'பெண்ணின் பெருமையைத் தொழிலாளி உரிமையைக்
கண்ணான தமிழின் கவினார்ந்த உண்மையைப்
புண்ணான இந்தி புகுந்தும் சிறுமையை
எண்ணிய எண்ணத்தில் எழுந்த தமிழனைத்தும்
தேனருவி திரு.வி.க."
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
இலக்கியத்தமிழை வளப்படுத்திய எழுத்தாளர்! இயந்தமிழுக்கு உயிரூட்டிய சொற்பொழிவாளர்! தேசிய உணர்வோடு தொண்டாற்றிய அரசியல் தலைவர்! உழைக்கும் மக்களுக்கு வழி காட்டிய தொழிற்சங்கத் தலைவர்! பெண்ணுரிமை பேணிய பெருந்தகையாளர்! எளிமையாக வாழ்ந்த அகல் விளக்கு! எதிர்கால இளைஞர்களுக்கான ஒளி விளக்கு! மொத்தத்தில் நாட்டின் நலத்திற்காகவே நலிந்து மெலிந்த நல்லவர்! தமிழுக்காகவே வாழ்ந்த தனித் தமிழ் வல்லவர்! அவர் தான், தீந்தமிழ்த் தென்றல் திரு.வி.க.!!.
திரு.வி.கவின் முன்னோர்கள் வாழ்ந்த ஊர் திருவாரூர். அவருடைய பெயரின் தலைப்பெழுத்துக்களாய் அமைந்துள்ள 'திரு' - என்பதே திருவாரூரைக் குறிப்பதாகும். பாட்டனார் வேங்கடாசல முதலியார் காலத்திலேயே அவரது குடும்பத்தினர் திருவாரூரை விட்டுச் சென்னைக்கு குடியேறி விட்டனர்.
திரு.வி.க.வின் தந்தையார் விருத்தாசல முதலியார் சென்னை இராயப்பேட்டையில் அரிசி வணிகம் செய்து வந்தார். பின்னர் சென்னைக்கு அருகில் உள்ள துள்ளம் என்ற கிராமத்தில் தொழில் வணிகத்தைத் தொடர்ந்தார்.
துள்ளம் கிராமத்தில் வாழ்ந்தபோதுதான், விருத்தாசல முதலியார் - சின்னம்மாள் தம்பதியனருக்கு இரண்டாவது மகனாக 26.08.1883-ல் திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்தார்.
அக்கிராமத்தில் படிக்க வசதி கிடையாது. ஆகவே, தந்தையே ஆசிரியரானார். வீட்டிலேயே திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். அங்கு மகனுக்கு எழுத்தறிவூட்டினார்! ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உலக நீதி பேன்ற எளிய அற நூல்களை அரிச்சுவடியாய்க் கற்பித்தார். பின்னர். பிள்ளைகளின் படிப்புக்காக குடும்பம் மீண்டும் சென்னை வந்தது.
திரு.வி.க., ஆரியன் பிரைமரி பாடசாலையில் சேர்ந்து படிக்கலானார். நான்காம் வகுப்பில் உடல் நலப் பாதிப்பால் கல்வி தடைப்பட்டது. பின்னர் வெஸ்லி கல்வி நிலையத்தில் நான்காம் வகுப்பில் சேர்ந்து பள்ளியிறுதி வகுப்பு வரை படித்தார். அப்பொழுது, தனது உள்ளம் கவர்ந்த கதிரைவேற்பிள்ளை சார்பாக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல நேர்ந்தது. அதனால், பள்ளியிறுதி வகுப்புக்கான தெரிவுத் தேர்வை எழுத இயலவில்லை ஆகையால், பத்தாம் வகுப்பு, பாதியோடு முடிந்து விட்டது. பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. ஆனாலும் என்ன? தொடர்ந்து கதிரைவேற்பிள்ளை, மயிலை மகாவித்துவான் தணிகாசல முதலியார் ஆகியோரிடம் தமிழ் பயின்றார்.
அன்னிபெசன்ட் அம்மையாரிடம் கொண்ட ஈடுபாட்டால் பிரம்மஞான தத்துவத்தில் தெளிவு பெற்றார். சச்சிதானந்தம் பிள்ளையுடன் நிகழ்த்திய தத்துவ விசாரணைகள் மூலம் மேலை நாட்டுத் தத்துவங்களையும் தெரிந்து கொண்டார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் சொற்பொழிவுகள் கேட்டு விஞ்ஞானக் கருத்துக்களின் மீது மிகுந்த ஈடுபாடும் ஈர்ப்பும் ஏற்படலானார்.
