இதுவரை மனித சமூகத்தின் பாலுறவு சார்ந்த வரலாற்று வளர்ச்சிப் போக்குகளை, அதன் தற்கால நிலைமைகளை இந் நிலைமைகளுக்குத் தக புதிய மதிப்பீடுகளை உருவாக்க வேண்டியதன் தேவைகள் குறித்து ஓரளவு சுருக்கமாகப் பார்த்தோம்.

இதனடிப்படையில், தற்போது சமூகத்தில் நடைபெற்று வரும் பாலியல் குற்றச் செயல்களுக்குக் காரணம் என்ன என்பதை சற்று ஆராய்வோம்.

ஒரு குடும்பத்தில் திருமணமாகாத பெண் ஒருத்தி யாரோ ஒரு ஆடவனோடு பழகுகிறாள்.

இன்னொரு குடும்பத்தில் திருமணமான பெண் ஒருத்தி வேறு ஒரு ஆடவனோடு நெருக்கமாகப் பழகுகிறாள்.

மற்றொரு குடும்பத்தில், தாயோ, சகோதரிகளோ அல்லது வேறு ஒரு இரத்த உறவுக்கார பெண்ணோ வேற்று வாலிபனோடு பழகுகிறாள்.

இவையெல்லாம் குடும்பத்தினர்க்குத் தெரியவருகிறது. குடும்பத்தினர் கொதிக்கிறார்கள். ஆவேசமடைகிறார்கள். இது பெண்ணுக்கு உடனடி நெருக்கமான, அதாவது திருமணமாகாத பெண்ணாயிருந்தால் பெற்றோர்களுக்கு, திருமணமான பெண்ணா யிருந்தால் கணவருக்கு, தாயோ சகோதரியாகவோ இருந்தால், குடும்பத்தில் உள்ள மிக நெருக்கமானவர்களுக்கு, என அவரவர் நெருக்கத்திற்கேற்ப கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதைத் தங்களுக்கு, தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட மாபெரும் அவமானமாகக் கருதுவர்.

இந்த அவமானத்திலிருந்து மீள, ஒவ்வொரு குடும்ப உறுப் பினர்களின் மனநிலை, குடும்ப நிலை, பொருளியல் வசதிகள், சமூகத்தில் தங்கள் இருப்பு நிலை இவற்றிற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சிலர், இந்த சிக்கலைச் சம்மந்தப்பட்டவர்களை வைத்துப் பேசித் தீர்க்க உறவுகளைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கலாம். இம்முயற்சி பயனளிக்காது போனாலோ, அல்லது இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்காமலோ சிலர் வன்முறையில் இறங்கலாம். விளைவாக அடிதடிகள், தாக்குதல்கள், படுகொலைகள் என அவரவர் குடும்ப வலு, சமூகச் செல்வாக்குக்கேற்ப சம்பவங்கள் நிகழலாம். இப்படி நாள்தோறும் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைத்தான் நாம் தொடக்கத்திலேயே பார்த்தோம். அன்றாடம் பார்த்துக் கொண்டும் வருகிறோம்.

இப்போது நமக்குக் கேள்வி. இப்படிப்பட்ட சம்பவங்களுக்கு அடிப்படையாயிருக்கும் காரணங்கள் என்ன? எது மனிதர்களை இப்படி ஆட்டுவிக்கிறது என்பதுதான். இதில் சம்பந்தப்பட்ட உறவில் ஈடுபடுபவர்களின் மனநிலை, எது அப்படி அவர்களை ஆட்டுவிக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆகவே இதுபற்றிய ஆய்வுகளைப் பிறகு வைத்து, இந்த உறவில் ஈடுபடுபவர்களின் குடும்ப மற்றும் நட்பு வட்டாரங்களின் மனநிலை பற்றி முதலில் ஆராய்வோம்.

