என்னுடைய முதல் நல்ல ஆசிரியர் யார் என்பதில் எனக்குக் கேள்வியிருக்கிறது. ஸ்லேட்டில் ‘இ’ போட கற்றுக்கொடுத்த அக்காவா?

‘இ’தான் சிக்கலான எழுத்து. எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது என்று புரியாமல் விழித்திருக்கிறேன். ரொம்பப் பொறுமையாக அந்த சிக்கலைத் தீர்த்துவைத்தது என் அக்காதான்.

அல்லது கேள்வி கேட்பதில் என்னை ஈடுபடுத்திய அண்ணனா? யார் என்னுடைய முதல் நல்ல ஆசிரியர் என்ற கேள்வி எனக்குள் பல முறை எழுந்திருக்கிறது. சில சமயம் அக்காவும் சில சமயம் அண்ணணும் ஜெயித்திருக்கிறார்கள். தராசுத் தட்டு ஏறியேறி இறங்கியிருக்கிறது. ஆனால், என் அறிவு அண்ணன்தான் என்று சொல்கிறது. அண்ணன் இல்லையென்றால் நான் நானாக வளர்ந்திருக்க மாட்டேன்.

இவர்களுக்கு அப்பால் அய்யர் டீச்சரையும் ஐயர் மிசேவையும் சொல்ல வேண்டும். மிசே என்பது மிஸ்டர் அல்லது சார் என்பதற்கு இணையான பிரென்ஞ் வார்த்தை. அப்போதெல்லாம் மிசே என்றுதான் ஆண் வாத்தியாரைக் கூப்பிட வேண்டும். டீச்சர் அல்லது அக்கா என்று பெண் ஆசிரியரைக் குறிப்பிட வேண்டும்.

எனது ஊர் காரைக்கால். 50களின் இறுதியில்தான் பிரெஞ்சுக்காரன் வெளியேறியிருந்தான். நான் 50களின் இறுதியில் பிறந்தவன். ஐயர் மிசே மற்றும் டீச்சரைப் பற்றி சொல்ல ஒரே வார்த்தைதான் எனக்கிருக்கிறது. அன்பு. வறுமையில், சத்திரத்தில் குடும்பம் நடத்திகொண்டிருந்தார்கள் அவர்கள். அதுதான் எங்கள் அட்டை கிளாசும். ஆனாலும், என்னை, மாணவர்களை அரவணைத்துக்கொள்வதில் அவர்களிடம் வறுமையில்லை.

அப்போதைய எனது குழப்பங்களுடன் அட்டை கிளாசில்-அதாவது இன்றைய நர்சரி- சேர்க்கப்பட்ட என் அச்சத்தைப் போக்கியவர்கள் அவர்கள். அவர்களின் மகள் கமலாம்பாள் என்னுடன் பள்ளி வாழ்க்கை முழுவதும் வந்தாள் என்பது எனக்கு நினைவிருக்கிறது. 11வது வகுப்பில் நான் ஆட்டுக் கண்ணை அறுத்தபோது தெரிந்த அவள் முக பாவம் நினைவிருக்கிறது.

அண்ணன் என் மனத் தராசில் முன்னிற்பதற்கு ஒரு காரணம் உண்டு. சொன்னால், ஆச்சரியப்படுவீர்கள் அவர் அப்போதைய திகவில், அதாவது பெரியார் இயங்கிக்கொண்டிருந்த காலத்து திகவில் இருந்தார். அவருக்கு திமுக என்றால் பிடிக்காது.

ஒரு சமயம் என்னிடம் கேட்டார், கலைஞருக்கு கலைஞர் பட்டம் வழங்கியது யார்?

எனக்கு என்ன தெரியும்..?

அவர் சொன்னார், ‘கலைஞருக்கு நாவலரும் நாவலருக்கு அண்ணாவும் அண்ணாவுக்குக் கலைஞரும் பட்டம் வழங்கினார்கள். ஒருத்தனை ஒருத்தன் தூக்கிவிட்டு எல்லோரும் மேலே போனானுங்க..’

