது பசிபிக் கட்டளை கடற்படையை வலுப்படுத்தலாம்.

இந்த தமிழர்களுக்கான நீண்ட கால அரசியல் தீர்வை இந்தியா மூலம் செய்து தந்து அமெரிக்காவின் எடுபிடி இந்தியா தமிழ்நாட்டில் தமிழீழத் தமிழர்களுக்கு தீர்வு வழங்கி விட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும். இதன் வழியாக காங்கிரசோ, பா.ச.கட்சியோ அல்லது ஏனைய தேசிய கட்சிகளோ தமிழர்களை தமிழ்த்தேசிய, தமிழீழ ஆதரவு மற்றும் இந்திய எதிர்ப்பு நிலையிலிருந்து மாற்றி தனது ஓட்டு வங்கியாக மாற்றிக் கொள்ள முடியும்.

மேலும் நீண்டகால கனவான சம்பூர் அனல் மின் நிலையம் இழுத்தடிக்கப்படாமல் இறுதி செய்யப்படும். 2007 முதல் தட்டிக் கழிக்கப்பட்டு வரும் செபா பெரு வர்த்தக ஒப்பந்தம் மிக எளிதாக கையொப்பமிடப்படும். இலங்கைக்கு நிதியுதவியாக கொடுக்கப்பட்ட 1000 கோடி ரூபாய்க்கான கட்டுமானத்திட்டங்கள் இந்திய தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கே அளிக்கப்படும். கூடுதலாக சீனாவின் அச்சுறுத்தலையும் குறைக்க முடியும். ராசபக்சேவை மிரட்டுவதன் மூலமும், அகற்றுவதன் மூலமும் நீளும் பயன்கள் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கும் அதன் ஆசிய கைக் கூலி இந்தியாவிற்கும் மற்றும் அதன் பெருமுதலாளிகளுக்கும் ஏராளம்.

பின் வரும் தகவல்களை நீங்கள் முழுமையாக படித்தபின் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இறுதியில் விவாதித்து இருக்கிறோம். தமிழர்கள் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில் ஒரு நேர்மையான வெளிப்படையான ஒற்றைத் தலைமை நம் முன்னால் இல்லாத ஒரு சூழலில் இருக்கிறோம் என்பதை நாம் முன்பே கண்டோம். நமக்குள் நடக்கும் ஆழமான விவாதமும், பகிர்வுகளும் அதன் அடிப்படையில் நடக்கும் களப்பணிகளுமே நம்மை நேர்கோட்டில் செலுத்தும் என உறுதியாய் நம்புகிறோம்.

அமெரிக்கா மற்றும் அமெரிக்கா

பயன்படுத்திய பின் தூக்கி எறியும் பழக்கம் கொண்ட அமெரிக்கா ஜியா உல் ஹக், சதாம் உசேன், அன்வர் சதாத் போன்று இராசபக்சேவும் எறியப்படலாம். ஏனெனில் பல வழிகளில் ராசபக்சே ஆபத்தானவராக, சீன ஆதரவாளராக அமெரிக்காவிற்கு தெரிகிறார். அதே போல இராசபக்சேவை தூக்கி எறிய தேவைப்படும் ஒரு வலுவான காரணமாக தமிழர்கள் இனப்படுகொலை முன் வைக்கப்படும். ஆனால், இனப் படுகொலையாக இல்லாமல் போர் குற்றமாக வைக்கப்படலாம்.

அதாவது போர் நியாயமானது, ஆனால் அதில் நடை பெற்ற குற்றமானது மனித குல விரோதமானது எனும் வாதம் மிகச் சன்னமாக வைக்கப்படுகிறது. இதை அமெரிக்காவின் இராபர்ட் பிளேக் நமக்கு மிக மேலும் புரிய வைக்க முயற்சி செய்கிறார். அதாவது பின் லேடனும், பிரபாகரனும் ஒன்று எனும் போது அவர் இந்தப் போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போராக நிறுவுகிறார். இலங்கை அரசின் நலனையும் உறவையும் அமெரிக்கா மேற் கொள்ளும் அல்லது கவனத்தில் கொள்ளும் எனும் போது இலங்கை விட்டுக் கொடுக்கப்ப்பட மாட்டாது எனும் குறியீடு வைக்கிறார்கள்.

இதை புரிந்து கொள்ளவேண்டுமானால் சதாம் உசேனுக்கும் – குர்து இன மக்களுக்கும் நடைபெற்றதைத் திரும்பி பார்க்க வேண்டும். குர்து இனமக்கள் தனது இன விடுதலைக்காக போராடினார்கள், அதன் காரணமாக ஈராக்கில் சதாம் உசேனாலும், ஈரானிய அரசாலும், துருக்கிய அரசாலும் ஒடுக்கப்படுகிறார்கள். வட ஈராக்கில் உள்ள குர்து இன நகரில் சதாமின் ஒடுக்கு முறைக்கு உள்ளான ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை வைத்து வழக்கு தயாரிக்கப்பட்டது. இதில் 144க்கு சற்று அதிகமான குர்து மக்களைகொன்ற வழக்கில் சதாம் விசாரிக்கப்பட்டு தூக்கில் ஏற்றப்பட்டார். இந்த வழக்கின் போது குர்து இன மக்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்பது போன்ற மாயை அப்பாவி மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டதை நாம் கவனிக்க வேண்டும்.

அதே போன்றதொரு நிலையே இங்கும் இன்று ஏற்படுத்தப்படுகிறது. ஆட்சி மாற்றம் நடைபெறலாம். இராசபக்சே தண்டனை பெறலாம் அல்லது சூடான் அதிபர் ஒமர் அல் பஷிர் போல மேற்குலத்திற்கு தேவையான எண்ணை வளம் நிறைந்த தெற்கு சூடானை பகிர்ந்து அளித்துவிட்டு தனது தலையை காப்பாற்றிக் கொள்ளலாம்.

இதே போல தமிழர்களுக்கு மேற்குலகம் முன் வைக்கும் ஒரு தீர்வை ஒத்துக் கொண்டு, மிக முக்கியமாக மேற்குலனின் நலனை கவனத்தில் கொண்டு, இராசபக்சே நடந்து கொள்ளும் போது எல்லாம் சரியாகலாம். தமிழர்கள் அனைவருக்குமான அப்பம் அளிக்கப்பட்டு விடும், அதில் தமிழர்களுக்கு தமிழீழம் மட்டும் இருக்காது. கிடைப்பதை பெற்று நிறைவுறும் கோடாரிக்காம்பு குழு ஒன்று உலகின் மிக முக்கிய, பெரிய செய்தி தொலைக்காட்சிகளில் தமிழர்களுக்கு கிடைத்த நலனை பூரிப்புடன் விளக்கி நன்றி பாராட்டுவார்கள்.

பி.பி.சி யும், லே மாண்டேவும், சி.என்.என்னும், ஏன் சின்ஹுவாவும் கூட வழி மொழியும். அதற்கான அனைத்து ஒத்திகைகளும் இப்போது நடை பெறுவதை நாம் காண்கிறோம். இவ்வாறு வைக்கப்படும் தீர்வை அரசியல் சக்தியாக மூன்று இடங்களில் பிரிந்து இருக்கும் தமிழ் சமூகமாகிய தமிழீழத் தமிழர்களின் பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழர்களின் பலம் பொருந்திய பகுதியாக பார்க்கப்படும் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்படும் தமிழர்களின் தலைவியாக செயலலிதாவும் முன் நிறுத்தப்படுவார்கள்.

புலம் பெயர்ந்த தமிழர்களில் தமிழீழமே தீர்வு என உறுதியாக இருக்கும் சக்திகள் அந்தந்த நாடுகளால் கடுமையாக ஒடுக்கப்படுவார்கள். (இதை நாம் இப்போது காண முடிவதாக உள்ளது). நேர்மையானவர்கள் தவிர்த்து ஒரு பொம்மைத் தலைவரை மேற்குலகம் முன்னிறுத்துவார்கள் அல்லது முன்னிருத்தப்பட்ட தலைவரை பணிய வைப்பார்கள். இந்தியா செயலலிதாவின் பின்னணி சக்தியாக காய் நகர்த்தும். இதற்கு ஏதுவாகத்தான் செயலலிதா- இரணில் விக்கிரமசிங்கே சந்திப்பை இந்தியா உருவாக்குகிறது.

இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக (எமக்கு தெரிந்து) ஒரு மாநில முதல்வரும், அண்டை நாட்டின் முன்னால் அதிபரும் அந்த நாட்டின் பிரச்சனையை பேசப் போகிற காட்சியை நாம் பார்க்கிறோம். இதற்கு பிள்ளையார் சுழியாய் இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் சூரியநாரயண் ஜெயலலிதா பேசுவதற்கான பின்னணியின் கருத்துருவாக்கத்தை உருவாக்க ஆரம்பித்து இருக்கிறார். (காலச்சுவடு பத்திரிக்கையால் கொண்டாடப்படுபவர்; நீண்ட நாளய தமிழீழ எதிரி; ஆழ்ந்த ஆராய்ச்சியாளர் என அவரது நண்பர்களால் சொல்லப்படுபவர். இந்த நபர் இந்திய அதிகார வர்க்கத்தின் குரலாக தெற்காசிய பிராந்தியத்தினை பற்றி கருத்துக்களை பதிய வைப்பவர்.)

ஆக இரணில்-ஜெயலலிதா சந்திப்பு இந்த திட்டங்களை உறுதி செய்கிறது. இதனுடன் இராபர்ட் பிளேக்கின் தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர்களை சந்தித்ததை நாம் கவனத்தில் கொள்ளுதல் நலம். மேலும் இந்த நிகழ்ச்சிகளின் ஊடாக மேற்கு-இந்திய அழுத்தங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இராசபக்சே இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை ஜி.எல் பெரிஸ்சின் இந்திய வருகையின்போது அவர் உறுதி படுத்தியுள்ளார். செபா பெருவர்த்தக ஒப்பந்தத்தினையும், சம்பூர் அனல் மின் நிலைய வேலைகளையும் உறுதி செய்தது அந்த சந்திப்பு. அந்த சந்திப்பின் பின்னான பேச்சுவார்த்தை குறிப்புகள் இதை உறுதிப்படுத்துகிறது. அதே வாரத்தில் தமிழகத்தில் ஈரோட்டில் உள்ள ஒரு கட்டிட நிறுவனத்திற்கு 2000 வீடுகள் கட்டும் ஒப்பந்தமும் வழங்கப்படுகிறது.

மேலும் இதே சமயத்தில் யாழ்பாணத்தில் உயர் பாதுகாப்பு வளையத்தில் அபகரிக்கப்பட்ட நிலத்தை பசில்-ராசபக்சே தமிழர்களுக்கு வழங்கி மற்றவர்களுக்கு தான் இன்னமும் தமிழர்களுக்கான தீர்வில் உறுதியாய் செயல்படுவதாக காட்ட முற்படுகிறார். இந்த சமயங்களில் தமிழ் பிரதிநிதிகள் அதிகாரப் பகிர்வு பற்றி விரிவாக பேசுவதை கவனிக்கமுடிகிறது. மற்றும் ஆட்சி மாற்றத்தை பேசவேண்டிய அவசியம் இல்லை என இராசபக்சேவின் அரசு முணுமுணுப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அனைத்து தரப்பிற்கும் வெற்றி எனும் தீர்வாக இந்த மாற்றங்கள் நிகழும். இதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா என்பதே நம் முன் நிற்கும் மிக முக்கியமான கேள்வி.

இப்பொழுது நிகழும் அனைத்து நிகழ்வுகளும் அமெரிக்க அரசால் நகர்த்தப்படும் நகர்வுகள். இதை இராபர்ட் பிளேக்கின் 2008 அக்டோபரில் சென்னை பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரை விரிவாக விளக்குகிறது. இதில் “கொழும்பு புலிகளை ஒடுக்குவதற்கான காலம் நெருங்கி விட்டது… புலிகளுக்கு பின்னான சமூகத்தில் இந்தியாவின் இலங்கைக்கான தீர்வே இறுதியானது” அதாவது தமிழர்களின் தீர்வில் இந்தியாவும்- அமெரிக்காவும் ஒன்று எனும் செய்தி தெளிவாக அவரால் உணரவைக்கப்பட்டது.

கடந்த பத்து ஆண்டுகளாக மிகத் தீவிரமாக பின்னணியில் வேலை செய்த அமெரிக்காவினை நாம் புரிந்து கொள்ளுதல் அவசியம். அமெரிக்காவின் பிராந்திய நலனுக்கான திட்டமும் நமது விடுதலையும் பிணைந்துள்ளன. இனி வரும் காலத்தில் நாம் மிகத் தீவிரமாகவும், நுணுக்கமாகவும், ராசதந்திர நோக்குடன் நமது மக்கள் போராட்டத்தையும், அதிகார வட்டத்திலான பேச்சு வார்த்தையையும் நடத்துதல் அவசியம். இவை இரண்டும் ஒரு சேர நகரவேண்டும்.

பின்வரும் தகவல்களை கூர்ந்து கவனித்தால் அமெரிக்கா எவ்வாறு இலங்கை அரசின் மூலமாக தனது போரை நடத்தியது என்பதை கவனிக்கலாம். இதன் அர்த்தம் இந்தியா இதில் பங்காற்றவில்லை என்பதல்ல. அமெரிக்காவின் நோக்கத்தில் இந்தியா தனது வக்கிரத்தையும் இணைத்துக் கொண்டது. அமெரிக்கா மூலமாக தனது பிராந்திய ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள விரும்புகிறது. அமெரிககாவால் இந்தியாவின் தலைமை மொத்தமாக விலைக்கு வாங்கப்பட்ட பின் இந்தியா இவ்வாறே தனது தலைவனின் நலனுக்கு தக்க நடந்து கொள்கிறது.

அமெரிக்காவும் இலங்கையும்

இந்திய அரசு அமெரிக்காவின் கட்டுக்குள் வந்த 90களின் இறுதியில் அமெரிக்கா தனது நீண்ட நாள் திட்டமான திரிகோணமலை கப்பற்படை முகாமை அமைத்துக் கொள்வதற்கான நகர்வுகளை மேற்கொள்கிறது. இதற்கான அடிப்படையை 2002 ஆண்டு தனது அக்ஸா ஒப்பந்த்திற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தை மூலமாக வைக்கிறது. 70களில் இந்திரா அரசால் கடுமையாக எதிர்க்கப்பட்டு பின்னர் இலங்கையும்-அமெரிக்காவும் உறுதியாக இருப்பது கண்டு தமிழ் போராளிகளுக்கு பயிற்சி அளிப்பது வரை சென்றது என்பது இதே ஒப்பந்தத்தினை முடக்குவதற்காகவே.

இந்த முறை அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தினை பேசிய பொழுது இந்திய அரசு வாய் திறக்கவே இல்லை. 9/11 இரட்டை கோபுரத்தாக்குதலை காரணமாக வைத்து பல நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்கிறது. அதில் ஒன்று புலிகளை பயங்கரவாத குழுவாக சித்தரித்து அதன் மூலமாக தெற்காசியா பகுதி அரசியல் விவாதத்தினை தனக்குள் மேற்கொள்கிறது.

இதன் அர்த்தம் தற்பொழுது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி தனது தெற்காசிய ஆதிக்கத்தினை நிலை நிறுத்த முயற்சிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தினை இலங்கையுடன் உபயோகித்து உறவு நிலையை மேற்கொள்கிறது. இலங்கை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்கிறது. அமெரிக்க அரசால் உயர்பதவியில் இருந்த ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் 2004 இல் இலங்கைக்கான தினசரி நடவடிக்கையை கவனிக்க நியமிக்கப்படுகிறார்.

இதற்கு முன்னதாக 2002இல் அமெரிக்காவின் இராணுவ தளபதி திமோத்தி கோர்மல்லி, கடற்படை பயணப்படையின் பிரிகேடின் தளபதி, அமெரிக்காவின் தெற்காசிய துணை அரச அதிகாரியான கிரிஸ்டினா ரோக்காவுடன் இலங்கையின் ரணில் விக்கரமசிங்கே, பாதுகாப்பு அமைச்சர் திலக் மரப்போனா மற்றும் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பலாலி இராணுவ முகாமில் சந்திக்கிறார்கள். இதற்கு அடுத்த மாதம் ரகசிய பயணம் ஒன்றை அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் சட்ட நிபுணர் குழு இலங்கைக்கு பயணிக்கிறது. இதற்கான காரணமாக பயங்கரவாதத்திற்கு எதிரான பயிற்சிக்கான ஒத்துழைப்பு என சொல்லப்படுகிறது.

