தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி தரம் குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அரசின் கொள் கையைத்தான் முதல் காரணமாகச் சொல்ல வேண்டும்.

தமிழ்வழியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்று வெற்றிபெறும் மாணவர்களுக்குக் கூடத் தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி யைக் கற்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அக் கல்வி யும் தமிழ்வழியில் இல்லை. குறைந்த எண்ணிக்கை யில் பதினிலைப் (மெட்ரிகுலேசன்) பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களே பெரும் பாலான இடங்களைக் கைப்பற்றும் நிலை உள்ளது. இப்போதும் தமிழ்வழியில் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் படிக்கும் 85 விழுக்காட்டு மாணவர்கள் இரண்டாம் நிலைக்குத் தாழ்த்தப் பட்டுள்ளார்கள். வேலை வாய்ப்பிலும் இந்த நிலையே தொடர்வதால் தமிழ்வழி மாணவர்களின் எதிர்காலம் பாழ்பட்டுப் போகிறது.

இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கென்று தி.மு.க. அரசு ‘தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு முன்னுரிமை’ என்று கொண்டுவந்த ஆணை தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை; ஏமாற்றத்தையே கொடுத்தது.

ஊர்ப்புறப் பள்ளி மாணவர்களுக்கு முந்தைய தி.மு.க. அரசு உயர்கல்வியில் 15 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்தது. அதனால் ஏழை, எளிய சிற்றூர்ப் புற மாணவர்கள் மருத்துவம் முதலிய தொழிற்கல்வி படிக்க வாய்ப்பு கிடைத்தது.

முந்தைய அ.தி.மு.க. அரசு ஊர்ப்புற மாணவர்களின் ஒதுக்கீட்டை 25 விழுக்காடாக உயர்த்தியது. அது நடைமுறைக்கு வரவில்லை. அதனால் ஊர்ப்புற மாணவர்களின் எதிர்காலம் பாழாகிவிட்டது.

தமிழக அரசு 85 விழுக்காடு தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அதிக விழுக்காடு ஒதுக்கீடு செய்வதே நியாயமானதாகும்.

தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்திருக் கும் அ.தி.மு.க. அரசு முன்பு கொண்டுவந்த ஊர்ப்புற மாணவர்களின் 25 விழுக்காட்டு ஒதுக்கீட்டை மீண் டும் கொண்டுவந்து அவர்களின் வாழ்வில் ஒளி யேற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருந்தால் இந்தச் சிக்கல் வராது. இங்கே பலவகையான கல்வி முறைகள் உள்ளன. இருக்கும் தமிழ்வழிக் கல்வியின் தரம் மிக இழிந்த நிலையில் உள்ளது. இதற்குத் தமிழக அரசுக் கல்வித் துறையும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் தொடக்கக் கல்வி பற்றிய நடைமுறை விதிகளுமே காரணங்கள் ஆகும். சமச்சீர்க் கல்வியை இந்த ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் வண்ணம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக அரசே!

*      பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை அனைத்துக் கல்வியையும் தமிழில் வழங்க வேண்டும்.

*      மாநில வாரியம், பதினிலை வாரியம், ஆங்கில-இந்திய வாரியம், கீழையியல் வாரியம் என்றுள்ள பலவகை வாரியங்களையும் அகற்றி மாநிலக் கல்வி வாரியத்தை மட்டுமே அரசு வலுப்படுத்த வற்புறுத்துகின்றோம். இந்திய அரசினர் நடுவண் கல்வி வாரியத்தையும் தடைசெய்ய வற்புறுத்து கிறோம்.

*      தமிழ்நாட்டில் 85 விழுக்காட்டு மாணவர்கள் தமிழ் வழியில்தான் படிக்கிறார்கள். உயர்கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 85 விழுக்காட்டு ஒதுக்கீட்டைத் தமிழ்வழி மாணவர்களுக்கு ஒதுக்க கேட்டுக் கொள்கிறோம்.

*      நெருக்கடி நிலைக் காலத்தில் இந்திய அரசு கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றிக் கொண்டது. அதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண் : தமிழ் உரிமைக் கூட்டமைப்பு

எண்.19, குறுக்குச்சாலை, புதுவண்ணை,

சென்னை - 600 081.

தொடர்புக்கு : 9444540549 / 9443306110

Pin It