அல்லது இதுபோன்ற பொருள் பட அவர் சொன்னார். யாருக்கு யார் பட்டம் வழங்கினார்கள் என்பதில் எனக்கு குழப்பம் இருக்கிறது. அண்ணன் சொன்ன வாசகமும் சரியாக நினைவில் இல்லை. அவர் சொன்னதில் சாரமான அம்சம் ‘போலிமை என்ற மோசடிதான் திராவிட கட்சிகள்’ என்பதை நான் இன்று தெளிவாகப் புரிந்திருக்கிறேன்.

அண்ணன் நிறைய புரியாமல் பேசுவார். அவர் அடிக்கடி சொல்லும் வாசகம் ‘கேளுடா’, அதாவது ‘கேள்வி கேளுடா’ என்பதுதான்.

அதற்காக நான் நிறைய யோசித்திருக்கிறேன். கேள்வி கேட்கவென்றே யோசித்திருக்கிறேன். ஏன் மழைத்துளி கீழே விழுகிறது? ஏன் சூரியன் மேற்கே உதிப்பதில்லை? மாங்காய் துவர்க்க மாம்பழம் எப்படி இனிக்கிறது?... இப்படியெல்லாம் கேள்வி கேட்டிருக்கிறேன். அவரும் சளைக்காமல் பதில் சொல்வார்.

ஒரு நாள் கனமான ஒரு புத்தகம், அதாவது அன்று எனக்கு கனமானது என்று தோன்றிய புத்தகம் வாங்கி வந்திருந்தார். அதன் இடையில் சில பக்கங்கள் மட்டும் மஞ்சள் நிறத்தில் இருந்தன. அது சிறுவர்களுக்கான பகுதி. அதனைப் படிக்கச் சொன்னார். அந்தப் பத்திரிகை கலைக்திர். அது என்னை எந்தெந்த உலகத்திற்கோ இழுத்துச் சென்றது. இன்றைக்கு பலரும் கேள்விப்பட்டிராத ஹோவர் கிராப்ட் பற்றி அன்றே படித்திருக்கிறேன்.

காந்தியில் சத்தியசோதனையை வாசிக்க வைத்தார். வியாசர் விருந்து, கம்பராமயணம் வாங்கிக்கொடுத்தார். திக அரசியல் கொண்ட அவர் இவற்றை ஏன் வாங்கிக்கொடுத்தார் என்பது இன்றும் எனக்குப் புரியவில்லை. அப்புறம் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், கல்கியில் வெளிவந்த அபலைப்பெண் அஞ்சுகம் தொகுதி... இப்படி படிக்கப் படிக்க புத்தகங்கள் வந்துகொண்டேயிருக்கும். அவர் ஒரு முறை எனக்குச் சொன்னதை இப்போது உங்களிடம் சொல்ல வேண்டும். ‘கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம்’ அப்புறம் அதனைத் தொடர்ந்து அவரின் நக்கல் சேர்க்கையையும் சொன்னார்... ‘கண்டதைத் தின்றால் குண்டிதன் ஆகலாம்.. நீதான் முடிவு செய்ய வேண்டும்'.

அப்புறம் என் அண்ணணுக்கு நிகழ்ந்ததுதான் சோகம். அவர் ஒரு சாமியாரின் சீடராகச் சேர்ந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து நானும் அந்த சபையில் என்னுடைய 18வது வயதில் சேர்ந்தேன். சில நாட்களில் யோகம், குண்டலினி என்பதெல்லாம் கதையென்று தெரிந்துகொண்டதால் அவருக்கு வலி ஏற்படாமல் விலகிவிட்டேன். சாமியாரின் சீடராகவே அவர் வாழ்க்கை முடிந்தது.

