தன்மான இயக்கத்தின் தணல் நெருப்புக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஆவார். தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டர். பெரியாரின் எரிமலை எண்ணங்களைச் சூடு குறையாத சொற்களால் பாடிய பகுத்தறிவுப் போர் முரசம்.

பெரியாரின் சிந்தனையில் தெறித்த முத்துக்களில் ‘பெண்ணியம்’ பற்றிய கருத்துக்கள் மிகமிக முற்போக்கானவை. மரபாகப் பின்பற்றுப்பட்டுவந்த பெண்ணடிமைப் போக்கு களை உரத்தோடு எதிர்த்து உரிமைப்போர் எழுப்பியவர் அவர். ஆணுக்குப் பெண் அடிமை, அழகு, அறிவு, ஆளுமை உள்ளிட்ட அனைத்திலும் பெண் என்பவள் ஆணுக்கு ஒரு படி கீழானவளாகத்தான் இருக்க வேண்டும். அச்சமும் நாணமும்தான் பெண்களில் அணிகள் என்பன போன்ற அழுக்குச் சிந்தனைகளை வெளுத்துத் துவைத்தவர் பெரியார். அவர்வழி வந்த பாரதிதாசனும்,

‘அச்சமும் நாணமும் அறியாத பெண்கள்

அழகிய தமிழ்நாட்டின் கண்கள்’

என்று பாடியதில் வியப்பில்லை.

‘பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?

மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு,

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே!’

என்று பாடிய பாவேந்தர் தம் படைப்புகள் அனைத்திலும் பெண் விடுதலையை முதன்மைப்படுத்தினார். தாம் படைத்த காப்பியங்களில் ஆண்களை விடப் பெண்களைத் தெளிவும் திட்பமும் மிக்க கதைமாந்தர்களாகக் காட்டினார்.

பாவேந்தரின் படைப்புகளில் பெரும் புகழைச் சேர்த்தது, குஞ்சிதம் குருசாமி அவர்களின் முயற்சியால் வெளிவந்த பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதியாகும். இத்தொகுப் பின் தொடக்கத்திலேயே காவியம் என்ற தலைப்பில் மூன்று கதைக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 1. சஞ்சீவி பர்வதத்தின் சாரல், 2. புரட்சிக்கவி, 3. வீரத்தாய்.

சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

இக்கதைக் காவியத்தில் வஞ்சியும் குப்பனும் தான் தலைவியும் தலைவனும். வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை, புராணப் புளுகுகளைப் புட்டுப்புட்டு வைக்கும் சொற்கோவைகள், கடவுளையும் மதத்தையும் கட்டுடைத்துப் பேசும் பாடல் அடிகள் எனப் பாவேந்தரின் பன்முக ஆற்றலை இக்கதைக் காவியத்தில் காணலாம். சஞ்சீவிப் பர்வத சாரல் அழகைச் செஞ்சாந்துச் சொல்லெடுத்து இவர் காட்டும் அழகே அழகு!

கதைச் சுருக்கம்

ஒருநாள் மாலை நான்கு மணி, சஞ்சீவி மலையின் (பர்வதத்தின்) உச்சியில் இரண்டு மூலிகைச் செடிகள் உள்ளன. முதல் மூலிகைச் செடியின் இலையைத் தின்றால் இவ்வுலக மக்கள் எங்கிருந்து பேசுவதையும் நன்றாக கேட்க முடியும். மற்றொன்றைத் தின்றால் மண்ணுலகக் காட்சியெல்லாம் கண்முன் தெரியும். (தற்கால வானொலியும், தொலைக்காட்சி யும் போல் என இவ்விரண்டையும் கற்பனை செய்து கொள் ளலாம்). இரண்டின் இலைகளையும் பறித்துத் தருமாறு வஞ்சி குப்பனிடம் வேண்டுகிறாள். அவர்களும் உச்சிக்குப் போய் முதல் செடியின் இலையைப் பறித்து மெல்லுகிறார்கள்.

