எந்த ஒரு மக்கள் சமூகத்தின் விடுதலையானாலும் அது அவர்களுக்கானப் பொருளாதார வாழ்வு மற்றும் பண்பாட்டு வாழ்வுக்கான அரசியல் உரிமையைக் குறிப்பதாகும். இதைத்தான் உற்பத்தி மற்றும் மறுஉற்பத்திக்கான சமூக நடவடிக்கைகள் என்கிறோம். பொருளாதார வாழ்வுதான் பண்பாட்டு வாழ்வைத் தீர்மானிக்கிறது. ஆனால் பொருளாதார வாழ்வைப் பாதுகாப்பதில் பண்பாட்டு வாழ்வு மிக முக்கியப் பங்காற்றுகிறது.

ஒரு சமூகத்தில் உழைக்கும் மக்களை அடிமையாக்கிச் சுரண்டுவதற்கு தலைவிதி மற்றும் மத – சாதியப் பிற்போக்குப் பழக்கவழக்கங்கள் துணை செய்கிறது. தமிழகத்திலும், இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதியிலும் பார்ப்பனிய சாதி – மத கருத்தாக்கங்களும், அதன் அடிப்படையிலான பண்பாட்டுப் பழக்கவழக்கங்களும் சமூக மாற்றத்திற்குப் பெரும் தடையாக உள்ளன‌.

இந்நிலையில் உழைக்கும் மக்களை விடுதலைக்கு அணித் திரட்ட அவர்களிடம் ஆழப் பதிந்துள்ள தவறான கருத்துகளையும், நடவடிக்கைகளையும் களைவது மிக முக்கியப் பணியாகும். இது ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டுத் தளத்தின் மீது தொடுக்கப்படும் மிகப்பெரிய பண்பாட்டுப் போராகும்.

பண்பாட்டுத் தளம் நொறுங்கினால் பொருளாதாரத் தளம் தகர்ந்துவிடும் என்பதை உணர்ந்துதான் ஆளும் வர்க்கம் ஆர்.எஸ்.எஸ் போன்ற மத அடிப்படைவாத அமைப்புகளைப் பலமாகக் கட்டிப் பாதுகாத்து வருகிறது.

இந்த அடிப்படை அம்சங்களை ஆழப் புரிந்து கொண்டதால்தான் ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டுத் தளத்தை தகர்க்கத் துணிந்தார் பெரியார். அவரின் பகுத்தறிவு – நாத்திகம் -பார்ப்பனிய ஒழிப்பு என்பது தமிழக மக்களை விடுதலைக்குத் தட்டி எழுப்பும் புரட்சிகரப் போராகும்.

பெரியார் சமூக மாற்றத்திற்குப் பண்பாட்டு தளத்தை மட்டுமே பார்த்தார். கம்யூனிஸ்டுகள் பொருளாதாரத் தளத்தை மட்டுமே பார்த்தனர். இரண்டுமே குறையாக இருந்த போதிலும் சமூக மாற்றத்திற்குத் தேவையான ஆதரவுச் சூழலை உருவாக்கியுள்ளனர்.

ஆகையால்தான் திராவிட இயக்கத்தின் வீரமுள்ளத் தோழர்கள் புரட்சிகர இயக்கத்தில் இணைந்தனர்; இணைந்து வருகின்றனர். இது ஒன்றை மறுத்து இன்னொன்றுக்குத் தாவுவதாகாது. மாறாக ஒன்றின் வளர்ச்சியாக மற்றதை ஆதரித்ததும், ஆதரித்ததை வளர்த்ததும் ஆகும். அதனால்தான் இன்றைய தமிழகத்தின் புரட்சிகரப் போக்கில் தேசிய விடுதலையையும், சாதிய விடுதலையையும் இணைக்க முடிந்துள்ளது. இதில் பெரியாரிய இயக்கத்தின் தாக்கம் அதிகமாகும். இது வளர்ச்சிப் போக்காகும்.

அதுமட்டுமில்லாமல் இன்றைய நிலையில் திராவிட இயக்கப் பதாகையின் கீழ் இருந்த போதும் பெரியாரின் தொண்டர்கள் தமிழீழ விடுதலைக்கும், தமிழ்நாட்டின் விடுதலைக்குமான அனைத்து நடவடிக்கைகளிலும் சளைக்காமல் களமாடுகிறார்கள்; அடக்குமுறையை எதிர்கொள்கிறார்கள். இயக்கங்களுக்கு இடையிலும், மக்களுக்கு இடையிலும் ஒற்றுமையைக் காப்பாற்றுகிறார்கள். இதுவே சரியானதாகும்.

ஈழ விடுதலையானாலும், தமிழ்நாட்டின் இடிந்தகரையானாலும் நாம் இழப்புகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, சாதி – மத பார்ப்பனியத்தால் தமிழக மக்கள் பிளவுண்டு கிடப்பது. இரண்டாவது, இந்தியத் துணைக்கண்டத்தின் இன முரண்பாடுகளைப் பயன்படுத்தி இந்திய அதிகார வர்க்கம் பலம் பெற்றுக்கொண்டிருப்பது.

இதனை முறியடிக்க மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டியது முதன்மைக் கடமையாகும். இது தமிழக மக்களை அதிகார வர்க்கங்களுக்கு எதிராக அணி திரட்டுவதும், தமிழக மக்களின் உரிமைகளுக்கு பிற தேசிய – பழங்குடி இனங்களை ஆதரவாக மாற்றுவதும் ஆகும்.

ஆனால் ஒற்றுமைக்கான வாய்ப்புகள் எவ்விதத்திலும் உருவாகாதபடி தகர்க்கிறார்கள் சாதியத் தமிழினப் பயங்கரவாதிகள். இப்பாசிசப் போக்கானது ஈழ விடுதலைக்கும், இடிந்தகரை வரையிலான தமிழ்நாட்டு விடுதலைக்கும் எதிரான அபாயமாகும். மக்களைப் பிளவுபடுத்தி ஆளும் வர்க்கத்தைப் பாதுகாக்கும் எதிர் புரட்சி நடவடிக்கை ஆகும்.

புரட்சிகர இயக்கங்களும், சனநாயக சக்திகளும் ஒன்று சேர்ந்து இந்த மக்கள் விரோத பாசிசப் பயங்கரவாதத்தை முளையிலேயே முறியடிப்பது முதல் கடமையாகும்.

- ‍குணா, தமிழக மக்கள் சனநாயகக் கூட்டமைப்பு

Pin It