அந்த சாமியார்தான் முதலில் எனக்கு இரஷ்யா பற்றி சொன்னார். நீ எங்கே பிறக்க விரும்புவாய்? என்று கேட்டார். நான் தெளிவாக அமெரிக்கா என்றேன். ‘தப்பு இரஷ்யாதான் நல்ல நாடு. சோறு கிடைக்காமல் சுதந்திரம் கிடைத்து என்ன பலன்?’ என்றார் வேதாத்திரி என்ற அந்த சாமியார். வெகுநாட்கள் கழித்துதான் அவர் என்ன சொல்ல வந்தார் என்று எனக்குப் புரிந்தது..

அண்ணனின் இறப்புக்கு சென்ற நான், அவரின்- எனது அண்ணனின்- அடுத்தகட்ட பரிணாமம்தான் நான் என்பதை உணர்ந்து அவர் உடலின் முன்னே நின்று நன்றி செலுத்தினேன். அவருக்கு அஞ்சலி செலுத்துவதறகாக பேருந்தில் இரவு முழுவதும் நின்று கொண்டு வந்திருந்த நான், சாமியார்களின் கூத்துக்கள் தாங்க முடியாமல், சினிமா தியேட்டர் பகல் காட்சியில் அமர்ந்திருந்துவிட்டு உடலை அடக்கம் செய்யும்போது மீண்டும் சம்பவ இடத்திற்குப் போய் சேர்ந்தேன் என்பதையும் சொல்ல வேண்டும்.

என் அண்ணனைப் பற்றி எனக்கு ஒரு கேள்வி உண்டு. திகவில் ஆரம்பித்த அவர் சாமியாராக ஏன் முடிந்தார்?

அண்ணனுக்கு அப்பால் நினைவு கூற நிறைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஒருவர் இராமு வாத்தியார். ‘அது எப்படி மிசே, கடன் வாங்கி கழிக்க முடியும்?’ என்ற கேள்வியை வாய்விட்டுக் கேட்டதற்காக என்னை அறைந்தவர்.

‘நாய் திங்கும்’ என்று எழுதியதற்காக முட்டிகால் போட வைத்தவர். இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.. அவர் மகள் மாதவி என்னோடுதான் படித்தாள்... மகா மக்கு.

மற்றொரு வாத்தியார் பிரான்சிஸ். வெள்ளை சட்டை வெள்ளை பேண்டில்தான் வருவார். நான் அல்ஜிப்ரா கண்டு மிரண்டுபோனது அவரால்தான். எப்போதும் ஃபேனுக்கு கீழே நின்றுதான் வகுப்பெடுப்பார். முகம் முழுக்க, அவர் நிறத்துக்குப் பொருந்தாத, வெள்ளை பௌடர் பூசியிருப்பார். ஃபேன் கழன்று அவர் தலையில் விழ வேண்டும் அல்லது எண்ணெயாவது கொட்ட வேண்டும் என்று அவரவர் அவரவருக்குப் பிடித்த கடவுளை வேண்டிக்கொண்டிருப்போம்.

தமிழாசிரியரில் அந்த வழுக்கைத் தலை ஆசிரியரைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அவர் பெயர் சுப்பையா.. ‘கேள்வியக் கேளு’ என்று அவர் கேட்டபோது நான் எழுந்து, ‘எப்படி ஐயா இந்த கிளாசில் ரெண்டு ஃபேன் ஓடுது?’ என்று கேட்டேன். நிமிர்ந்து பார்த்தவருக்கு ஒரு ஃபேன் தான் தெரிந்தது. ‘ஐயா, இப்ப ஒரு பேன்தான் ஓடுது’ என்றேன்.

அவர் புரிந்து கொண்டார். அப்புறம் என்ன? என் புட்டம் பிய்ந்து போனது. டேபிளில் படுக்க வைத்து காலை ஒருவனும் கையை ஒருவனும் பிடித்துக்கொள்ள இரண்டு பிரம்புகளை வைத்துக்கொண்டு கொத்து புரோட்டா மாஸ்டர் போல பிய்த்தெடுத்தார்.