உடனே இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து தேசத்தார் பேசும் ஒலிகள் எல்லாம் இவ்விருவர் செவிக்கும் கேட்கிறது. திடுமென ஓர் ஒலி! இவர்கள் இருவரும் நின்றுள்ள சஞ்சீவி மலையையே வேரோடு பெயர்த்துக் கொண்டு வருமாறு யாரோ அனுமனுக்குக் கட்டளையிடும் ஒலி கேட்கிறது. இதனை உண்மையென நம்பிய குப்பன் நடுநடுங்கிப் போகிறான். வஞ்சியின் பேச்சைக் கேட்டுத் துன்பத்தை விலைக்கு வாங்கிக் கொண்டோமே என வருந்தி உழல்கிறான். வஞ்சி குப்பனைத் தேற்றி இன்னொரு இலையை வாயில் போட்டு மெல்லச் சொல்கிறாள். அப்போதுதான் உண்மை புலனாகிறது. அவர்கள் நின்றுகொண்டுள்ள சஞ்சீவி மலையைத் தூக்க யாரும் வரவில்லை. எங்கோ ஓரிடத்தில், ஒரு பாகவதன் இராமாயணக் கதை சொல்லிக் கொண்டிருப்பதை இருவரும் பார்க்கிறார்கள். கதை சொல்லிக் கொண்டுள்ள பாகவதனின் கூற்றுதான் அது என்பதைக் குப்பன் உணர்ந்து தன் கோழைத்தனத்தை எண்ணித் தலைக் குனிகிறான். இக்கதையில் வஞ்சி அஞ்சாமை மிக்க அறிவுப் பெண்ணாயும், மூடநம்பிக்கைகளைச் சாடும் முற்றிய பகுத்தறிவாதியாயும் காட்டப்படுகிறாள். குப்பனோ ஆடவனாய் இருந்தும் எல்லாவற்றும் அஞ்சி ஒடுங்கும் கோழையாய் உள்ளான். வஞ்சியின் வாயிலிருந்து வெளிப்படும் அறிவார்ந்த சொற்களின் வழி, அச்சமற்ற பெண்ணினத்தின் மாண்பைப் பாவேந்தர் நம் கண்முன் நிறுத்துகிறார்.

வானளவும் அங்கங்கள் வானரங்கள் ராமர்கள்

ஆனது செய்யும் அநுமார்கள், சாம்பவந்தர்

ஒன்றல்ல ஆயிரம் நூல்கள் உரைக்கட்டும்

விஸ்வ% பட்பெருமை மேலேறும் வன்மைகள்

உஸ்என்ற சத்தங்கள் அஸ்என்ற சத்தங்கள்

எவ்வளவோ நூலில் எழுதிக் கிடக்கட்டும்

செவ்வைக் கிருபை செழுங்கருணை அஞ்சலிக்கை

முத்தி முழுச்சுவர்க்கம் முற்றும் உரைக்கட்டும்

இத்தனையும் சேரட்டும் என்ன பயன் உண்டாம்?

உள்ள பகுத்தறிவுக் கொவ்வாத ஏடுகளால்

எள்ளை அசைக்க இயலாது, மானிடர்கள்

ஆக்குவதை ஆகா தழிக்குமோ? போக்குவதைத்

தேக்குமோ? சித்தம் சலியாத் திறன்வேண்டும்

மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை

எக்களிக்க வேண்டும் இதயத்தில்; ஈதன்றி

நல்லறிவை நாளும் உயர்த்தி உயர்த்தியே

புல்லறிவைப் போக்கிப் புதுநிலை தேடவேண்டும்!

புரட்சிக்கவி :

‘புரட்சிக் கவி’யின் கதைத்தலைவன் உதாரன். இவனோர் கவிஞன். கதைத் தலைவி அமுதவல்லி, மன்னன் மகள். அமுதவல்லிக்குக் கவிதை சொல்லித்தர மன்னன் உதாரனை ஏற்பாடு செய்கிறான். ஆனால் எங்கே இருவர்க் கும் காதல் ஏற்பட்டுவிடுமோ என்னும் அச்சத்தில் உதாரன் ஒரு குருடன்; அமுதவல்லி ஒரு தொழுநோயாளி என இருவரிடமும் பொய் சொல்லப்படுகிறது. கவிதைப் பாடம் நடக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டுவிடாத படி இருவர்க்கும் இடையே ‘மறைப்புத் திரை’ இடப்படுகிறது.

அன்று முழுமதி நாள். வெண்ணிலாவைப் பார்த்த உதாரன் வெள்ளமெனப் பாட்டருவி பொழிகிறான். ஒரு குருடனால் எப்படி வெண்ணிலாவைப் பார்த்து வெள்ளமெனப் பாட முடியுமென்று அமுதவல்லி வியக்கிறாள். திரை விலகு கிறது. மன்னவன் கட்டிய பொய்மூட்டை அவிழ்கிறது. இருவரும் காதற் பொய்கையில் நீந்திக் களிக்கின்றனர்.