இந்த ஒப்பந்தமானது பாகிஸ்தானில் இருக்கும் தனது தளம் ஒருவேளை அகற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால் ஆசியாவில் உள்ள தனது தொடர் கடற் பாதுகாப்பு தளத்தின் மையமாக இலங்கையை மாற்ற உதவும் என்று அமெரிக்கா நினைத்ததன் விளைவாக உருவானதுதான். இது அமெரிக்காவை மேலும் பலம் உள்ளதாக மாற்றும். தற்போதைய நிலைப்படி, பாகிஸ்தானுக்கு பிறகு அமெரிக்கா இந்தோனேசியாவின் மலாக்க சலசந்தியின் அருகே தான் நிலை கொண்டுள்ளது.

இந்த சமயத்தில் தான் இராபர்ட் பிளேக் புலிகள் தான் தமிழர்களுக்கான அரசியல் தீர்வில் தடைக் கற்களாக இருக்கிறார்கள் எனச் சொல்லி அதற்கு புலிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதே போன்றதோரு கருத்தைத்தான் பாலத்தீனத்திலும் “பாலத்தீன தீர்விற்கு யாசர் அராபத் எதிராக தடை கல்லாக இருக்கிறார்” என்றார்கள். அதன் பின்னர் அவர் அகற்றப்பட்டார். இதே போன்றதொரு நிலையை இலங்கையில் தமிழர்களின் தலைவர்களுக்கு ஏற்படுத்த திட்டமிட்டே புலிகளின் நிதி ஆதாரத்தையும், ஆயுத ஆதாரத்தையும் அழிக்க இரு குழுக்களை ஏற்படுத்தி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, பிலிப்ப்பைன்ஸ், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து எனப் பல நாடுகளில் உள்ள புலிகளின் நிதி ஆதாரங்களையும் ஆயுத ஆதாரங்களையும் அழித்தார்.

இதுவே புலிகளின் பின்னடைவிற்கு காரணமாக இருந்தது. மேலும் புலிகளின் கடல் வழித்தடத்தினை மறித்து ஆயுதக் கப்பலை அழிப்பதற்கு உதவியதும் இவரே. பிரபாகரனின் மறைவிற்குப் பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு அளிக்காமல் ஒருவேளை சென்றால், இந்தியாவும் அமெரிக்காவும் விட்டுவைக்காது என போர் நடந்து கொண்டு இருந்த 2009 மார்ச் மாதம் 11 ம் தேதி கொழும்புவில் தெரிவித்தார். ஆக, தலைவர் பிரபாகரனை தீர்த்துக் கட்டுவதில் வேறு எவரையும் விட அமெரிக்காவே கவனமாக இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் இதற்காகவே பிரபாகரனின் நகர்வுகளை செயற்கைக்கோள் மூலம் இலங்கை அரசுக்கு அறிவித்ததாகவும் சொல்லப்படுகிறது இப்பொழுது இவரே தமிழர்களுக்கான பேச்சு வார்த்தை, தீர்வை முன்னின்று பேசுகிறார். இதுவே நமது கவலைக்குரிய ஒன்று.

ராபர்ட் ஓ பிளேக் இலங்கைக்கு முன்பு இருந்த அனைத்து நாடுகளான துனிசியா, எகிப்து, நைஜீரியா, அல்ஜீரியா என அனைத்து நாடுகளிலும் (நைஜீரியா தவிர்த்து) வெற்றிகரமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. நைஜீரியாவில் இன விடுதலை போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அமெரிக்காவினுடய மிகச்சிறந்த அதிகாரிகளுள் ஒருவராக வெற்றிகரமாக அமெரிக்காவின் திட்டத்தை செயல்படுத்தியவராக இன்று ராபர்ட் பிளேக் திகழ்கிறார். இவரே இலங்கையின் எதிர்காலத்தையும் தமிழர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கவராக மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இவரின் திட்டம் பிற்போக்கானதாகத்தான் இருக்கும் என்பதில் நமக்கு அய்யமேதுமிருக்கப் போவதில்லை. ஏனெனில், நாம் இவரின் தமிழர் போராட்டத்தைப் பற்றிய கருத்துருவாக்கம் என்பதை நாம் கவனிக்க வேண்டும், "ஒசாமா பின்லேடனும், பிரபாகரனும் பயங்கரவாதிகள்.." என்று ராபர்ட் ஓ பிளேக் மே மாதம் 5ம் தேதி, 2011ல் கூறியதை மறக்கமுடியாத ஒன்று.

அமெரிக்காவும் தமிழீழப்போரும்

2002இல் அமெரிக்கா முன்னெடுத்த அக்சா ஒப்பந்தத்திற்கு பிறகு வெகு வேகமாக காய்களை நகர்த்துகிறது. இரணிலின் சூழ்ச்சி நிறைந்த அரசியல் நகர்வுகள் இந்தியாவின் கொல்லைப் புறத்தின் வழியே நகர்த்தினார். இதில் முக்கியமாக அமெரிக்க அதிகாரிகளின் வருகை. வெகுகாலத்திற்கு (8 ஆண்டுகளுக்கு பிறகு) அமெரிக்காவின் ஹாப்பர் போர்க்கப்பல் ஏப்ரல் 2002இல் கொழும்பு வந்தது. இந்தியாவிற்கு தெரியாமல் திரிகோணமலையில் அமெரிக்காவிற்கு பெட்ரோலிய எண்ணை கிடங்குகளை அமைக்க இரணில் அரசு ஒப்பந்தம் ஏற்படுத்த முயன்றதை டிசம்பர் மாதம் 2002இல் வாச்பாயி அரசு அறிந்து கொழும்புவிற்கு தூதுவர்களை அனுப்பி அதிருப்தியை வெளிப்படுத்தியபோது ரணில் மறுத்தார்.

2004 பிப்ரவரி 8 ஆம் தேதியில் அமெரிக்காவிற்கான இலங்கையின் தூதர் தேவிதா சுபசிங்கே இலங்கையின் அமெரிக்க வாழ்மக்களிடத்தில் இலங்கையின் சுதந்திர தினத்தில் பேசும்போது அமெரிக்காவின் இலங்கைக்கான முக்கியத்துவத்தைப் பற்றி பெருமையடித்தார்.

அவரின் பெருமையில் உண்மை இருந்தது. அமெரிக்கா இலங்கையின் பயங்கரவாத்திற்கு எதிரான போரில் உதவும் அறிகுறியையே அவர் பெருமையாக பேசினார். அதற்கான ஆதாரமும் இருக்கவே செய்தது. அமெரிக்காவின் பசிபிக் கடற்படையின் தளபதியை அவரும், இலங்கை கடற்படையின் வைஸ் அட்மிரல் (துணை கப்பற்படைத்தளபதி) தயா சந்தாகிரியும் சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு இராணுவ உறவுகளை பேசி இருந்தனர்.

இதில் ஆயுதம் மற்றும் பாதுகாப்பு கருவிகள் சார்ந்த பேச்சும் நடைபெற்றது. மேலும் இலங்கையின் முத்தரப்பு தளபதிகள் அமெரிக்காவின் முத்தரப்பு தளபதிகளை சந்தித்துப் பேசி பகிர்ந்த பின்னரே இந்த தூதரின் பேச்சு அமைந்தது. அதாவது இந்தியா அறியாமல் எதுவும் அமெரிக்காவிடம் பேச மாட்டோம் என கூறிய இரணில் மிகத் திறமையாக இந்திய அரசின் முதுகுப்புறத்தில் அமெரிக்காவிடத்தில் உறவுகளை உறுதிபடுத்தி இருந்தார். இதில் மிகமுக்கியமாக இலங்கை அமெரிக்க உறவுகள் கடலோரக் காவல் படையை பலப்படுத்துவதாக அமைந்தது. இந்த காலக் கட்டத்தில் தான் தமிழக மீனவர்கள் வேறு எப்போதையும் விட அதிக அளவில் கொல்லப்பட்டனர்.

இந்த அறிவிப்பு நடந்த ஒரு வருடத்தில் 21 பிப்ரவரி, 2005இல் அமெரிக்கா இலங்கைக்கு முதல் முறையாக ஒரு போர்க் கப்பலை வழங்குகிறது. இந்த வசதி மிக்க கப்பல் கடலோர பாதுகாப்பை திறம்பட செய்கிறது. இந்தக் கப்பலே பின்னர் சமுத்திரா என இலங்கையால் அழைக்கப்படுகிறது.