இந்த சமயத்தில் திருமேனியைக் குறிப்பிட வேண்டும். தமிழாசிரியர் தான். எங்களை வாசிக்கச் சொல்வார். புரிஞ்சுக்கிட்டு வாசி என்பார். 9ல் துவங்கி 11 வரை அவர்தான தமிழாசிரியர். செய்யுளைத் தளை பிரித்து வாசிக்கச் சொல்வார். தடுமாறினால், உதவி செய்வார்.. அவரின் பெயர் திருமேனி என்பது தப்பு. சிரித்த மேனி என்று சொல்வதுதான் சரி. தமிழ் மீது எனக்கு ஏற்பட்ட காதலுக்கு அவர்தான் காரணம்.. கம்பனையும் இளங்கோவையும், பாரதியையும் பாரதிதாசனையும் சித்தர்களையும் அறிமுகம் செய்து வைத்தது அவர்தான்.

பூகோளம் வரலாறு ஆசிரியர்களில் கோதண்டராமனைக் குறிப்பிட வேண்டும். இந்தியாவில் குடியரசு எப்போது தோன்றியது என்று கேள்வி கேட்டு, மன்னராட்சிக்கு முன்னர் குடியரசுதான் இருந்தது என்ற வித்தியாசமான பதிலைச் சொல்லி விளக்கி திகைக்க வைத்தவர்.

மற்றவர் கேகே. இன்றைய செய்திகளைச் சொல்லு என்று கேட்பார். அதற்குப் பதில் சொல்லும் ஒரே மாணவன் நான்தான். அவரின் பாராட்டுதலைப் பெறுவதற்காகவே செய்தித்தாள் வாசிக்க ஆரம்பித்தேன். அவருடைய ஊர் பனங்குடி என்பது நினைவில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்காரரான அவர் புதுச்சேரிக்காரனாக சான்றிதழ் கொடுத்து வேலைக்குச் சேர்ந்திருந்திருக்கிறார் என்று இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.

ஜோசப் வாத்தியாரைச் சொல்லாமல் இருக்க முடியாது. எங்கள் பள்ளியின் கைவேலை ஆசிரியர் மட்டுமல்ல, நாடக ஆசிரியரும் அவர்தான். அவரது இயக்கத்தில் ஏசுவைக் கைகழுவிய பிலாத்து வேடத்தில் நான் நடித்தேன். பைபிளை எனக்கு அறிமுகம் செய்தது அவர்தான். அவர் எழுதி இயக்கிய மர்ம நாடகம் ஒன்றில் வேட்டுக்காரன் முன்னமேயே வேட்டுப்போட்டதால் கதாநாயகன் முன்னமேயே செத்துப்போக நாடகம் காமெடி ஆனது.

எங்கள் ஊர் மாதா கோவிலின் சாமியாராக இருந்தவரை இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். டின்டினை எனக்கு தள்ளுபடமாக அறிமுகம் செய்துவைத்தவர் அவர்தான். டின்டினில் ஆரம்பித்து அப்புறம் மாயாவி, இரும்புக்கை மாயாவி என்று பலரின் கைகளைப் பிடித்துகொண்டு நான் கற்பனையில் உலகை வலம் வந்திருக்கிறேன்.

முக்கியமாக சொல்ல வேண்டியது எஸ்எஸ் வாத்தியாரை. கோபக்காரர். கோபம் வந்தது என்றால் கையில் உள்ள சாக் பீஸ் அல்லது டஸ்டர் எங்கள் மூஞ்சுக்கு வந்து சேரும். அவர்தான் எனது ஆங்கில அறிவுக்குக் காரணம். அவர் வகுப்புக்கு வருவார். கோனார் நோட்சை கரும்பலகையில் எழுதிப் போட்டுவிட்டு தூங்கிவிடுவார்.