ஆனாலும் அச்சம் குடிகொண்ட நெஞ்சினனாய் உதாரன் அலறுகிறான். நீயோ மன்னன் மகள், உன்னை நான் மணந்தால் மலையளவு துயர் வருமே என மலைக்கிறான்; நால்வருண மலைப்பாம்பு நம்மை விழுங்குமே என நடுங்கிறான்; தன்னை மறந்து விடுமாறு புலம்புகிறான்.

நீயன்றோ பெண்ணே! நினைப்பை அகற்றிவிடு

நாயென்றே எண்ணிஎனை நத்தாமல் நின்றுவிடு

வேல் விழியால் என்றன் விலாப்புறத்தைக் கொத்தாதே

பால்போல் மொழியால் பதைக்கஉயிர் வாங்காதே

கண்ணாடிக் கன்னத்தைக் காட்டி என் உள்ளத்தைப்

புண்ணாக்கிப் போடாதே போ! போ! மறைந்துவிடு

காதல் நெருப்பால் கடலுன்மேல் தாவிடுவேன்

சாதியெனும் சங்கிலிஎன் தாளைப் பிணைத்ததடீ!

பாளைச் சிரிப்பில்நான் இன்று பதறிவிட்டால்

நாளைக்கு வேந்தனெனும் நச்சரவுக் கென்செய்வேன்?

என்றறெல்லாம் சொல்லி உதாரன் அமுதவல்லியின் காதலை ஏற்க மறுக்கிறான். ஆனால் அரசன் மகளோ அஞ்சா நெஞ்சி னளாய் அவனைத் தேற்றுகிறாள். ‘எத்துயர் வரினும் இரு வரும் ஒன்றாவோம். உயிரே போகுமெனினும் உவப்போடு ஏற்போம்’ என்று எஃகு போன்ற மனஉறுதியோடு உதாரனைத் தேற்றுகிறாள். அதுமட்டுமல்ல, தான் இந்த நாட்டின் இளவரசி என்பதால் தன்னைக் கொல்லும் அதிகாரம் அந்தக் கோட்டை அரசனுக்கு இல்லை என்கிறாள். அதுமட்டுமா? சாதியால் கொஞ்சமும் வாழ்நிலையால் வேறுபாடு பாராட்டும் இந்தச் சனாதன உலகை நம் ஆவியைக் கொடுத்தேனும் திருத்து வோம்! என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறாள்.

‘வாளை உருவிவந்து மன்னன் எனதுடலை

நாளையே வெட்டி நடுக்கடலில் போடட்டும்

ஆரத்தழுவி அடுத்தவினா டிக்குள்உயிர்

தீர வரும்எனினும் தேன்போல் வரவேற்பேன்

நாட்டின் இளவரசி நான்ஒருத்தி ஆதலினால்

கோட்டை அரசன் எனைக்கொல்வதற்குச் சட்டமில்லை

சாதிஉயர் வென்றும் தனத்தால் உயர்வென்றும்

போதாக் குறைக்குப் பொதுத்தொழிலா ளர்சமூகம்

மெத்த இழிவென்றும் மிகுபெரும்பா லோரைஎல்லாம்

கத்தி முனைகாட்டிக் காலமெல்லாம் ஏய்த்துவரும்

பாவிகளைத் திருத்தப் பாவலனே நம்மிருவர்,

ஆவிகளை யேனும் அர்ப்பணம் செய்வோம்.

என்னும் அமுதவல்லியின் குரலில் அச்சத்தைக் காண முடியவில்லை. ஏனெனில் அஃது பெண் நிலைக்கு முன்னிலை கொடுக்கும் பாவேந்தரின் குரல்!

வீரத்தாய்

பாரதிதாசன் கவிதைகள் முதல்தொகுப்பில் மூன்றாவ தாய் இடம்பெற்றுள்ள கதைக் காவியம் ‘வீரத்தாய்’!

மணிபுரி நாட்டின் படைத்தலைவன் காங்கேயன், அந் நாட்டின் அமைச்சனைத் தன்னோடு சேர்த்துக் கொண்டு அரசுக்கு எதிராகச் சதிசெய்கிறான். மன்னனை வஞ்சகமாக மதுவுக்கு அடிமையாக்குகிறான். அரசி விசயராணியின் ஒழுக் கத்தின் மீது அய்யம் எழுப்பி அவளை நாட்டை விட்டு விரட்டு கிறான். இளவரசனைத் தனிமையில் வைத்து கல்வியோ நல்லறிவோ இல்லாத மடையனாக வளர்க்கிறான்.