தங்கள் குடும்பத்தில் ஒரு பெண், திருமணமாகாத, அல்லது ஆன, இளம், நடுத்தர, மூத்த ஏதோ ஒரு பெண், ஒரு வேற்று ஆணோடு உறவு கொள்வதைச் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் கேவலமாக இழிவாகக் கருதுகிறார்கள். தங்கள் குடும்பத்தினரை மற்றவர்கள் கேவலமாக நோக்குவதாக நினைக்கிறார்கள். இவர்கள் நினைப்பது மட்டுமல்ல, சமூகமும் இவர்களை இவ்வாறே நோக்குகிறது. காரணம் சமூகம் பாலுறவு சார்ந்த சில மதிப்பீடுகளை உருவாக்கி வைத் திருக்கிறது. சமூக உறுப்பினர்கள் இந்த மதிப்பீட்டிற்கு உட்பட்ட வர்களாக நடந்து கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. அல்லது அப்படிப்பட்ட கருத்தாக்கங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டமைப்பின் ஒரு அங்கமாகவே மனிதன் வாழ வேண்டிய வனாக இருக்கிறான். இதனால் சமூக மதிப்பீட்டில் தான் தரம் தாழ்ந்தவனாக, கேவலத்திற்குரியவனாக ஆகிவிடக் கூடாது என்று நினைக்கிறான்.

ஆகவே, தான், மானம் மரியாதை உள்ளவன், ஒழுக்கசீலன், இதுபோன்ற உறவுகளை அனுமதிக்காதவன் என்று சமூகத்திற்கு மெய்ப்பிப்பதற்கோ, அல்லது தன்னைத் தானே சமாதானம் செய்து கொள்வதற்கோ, அவனவன் சக்திக்குட்பட்ட அளவில் இதுசார்ந்த நடவடிக்கைகளில் வன்முறைகளில் ஈடுபடுகிறான்.

இங்கே ஒரு கேள்வி, இதே குடும்பத்தில் ஒரு ஆண் இப்படிப்பட்ட பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அப்போது மட்டும் தவறாகாதா, இழுக்காகாதா, குடும்ப மரியாதை குலையாதா என்றால், அப்போதும் இது நிகழத்தான் செய்யும்.

என்றாலும், இதில் ஆண் பெண் இரு பாலரில் பெண்ணின் செயல்பாடுகளே அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இதுவே பெரிது படுத்தவும் படுகிறது. ஆனால் ஆணின் செயல்பாடுகள், சற்று சலுகை யோடோ, அல்லது இப்படி நிகழ்வது இயல்புதான் என்பது போலோ, தாராளத் தன்மையோடு நோக்கப்படுகிறது. இதுமாதிரிச் சிக்கல்களில் பஞ்சாயத்துப் பேச வருபவர்களும் கிட்டத்தட்ட இதே மனநிலை யோடுதான் இருக்கிறார்கள்.

ஏன் இப்படி, இந்தப் பாகுபாடு? ஆணுக்கு அளிக்கப்படும் சலுகை, தாராளத் தன்மை, பெண்ணுக்கு மட்டும் ஏன் அளிக்கப் படுவதில்லை? அதற்கு என்ன காரணம்? இதற்கு அறிவியல் பூர்வமான உயிரியல் பூர்வமான எந்தக் காரணமும் சொல்ல முடியாது. கருத்தியல் காரணம், சமூக மதிப்பீடுகள் சார்ந்த காரணங்களன்றி வேறு யாரும் இதற்கு எந்த விதக் காரணமும் சொல்லவும் முடியாது.

எனில், சிலர் ஆண் பெண் உடற்கூறு நோக்கில் சில காரணங்களைச் சொல்ல முற்படலாம். அதாவது ஆண் வழங்கும் நிலையிலும், பெண் பெறும் நிலையிலும் இருக்கிறாள். எனவேதான் பெண் இதில் முக்கிய கவனிப்புக்கு உள்ளாக்கப்படுகிறாள். அவளிடம் ‘கற்பு நெறி’ கோரப் படுகிறது, எதிர்பார்க்கப்படுகிறது எனலாம்.

அதாவது ஒரு குடும்பத்தில் உள்ள திருமணமான ஆகாத ஆண், ஊரிலுள்ள பெண்களில் யாருக்கோ, எதுவும் வழங்கலாம். ஆனால் அதே வேளை, ஒரு குடும்பத்தில் உள்ள பெண், வெளியில் உள்ள ஆண் களிடமிருந்து எதையும் பெற்றுக் கொண்டு வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு என இதை நியாயப்படுத்தலாம்.