இந்த எழவுக்கு நோட்சே வாங்கிவிடலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், என் அண்ணன் நோட்சுக்கு நோ சொல்லிவிட்டார். புரியாமல் மனப்பாடம் செய்வது எனக்குப் பிடிக்காது. அதனால், எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினேன். இன்று ஆங்கிலக் கட்டுரைகள் எழுதுவது வரை வளர்ந்திருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் கோனார் நோட்சை எழுதிப்போட்டு கடுப்பேற்றிய எஸ்எஸ்தான்.

ஆறாவது படித்தபோது அறிவியல் ஆசிரியராக வந்த பழனிவேலுவை நிச்சயம் குறிப்பிட வேண்டும். பாடப்புத்தகத்தில் பாடத்தின் முடிவில் கேள்விகள் இருக்கும். அந்தக் கேள்விகளுக்கான பதிலை படத்திற்குள் அடைப்புக்குறி மற்றும் கேள்வி எண் குறிப்பிட்டு ஆசிரியர்கள் குறித்துத் தருவார்கள். பழனிவேலு அது முடியாது என்றார். பாடத்தை முடித்துவிட்டு கேள்விக்கு நீங்களே பதில் குறியுங்கள் என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார். வகுப்புக்கே அதிர்ச்சி. அனைவரும் பேசாமல் அமர்ந்துவிட்டனர். நான் குறிக்க ஆரம்பித்தேன்.

‘முடிந்ததா?’ என்று கேட்டபோது உயர்ந்த ஒரே கை என்னுடையது.

‘வெரிகுட்’ என்றார். வாசிக்கச் சொன்னார். பாராட்டினார். அப்புறம் எனது வகுப்பில் எல்லா பாடங்களுக்கும் பதில் குறித்து கொடுப்பது நான்தான் என்றானது. மாணவிகள் என்னோடு நெருக்கமானார்கள் என்பது கூடுதல் சந்தோஷம்.

ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இன்று கேள்விகளைக் கேட்டுக்கொண்டு வலைமனையில் தேடும் அளவுக்கு நான் வந்துவிட்டேன். ஆனால், பழனிவேலு ஆசிரியர், எனது வளர்ச்சிக்குக் காரணமான என் ஆசிரியர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவமதிப்புக்கு ஆளாகி குடிகாரர் ஆகிப்போனார்...

அப்புறம் நான் குறிப்பிட வேண்டியது கௌதமனை.. கல்லூரிப் படிப்பின் முதலாம் ஆண்டில் முதல் பருவத்தில் எனது தமிழாசிரியர். அப்போது செமஸ்டர் முறை வந்திருந்தது. அசைன்மெண்டுக்கு 25 மார்க். முதலாவது அசைன்மெண்டில் எனக்கு 25க்கு 25 மார்க். நம்புங்கள். தமிழில்..

இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும்.. எனது எழுத்து கோழி கிறுக்கலை விட மோசகமாக இருக்கும்.. இருக்கும் என்ன..? இன்றும் அப்படித்தான் இருக்கிறது... தட்டச்சு அப்புறம், கம்ப்யூட்டர் வந்ததால் நான் பிழைத்தேன்.

எனக்கு 25 மார்க்கா? என்னால் நம்பமுடியவில்லை..

அவர் பேப்பரை வினியோகித்ததே ஒரு நாடக நிகழ்வு போல இருந்தது. ரோல் நம்பரைச் சொல்லி அழைப்பார்.. அப்புறம் 8 அல்லது 7 அல்லது 13 என்று சொல்லி அந்த மாணவரிடம் பேப்பரைக் கொடுப்பார்..

எனது நம்பர் 601 மட்டும் கடைசி வரை வரவில்லை. கடைசியில் ஒரு பேப்பர் மட்டும் கையில் இருக்க 601 எழுந்திரு என்றார்.

