கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் 'அவளுக்கு வெயில் என்று பெயர்’ கவிதைத் தொகுப்பில் பெண் கருத்தாக்கங்கள்
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தம் கவிதைகள் வழியே நினைவில் ஊறும் சொற்களை காதலில் கொஞ்சம், வெயிலில் கொஞ்சம் நனைத்து வரிகளில் ஒளியூட்டி படிக்கும் வாசகர்களுக்கு இளஞ்சூட்டை உணரச் செய்கிறார். வெயில் கொண்டு காதல் செய்கிறார். கவிதை நெய்கிறார். நுரைத்துப் பொங்கும் பேரன்பைக் கொடுக்கும் காதலானது அகத்தை விழிப்பு நிலையில் வைக்கிறது. தகிக்கும் வெயிலை இரசிக்க வைப்பதோடு உவமை, உவமானங்களாக்கவும் செய்கிறது. கவிஞரது காதல் கவிதைகள் உலகத்தை ஈரம் உலராமல் பாதுகாப்பதோடு இலக்கியத்தில் நறுமணம் மிக்கப் பூக்களாகவும் மலர்கின்றன.
இலக்கியப் படைப்புகளில் காதல் கவிதைகளை ஆண் எழுதும்பொழுது எங்கேனும் எப்படியாவது ஓர் ஆதிக்கச்சொல் வந்துவிடுகிறது. பெண் எழுதும் காதல் கவிதைகளில் ஒரு சொல்லில் கூட தம் ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதில்லை. மாறாக, இதுகாறும் பெண்கள் பின்பற்றி வந்த நாணத்தை விட்டொழிக்கச் செய்கிறது எனில் மிகையன்று. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி மட்டுமல்ல ஆண்டாள், அவள் இல்லாத இறைவனுக்காகத் தமிழை ஆண்டாள். அதைப்போல பண்பாட்டு மரபு சிக்கல்களில் சிக்கிக்கொள்ளாமல் ஓர் இரயில்பாதையைப் போல, கண்ணுக்கெட்டிய வரை அழகாகத் தெரிகிற காதற்கவிதைகளை எழுதியிருக்கிறார் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்.
பெண் எழுத்து
பெண் எழுத்து ஆதரிக்கப்பட்டும் ,எதிர்க்கப்பட்டும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டும் வருகிற நவீனக் கவிதைச்சூழலில் கவிஞரின் காதல் கவிதைகள் விமர்சன வெளிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை எனலாம். வெயிலைக் காதலோடு உறவாட வைத்த அவரின் கற்பனை, மிகையான ஒன்றல்ல. அது காலம் காலமாக அடிமைப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட பெண் மனம் ஆகும். காதல் வெயிலைத்தான் கொண்டாடும். ஏனெனில், அதில்தான் வெப்பம் இருக்கிறது. பெண் எழுத்துக்களின் தீராத்தனிமையை வெப்பம் சுட்டுப் பொசுக்குகிறது.
ஆண் பெண் சமம்
"பண்பாட்டுப் பாலியல் (gender) வேறுபாடுகளுக்கான மதிப்பீட்டு அளவைகள் ஆண் அறம், பெண் அறம் என்ற வேறுபட்ட அறங்களின் அடியொற்றி உருவாக்கப்பட்டன. ஆணுக்குப் பெருமை, வலிமை, அழகு, புகழ், அறிவு, கடமை, உரிமை, ஆள்வினை, செயலூக்கமான பாலியல், அதிகாரம் ஆகியவை வேறாகவும் பெண்ணுக்கு உடல் அழகு, மென்மை, பணிவு, அடங்கிய பாலியல், கற்பு ஒழுக்கம், சேவைச்செயல், மடமை, நாணம் ஆகியவை வேறாகவும் ஆகியதற்கு வேறுபட்ட அறங்களே காரணம்”. “உடலின் வன்மை - மென்மை, உடற்கூற்றுச் செயல்பாடுகளின் வேறுபாடுகள், பாலியல் வேலைப் பிரிவு ஆகியவற்றின் மீது பண்பாட்டு ரீதியாகக் கட்டப்பட்ட இந்த அறங்கள் சமூகம், வீடு என்ற இரண்டு இடங்களுக்கு உரியவையாகச் சொல்லப்பட்டன” என்கிறார் ராஜ் கௌதமன் (அறம், அதிகாரம் பக். 156.).
