இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்க உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் ஒன்றான சட்ட வரைவுக் குழுவின் தலைவராக பாபாசாகேப் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பண்டித நேரு சுதந்திர இந்தியாவிற்கான அரசியல் சட்டத்தை உருவாக்க இருமுறை முயற்சித்து தோல்வியை தழுவினார். அரசியல் நிர்ணய சபைக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் போட்டியிட்ட பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் தோற்கடித்தது வரலாறு. ஆனால், டாக்டர் அம்பேத்கர் வங்காள உறுப்பினர் ஒருவரின் உதவியால் அந்த சபைக்குள் அடியெடுத்து வைத்தார். அப்படிப்பட்ட நிலையில் அம்பேத்கரை அரசியல் சட்டம் உருவாக்க எடுத்த எடுப்பிலேயே காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. நேரு போன்ற வெளிநாடுகளில் சட்டம் படித்த பண்டிதர்கள் இருந்த அன்றைய சூழலில் தங்களால் எவ்வளவு முயற்சித்தும் சுதந்திர இந்தியாவிற்கான ஒரு ஜனநாயக அரசியல் சட்டத்தை உருவாக்க முடியாமல் தோல்வி அடைந்த போதுதான் அந்த மாபெரும் பொறுப்பு சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரிடம் வழங்கப்பட்டது.

இந்திய அரசியல் சமூகம், தத்துவம், வரலாறு, மானுடவியல், மொழியியல், சமயம், பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் மிக ஆழமான ஆய்வுகளில் அதிகம் கவனம் செலுத்துவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்த டாக்டர் அம்பேத்கர், அன்றைய இந்தியாவின் பல தலைவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டதாலேயே இந்த பெரும் பொறுப்பை தோளில் சுமந்து அல்லும் பகலும் அயராது கண் விழித்து உலகின் தலை சிறந்த ஒரு ஜனநாயக அரசியல் சட்டத்தை இந்த தேசத்திற்கு வழங்கி பெருமை சேர்த்தார். அவரால் பெருமைப்பட்ட இந்த தேசம் இன்று அவரையே சிறுமைப்படுத்துவதுதான் கருத்து சுதந்திரம் என்றால், அதை வேரிலேயே கிள்ளி எறிவதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் அதைக் கட்டிக் காக்கும் அரசியல் சட்டத்திற்கும் நாம் செய்யும் மரியாதையாக இருக்கும்.

அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய வரைவுக் குழுவின் உறுப்பினரான அல்லாடி கிருஷ்ணாசாமி அய்யர் அம்பேத்கரின் அயராத உழைப்பை சுட்டிக் காட்டியதோடு, "என் போன்ற உறுப்பினர்கள் யாரும் அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணியில் டாக்டர் அம்பேத்கருக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க முடியவில்லை" என்பதை ஒப்புக் கொண்டு இருக்கின்றார். அரசியல் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினர்கள் எவரும் சரிவர ஒத்துழைக்கவில்லை. சிலர் வெளிநாடு சென்று விட்டனர். ஒருவர் இறந்து விட்டார். இந்த நிலையிலும் தான் எடுத்துக் கொண்ட பொறுப்பை எந்த சூழ்நிலையிலும் நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதி கொண்ட டாக்டர் அம்பேத்கர் தனி ஒரு மனிதராக நின்று மாபெரும் அரசியல் சட்டத்தை உருவாக்கி நமக்கு பெருமை சேர்த்திருக்கின்றார். அதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும்.

"நீ உன் கைத்தடியை சுழற்றி சுழற்றி நடக்கலாம், அந்த சுதந்திரம் உனக்கு உண்டு. ஆனால் என் மூக்கு எங்கே தொடங்குகிறதோ அங்கே உன் சுதந்திரம் முடிவடைகிறது" என்று புகழ் பெற்ற கவிஞர் ஆஸ்கர் வைல்ட் சொன்னதைப் போல் பத்திரிக்கை சுதந்திரம், கருத்து சுதந்திரம் நமக்கு வழங்கப்பட்டு இருக்கிறது என்பதால் அதை கொண்டு யார் மூக்கை வேண்டுமானாலும் சீண்டிப் பார்க்கலாம் என்கிற ஒரு விஷமத்தனத்தை நமது சட்டம் அனுமதிக்காது. அதே நேரத்தில் பத்திரிகைகளில் அரசியல் கேலி சித்திரங்கள் வரைவதற்கு ஒரு கார்டூனிஸ்டுக்கு உள்ள உரிமை நமது ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் ஆனால், சாட்டையை சுழற்றி வேலை வாங்குவது போன்ற வரலாற்றுக்குப் புறம்பான தகவல்களை பள்ளி குழந்தைகளின் பாடப் புத்தகங்களில் இடம் பெறுவதும், அவை வரலாறாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் எந்த ஜனநாயக அமைப்பிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

அம்பேத்கரை சிறுமைப்படுத்துவதால் நமது சட்டத்தை சிறுமைப்படுத்துகிறோம். சட்டத்தை சிறுமைப் படுத்துவதால் நமது நாடாளுமன்றத்தை சிறுமைப் படுத்துகிறோம். நாடாளுமன்றத்தை சிறுமைப்படுத்துவதால் நமது நாட்டையே சிறுமைப் படுத்துகிறோம் என்பதை கருத்து சுதந்திரம் நமக்கு கற்றுக் கொடுக்கவில்லையா?

Pin It