சென்னையில் சுதந்திரப் போரட்டத் தலைவர் விபின் சுந்திர பாலர் ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டு விடுதலை உணர்வு ததும்பிடலானார், அரவிந்த கோஷ் நடத்திய 'வந்தே மாதரம்" இதழை விடாது படித்து திரு.வி..க தேச விடுதலைப் போராட்டத்தில் தீக்கொழுந்தாய்ச் சுடர்விட்டுத் திகழ்ந்தார்!
'இரவுலட்' சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்றது. அக்கொடிய அடக்குமுறைச் சட்டத்தை எதிர்க்கும்படி காந்தியடிகள் அறைகூவல் விடுத்திருந்தார். இந்தியா முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டார். சென்னையில் காந்தியடிகள் பேசிய மேடைச் சொற்பொழிவுகளை திரு.வி.க. இனிய தமிழில் மொழி பெயர்த்தார், மொழிபெயர்ப்பின் அருமையை அனைவரும் பாரட்டினர், காந்தியடிகளின் நினைவில் நீங்காத இடத்தையும் பிடித்தார்.
ஜாலியன் வாலாபாக் படுகொயையைக் கண்டித்து உரையாற்ற, பாலகங்காதர திலகர் சென்னைக்கு வருகை தந்தார். திரு.வி.க. வும், திலகரும் கண்டனக் கூட்டங்களில் எழுச்சிமிகுந்த உரையாற்றினார்கள். திரு.வி.க. தன் பேச்சாற்றலால், கங்காதரரையும் கவர்ந்தார்!.
வெஸ்லியின் பள்ளியில் ஆசிரியராகவும், பின்னர் வெஸலியின் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகவும் திரு.வி.க. பணியாற்றினார்.
1917 ல் நடைபெற்ற சுயாட்சிக் கிளர்ச்சியின் போது அன்னிபெசன்ட் அம்மையார் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டார். அடக்குமுறையைக் கண்டித்து, திரு.வி.க. தாம் வகித்து வந்த கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பதவியைத் துறந்தார். தேசிய விடுதலை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சென்னை மாகாணச் சங்கத்தில் அங்கத்தினராகச் சேர்ந்தார். அச்சங்கத்தின் சொற்பொழிவுகள் அனைத்தும் தாய் மொழியாம் தமிழில் அமைய வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்தினார். தாமும் தொடர்ந்து தமிழிலேயே உரை நிகழ்த்தினார்.
திரு.வி.க. 13.09.1912 ல் கமலாம்பிகை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஆண் குழந்தை, பிறந்த வாரத்திலேயே மறைந்தது. பெண் குழந்தை ஓராண்டு வளர்ந்த பின்னனர் இன்னுயிர் நீத்தது. திரு.வி.கவின் மனைவி கமலாம்பிகை எலும்புருக்கி நோயால் 1918 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இயற்கை எய்தினார்.
'தேசபக்தன்' என்ற தமிழ் நாளிதழின் ஆசிரியராக 1917 ஆம் ஆண்டின் இறுதியில் திரு.வி.க. பொறுப்பேற்றார். 'தேசபக்தன்' இதழில் அவர் எழுதி வந்த அனல் தெறிக்கும் கட்டுரைகள், மக்களுக்கு நாட்டுப்பற்றையும், விடுதலை உணர்வையும் வேகமாய் ஊட்டின. தேசபக்தன் இதழைப் பறிமுதல் செய்யும்படி பிரிட்டிஷ் அரசாங்கம் ஆணையிட்டது. "தேச பக்தனில் அனல் தெறிக்கும் கட்டுரைகள் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்; ஜாமீன் தொகை ரூபாய் ஐந்தாயிரம் கட்ட வேண்டும்" என்று பிரிட்டிஷ் அரசாங்கம் நிபந்தனை விதித்தது. 'தேசபக்தன்' இதழை எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தக்கூடாது என்றும். அடக்குமுறைக்கு அஞ்சக்கூடாது என்றும் மக்கள் வேண்டினார்கள் அதனால், பிரிட்டிஷ் அரசாங்கம் விதித்த நிபந்தனையை ஏற்று ஐயாயிரம் ரூபாய் பொறுப்புத் தொகை செலுத்தப்பட்டது. அதன் பிறகு தேசபக்தன் மீண்டும் வெளிவந்தது, தமிழ் இதழியல் வரலாற்றில் புதிய சொற்களைத் தமிழில் உருவாக்கிய பெருமை, திரு.வி.க.வுக்கே உண்டு. இரண்டாண்டுகள் 'தேசபக்தன்' இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். கடைசியில் கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து வெளியேறினார்.