இவ்வாறாக, அடுக்கமைவை உண்டாக்கி வைத்திருக்கிற தந்தைவழிச்சமூக அமைப்பின் மூலங்கள் எதேச்சதிகாரம் கொண்டவையாக இருக்கின்ற பொழுது ஆதிக்கத்தை உடைக்கத் துடிக்கும் பெண் எழுத்து எப்போதும் மென்மையாகவும் இருக்காது, வன்மையாகவும் இருக்காது. அது பெண்ணைப் போலவே கருணை நிறைந்ததாகும். கவிதை வரிகளெல்லாம் அன்பூறியதாக இருக்கும். அப்படியான அன்பூறிய வரிகளில் வெயிலை ஏற்றி எழுதுகிறார் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்.
கால் சுற்றித் தோளேறிய
வெயிலை
உதற மனமின்றி
அவனை அணைப்பதுபோல்
உடுத்திக்கொண்டேன் வியர்வையாய்
ஊற்றெடுக்கிறது
அன்பு.
(அவளுக்கு வெயில் என்று பெயர், பக்.79)
எனும் கவிதை வரிகளில் அன்பு மிளிர்வதைக் காண்லாம். இதில் அவனை அணைப்பது போல் என வரும் தொடர் உடுத்திக் கொண்டேன் எனும் சொல்லாடல் உவமையாகச் சொல்லி முழுமையாகக் காதலை உள்வாங்கிக் கொண்டமைஅயை எடுத்துரைக்கக் காணலாம்.
காதலில் அன்பு அப்படித்தான். வியர்வை போல ஊறும். அஃறிணைகள் மீது கூட அறம் பொங்கும். இவ்வகை உணர்ச்சி காதலுக்கு மட்டுமே உரியது. உடல் மேல் வெயில் படர்வது போல படர்கின்ற காதலைச் சொல்கிற வரிகளில் வெயிலை அன்பில் நனைத்தெடுக்கிறார் கவிஞர்.
இறக்கிவிட்ட இடுப்புக்குழந்தையென
அழுதபடி பின்தொடர்கிறது வெயில்.
அள்ளிக் கொஞ்சத்தான் ஆசை
அவனைச் சந்திக்கும் அவசரம்
புரிந்துகொண்டு
தலைமேல் அதனைத்
தூக்கி வைத்துக்கொள்கிறது குடை.
பக்.82) என வரும் வரிகளில் யதார்த்தம் தொனிக்கிறது.
காதல் என்னும் இயல்பான உணர்வைப் பெண்கள் வெளிப்படுத்த முடியாத புறச்சூழலில் அக அழுத்தம் கொண்ட பெண்எழுத்துக்கள் புறச்சூழலைச் சிதறடிக்கின்றன. இன்னதென்று உணர்வதற்குள் பற்றிப் படர்ந்து மரபு மரங்களிலேயே பூப்பூக்கத் தொடங்கிவிடுகின்றன பெண்எழுத்துக்கள். குழந்தை போல அழுதபடி பின்தொடரும் வெயிலை அவனைச் சந்திக்கும் அவசரம் கருதிக் கண்டுகொள்ளாமல் விட அவள் எடுத்துச் செல்லும் குடையோ வெயிலை எடுத்துக் கொள்கிறது. வெயிலை அள்ளிக் கொஞ்ச ஆசைப்படுகிறார் கவிஞர்.