இதற்கு நடுவே இலங்கை அரசின் கப்பற் படை அமெரிக்காவின் கடல் படையால் பெருமளவு பயிற்சியளிக்கப்பட்ட்து. இதன் விளைவிலேயே இலங்கை தனது காலி துறைமுகத்தை காக்கவும், திரிகோணமலையில் மீதான தாக்குதலை முறியடிக்கவும் முடிந்தது, அதற்கு பின்னணியில் அமெரிக்காவின் பயிற்சி உதவியது என்பதை நாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இதற்கு  பின் 2006இல் அமெரிக்கா 1000 கப்பற்படை வீரர்களுடன் இலங்கையின் அம்பந்தோட்டா அருகே மாபெரும் கடற்போர் பயிற்சியை செய்தது. இந்த பயிற்சியானது விடுதலைப் புலிகள் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சற்று முன்னதாக நடை பெற்றது என்பது கவனிக்கத்தக்கது. இது சரியாகச் சொல்லப்போனால் புலிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக இருந்தது.

இதற்கு இரு வருடங்களுக்கு முன்னதாக மறைந்த புலிகளின் அரசியல்பிரிவுச் செயலாளர் சுப. தமிழ்ச்செல்வன் எரிக் சோல்ஹைமிடம் தமக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவித்ததை அவர் அமெரிக்க தூதரகத்தில் தெரிவித்து இருந்தார். இதை தனது தலைமையகத்திற்கு தெரிவித்த தொடர்பில் தூதரகம் பின் குறிப்பாக “..இப்பொழுது தான் புலிகளுக்கு புரிகிறது..” எனக் கிண்டலாக அனுப்பப்பட்டு இருந்ததை சமீபத்திய விக்கீலீக்ஸ் தெரிவிக்கிறது. அமெரிக்கா தனது போர்க்கப்பலை இலங்கைக்கு கொடுத்த அதே நேரம் அய்ரோப்பிய ஒன்றியம் புலிகளை பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கக் கேட்ட இலங்கை அரசின் கோரிக்கையை அய்ரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதரகம் ஒப்புதல் அளித்து தனது தலைநகரான புரஸ்ஸல்ஸ்க்கு பரிந்துரைகளை அனுப்புகிறது.

அதாவது அமைதிப் பேச்சு வார்த்தையில் புலிகள் ஈடுபட்டுக் கொண்டு இருந்த அதே நேரத்தில் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என அய்ரோப்பிய ஒன்றியம் தடைசெய்கிறது; அமெரிக்கா ஒருபடி மேல்சென்று இலங்கையை போருக்குத் தயார் செய்கிறது. இதன் நடுவிலேயே துரோகி கருணாவின் பிரிவும் அமெரிக்க-அய்ரோப்பிய-இந்திய உளவு துறைகளின் உதவியால் நடைபெறுகிறது. நவம்பர் 21, 2006இல் வாசிங்டன் நகரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடுவத்தின் நாடுகளான ஜப்பான், நார்வே, அய்ரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இலங்கை மற்றும் புலிகளின் ஒப்பந்த மீறலைக் கண்டிக்கின்றனர்.

இதில் தமிழர்களின் பிரச்சனைகள் கவனமாக மறைக்கப்பட்டு இலங்கைக்கு ஆதரவான நிலையை வெளிப்படுத்துகின்றனர். அமெரிக்காவின் நிக்கோலஸ் பர்ன்ஸ் இலங்கை அரசின் புலிகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதுடன் புலிகளை ஓரங்கட்டுகின்றனர். அதாவது புலிகளை பயங்கரவாதிகள் என அய்ரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்த பின் இது நடக்கிறது.

2004 இல் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமெரிக்காவின் கைப்பாவையாக மன்மோகன் சிங் பதவி ஏற்றதும் நிலைமைகள் வெகுவாக இலங்கைக்கு சாதகமாக நகருகின்றன. அமெரிக்காவால் தெற்காசியாவில் மேற் கொள்ளப்பட்ட இலங்கை சார் நகர்வுகள் எதுவும் இந்தியாவால் கேள்வி கேட்கப்படுவதில்லை. முழுமையாக அமெரிக்கவின் மாநிலமாக மாற்றப்பட்டதைப் போல இலங்கையில் அமெரிக்காவின் எந்த ஒரு காலடி பதிவும் இந்தியாவின் கவனத்திற்கு வர மறுக்கின்றன.

இந்த சமயத்தில் தான் இந்தியாவில் தேசிய பாதுகாப்பு செயலாளர் ஜெ.என் தீக்சித்திற்குப் பிறகு எம்.கே நாரயணன் நியமிக்கப்படுகின்றார். இவர் அமெரிக்காவின் போர்டு பவுண்டேசனின் நிதியில் செயல்படும் செண்டெர் பார் செக்யூரிட்டி அனாலிசிஸில் பணி புரிந்து கொண்டு இருந்தபோது இந்தப் பதவிக்கு கொண்டு வரப்படுகிறார். இவரே போர்க்காலத்தில் அமெரிக்க-இந்தியாவின் அச்சமான தமிழகத்தில் அதன் அரசியல்வாதிகளாலும், அரசாலும் எதிர்ப்பு வரக்கூடாது என கருணாநிதி அரசை மிரட்டி பணிய வைத்தவர்.

ஏனெனில், அமெரிக்காவிற்கு அதன் துணை நாடான இந்தியாவில் அதன் மாநிலத்தில் தேசிய இனப்பிரச்சனை வரக்கூடாது எனக் கவலை. ஒருவேளை இந்தியா அம்மாதிரியான இனப்பிரச்சனைகளில் சிக்குவது அமெரிக்காவின் வர்த்தக நலனையும் பாதுகாப்பு நலனையும் கடுமையாக பாதிக்கும். எனவே தான் தமிழகத்தை அடக்குவதற்கு எம்.கே நாரயணன் அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் இந்திய தரகு முதலாளி அரசின் பிரதிநிதியாக முயற்சி எடுத்தது முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் இவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இவரின் உறுதியான தமிழின எதிர்ப்பும் இந்திய தரகுமுதலாளித்துவ அடி வருடித்தனமும் அமைந்தது. பிரதமரின் ஆலோசகராக இருந்த இவர் இந்தியாவின் ரா உளவுத்துறையின் தலைவர் ரபிந்திரசிங் அமெரிக்காவிற்கு உளவுத் தகவல்களை கடத்தியதையும் பின் அவர் அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல உதவி செய்த தோம‌ர் என்பவரை அமெரிக்காவிலேயே பதவியேற்க வைத்தவர் இந்த எம்.கே.நாராயணன். ஆக  அமெரிக்கா தனது திட்டத்திற்கு ஏற்ப வலையை எற்படுத்தியது.

இந்த எம்.கே.நாராயணன் காலத்தில் தான் இலங்கையின் வடக்குப் பகுதியில் அமெரிக்காவின் கடல் பாதுகாப்பை கவனிக்கும் அதி நவீன ராடார்கள் பொருத்தப்பட்டது. இதை இந்தியாவின் பாதுகாப்பு செயலர் எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் ராடார்களை தெற்கு பகுதிக்கு நகர்த்தி விட்டு வடக்கில் இந்தியா அளித்த ராடார்களை நிறுவச் சொன்னார். அதனை அமெரிக்காவிடம் தெரிவித்த இலங்கையின் கமடோர் இலங்கோகோன். இதற்கு அவரிடம் அமெரிக்கா இந்தியாவிடம் உறுதியாக இருக்கவும் என்று சொன்னதுடன் தேவைப்பட்டால் இந்தியாவின் எதிர்ப்பை மீறி செயல்படுமாறும் அறிவுறுத்தினார். இது 2007இல் நடைபெற்றது.

இந்தியாவினை சந்தித்தபோது இந்தியா அவரிடம் தனது ஆட்சேபணையை திரும்பப் பெற்றது எனச் சொல்லப்பட்டது, அவசியமெனில் இந்தியாவின் ராடார்களை அமெரிக்க ராடார் கவனிக்காத சிறு சிறு இடைவெளிப் பகுதிகளில் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த சமயத்தில் தான் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் மறிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டன. இதை அமெரிக்காவின் உளவு தகவல்களுடன் இலங்கை செய்து முடித்தது. இலங்கை அரசின் வார்த்தைகளில் கூறுவதெனில் புலிகளின் கப்பல்களைப் பற்றிய தகவல்கள் மட்டுமல்ல அதில் இருந்தவர்களை பற்றியத் தகவல்களும் இலங்கை அரசுக்கு அமெரிக்காவால் அளிக்கப்பட்டன.

