2017ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றம் ஒருமித்து நிறைவேற்றிய ‘நீட்’ விலக்கு கோரும் மசோதாவை தமிழ்நாடு அரசுக்குத் திருப்பி அனுப்பி விட்டதாக நடுவண் அரசின் உள்துறை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவித்திருக்கிறது. இரண்டாண்டுகள் தமிழக சட்டமன்றமும் தமிழக மக்களும் இது குறித்து இருட்டிலேயே வைக்கப்பட்டிருக்கிறார்கள். நடுவண் அரசின் இந்த துரோகத்துக்கு ஒரு வகையில் தமிழ்நாடு அரசும் பொறுப்பேற்க வேண்டும்.

இராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் நீண்டகாலம் அடைக்கப்பட்டிருந்த ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் உரிமை தமிழக அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் விடுதலையை தமிழக சட்டமன்றத்தில் அறிவித்த அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா நடுவண் அரசுக்கு 3 நாள் கெடு விதித்தார் என்பது வரலாறு. அவரது வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக் கொண்டிருக்கும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி

‘நீட்’ மசோதாவை திருப்பி அனுப்பி 2 ஆண்டுகாலம் ஓடிய பிறகும் அதை வெளிப்படுத்தாமலே மவுனம் சாதித்திருக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவ்வப்போது சீண்டிக் கொண்டிருப்பதே நடுவண் பா.ஜ.க. ஆட்சியின் வழக்கமாகிவிட்டது. மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்ற அடுத்த நாளே கல்விக்கான தேசிய கொள்கையை வெளியிட்டார்கள். தமிழ்நாட்டில் மும்மொழித் திட்டம் வழியாக இந்தி கட்டாயமாகும் என்ற ஆபத்தான அறிவிப்பும் இதில் இடம் பெற்றிருந்தது. தமிழகம் வெடித்துக் கிளம்பவே கல்விக் கொள்கையைத் திருத்தி தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு இருக்காது என்று அறிவித்தார்கள். ஆனால் அந்த கல்விக் கொள்கையில் சமூகநீதியை ஒழித்து குலக்கல்வியைக் கொண்டு வரும் ஆபத்தான பரிந்துரைகள் அப்படியே இருக்கின்றன.

தொடர் வண்டித் துறையில் கட்டுப்பாட்டு நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களுக்கு மாநில மொழிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று தென்னக தொடர் வண்டித் துறை தலைமை அதிகாரி அறிவித்தார். அறிவிப்பு வந்த உடனேயே தி.மு.க.வினர் முற்றுகைப் போராட்டம் நடத்திய பிறகு, அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

அஞ்சலகத் துறையில் தபால்காரர் பன்முக பணியாளர். மெயில்கார்டு, தபால் உதவியாளர் மற்றும் தபால் பிரிக்கும் பணி உதவியாளர் வேலைகளுக்கான குரூப் ‘டி’ பிரிவுக்கான தேர்வு - இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்று திடீர் என தேர்வுக்கு இரு நாட்களுக்கு முன் அறிவிப்பு வந்தது. ஏற்கெனவே தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட்ட தேர்வுகள் இவை. சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கடும் எதிர்ப்புகள் வந்த பிறகு, நடுவண் ஆட்சி பின்வாங்கியது. நடத்தப்பட்ட தேர்வை இரத்து செய்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சசர் அறிவிக்கிறார்.

இப்படி ‘திடீர்’ அறிவிப்புகள் எங்கிருந்து திணிக்கப்படுகின்றன? அரசு எந்திரத்தை அரசுக்கு வெளியிலிருந்து ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன மூளைகள் இயக்கிக் கொண்டிருக்கின்றனவா? இவையெல்லாம் மர்மங்களாகவே இருக்கின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிற்போக்குக் கல்வி மதவாத பார்ப்பனியக் கொள்கைகளை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்று திட்டவட்டமாக தேர்தல் முடிவுகள் வழியாக மக்கள் அறிவித்த பிறகும் ஏன் இந்தத் திணிப்புகள் தொடருகின்றன?

தமிழர்களை ‘சோதனை எலிகளாகக் கருதுகிறார்களா? அல்லது தமிழ்நாடு இந்தியாவுக்குள் இருப்பதா, இல்லையா என்ற முடிவுக்கு தமிழர்கள் வந்தாக வேண்டிய சூழலை நடுவண் ஆட்சியே உருவாக்கிக் கொண்டிருக்கிறதா?

Pin It