ஆனால் சமூகம் ‘நேரம்' வேலை, மரபு, பண்பாடு போன்ற சிக்கல்களைத் தோற்றுவித்திருக்கிறது. சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டிருந்தால் சந்திப்பு நிகழாமல் போய்விடும். 'சிக்கல் கணக்கை நான் தனியாகத் தீர்த்துக்கொள்கிறேன். இப்பொழுது சந்திக்கச் செல்கிறேன்' என்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.
பெண்ணியல்புகள்:
பெண்களுக்கு என்று சில இயல்புகளைச் செயற்கையாக உருவாக்கியது ஆணாதிக்கச் சமூகம். அதை அவர்களுக்குப் போதித்துத் திணிக்கவும் செய்தது. இதன் மூலம் பெண் சமுதாயத்தை ஒரு வட்டத்துக்குள் கட்டிப்போட முயல்கிறது ஆணாதிக்கம். பெண்ணியல்பு என்று கூறும் பண்புகள் முழுக்க முழுக்கச் செயற்கையானவை. அப்படிப்பட்ட இயல்புகள் ஆண்களால், பெண்ணைத் தனக்கு அடிமைப்படுத்த உருவாக்கப்பட்டவை எனலாம். “இத்தகைய இட்டுக்கட்டிய மாயை ஒன்றைப் பெண்ணின் மீது திணித்து முடக்கிவிட்ட நிலையில், அதிலிருந்து விடுபடத் துடிக்கும் பெண்களுக்குத் தற்சார்பே தக்க சார்பாக இருக்க முடியும் என்று கருதுகின்றனர் பெண் எழுத்தாளர்கள்” என்கிறார் க.வேங்கடராமன். (எண்பதுகளில் தமிழ்ப்புனைகதைகளில் பெண்ணியம், பக்.99). கவிஞர்
வெயிலள்ளிக் குடித்துக்
கருப்பன் செகப்பனாவான்
செகப்பி கருவாச்சியாவாள்
வண்ணங்களற்ற காதலை
வெயில்தானே விதைக்கிறது! (பக்.83)
என்கிறார்.
கருப்பு, சிவப்பு காதலுக்கேது. வண்ணங்களை மட்டுமல்ல வருணங்களையும் ஏற்றுக் கொள்வதில்லை காதல். இவர் கவிதையிலும் வெயிலப்பிக் கொள்கிற காதல் கருப்பன் செகப்பி வண்ணங்களை மாற்றுவதன் மூலமாகச் சமூகம் உருவாக்கி வைத்திருக்கின்ற எல்லா மூடத்தனங்களையும் புறந்தள்ளுகிறது. புதுமைகளை விதைக்கிறது. ஒடுக்குமுறைக்குப் பொருளாதாரச் சுரண்டல் என்ற நோக்கம் முதன்மையானதுதான், 'ஆயினும் அது ஒடுக்குபவர்களின் தன்மான உணர்வை, அகத்தை அழித்துவிடுவதன்' மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. ஒடுக்கு முறையாளர்கள் தாங்கள் மேலானவர்கள் என்பதை ஒடுக்கப்பட்டவர்களின் மனங்களிலேயே நிறுவி விடுகிறார்கள்” (இன்குலாப் நமது மானுடம் ப.2.) என்கின்ற கூற்று, பெண் ஒடுக்குமுறைக்குப் பொருந்தும் எனலாம். பெண்கள் தாம் ஒடுக்கப்பட்டுள்ளோம் என்றே அறியாத நிலையில் உள்ளனர் அல்லது ஒடுக்கப்பட்ட நிலையை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றே கருதமுடிகிறது.