2007, மார்ச் 5 இல் தெற்காசியாவின் மிக முக்கியமான அக்ஸா ஒப்பந்தம் அமெரிக்காவின் ராபர்ட் பிளேக்குக்கும், இலங்கையின் கோத்தபயா ராசபக்சேவிற்கும் கையெழுத்தாகிறது. அதாவது கோத்தபயா ஓர் அமெரிக்க பிரஜை, ராபர்ட் பிளேக்கும் அமெரிக்க பிரஜை. இருவரும் இலங்கைக்கான ஒப்பந்த்தில் கையெழுத்திடுகிறார்கள். இப்பொழுதும் இந்தியா அமைதி காக்கிறது. இந்த கையெழுத்திற்கிடையே இலங்கைக்கு அமெரிக்கா இஸ்ரேலிடம் இருந்து ஆயுதம் வாங்க உதவி செய்கிறது.

இதற்கு அர்த்தம் அமெரிக்கா இந்த ஆயுதத்திற்கு நிதியளிக்கும் என்பது. இதுவே இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கு கிடைத்த உடனடி பலன். அமெரிக்காவின் இந்த மாபெரும் உதவியை கோத்தபய ராசபக்சே கொழும்புவின் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் நன்றி பாராட்டிப் பேசுகிறார்; இதை இலங்கையின் பயங்கரவாதத்திற்கான பேராசிரியர் ரோகன் குணரத்தன அதே மாநாட்டில் உறுதி செய்கிறார்.

போருக்கு முந்தைய தயாரிப்புகளில் அமெரிக்காவின் பங்கு எத்தகைய முக்கியமானதோ அதே முக்கியத்துவம் போரின் போதும் அதற்கு பின்னர் நடைபெற்ற இனப் படுகொலையின் போதும் முக்கியத்துவமானது. இலங்கையை தனது பிடியினுள் முழுமையாக கொண்டுவந்த அமெரிக்கா தனது திட்டத்தின் கடைசி கட்டமான அமைதியாக்கப் பட்ட வடக்கு கிழக்கு தமிழர்களை ஒரு போலி- ஊழல் மிகுந்த தமிழர் தலைமையின் கீழ் அமைத்து தனது கப்பல்படைத் தளத்தையும் அதனூடாக எண்ணைய்க் கிடங்கு மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்களை உருவாக்கப் போகிறது.  

இந்த திட்டத்திற்கு தமிழீழத்தில் பொம்மை பிரதிநிதிகள், இந்தியாவில்-தமிழகத்தில் தமிழர்களால் நம்பக் கூடியவாறு ஜெயலலிதா அரசை உருவாக்குதல், புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் கேட்கும் நேர்மையான கட்டமைப்புகளை உடைத்தல், புலித் தலைவர்களை நெருக்குதல் என பல்வேறு கட்டங்கள் நம் கண்முன் நடைபெறும்.

வேறு எங்கேயும் விட தமிழீழப் போராட்டம் என்பது பலவழிகளில், தனித்துவம் பெற்றது. ருவாண்டாவை போல இது இனக் கலவரம் அல்ல, சூடானைப்போல ஒற்றை அதிபரால் ஆளப்படும் சர்வாதிகார அரசு அல்ல. போஸ்னியா, செர்பிரினிக்காவில் நடைபெற்ற இனப் படுகொலை என்பது ஓர் இன விடுதலை போராட்டம் சார்ந்த இனப் படுகொலை அல்ல. தமிழீழத்தில் நடைபெற்றது ஒரு விடுதலைப் போராட்டம். உலகின் 40க்கும் அதிகமான நாடுகளின் ஆதரவு தீர்மானத்தினைக் கொண்டுள்ள காசுமீர் போராட்டத்தினைப் போன்றதல்ல.

அந்த விடுதலை போராட்டத்திற்கு சனநாயக ரீதியிலான பின்புலமாக ஒரு மக்கள் வாக்கெடுப்பும், அகிம்சை முறையிலான போராட்டமும் உள்ளது. மேலும் இந்த 2009 இனப் படுகொலைக்கு முன் தமிழர்கள் முற்றிலுமாக 2005 இல் இலங்கை அதிபர் தேர்தலை புறக்கணித்ததையும், புலிகளின் ஆயுதப் போராட்டத்தின்பின் அணி திரண்டதையும் நாம் கவனிக்க வேண்டும். இரணிலோ, இராசபக்சேவோ, சந்திரிகாவோ என யார் வந்தாலும் இந்தப் படுகொலைப் போர் நடந்தே இருக்கும். இதை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தடுக்கப்பட்டதும், அமெரிக்காவின் பின்ணனியும் தமிழீழ விடுதலைப் போரின் பின்னடைவிற்கு காரணம்.

அமெரிக்காவின் தொண்டு நிறுவனமும் போரும்

2009இல் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு வாரமும் அமெரிக்காவின் தொண்டு நிறுவனமான யு.எஸ்.எய்ட் போரில் பாதிக்கப்படும் மக்களைப் பற்றியும், அவர்களுக்கான உதவிகள் பற்றியும் தகவல் அனுப்பிக் கொண்டு இருந்தது. (இந்த தொண்டு நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தான் செயல்பட்ட இடங்களில் ஆட்சிக் கவிழ்ப்பையும், அரசியல் நிலையற்ற தன்மையையும் உருவாக்கியது என ’பொருளாதார அடியாளின் வாக்குமூலத்தில்’ அதன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்).

புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குள் செயல்பட்ட பெருமளவு தொண்டு நிறுவனங்கள் புலிகளுக்கு எதிரான உளவு வேலையை திறம்படச் செய்தது. இந்த தொண்டு நிறுவனம் பிப்ரவரி மாதம் இரண்டு-மூன்றாம் வார செய்தியில் முல்லைத் தீவு பகுதியில் போருக்கு நடுவே மாட்டிக் கொண்ட உள்ளூர் அகதிகள் என 70,000 மக்களே உள்ளார்கள் என தகவல் அனுப்பியதைக் காணலாம். இந்த எண்ணிக்கையை தானே இலங்கை அரசும் பேசியது, இந்தியாவின் பிரணாப் முகர்ஜியும் உறுதிப்படுத்தினார். இது எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை, ஏனெனில் அங்கு இருந்த மக்கள் தொகையை தமிழர்கள் மறுவாழ்வு மையமும், இலங்கை அரசின் தமிழர் பகுதி அரசாங்க ஏஜெண்டும் வேறு ஒரு கணக்கை முன் வைத்து இருக்கிறார்கள்.

போருக்குப் பிறகான சூழலும் சர்வதேசமும்

போருக்கு பிறகான அய்.நாவின் மனித உரிமை அமர்வில் அமெரிக்கா-மேற்குலகம் சார்ந்த அரசுகள் சாராத எதிர் கூட்டணி (இக்கூட்டணியும் ஈழ ஆதரவிற்காகவன்றி தத்தமது ஆளும்வர்க்க நலனுக்கு சார்பாக உருவானதுதான்) இந்தியாவின் பெரும் முயற்சியினால் முறியடிக்கப்பட்டது. இலங்கைக்கு ஆதரவாக கொணரப் பட்ட இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்க-மேற்குலக எதிர்ப்பு மற்றும் முன்னால் எதிர்ப்பு நாடுகளின் ஆதிக்கம் அதிகமிருந்தது. இதன் மூலம் இலங்கையானது மேற்குலக எதிர்ப்பு முக மூடியை முன்வைத்து செயல்பட்டது. இந்த அடிப்படையிலேயே இலங்கையை தண்டிப்பது என்பது மேற்குலகிற்கு எதிரான ஒரு நாட்டின் தீவிரவாதத்திற்கு எதிரான போரை வளரும் மற்றும் பின் தங்கிய நாடுகள் ஆதரிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் நகர்வுகளை இந்தியாவும் சீனாவும் மேற்கொண்டன. இந்த வேசத்தை இலங்கை 2009இன் பிற்பகுதியில் மிகச் சிறப்பாக மேற்கொண்டது.