படைத் தலைவனின் சூழ்ச்சி வலையிலிருந்து தப்பிச் சென்ற அரசி தலைப்பாகை அணிந்த ஒரு கிழவனைப் போல் மாறுவேடம் புனைந்து வாழ்கிறாள். எப்படியோ இளவரசனையும் சந்தித்து அவனுக்குப் போர்ப் பயிற்சியும் கல்விப் பயிற்சியும் அளித்துச் சிறந்த வீரனாக்குகிறாள்.

படைத் தலைவனின் சூழ்ச்சி வெளிப்பட்டு அவன் சாயம் வெளுகிறது. அப்போது அவன் இளவரசனைக் கொல்ல முயல் கிறான். அங்குப் பாய்ந்து வந்த அரசி இளவரசனான தன் மகனைக் காப்பாற்றுவதுடன் தான் யார் என்பதையும் வெளிப்படுத்துகிறாள். அப்போது அவள் பேசும் மொழிகளாவன :

தாடியும் பொய்! என்றன் தலைப்பாகை யும் பொய்யே!

சூடியுள்ள அங்கியும் பொய்! கொண்ட முதுமையும் பொய்!

நான் விசய ராணி! நகைக்கப் புவியினிலே

ஊனெடுத்த காங்கேயன் ஒன்றும் உணர்கிலான்.

கோழியும்தன் குஞ்சுதனைக் கொல்லவரும் வான்பருந்தைச்

சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத தொல்புவியில், ஆடவரைப்

பெற்றெடுத்த தாய்க்குலத்தைப், பெண் குலத்தைத் துட்டருக்குப்

புற்றெடுத்த நச்சரவைப் புல்லெனவே எண்ணிவிட்டான்”.

அமைச்சனும் பகைவனும் சேர்ந்து சூழ்ச்சி செய்தனர். அரசன் குடியன் ஆனான். அருமை மகனும் அறிவிலியாய் வளர்க்கப்பட்டான். இந்நிலையில் தன்னந் தனியளாய் எதிர் நின்று நாடுகாத்த தன் அன்னையை பின்வருமாறு இளவரசன் பாராட்டுவான் :

“அன்னையும் ஆசானும் ஆருயிரைக் காப்பானும்

என்னும்படி அமைந்தீர்! இப்படியே பெண்ணுலகம்

ஆகுநாள் எந்நாளோ? அந்நாளே துன்பமெலாம்

போகுநாள் இன்பப் புதியநாள் என்றுரைப்பேன்

அன்னையெனும் தத்துவத்தை அம்புவிக்குக் காட்டவந்த

மின்னே, விளக்கே, விரிநிலவே வாழ்த்துகின்றேன்”

இப்படிப் பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியில் அமைந்துள்ள மூன்று கதைக் காவியங்களுமே பெண்மை யை உயர்வு செய்யும் பெருமைக்குரிய இலக்கியங்களாகும்.

குடும்ப விளக்கு

பாவேந்தரின் படைப்புகளுள் ‘குடும்ப விளக்கு’ என்கிற நூலும் தனித்தன்மை வாய்ந்த இலக்கியப் படைப்பாகும். தமிழ்நாட்டில் தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் இந்நூலைக் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டும். திருமணம், இல்லத் திறப்பு விழா போன்ற நேரங்களில் ‘குடும்ப விளக்கு’ நூலை எல்லோர்க்கும் பரிசுப் பொருளாகத் தரலாம்.

இந்நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையின் ஒரு பகுதியாகப் பாவேந்தர் குறிப்பிடுவதாவது : ‘குடும்ப விளக்கைப் பெறும் தோழர்கள் தாமேயன்றி மறந்துபோகாமல் தம் துணைவியர்க்கும் படிக்கக் கொடுக்க! துணைவியர் எழுத்தறி வில்லாதவராயின் படித்துக் காட்டுக! துணைவர்க்கு எழுத்தறிவு இழப்பாய் இருந்தால் துணைவியர் சொல்லிக்காட்ட மறவா திருக்க வேண்டுகிறேன்’.