கவிஞர் தமிழச்சி தன் கவிதையில்,
முழுசாப் போர்த்திக்கிட்டா
மோசம் போகாதுல்லங்கிற
கனவான்களும்
ஆம்பளையோடு அந்த நேரம்
அங்க இங்க ஏன் போறங்கிற
அரசாங்கச் சீமான்களும்,
அண்ணேன்னு கூப்பிட்டிருந்தா
அபயம் கிடைச்சிருக்கும்லங்கிற
அரைலூசு ஆண்மக்களும்,
எம் பொண்ணாயிருந்தா
எரிச்சிப் புதைச்சிருப்பேங்கிற
மெத்தப்படிச்ச மேதாவிகளும்...
எட்டுத் திக்கும் சுத்தி வர
இப்ப,
நா எந்திருச்சி என்ன செய்ய?
இன்னும் உறங்குதியோ
என்றெழுப்பும் தோழிமாரே
மாறுமிந்த அவலம்
எனத்துடிக்கும் தோழன்மாரே
இப்ப,
நா எந்திருச்சி என்ன செய்ய? (பக்.101)
என வினா எழுப்பி இன்னும் உறங்குகிறீர்களே விரைவாக எழும்புங்கள் என்றெழுப்பும் ஆண்டாள் பாடலின் சாயலாகக் கொண்டு, இன்றைய பெண்ணிய அடிமைச்சூழலையும், பெண்ணிய அடிமைக் கருத்துக்களையும் கவிதையில் காட்டும் கவிஞர் உறங்கி எழுவதல்ல தீர்வு, உரிமையோடு எழுவதுதான் தீர்வு என்கிறார். மேலும்,
இருந்தாலும்
என் கையூன்றி நா
எந்திருச்சு உட்கார்ந்து
கோடாலிக் கொண்டை போட்டு
எழுதி வைப்பேன் இப்படி:
வெத்திலைக் காம்பைப் போல நீ
கிள்ளிக் கிள்ளிப் போடக்
கொல்லையிலே மண்புழுவா
நா மறுபடி மறுபடி பிறப்பெடுப்பேன்!
மலைதுளைக்க முயற்சிப்பேன்! (பக்.102)
என்று எச்சரிக்கை செய்யும் கவிஞர் பெண்களே கையூன்றி எழுவதைத் தவிர இந்த வறட்டுச் சமூகத்தில் எங்கேயும் இடமில்லை . அப்படி எழுந்தாலும் மலையைப் புரட்டுகிற அளவுக்கு வலுவோடு எழவேண்டும் என்கிற சிந்தனையை முன்வைக்கிறார்.இவ்வடிகள் அடிமைப் பட்டுக்கிடக்கும் பெண்ணுக்கு ஊக்கத்தைக் கொடுக்கக் காண்லாம்.
உத்திகளினூடாக எதிர்சிந்தனை
புதுக்கவிதையில் உத்தி சிறப்பான பங்கு வகிக்கிறது. எளிமையாகச் சொல்வதற்கு உத்திகள் தேவைப்படுவது போல நுட்பமாகச் சொல்வதற்கும் உத்திகள் தேவைப்படுகின்றன. “வரலாற்றில் ஆளும்தரப்பான ஆண்வர்க்க இலக்கியத்தில், உத்திகள் இரசனையின் பாற்பட்டன. எதிர்மரபு இலக்கியத்தில், பாதுகாப்புக்கும் தாக்குதலுக்கும் பயன்பட்டன" என்பார். ச.விஜயலட்சுமி, (தமிழ்க்க விதைகளில் பெண்ணுரிமை, பக்.257) அவ்வகையில் எதிர்மரபைக் கொள்கையாகக் கொண்டு கவிபாடும் கவிஞர் தம்முடைய மற்றொரு கவிதையில்,
சேர்தலின் ஈரமும்
பிரிதலின் உக்கிரமும்
வெயிலும் வெயில் சார்ந்த
காதலுமே கரிசல் (பக்.89)