இதைப் பற்றி கேட்டபோது இலங்கையின் அதிகாரி ஒருவர் பத்திரிக்கையாளரிடம் சொன்னதானது “அமெரிக்க எதிர்ப்பு என்பது இங்குள்ள பொதுமக்களை ஏமாற்றவே, அதாவது பார்வையாளர்களை குசிப்படுத்தவே.”.. இது பெருமளவு இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் உதவி செய்தது. ரசியா மற்றும் மூன்றாம் உலக நாடுகள் அணிசேரா நாடுகளின் ஆகப்பெரும் தலைவராக செயல்படும் இந்தியாவின் பின் அணிவகுத்தன. இதில் ரசியா பெரும் முனைப்பெடுத்து இலங்கை அரசைக் காத்தது. அதாவது இந்த ஏகாதிபத்தியங்களின் சடுகுடு ஆட்டத்தில் கிட்டத்தட்ட ரசியாவின் தலைமை திட்டமிட்டு ஏமாற்றப்பட்டது எனவும் கருத வாய்ப்பிருக்கிறது.

ஆனால் ரசியாவிற்கு இலங்கை இரு எண்ணை தோண்டும் ஒப்பந்தமும், துறைமுகம் கட்டும் ஒப்பந்தமும் கொடுத்து அதையும் ஆறுதல்படுத்தியதையும் நினைவில் வைப்போம். தமிழர்களுக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டிய நாடுகள் நமக்கு எதிரணியிலும், தமிழர்களுக்கு எதிரான இப்போரை நடத்திய நாடுகள் நமக்கு ஆதரவான குரலை அளிப்பது போன்ற நிலையையும் இன்று காண்கிறோம்.

கூர்ந்து கவனித்தால், புலிகளை தடை செய்த அரசுகள் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசுவது போன்று செயல்படுகின்றன (பிரான்சு இன்று வரை கள்ள மெளனம் சாதிக்கிறது) புலிகளை தடை செய்யாத அரசுகள் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இந்த சூது தமிழர்கள் பக்கம் யாரும் இல்லாத நிலையை மிகக் கவனமாக கொண்டு வந்து இருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் இலங்கையை காய் நகர்த்த விட்டு இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும் நிலையை அடைந்து இருக்கிறது.

சீனா இலங்கையில் நுழைந்தது ரசியா-சீனா பாதுகாப்பு கூட்டு நடவடிக்கையான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு (shangaai cooperation –SCO) வலு சேர்க்கும் என போடப்பட்ட கணக்கு பொய்ப்பது போன்ற சூழலை நாம் காண்கிறோம் (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது ( Shangaar cooperation –SCO)  மேற்குலகின் நேட்டோ படைபலத்தை சமனாக்க ரசியா-சீனாவினால் உருவாக்கப்பட்டது. இதில் இலங்கை 2009இல் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது.

இந்த கூட்டமைப்பின் மூலமும் இலங்கை ரசிய-சீன உதவிகளை தமிழ் இன அழிப்புப் போருக்கு பெற்றது. இந்தக் கூட்டமைப்பில் ஒருவேளை இலங்கை ஒரு முக்கிய பொறுப்பையேற்றால் இந்த அமைப்பானது இந்தியப் பெருங் கடலில் வலிமை பெறும்). ஆக இது போன்ற பெரும் நாடுகளின், முக்கியமாக சீனா-அமெரிக்கா, திட்டத்தையும் நகர்வையும் நாம் புரிந்து கொண்டால் நமது வருங்கால திட்டங்களுக்கு உதவலாம். ஏனெனில் அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளின் ஏகாதிபத்திய நலன்கள் எதிர்மறையாக தமிழீழ விடுதலையோடு பிணைந்து இருக்கிறது.

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் கடல்சார் ராணுவப் பாதுகாப்பு

சீனா தன்னுடைய ஆப்பிரிக்க-அரேபிய முதலீடுகளையும், மூலப் பொருளுக்கான நாடுகளையும் பாதுகாக்க முத்து மாலை திட்டத்தை முன்னெடுத்தது. இதற்காக 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டது ('இந்து' பத்திரிக்கையின் ஆசிரியர் ராம் சீனாவின் இந்த நலனை பாதுகாக்கவே தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர்கள் இந்தியாவிற்கு எதிரானவர்கள், பாசிஸ்டுகள் என தமிழின விடுதலைப்போரை மனிதகுலத்திற்கு விரோதமாகவும், இந்தியாவிற்கு விரோதமாகவும் கருத்துக்களை கட்டமைத்தார். அதாவது இந்தியாவின் துணையுடன் தமிழர்களை கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து வெளியேற்றுவது அல்லது அகற்றுவது. இலங்கை அரசிற்கு சீன தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததில் இந்து பத்திரிக்கை ஆசிரியர் என். ராமிற்கு பெரும் பங்குண்டு).

முத்துமாலைத் திட்டம் எனப்படுவது, சீனா தனது கடல்வழிப் போக்குவரத்தை பாதுகாக்க அதனுடைய கிழக்கு முனையிலிருந்து இந்தோனிசிய கடல், பர்மா, வங்காளதேசம், இலங்கை, பாகிஸ்தான் வழியாக அமைத்த துறைமுகங்கள், விமான தளங்கள். பாகிஸ்தான், இலங்கை, பர்மா, பங்களாதேசம், இந்தோனேசியா, கம்போடியாவிலிருந்து சூடான் துறைமுகம், சோமாலியா என விரிவடைந்து செல்லும் சீனாவின் 'முத்துமாலை யுக்தி' நகர்வில் மிக முக்கியமான இடத்தில் இலங்கையும், தமிழீழமும் வருகிறது.

மேலும் உலகின் மிகக்குறுகிய ஜலசந்தியான மலாக்காய் (Malacca), ஹோர்முட்ஸ் ( Hormuz), பாப் எல் மண்டெப் (Babel Mandeb)ஆகிய குறுகிய-கடல்சார் சிக்கல்களை சரிசெய்து பாதுகாப்பாய் நகர வேண்டிய கவலை எந்த ஒரு வல்லரசுக்கும் அல்லது வல்லரசாகும் ஆசை உள்ள நாடுகளுக்கு உண்டு. இதன் காரணமாகவே சீன அரசு இந்த பகுதிகளில் சிக்கல்களை நீக்க முறையே இந்தோனீசிய, பாகிஸ்தான், ஏமன் பகுதிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. இதற்கான கட்டுமானப் பணிகளையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றியது. இதற்கான முயற்சிகளை மிக நிதானமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக நகர்த்தியது.

இவ்வாறான கட்டுமானம் என்பது கச்சா எண்ணெய், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள், மூலப்பொருள்களை எடுத்துச் செல்வதற்கு மட்டுமல்ல, உலகின் 70 சதவிகித வணிகம் கடல் வழியாகவே நடைபெறுகிறது. மேலே குறிப்பிட்ட ஜலசந்தி கடல்வழியே கிட்டத்தட்ட உலகின் பாதிக்கும் மேலான கச்சா எண்ணெய்ப் போக்குவரத்து நடக்கிறது. இந்த வணிகப் போக்குவரத்து பகுதியே ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக வரலாறு எங்கும் பார்க்கப்படுகிறது. (ஏனெனில் இந்த இந்தோனிசியாவின் மலாக்கா ஜலசந்தியை பாதுகாக்கவே ராசராச சோழன், ராசேந்திர சோழன் கடல்படையை அனுப்பியதாக சோழப் பேரரசின் வரலாற்றில் சொல்லப்படுகிறது). இந்த குறுகலான சிக்கல் நிறைந்த பகுதிகளை கடப்பதில் இலங்கை ஒரு முக்கிய தொடர்பு புள்ளியாக இருந்து வருகிறது.

ஆக இந்த முத்துமாலைத் திட்டத்தில் மிகமுக்கியமான ஒன்றாக இலங்கை மாறியது. இலங்கையில் இதன் காரணமாக பெரும் முதலீடுகளை சீனா செய்ய ஆரம்பித்தது. இலங்கையின் தென்கோடி அம்பந்தோட்டா துறைமுகம் இவ்வாறே உருவாக்கப்பட்டது.

அரசியல் நேர்மை மற்றும் மனித உரிமைகள் பற்றிய கவலைகள் ஏதும் இல்லாமல் தனது லாப நோக்கை மட்டும் குறிக்கோளாக செயல்பட்டு வந்த அரசாக சீன அரசு செயல்படுவதை பர்மா, இலங்கை, இஸ்ரேல் முதல் சூடான் வரை நாம் காணமுடியும். இந்தியா பெருங்கடலில் பெரும் துறைமுகங்களையும், தரை-வான்வழி போக்குவரத்து தளங்களையும், கண்காணிப்பகத்தையும் நிர்மாணித்து அதன் முதுகெலும்பாய் வர்த்தக நிறுவனங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தது. பேராசான் மாவோவிற்கு பிறகான சீன அரசு. உலகமயமான திறந்த சந்தைப் பொருளாதாரத்திலும் வர்த்தகத்திலும் வெற்றிகரமானதோர் அரசாகத் திகழ திட்டமிட்ட நகர்வுகளே இவைகள்.