நான் பயத்துடன் எழுந்திரித்தேன். தஸ்புஸ் என்று ஆங்கிலத்தில் பேசும் மெட்ரிக் மாணவர்கள் மத்தியில் மாட்டிக்கொண்ட தமிழ் மாணவன் நான். கல்லூரிக்குச் செல்வதற்கு என்று ஒரே பேண்ட் வாங்கியது அந்த வகுப்பில் நானாகத்தான் இருக்க முடியும். அதிலும், என்னோடு படித்த பெண்கள் நல்ல ஆடை அணிபவர்கள்.. நிர்மலாவில் படித்தவர்கள். அவமானப்படப்போகிறோம் என்று எண்ணி எழுந்து நின்றேன்.

‘நீ என்ன என்ஜினியரிங் போகப்போறியா?'

‘இல்லை' என்றேன்.

‘மருத்துவத்திற்குப் போட்டிருக்கியா?’

அதுபோன்று யோசிப்பதற்குக் கூட வக்கற்றவன் நான்.

‘இல்லை’ என்பதாக தலையசைத்தேன்.

‘25க்கு 25ப்பா இவன்…’ என்று பேப்பரைக் கொடுத்தார்.

அந்த அசைன்மெண்ட் ‘முவா’வின் கள்ளோ காவியமோ பற்றியது. அதற்கு நோட்ஸ் எல்லாம் இருக்கிறது. ஆனால், வழக்கம் போல நாவலைப் படித்துவிட்டு அது சரியான நாவல் இல்லை என்ற கருத்தை குழைத்து நெளித்து எழுதியிருந்தேன். அதற்குத்தான் அந்த மார்க்.

‘சொந்தமாக யோசிங்கடா.. தப்பாக இருந்தாலும்’ என்று கௌதமன் அன்று வகுப்பை முடித்தார்.

அங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. என் வாழ்க்கை கெட்டு சீரழிந்ததற்குக் காரணம் கௌதமன்தான் என்ற பின்னாட்களில் என் அம்மா குற்றம் சாட்டும் அளவுக்குப் போனது.

கௌதமன் நக்சல்பாரிக் கட்சியின் செயல்பாடுகளுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒருவர். அட்டவணைச் சாதி என்ற பட்டியலில் இடம்பெற மதம்மாறிய புஷ்பராஜ். அவர் எனக்கு ‘படிக’ளை அறிமுகம் செய்தார். வத்ராயிருப்பு ‘இலக்கிய வெளிவட்டம்’ நடராஜனை அறிமுகம் செய்தார். வெங்கட்ராமனைப் படிக்கக் கொடுத்தார். அப்புறம் கடைசியில் எஸ்.வி.இராஜதுரையின் அந்நியமாதல் படிக்கக் கொடுத்தார். அப்புறம் நானே மாக்சியத்தைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். நக்சல்பாரிகளை வேட்டையாடப்படுவதைக் கண்டேன். பின்னாட்களில் எம்எல் கட்சியைத் தேடி சேர்ந்தேன்.

கல்லூரியில் படித்த காலத்தில் நிறைய ‘கலகங்களில்’ பங்கெடுத்திருக்கிறேன். காலேஜ் நடக்குமா நடக்காதா என்று என்னிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு ஏதேதோ நண்பர்களடன் சேர்ந்து செய்திருக்கிறேன். ஆனால், எல்லாப் புகழும் இல்லை.. எல்லா பழியும் கௌதமனுக்கே..

இப்படி நிறைய ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதுதான் என் வாழ்க்கைப் பயணம்.

ஒரு மாணவரும் எனக்கு ஆசிரியாக மாறியிருந்தார். அவர் பெயர் பன்னீர் செல்வம். இன்றைய வார்த்தைகளில் தலித் மாணவர். அவர் என்னுடன் வேதியியல் படித்தார். தலித் மாணவர் விடுதியில் இருந்து படித்தார்.