பி ரூ சி யில் தொழிலாளர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த நன்கொடையை கொண்டு புதிய வார ஏடு 'நவசக்தி' தொடங்கப்பட்டது. அது 22.10.1920 ஆம் நாளிலிருந்து வெளிவரத் தொடங்கியது, 'நவசக்தி' வார ஏட்டுக்கு திரு.வி.க. ஆசிரியரானார்.
தொழிலாளர் இயக்கத்தில் 1917 ஆம் ஆண்டில் திரு.வி.க. ஈடுபட்டார். தொழிற்சங்க தலைவர் வாடியாவின் நட்பு ஏற்பட்டது. 1918 ஏப்ரல் 27 ஆம் நாளன்று 'சென்னைத் தொழிலாளர் சங்கம்" ஆரம்பிக்கப்பட்டது. உழைக்கும் மக்களின் ஒற்றுமை உணர்வு குறித்து திரு.வி.க. இப்படிக் கணித்தார்:-
'தென்னிந்தியாவில் எழுந்த தொழிலாளர் கிளர்ச்சியே, காட்டுத் தீ போல் நாடு முழுவதும் பரவியது. அதன் விளைவாகவே, பம்பாய், கல்கத்தா, கான்ப+ர், நாகபுரி முதலிய இடங்களில் தொழிற்சங்கங்கள் தோன்றின!"
சென்னைத் தொழிற்சங்கத்தினை நிறுவிய ஐவரில் திரு.வி.க.வும் ஒருவர். அச்சங்கத்தின் துணைத் தலைவராகவும் திரு.வி.க. தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவிலேயே தொழிலாளர்களுக்காகத் தொடங்கப்பட்ட முதல் தொழிற்சங்கம் 'சென்னைத் தொழிலாளர் சங்கம்" என்பது வரலாற்றுச் செய்தி ஆம். அடிக்கோடு இடப்படவேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த சரித்திர உண்மை இது.
இந்திய தேசிய கட்சியாய்த் திகழ்ந்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அப்போது பெரியார் ஈ.வெ.இராமசாமி, - பி. வரதராசுலு நாயுடு, - திரு.வி.கலியாணசுந்தரம் - ஆகிய மூவர் மட்டுமே மும்மூர்த்திகளாகச் செயல்பட்டு மக்களை வழிநடத்தினர்!
சென்னை பி ரூ சி யில் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் திரு.வி.க. அப்பொழுது சென்னை ஆளுநராக இருந்த வில்லிங்டன் திரு.வி.க.வை நாடு கடத்த முடிவு செய்திருந்தார். நீதிக்கட்சியின் தலைவரான தியாகராயர் தலையிட்டு ஆளுநரைச் சந்தித்தார். திரு.வி.கவை நாடு கடத்தினால் ஏற்படும் கொந்தளிப்புக்கு அரசு ஈடுகொடுக்க முடியாது என எச்சரிக்கை செய்தார், மீறி நாடு கடத்தினால் நீதிக்கட்சி அமைச்சரவையிலிருந்து பதவி விலகும் என்றும் அறிவித்தார்.
'பி ரூ சி யி;ல்' ஆலைத் தொழிலாளர்கள் 1947ல் தங்களின் கோரிக்கைகளுக்காக மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தின் போது, அறுபது வயதைக் கடந்துவிட்ட திரு.வி.கவைக் காங்கிரஸ் ஆட்சி வீட்டுக்காவலில் வைத்தது. ஆம், நாட்டு விடுதலைக்காக பாடுபட்டவருக்கு வீட்டுச் சிறை!
அரசியலில் அரும் பெருந்ததைவராக விளங்கியவர் திரு.வி.க. ஆனால் அவருக்கு என்று ஒரு சொந்த வீடு இல்லை. வங்கியில் இருப்பு எதும் இல்லை. அவர்தம் காலில் செருப்புகூட அணிவது இல்லை. எளிய தூய கதராடையே அவர் உடுத்தினார். அவை ஒரு நாலு முழ வேட்டியும், சட்டையுமே! சில வேளைகளில் இவற்றுடன் ஒரு மேலாடை! இவ்வளவு தான் இறுதிவரை காந்திய வாழ்க்கையைக் கடைப்பிடித்தார்!
எழுத்தாளர் என்ற வகையில் கிடைத்த சிறு வருமானத்தைக் கொண்டு எளிய வாழ்க்கையே நடத்தினார். தியாகத் தொண்டிலும் தனிமனித ஒழுக்கத்திலும் தியாக சீலராகவே விளங்கினார் திரு.வி.க.