இந்த நகர்வுகள் வெற்றி பெறும்போது சீன அரசானது வல்லரசுகளின் கனவான ’நீலநீர்’ கடற்படையை கட்டமுடியும். இந்த கடற்படை வலிமை என்பது, தரைத்தள உதவி இல்லாமலே நீண்ட தொலைவு படைகளை நகர்த்து சென்று தாக்குதல் நடத்தும் திறனாகும். இந்தத் திறன் அமெரிக்காவிற்கும், ரசியா, இங்கிலாந்து, பிரான்ஸ்சுக்கு மட்டுமே உண்டு. இந்த வலிமை வரவேண்டுமானால் சீனா தனது முத்துமாலை திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

இந்தப் பின்னணியில் தான் அமெரிக்காவின் கடந்த பத்தாண்டுகால நகர்வையும், இரட்டை கோபுரத்தாக்குதலுக்கு பின்னான அதன் வெளியுறவுக் கொள்கை மாற்றமும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஜாஸ்மின் புரட்சியும் சீனாவும்

துனிசியாவில் ஆரம்பித்த மக்கள் புரட்சியானது அரேபிய, பாரசீக, ஆப்பிரிக்க நாடுகளில் பரவி ஆட்சியாளர்களைத் தூக்கியெறிந்தது. விக்கிலீக்ஸும் கார்டியன் பத்திரிக்கையும் ஒரு செய்தியை வெளியிடுகிறது. அதாவது, எகிப்திய புரட்சியில் செயலாற்றிய நபர்களுக்கு 2007-2008 ஆண்டுகளில் அமெரிக்காவில் போராட்டம் நடத்துவதைப் பற்றிய வகுப்புகள் எடுக்கப்பட்டன என்பதே அது. இவ்வாறே இந்த புரட்சி அதன் ஆட்சியாளர்களைத் தூக்கியெறிவதை மட்டும் குறிக்கோளாக கொண்டிருந்தது. அந்த ஆட்சியாளர்களின் பின்னால் இருக்கும் அமெரிக்காவை எதிர்க்காமல் ஊழலை மட்டுமே மையப்படுத்தி ஆட்சி மாற்றம் நடக்கிறது.

இந்த போராட்டம் எதற்காக நடக்கிறது என்று பார்த்தால் இந்த அமெரிக்காவின் கைப்பாவை அரசுகள் செளதி அரசையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசையும் விட அனைத்து நாடுகளிலும் முக்கியத்துவமான தனது முதலீட்டை சீனா செய்திருந்தது. அதாவது அல்ஜீரிய, துனீசியா, ஒமென், ஏமன் மற்றும் முக்கியமாக சூடான் என சீனா முதலீடு செய்த அனைத்து நாடுகளிலும் இந்த மாற்றம் நடக்கிறது.

இதன் சூட்டை உணர்ந்த பாகிஸ்தான், சீனாவின் மிக முக்கிய மத்திய மேற்கு ஆசியப் பங்காளியாக இருந்து ஒசாமா பின்லேடனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இப்படியாக சீனாவின் தற்போதைய நிலைப்பாடுகளும் அதன் முத்துமாலை திட்டத்திற்கான நடவடிக்கைகளும் அமெரிக்காவை நிலைகுலைய வைக்கிறது. இதன் தொடர்ச்சியில் முக்கியமான தொடர்புப் புள்ளியான அம்பந்தோட்டை துறைமுகம் இலங்கையில் இருக்கிறது. இலங்கைக்குப் பிறகு சீனாவின் திட்டத்தில் பர்மாவின் துறைமுகம் இருக்கிறது.

பர்மாவிலும் ஓர் இன விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 'கரன்' எனப்படும் அந்த இனத்தின் மீதான தாக்குதலை கவனிக்க விஜய் நம்பியார் அனுப்பப்படுகிறார். விஜய் நம்பியாரின் இந்த புதிய பதவியை எதிர்க்கும் அந்த கரன் இனமக்கள் தமிழினப் படுகொலை விடயத்தில் விஜய் நம்பியாரின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி அவரை திரும்பப் பெறச் சொல்கிறார்கள்.

இந்த ஏகாதிபத்திய நாடுகள் இதேபோல தெற்கு சூடானில் நடைபெற்ற இனப் படுகொலையை கண்டுகொள்ளாமல், தடுக்காமல் விட்டு பின் தங்களது நலனுக்காக சூடானை இரண்டாகப் பிரிக்க உதவினார்கள். அய்.நாவின் வாக்கெடுப்பை நடத்தினார்கள்; கச்சா எண்ணை அதிகம் நிறைந்த தெற்கு சூடான் தனி நாடாகிறது. இதிலிருந்து நாம் ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். அது என்னவெனில் ஈழத்தில் இனப்படுகொலையில் தொடங்கி அதன் பின்னான போர்க்குற்ற விசாரணை, இனப் படுகொலை விசாரணை என அனைத்தும் ஏகாதிபத்திய நாடுகள் தங்களது பொருளாதார, ராணுவ நலன்களை மையப்படுத்தி செயல்படுத்தின; இனியும் செயல்படுத்தும்.

அமெரிக்காவின் ’திரிகோணமலை’ தாகம்

அமெரிக்காவின் வலிமை வாய்ந்த பசிபிக் கமாண்ட் கடற்படையின் வலை திரிகோண மலை இல்லாமல் முழுமை பெற முடியாது. அதன் வலைப் பின்னலாகிய பாகிஸ்தான், டியாகோ கார்சியா தீவு (30 போர்க்கப்பல்களும், 2000 அமெரிக்க படையினரும் கொண்டுள்ள தளமாகும்) இந்த தளத்தை அமைப்பதற்காக இங்கிலாந்திற்கு சொந்தமான அந்த தீவில் இருந்த பூர்வகுடி மக்களை தீவைவிட்டு வெளியேற்றினார்கள்.

அதாவது தனது பாதுகாப்பு தளத்தை அமைக்க இங்கிலாந்து-அமெரிக்க அரசு எந்த செயலையும் செய்யும் என்பதை இது உணர்த்தும். இந்த தீவைவிட மிகமுக்கியமான திரிகோணமலை துறைமுகத்தை கைக்கொள்ள அமெரிக்கா எந்தவொரு பலியிடலையும் செய்யும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவும், திரிகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவும் பங்கு போடுவதும் இதன் அடிப்படையில் தான். இதில் சீனா தனது நீல- நீர் கப்பல்படை திறனை வளர்த்தெடுப்பதற்கு முன் சீனாவின் இந்த முத்துமாலை திட்டத்தை தகர்க்க அமெரிக்க முடிவெடுக்கிறது.

இலங்கையின் கிழக்கு கடற்கரையை தனது வசமாக்கவும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதும், அதற்கு முட்டு கட்டையாக இருக்கும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு பக்கபலமாக துணை நிற்கும் மக்களும் அதனோடு அழிக்கப்பட வேண்டும் என்பது அமெரிக்க அரசின் திட்டம். இது திட்டமிடப் பட்டவாறு நடத்தப்பட்டது.

எவ்வாறு ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் பெருமளவு மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அதன் மூலமாக மக்களிடமிருந்து எழும்பும் அதிருப்திகளை போராளிகளின் மீது திருப்பி அவர்களையும் மக்களையும் முடக்குவது என்பது போர் யுக்தியாக கடை பிடிக்கப்பட்டதோ அதே யுக்தி இங்கும் நடத்தப்பட்டது. புலிகள் மீது விமர்சனமாகிய 'மக்கள் கேடயமும்' இவ்வாறே உருவாக்கப்பட்டது (இங்கிலாந்து ராணுவம் இராக்கின் பாஸ்ரா நகரில் மேற்கொண்ட தாக்குதலையும், இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதலையும், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் வியட்நாம், இராக்கிய, யுகொஸ்லாவிய, ஆப்கானிய, சோமாலியப் போர்களையும் நீங்கள் நினைவில் கொள்ளுதல் இதுபற்றி மேலும் புரிந்துகொள்ள உதவும்).

இந்தக் கட்டுரை முழுமை பெறவில்லை ஏனெனில் இது நமது சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு எழுதப்பட்டது.