அந்த விடுதி மாணவர்களுக்கு மாலையில் டியூஷன் எடுக்க ஆள் தேவைப்ப‌ட்ட போது என்னை அணுகினார். நன்றாகப் படிப்பவன் என்று என்னைத் தப்பாக நினைத்துக்கொண்டிருந்திருக்கிறார். இப்போதும் பலருக்கும் அந்த தப்பெண்ணம் நீடிக்கிறது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் விடுதியில் டியூஷன் பணியை லியோனி என்ற மிஸ் நிர்வாகம் செய்து வந்தார்கள். வாழ்க்கையிலும் அவர்கள் மிஸ்தான். ஏனென்று தெரியாது. லியோனி மிஸ்சின் மேற்பார்வையில் தலித் மாணவர்களுக்கு டியூஷன் எடுத்தேன். அந்த மாணவர்கள் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள் ஆனார்கள். அவர்களுடன் ஒரு நாள் இரவு சாப்பிடச் சொன்னார்கள். பன்னீர் ‘வேண்டாம்.. மிசே ஒத்துவராது’, என்றார்.

நான் ஒப்புக்கொள்ளவில்லை. சாப்பிட்டேன்.

‘என்னது, முதலிலேயே ரசம் ஊத்துறாங்க’ என்று கேட்டேன். ‘மிசே அதுதான் சாம்பார்’ என்றார்கள்.

என்னால் மறக்க முடியாத சாப்பாடு அது. குமட்டலை அடக்கிக்கொண்டு சாப்பிட்டேன். இரசத்தில்.. இல்லை சாம்பாரில் கருப்பாக மிதந்தது வண்டு என்று எனக்குச் சந்தேகம்.. சாப்பிட்ட உடனேயே சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் மிதிமிதியென்று மிதித்துச் சென்று அப்புறம் வாந்தியெடுத்தேன்.

அந்த சாப்பாடு என் வாழ்க்கையையே மாற்றிப் போட்டது.. அண்ணன் கேட்கச் சொன்ன ஏன் என்ற கேள்வி முன்னுக்கு வந்தது.

அப்புறம் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னர் ஒரு நாள் பன்னீரைப் பார்த்தேன். என்னைப் பற்றி தெரிந்த பின்னர், ‘வேண்டாம் மிசே.. கம்யூனிட்டு கட்சி வேண்டாம்’ என்றார்.

‘ஏன்’ என்றேன்.

அவரது ஊரில் கம்யூனிஸ்ட் கட்சி கொடியேற்றிய தலித் ஒருவர் கைகள் வெட்டப்பட்டு அந்த கொடிமரத்தின் கீழே பிச்சை எடுப்பதைச் சொன்னார். கட்சிக்காரர்கள் கண்டுகொள்ளவில்லை என்பதை வலியுறுத்திச்சொன்னார். சற்று அதிர்ந்தாலும் எனது அமைப்பு அரசியல் அறிவின் அடித்தளத்தை அது மேலும் உறுதிப்படுத்தியது.

கம்யூனிஸ்ட் கட்சியை கம்யூனிஸ்ட் கட்சியாக வைத்திருக்கவும் போராட வேண்டும் என்பதை மறக்க முடியாத அரிச்சுவடியாக எனக்குள் பொதித்தது.

2004 சுனாமியின் பின் நான் ஊர் சென்றபோது பன்னீர் தாசில்தாராக இருந்தார். இன்று இன்னமும் மேலே சென்றிருக்கலாம்...

அரசியல் வாழ்க்கையில் கூட எனக்கு நிறைய ஆசிரியர்கள். ஆனால், எனக்கு எதிர்மறை மாதிரியாக நின்ற ஆசிரியர்கள்தான் அதிகம்... அரசியல் வாழ்க்கையிலும்..

அவர்களிடம் நான் எதையெல்லலாம் எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். என்ன சொன்னார்களோ அல்லது என்ன சொல்லித்தர வேண்டுமோ அதற்கு எதிர்மறையானவர்களாக இருந்தார்கள். வாழ்ந்தார்கள். சொல்லித்தருவது பற்றியே தெரியாதவர்களாக இருந்தார்கள்...