சரி, அப்படியானால் ஊருக்கு வழங்கும் ஆணை அனுமதிக்கும் அல்லது அதற்குச் சலுகை அளிக்கும் சமூகம், பெண் மட்டும் ஏன் எதையும் வெளியிலிருந்து பெற அனுமதிப்பதில்லை என்று கேட்டால், பதில், இது குடும்பத்தின் தூய்மையை மரியாதையைக் கெடுத்து விடும் என்பதுதான். இந்தத் தூய்மை மரியாதைக் கண்ணோட்டத்தில் இருந்து தான், இது ஒழுக்கக் கேடு, குற்றச் செயல், அனுமதிக்கத்தகாதது என்கிற கருத்தோட்டங்கள் எழுகின்றன.

நியாயம். தன் குடும்பத்தில் உள்ள ஒரு பெண் வெளியிலிருந்து எதையும் பெறக் கூடாது என்றால், தன் குடும்பத்தில் உள்ள ஆண்கள் மட்டும் வெளியில் உள்ள பெண்களுக்கு எதையும் வழங்கலாமா? அப்போது மட்டும் அதைப் பெறும் பெண்கள், வேற்று குடும்பப் பெண்கள், வெளியிலிருந்து அதைப் பெறுவதாகாதா? அந்தக் குடும்பத்தின் தூய்மை மரியாதை கெடாதா? அப்படியானால் தன் குடும்பம் மட்டும் தூய்மையாக இருக்கவேண்டும். மற்ற குடும்பம் எக்கேடு கெட்டால் என்ன என்பது பொருளா? தெளிவாகச் சொல்வதானால், தன் குடும்பப் பெண்கள் எல்லாம் ‘கற்பு நெறியோடு’ இருக்கவேண்டும். மற்ற குடும்பப் பெண்கள் எப்படி வேண்டு மானாலும் கிடந்து விட்டுப் போகட்டும் என்று சொல்வதாகத் தானே இது பொருள் படும். இன்னும் சொல்லப் போனால் மற்ற குடும் பத்துப் பெண்கள் எக்கேடு கெட்டால் என்ன என்பதைவிடவும், எக் கேட்டிற்கும் உட்பட்டிருக்க வேண்டும், கற்பு நெறி பிறழ்ந்தவர் களாகவே இருக்கவேண்டும். அப்போதுதான் தனக்கும் வசதி என்ப தாகவும் இதற்குப் பொருள்படும்.

அதாவது, சுருக்கமாக ஒவ்வொரு ஆணும், தன் மனைவி, தாய், சகோதரிகள், தூய்மையுடன் திருவிளக்காகத் துலங்க வேண்டும். மற்ற பெண்கள் எப்படியானால் என்ன என்பது மட்டுமல்ல. எப்படி வேண்டுமானால் இருக்க சம்மதிப்பவளாகவும் இருக்கவேண்டும் என்றே கருதுகிறான் என்பது தெளிவு.

இதை மேலும் சற்று நுணுகிப் பார்த்தால், அவரவர் குடும்பம், தூய்மை, பாதுகாப்பு என்பதற்கு அப்பால், எல்லாக் குடும்பத்து ஆண்களுக்குமான தேவையாகவும் இந்தக் கருத்தோட்டம் உருவாகி யிருப்பது அல்லது உருவாக்கப்பட்டிருப்பது தெரியவரும்.

ஆக, பாலுறவு சார்ந்து தற்போது சமூகத்தில் நிலவி வரும் கருத்தோட்டங்கள், உருவாக்கப்பட்டுள்ள மதிப்பீடுகள் ஆகியன ஆண் சார்ந்து, ஆண்கள் நலனை விருப்பங்களை, மையப்படுத்தியதாக, ஆணாதிக்கத் தன்மை கொண்டதாகவே இருக்கின்றன என்பதே உண்மை.

இதில் சிலர் ஒரு வாதத்தை முன் வைக்கலாம். அதாவது நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் இவையெல்லாம் ஒரு ஐம்பது, நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலை. அதுபோன்ற நிலையெல்லாம் தற்போது இல்லை. இது பெண்ணுரிமை, பெண் விடுதலை பற்றியெல்லாம் பேசக்கூடிய அதுபற்றிய விழிப்புணர்வைப் பெற் றுள்ள பெண்ணியச் சிந்தனைகள் மேலோங்கியுள்ள காலம். எனவே, இந்த நாளில் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்றெல்லாம் பேசமுடியாது. ஆணுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவ்வளவும் பெண்களுக்கும் கோரப்படும் காலம் இது.