ஆங்கிலம் பேசிய மேட்டுக்குடிப் பெருமக்கள் இந்திய விடுதலைப் போரை நடத்திய காலம் வரையில், மக்கள் திரண்டு கிளர்ந்தெழவில்லை. காந்தியடிகள் செய்த மாறுதலால் அந்தந்த வட்டார மொழிகள் அரசியல் மேடைகளை ஆளத் தொடங்கின. விடுதலை உணர்வை ஊட்டி வளர்க்கத் தொடங்கின. அதனால், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மக்கள் வீறுகொண்டு எழுந்தனர், விடுதலைப் போராட்டம் எக்காளமிட்டு ஓர் இயக்கமாக எங்கும் பரவிப் பெருகியது! தமிழகத்தைப் பொறுத்தவரையில் சுதந்திர எழுச்சியின் முன்னோடியாக இன்னலை எதிர்கொள்ளும் தன்னலங்கருதாத் தலைவராக விளங்கியவர் திரு.வி.க! தம் பேச்சாலும், எழுத்தாலும், தமிழரிடையே செந்தமிழ் உணர்வோடு, விடுதலை வேட்கையை விளையச் செய்தார்.
அண்ணல் காந்தியடிகளின் 'அகிம்சை' யுத்தம் நாடெங்கும் தீவிரமடைந்தது. அதன் தொடர்ச்சியாக உப்புச் சத்தியாகராகப் போரட்டம் நடந்தது. அப்போது பிரிட்டிஷ் அரசாங்கம் 'நவசக்தி' இதழ் வெளிவரக்கூடாது என்று ஆறு மாதம் தடை விதித்தது.
தமிழர்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் கீழ்காண்டவைகளை உடைத்தெறிய வேண்டும் எனப் பட்டியலிடுகிறார் திரு.வி.க.
1. பல கலைகளையும், பயிலுங்கள்; வெறும் இலக்கிய இலக்கண ஏடுகளைக் கட்டி அழுவதை விட்டோழியுங்கள்.
2. ஆடல் - பாடல் - சிலம்பாட்டம் - வீர விளையாட்டுக்களில் ஆர்வம் செலுத்துங்கள்.
3. வகுப்பு பிணக்குகளிலும், பிற்போக்குத் தனத்திலும் மூழ்கியிருக்காதீர்கள்.
4. கருத்து வேற்றுமைக்கு மதிப்பளியுங்கள்.
5. பொறாமை, தன்னலம், வீண் பிடிவாதம் ஒழியுங்கள்.
6. கால மாற்றத்திற்கு ஏற்பவும,; நல்லவைகளுக்காவும் மாறாதிருக்காதீர்கள்.
'அரசியல் விடுதலையோடு பொருளாதார விடுதலையும் இணைந்த பிறகே முழு விடுதலை மலரும்' என்பது திரு.வி.கவின் நம்பிக்கை. 'சமதர்மத்தை விஞ்ஞான முறையில் ஒழுங்குபடுத்தி உலகுக்கீந்த பெருமை காரல் மார்க்சுக்கு உண்டு" என்று மார்க்சியத்தைப் போற்றினார்.
"வாக்களிப்பதை நல்வழியில் செலுத்த வேண்டும். அது மக்கள் கடமை. வேறு வழியில் செலுத்தப்படின் சனநாயகம் போலியாகிவிடும், நச்சுத் தீப் பரவி, நாட்டை எரித்துவிடும். முழு விடுதலைக்குப் பலப்பல இயல்புகள் தேவை. நமது நாட்டில் சாதி மத வெறிகளும், பணம், தயைதாட்சண்யம் முதலிய மாயைகளும் வாக்காய் பரிணமித்துச் சட்டசபைகளாதல் வெள்ளிடமலை. போதிய கல்வியறிவு, அரசியல் ஞானம் முதலியன வாய்க்கப் பெறாத மக்கள் வாக்கு, எங்ஙனம் உரிமையுணர்வினின்றும் எழும்? வாக்காளர்கள் மனோநிலை சீர்பட, ஆங்காங்கே அரசியற் பள்ளிகள் அமைத்து மக்களுக்கு போதனை செய்ய வேண்டும். இல்லையெனில் சட்டசபைகளில் தேள், பாம்பு, கரடி, புலி முதலியன உலவுதல் நேரும்' என்றார் திரு.வி.க. இன்று நடப்பதை அன்றே கணித்தவர்! தீந்தமிழ்த் தென்றல் திரு.வி.க.வின் தீர்க்க தரிசனம் தான் என்னே?!