தனக்குத் தெரிந்ததை பணிவுடன் சொல்லித்தர இயலாதவன் மனிதப்பண்பு கூட அற்றவன் ஆகிறான். அல்லது படித்திருந்தாலும் படிக்காதவன் ஆகிறான்.. தலைவனாக இருந்தாலும் போற்றிப் பாடும் அடிப்பொடி தொண்டர்களால் தூக்கி நிறுத்தப்படும் போலித் தலைவன் ஆகிறான்.

கம்யூனிஸ்ட்டு கட்சியிலும் அப்படி நடக்கும்..

தோழர் சுப்பு படுகொலையின் பின்பு தோழர் வினோத்மிஸ்ரா அந்தப் பகுதிக்கு வந்திருந்தார். அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்துவிட்டன. அவர் தங்கியிருந்த விடுதி அறையில் கட்டிலுக்குக் கீழே நான் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்தேன். யாரோ தட்டி எழுப்பியது கண்டு கட்டிலுக்குக் கீழிருந்து எட்டிப் பார்த்தேன்.. தோழர் விஎம்.. ‘தூங்கு.. நான் புறப்படுகிறேன்..’ என்பதாக சைகையில் சொல்லிவிட்டு செவ்வணக்கம் செய்தார். எனக்குத் தூக்கம் போய்விட்டது. என்னிடம் சொல்லாமல் போனால் என்ன குடியா முழுகியிருக்கும்? எந்தப் பொறுப்புமற்ற சாதாரண இளைஞன் நான். தோழர் விஎம் கற்றுத்தந்த அந்தப் பாடம், அமைப்பு கட்டும்போது துரும்பையும் தனக்கச் சமமானதாக மதிக்க வேண்டும் என்ற அந்தப் பாடம் எனது ஆசான்களில் முதன்மையானவர் தோழர் விஎம் என்றாக்கியது.

என்னைத் தூண்டி என்னை வளர்த்தெடுத்தவர்கள் குறைவு. ஆனால், அந்த குறைவான ஆசிரியர்கள் தான் என்னை சாதகமான திசையில் உந்தித் தள்ளினார்கள். உண்மைக்காக நில் என்று கற்றுக்கொடுத்தார்கள். எதிர்க்கத் துணி என்று போதித்தார்கள். அவர்கள் இன்று மாறியிருக்கலாம்..

ஆனால், நான் கௌதமனின் வார்த்தையில் கலக‌க்காரனாகவே தொடர்கிறேன். ஆம் உழைக்கும் வர்க்கத்திற்கான கலகக்காரன் என்பதாக நான் அறியப்பட்டிருக்கிறேன் என்றால், அதற்கும், நான் இன்னமும் அறியப்படவில்லை என்றால் அதற்கும் என் ஆசிரியர்கள் காரணம்.

என் அண்ணன் கொடுத்த கம்பராமாயணத்தில் கண்ட இராமராஜ்ஜியத்தை நிறுவ, கௌதமன் அறிமுகம் செய்த மார்க்சின்.. ‘அதுதான் மார்க்சியம் என்றால், நான் மார்க்சிஸ்ட் இல்லை’ என்று சொன்ன மார்க்சின் மானுடத்திற்கான அறிவியலை நிறுவ நான் என்றும் முன்செல்வேன். ஐயர் மிசேவின் அன்பைப் பொழிப‌வனாக நான் மாறியிருக்கிறேன். பழனிவேல் சார்களின் போராட்டத்தை வெற்றியாக்க உறுதியுடன் பணி செய்கிறேன். பன்னீரின் எச்சரிக்கை பொருளற்றது என்றாக்க நான் முனைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன்..

நான் என்பது நானில்லை. எனது ஆசிரியர்கள். எதிர்மறை நேர்மறை ஆசிரியர்கள்... சமூகத்தால் படைக்கப்பட்ட மனிதர்கள்.

ஆம்.. மனிதர்கள்.. அதுதான் முக்கியம். மனிதர்கள்தான் மனிதர்களை உருவாக்குகிறார்கள்.

Pin It