அதேபோல, பாலுறவு சார்ந்து பெண்ணிடம் எப்படிப்பட்ட ஒழுக்க நெறி எதிர்பார்க்கப்படுகிறதோ அதே நெறிகளை ஆணிடமும் எதிர்பார்க்கும், அது ஆணுக்கும் வலியுறுத்தப்படும் காலம் இது. இந்த நிலையில் இதை ஆணாதிக்கச் சமூகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இன்று ஆணுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அத் தனை உரிமையும் பெண்ணுக்கும் சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பெண்களுக்கே கூடுதல் உரிமையும் சலுகையும் வழங்கப்பட்டிருக்கிறது எனலாம். இதற்குச் சான்றாகப் பல எடுத்துக் காட்டுகளையும் இவர்கள் முன்வைக்கலாம்.

எல்லாம் சரி. ஆனால் இங்கே நாம் விவாதித்து வருவது சமூக மதிப்பீடு சார்ந்த கருத்துகளை. எந்த ஒரு சிக்கலிலும் இரு கூறுகள் இருக்கின்றன. ஒன்று சிக்கலுக்கான சட்டப்பூர்வ தீர்வு, சட்ட இசைவு. மற்றொன்று சமூகத் தீர்வு, சமூக இசைவு. இதில் பெண்ணுக்குத் தற்போது வழங்கப் பட்டிருப்பதாகச் சொல்லப் படுவதெல்லாம் சட்ட இசைவுதானே தவிர சமூக இசைவு இல்லை. காரணம் அந்தச் சட்ட இசைவை ஏற்றுக் கொள்கிற அளவுக்குச் சமூகம் இன்னமும் பக்குவம் பெறவில்லை.

இதனாலேயே, பெண்களுக்கோ, ஆண்களுக்கோ சட்டப் பூர்வமான பல உரிமைகள் இருந்தும், சமூக ரீதியில், சமூகம் என்ன நினைக்குமோ என்கிற தயக்கத்தில் அந்த உரிமைகளைக் கோராமலும், அதைப் பெற முற்படாமலும் பலர் வாழ்ந்து வருகின்றனர்.

காட்டாக, பெண்ணுக்கோ ஆணுக்கோ தங்களுக்குள் இணக்கமற்ற சூழலில் மணவிலக்குப் பெற சட்டப்பூர்வ உரிமை உண்டு. இதற்கு எந்தத் தடையுமில்லை. ஆனாலும் இதைப் பலர் துய்க்கத் தயங்கு வதற்கு அடிப்படைக் காரணம், சமூகம் என்ன நினைக்குமோ, என்ன சொல்லுமோ என்கிற தயக்கம்தான்.

அதேபோலவே, கைம்பெண் மறுமணம் அல்லது மணவிலக்கு பெற்ற பெண்ணின் மறுமணமும். கணவனை இழந்த ஒரு கைம் பெண்ணோ அல்லது கணவனிடமிருந்து மணவிலக்கு பெற்று வாழும் ஒரு பெண்ணோ தாங்கள் விரும்புகிறவரை மறுமணம் செய்து கொண்டு வாழ சட்டப்பூர்வமாக எந்தத் தடையும் இல்லை. ஆனாலும் பலர் அப்படி வாழ விரும்பாது, கடைசி வரைக்கும் தனித்தே வாழ விரதம் பூண்டு நாளைக் கடத்துவதோ அல்லது மறைமுக உறவுகள், தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டு வாழ்வதோதான் நடந்து வருகிறதே தவிர, சட்டப்பூர்வ உரிமையைத் துய்க்கப் பலர் முன் வருவதில்லை. தயக்கம் காட்டுகிறார்கள்.

இப்படிப் பல எடுத்துக் காட்டுகளை முன்னிறுத்தி யோசித்துப் பார்க்க, ஒரு செய்தி தெளிவாகப் புரியும். இன்றைய சமூக வாழ்வில் பாலுறவு சார்ந்த சிக்கல்களுக்கும் அது சார்ந்த வன்முறைகளுக்கும் மிக மிக முக்கிய காரணமாயிருப்பது பாலுறவு சார்ந்த சமூக மதிப்பீடுகளே என்பதும், எனவே இந்த மதிப்பீடுகளைத் தகர்க்காமல், இவற்றை எதிர்த்து மாற்று மதிப்பீடுகளை உருவாக்காமல் இப்பாலுறவுச் சிக்கல்களுக்குத் தீர்வு காணமுடியாது என்பது தெரியவரும்.

Pin It