சர்வதேச சமூகத்திற்கும், தமிழினத்திற்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும்:

 மே பதினேழு இயக்கம் ஐ.நா வினுடைய நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழீழ இனப்படுகொலையில் ஒரு குறைந்தபட்ச ஆரம்ப முயற்சியாக வரவேற்கிறது. இந்த அறிக்கை போர் பற்றிய இலங்கை அரசின் குற்றங்களை பதிவு செய்யும் முக்கிய ஒரு அறிக்கையாக பார்த்தாலும் ஒரு முழுமையடையாத ஒன்றாக பார்க்கிறது. தமிழீழத்தில் நடைபெற்ற போர் எனப்படுவது ஒரு இனப்படுகொலை அடிப்படையிலான போர் மற்றும் இதன் பின்னணியாக 60 ஆண்டுகால விடுதலைப் போராட்டம் உள்ளது என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

போரில் 1,46,679 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது என்பது மட்டுமின்றி 1,00,000 தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்த விடுதலை கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசால் படுகொலைக்கு உள்ளாயினர். ஆக 2,50,000க்கும் மேலாக தமிழர்களை படுகொலை செய்த அரசின் முக்கிய நோக்கமானது தமிழீழத்தமிழர்களின் விடுதலை கோரிக்கையை முடக்கவே என்பதை ஐ. நா மன்றம் அங்கீகரித்தல் அவசியம்.

தந்தை செல்வா அவர்களின் தலைமையில் தமிழீழ மக்கள் இலங்கையிலிருந்து பிரிந்து தனது சுதந்திர நாடாக தமிழீழம் அடைய வேண்டி அளித்த ’வட்டுக்கோட்டை தீர்மான’ வாக்கெடுப்பை ஐ.நா கவனத்தில் எடுக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே பின்னர் நடந்த ஆயுதப் போராட்டத்திற்கு தமிழர்கள் அங்கு துணை நின்றார்கள் என்பதை ஐ.நா அங்கீகரிக்க வேண்டும்.

வெகு காலத்திற்கு முன்பே நடந்த கருத்து வாக்கெடுப்பான வட்டுக்கோட்டை தீர்மானத்தையே ஐ.நா அங்கீகரித்திருக்க வேண்டும். இந்த நிபுணர் குழு இந்த விவரங்களை அதன் விசாரணை வரையறையில் கொண்டு வராவிட்டாலும், இனி வரும் விவாதங்கள் இந்த கருதுகோளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். இந்த வாதங்களை புறந்தள்ளி அல்லது கணக்கில் எடுக்காமல் ஐநா (அ) சர்வதேச சமூகம் செயல்படுமானால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் உரிமை தமிழர் சமூகத்திற்கு உண்டு என்பதை உறுதியுடன் தெரிவிக்கின்றோம்.

மேலும் டப்ளின் தீர்ப்பாயம் அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து போரின் இறுதி வரையிலான ஒரு அடிப்படை விசாரணையை மேற்கொண்டது. அதன் முடிவு அறிக்கையானது எவ்வாறு சர்வதேசம் தமிழீழத்திற்கு துரோகம் இழைத்தது என்பதை வரையறுத்துக் கூறியது. மே பதினேழு இயக்கம் அந்த அறிக்கையை மையமாக வைத்தே தனது பிரச்சாரத்தை அறிக்கை வெளியான காலத்தில் மேற்கொண்டது.

புலம்பெயர் தமிழர்களின் இடைவிடாத அயராத முயற்சியினால் டப்ளின் தீர்ப்பாயத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரம் ஐ.நாவினை நெருக்கியதன் காரணமாக தனது ஆலோசனைக் குழுவினை உருவாக்கியது. ஆனால் முழுமையான விசாரணையை மேற்கொள்ளும் பட்சத்தில் மேற்குலகமும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிற காரணத்தால் ஐ.நா நிபுணர் குழுவின் விசாரணை எல்லையை தமிழீழத்தில் இறுதியில் நடைபெற்ற போரை மட்டுமே அடிப்படையாக கொள்ளச் செய்யப்பட்டது.

இது அங்கு நடந்த விடுதலைப் போரை (ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரை) ஒரு ராணுவத்திற்கும், மற்றொரு குழுவிற்குமிடையேயான போராக சித்தரித்தது. இதன் அடிப்படையிலேயே இரு தரப்பிலும் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்று அறிக்கை வாசிக்கப்பட்டது. இது குற்றங்களை மட்டுமே கணக்கில் எடுக்குமேயன்றி விடுதலையை கணக்கிலெடுக்காமல் போவதற்கான சாத்தியங்கள் உண்டு. எனவே, போர்குற்றம் என்பதை காட்டிலும் இனப்படுகொலை அதுவும் விடுதலையை கோரியவர்களுக்கு எதிரான இனப்படுகொலை என முன்வைத்து போராடுதல் அவசியம்.

மேலும், போராளிகளும் போர்குற்றமிழைத்தார்கள் எனச் சொல்வதன் மூலம் அவர்கள் மறுபடியும் தமது விடுதலைக் கோரிக்கையை முன்னெடுக்காமல் பின்னுக்கு நகர்த்துதல் சாத்தியப்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். மேலும் போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கை என்பது ஒரு நீதிமன்ற போராட்ட வழிமுறையை, அரசியல் கோரிக்கையாக நாம் முன்வைக்க வேண்டியது ”தமிழீழ விடுதலையை அறிவி” என்பது மட்டுமே. 1.46 லட்சம் மக்களை இழந்த ஒரு சமூகத்திற்கு விடுதலை என்பது மட்டுமே நீதியாக அமையும்.

சர்வதேச விசாரணை என்பது இராஜபக்சே மட்டுமன்று அதற்கு முன்னதாக இருந்த அரசான ரணில் விக்கிரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்கா, பிரேமதாசா, ஜெயவர்த்தனா மற்றும் முன்னைய இலங்கை அரசுகள் தொடர்ச்சியாக இனப்படுகொலைகளை செய்து வந்து இருக்கிறார்கள். இவர்களும் விசாரணைக்கு உட்படுத்தாமல் செயல்படும் ஒரு விசாரணை முழுமையானது மட்டுமின்றி தமிழர்களுக்கான நீதியை புறந்தள்ளுவதாகவே தமிழ் சமுகம் கருதும். ஆகவே இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துகின்ற வகையில் ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் நடந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.

மேலும், இலங்கை அரசில் நடக்கும் ஒரு ஆட்சி மாற்றமோ அல்லது தனி நபர் தண்டித்தலோ இந்த குற்றத்திற்கான தீர்வாகாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மேலும் தமிழர்களுக்கான வாழ்வு, சுயமரியாதை பாதுகாப்பு பண்பாட்டு சுதந்திரம், மொழியுரிமை, நிலப்பாதுகாப்பு, கடல் மற்றும் இயற்கை ஆதாரங்களின் பாதுகாப்பு என்பது ஒன்றுபட்ட இலங்கையில் சாத்தியம் கிடையாது என்பதை உலகிற்கு நாங்கள் உணர்த்த விரும்புகிறோம். அங்கு நடந்தது ஒரு இனக்கலவரமோ, இன முரண்களோ மட்டுமல்ல அதையும் தாண்டி நடைபெற்ற விடுதலைப் போர் என்பது சர்வதேசச் சமூகத்தால் உணரப்பட்டு, இந்த படுகொலைகளை நடத்திய சர்வாதிகாரிகளால் அல்லாமல் சிங்கள பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசே என்பதை நாங்கள் உலகிற்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

தமிழர்களின் மறுவாழ்வு, தாய் நிலமீட்சி, புதிய கட்டுமானங்கள் என்பது சுதந்திரத் தமிழீழத்தில் தமிழர்களாலேயே நடத்தப்படும். அதற்கு சர்வதேச சமூகம் துணை நிற்க வேண்டும். இப்படியான நிரந்தர பாதுகாப்பு, சுயமரியாதை உறுதி செய்யப்படும் ”சுதந்திர தமிழீழமே” சர்வதேசம் தமிழர்களின் பால் நியாயமாக நடந்து கொண்டது என்பதற்கான ஆதாரமாக அமையும்.

ஈழம் என்னும் வரலாற்றுக் கடமையை இளந்தோள்களில் ஏந்திக் கொள்வோம்

சிங்கள இனவெறி, தரகு முதலாளித்துவ அரசை உடைத் தெறிந்து தனித்தமிழீழம் படைப்போம்

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் 

மே 17 இயக்கக் குரல்

Pin It