'பெண் நலம் ஓம்பப்படாத இடத்தில் வேறு எவ்வித நலனும் நிலவுவது அரிது. ஒரு நாடடு நலன் அந்நாட்டுப் பெண்மக்கள் நிலையைப் பொறுத்தே நிற்கும்" என்று ' பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை' என்ற நூலில் திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு பொருளாதார விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தினார். மாதர்சங்கக் கூட்டங்களில், சொற்பொழிவாற்றி விழிப்புணர்வை ஊட்டினார். மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மயிலாடுதுறையில் 1925 ஆம் ஆண்டு நடத்திய 'தேவதாசிகள் முறை ஒழிப்பு' மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விதவைத் திருமணத்தை ஆதரித்தார். பகுத்தறிவுக்கு ஒவ்வாத 'பால்ய மணம்' என்னும் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். அதை ஒழிப்பதற்கும் அரும்பாடுபட்டார்.
தமிழ் தென்றல் திரு.வி.க.வின் எழுத்தாற்றலை வெளியுலகுக்குக் காட்டிய முதல் நூல் அவரது 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்' என்பதாகும். இன்றைக்கும் அது தனிச் சிறப்படைய நூலாகத் திகழ்கிறது.
திரு.வி.க. பதினைந்து செய்யுள் நூற்களைப் படைத்து பைந்தமிழ் இலக்கியத்துக்கு அணிகலனாய் அளித்துள்ளார். 'பொறுமை வேட்டல்' என்ற தலைப்பில் 1942 ஆம் ஆண்டு வெளி வந்த அவரது நூலை, டாக்டர் மு.வ இருபதாம் நூற்றாண்டின் திருவாசகம் என்று புகழ்ந்து பாடி பாராட்டியுள்ளார்.
மேலும், 'காந்தியடிகள் போல் பல கட்சியினர் உள்ளத்தையும் கவரும் அரசியல் பொறுமை, - காரல் மார்க்ஸ் போல் பல மக்களையும் ஒன்று படுத்த விழையும் பொருளியல் பொறுமை - இராமலிங்க அடிகள் போல் பல சமய நெறிகளிலும் அடிப்படை ஒன்றெனக் காணும் சன்மார்க்கப் பொதுமை - திருவள்ளுவரைப் போல் எக்காலத்திற்கும் இன்றியமையாத உண்மைகளை உணர்ந்து தெளியும் வாழிவியல் பொதுமை" என்று பொதுகைத் தென்றலாய் திரு.வி.க. திகழ்வதாக டாக்டர் மு.வ தேடித் தேடிப் பாராட்டுவார்!
' பணத்தாலோ, சக்தி மிக்க பதவிகளாளோ அவர் செல்வர் அல்லர், அனால், அறிவாலும் மானுட நேயமென்னும் அன்பினாலும்; அவர் மிகப் பெருஞ்செல்வர்" என பல்கலைச் செல்வர் டாக்டர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் திரு.வி.க. வின் பெருமையைப் பதிவு செய்து உள்ளார்.
திரு.வி.க. இனிய தமிழில் பேசினார், எழுதினார். அவருடைய தமிழ் நடை தென்றலைப் போல் மென்மையாக இருந்தது. ஆதலால் அவருக்குத் ' தமிழ்த் தென்றல்' என்றும் பட்டம் வழங்கப்பட்டது.
சர்க்கரை நோய்க்கு இரையான திரு.வி.க. வாழ்வின் இறுதியாண்டுகளில் கண்பார்வையையும் இழந்தார். முதுமையிலும், நோயாலும் பாதிக்கப்பட்டு தான் வாழ்ந்த வாடகை வீட்டில் தம் எழுபதாவது வயதில் 17.09.1953 ஆம் நாள் உயிர் நீர்த்தார்.
உயிர் பிரிந்தபின் தம் திருமேனியை உழைக்கும் மக்கள் வாழும் சூளைப்பகுதி தொழிலாளர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். அவரது விருப்பப்படி, அவரது திருமேனியின் இறுதிப் பயணம் வட சென்னைச் சூளையிலிருந்து புறப்பட்டுத் தென்சென்னை மயிலாப்பூர் மயானத்தில் முடிந்தது. ஆனாலும், தமிழ் சங்கமும், தொழிற் சங்கமும் இயங்கும் வரையிலும் இங்கு தீந்தமிழ் தென்றல் வீசிக் கொண்டே இருக்கும். அதன் பயணம் முடிவதில்லை!