குடும்ப விளக்கு என்னும் நூல் ஒரு நாள் நிகழ்ச்சி, விருந்தோம்பல், திருமணம், மக்கட்பேறு, முதியோர் காதல் என்னும் அய்ந்து பகுதிகளைக் கொண்ட சிறந்த வாழ்வியல் நூலாகும். இவற்றில் ‘ஒரு நாள் நிகழ்ச்சி’ என்ற பகுதியின் இறுதிக்காட்சி மட்டும் இங்கே சுட்டப்படுகிறது.

‘பாரதிதாசன் கவிதைகள்’ முதல் தொகுதியில் வரும் பல பெயர்கள் வடமொழிப் பெயர்களாகவே விளங்கும். மேலும் சமற்கிருதச் சொற்கலப்பும் அப்பாடல்களில் மிகுதி. ஆயின் குடும்ப விளக்கு தூயதமிழ் கொஞ்சும் நடையில் எழுதப்பட்ட நூலாகும். எனவே இந்நூலில் வரும் கதைமாந்தர் பெயர்கள் அத்தனையும் தனித்தமிழ்ப் பெயர்களாகும்.

வீட்டின் தலைவர் பெயர் மணவழகர். மணவழகரின் மனையாள் தங்கம். இவர்களின் மகன் வேடப்பன் பின்நாளில் நகைமுத்தை மணக்கிறான். மணவழகர் வணிகர். தங்கம் தங்கமான இல்லத்தரசி. அவரின் பொறுப்பான இல்லறக் கடமைகளைப் பாவேந்தர் ஒருநாள் நிகழ்ச்சி என்ற பகுதியில் மிகச் சிறப்பாக விளக்குவார்.

இரவு கடைவேலைகள் முடித்து மணவழகர் இல்லம் திரும்புகிறார். எல்லாப் பணிகளும் நிறைவுற்று படுக்கப் போகும் நேரம், தங்கம் மணவழகரின் அருகில் அமர்ந்து அவருடன் பேசும் சொற்கள் ஆழமான பொருள் பொருந்தியனவாகும்.

சமைப்பது, வீடு பெருக்கித் துணிமணிகள் துவைப்பது, குழந்தைகளைக் குளிப்பாட்டிப் பள்ளிக்கு அனுப்புவது, கணவ னுக்குப் பணிவிடை செய்து வாயில் வரை வந்து வழியனுப்பு வது என்கிற அளவோடு மட்டும் பெண்ணின் கடமைகள் முடிந்து போவதில்லை. நாட்டின் நிலைகள் பற்றி எண்ணி, நம் மக்களுக்காய்க் கவலை கொள்ள வேண்டியதும் நம் இன்றியமையாக் கடன் என்று உணர்த்துகின்றன தங்கத்தின் சொற்கள் :

இன்றைக்குக் கறி என்ன? செலவு யாது?

ஏகாலி வந்தானா? வேலைக்காரி

சென்றாளா? கொழுக்கட்டை செய்ய லாமா?

செந்தாழை வாங்குவமா? கடைச்சரக்கை

ஒன்றுக்குப் பத்தாக விற்பதெந் நாள்?

உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு

குன்றுநிகர் குடம்நிறையக் கறப்பதுண்டா?

கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்!

தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்

தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்

எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்!

எப்போது தமிழனுக்குக் கையா லான

நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?

நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்

அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;

அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?

தமிழர் பற்றியும், தமிழ்நாட்டின் நிலைகள் பற்றியும் கவலைப்படாமல் தன்னலம் ஒன்றுமட்டுமே எண்ணி வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா? என்று ஒரு பெண்ணின் கூற்றாகப் பேச வைக்கும் பாவேந்தரின் எண்ணம் புரிகிறது அல்லவா? ஆடை, அணிகலன்கள், ஆசைக்கு வாசமலர் சூடுவதும், ஆண்கள் சுகத்துக்காய் வாழ்வதும் மட்டுமா பெண்களின் கடமை? இல்லை... இல்லை... எல்லா நிலையிலும் ஆணுக்கு நிகரான உரிமைகள் பெற்று மானுடத்தை உயர்த்தப் பிறந்தவள் பெண் என்பதைப் பாவேந்தர் தம் ஒவ்வொரு கதைப் பாடலிலும் உறுதிப்படுத்தியுள்ளார். புரட்சிக் கவிஞரைப் பயில்வோம்! புதிய விடியலின் திறவுகோலாகப் பெண் விடுதலையைப் போற்றுவோம்!     

Pin It