என்கிறார். இலக்கிய வடிவங்களில் கவிதையில் மட்டும்தான் மொழி தானும் ஒரு வடிவமாகக் கருக்கொள்ளும். அந்த அடிப்படையில், பிரிதல் உக்கிரமானதுதான். சேர்தலோ ஈரமானது. இப்படி, பெண் எழுத்துக்களால் மட்டுமே கொண்டாட்டத்தையும், போராட்டமாக மாற்றுகிற வெயிலும் வெயில் சார்ந்த காதலும் என்று சொல்லுகிற விடுதலை உணர்வைக் கொண்டு எழுதமுடியும். இரசனை அடிப்படையிலான கவிதை என்றாலும், இக்கவிதையில் வெளிப்படுகிற உத்தி பெண் அடிமைத்தனத்தை உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் காதலின் நுட்பத்தையும் இக்கவிதையில் படிந்திருக்கிற வெயிலின் வெப்பத்தையும் வாசகர்களால் உணர்ந்து கொள்ள முடியும்:
பெண்களை உவமைகளால் புகழ்பாடும் இலக்கியங்கள் நிகழ்வில் நடக்கிற பெண்களுக் கெதிரான கொடுமைகளைக் காட்சிப்படுத்தத் தவறிவிடுகின்றன. அப்படியே காட்சிப்படுத்தினாலும் அது ஆண் எழுத்தாக இருக்கிற பட்சத்தில் தக்கசார்பு எடுத்து விடுகிறது. தமிழச்சி தங்கபாண்டியன் கவிதைகளில் ஆண் என்கிற அதிகாரப் பிம்பத்தால் அல்லலுறும் எளிய குடும்பத்துப் பெண்களைக் காட்சிப்படுத்துவதின் வழியாக ஆண்டாண்டு கால அடிமைத்தனத்திற்கு எதிராக எதிர்க்கேள்வி கேட்பதோடு மட்டுமல்லாமல் தீர்வையும் முன்வைக்கிறார். அவர் கவிதைகளில் ஓர் அரசியல் தெளிவு மேலோங்கி நிற்கிறது. அப்படி மேலோங்கி நிற்கும் அரசியல் தெளிவை அவர் கவிதைகளின் வரிகளைக் கொண்டே “வெயிற்பிடாரி”யாக உருவெடுத்தது எனச் சொல்லலாம்.
ருசி பார்த்த ஒரு சொட்டு
கொதி உணவின்
சுவையோடு ஒடுங்கும்
உணர்நரம்புகள்
ஆறிய மீதி உணவில்
பெண் நாவிற்கே முழுப்பங்கும் (பக்.120)
என்னும் கவிதையில் சூடு ஆறிய உணவைக் கடைசியாக உண்ணும் குடும்பத்துப் பெண்களைக் கவிதையாக்கிச் சுவை மட்டும் கொதிச்சூட்டில் பார்க்கிற பெண் நாவுகள் என்றைக்குமே சுடச்சுட உட்கொண்டதில்லை என்பது மட்டுமல்ல, என்றைக்குமே சுடச்சுடப் பேசியதுமில்லை, உரிமை கோரியதுமில்லை என்கிற கேள்வியை முன்வைக்கிறார் தமிழச்சி தங்கபாண்டியன்.
தொகுப்புரை
தமிழச்சியின் மனவோட்டம் சார்ந்து எழுப்பியுள்ள கேள்விகள் முடிவில்லாமல் நீள்கின்றன. தனது அடையாளத்தையும், இருப்பையும் இலக்கியச்சூழலில் தக்கவைத்துக் கொள்ளவும் போராடுகிற பெண் படைப்பாளிகள் தமது படைப்பின் வழியாகவும், போராட வேண்டும் என்கிற உண்மையைக் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் அவளுக்கு வெயில் என்று பெயர் கவிதைத் தொகுப்பு எடுத்துரைக்கக் காணலாம்.
- ஜெ.அரவிந்தன், முனைவர் பட்ட ஆய்வு மாணவர், தமிழ் உயராய்வு மையம், அ.வீரையா வாண்டையார் நினைவு திரு புட்பம் கல்லூரி (தன்னாட்சி)