அடுத்தநாள் செய்யத்தக்க வேலைகளை முதல் நாளே திட்டமிடுபவரும், பகல் முழுதும் செய்ய வேண்டிய வேலைகளைக் காலையிலே திட்டமிடுபவரும் உளர். எதையும் திட்டமிடாது முதலில் எது தோன்றுகிறதோ அதை செய்பவரும் இருக்கின்றனர். முன் செய்யத் தக்கதைப் பின்னும், பின் செய்யத் தக்கதை முன்னும் செய்து பொழுதைக் கெடுப்பவரும் உள்ளனர்.

செல்லும் வழிகளிலே பல வேலைகளை முடித்துக் கொண்டு நேரத்தை மிச்சப்படுத்துபவரும் உண்டு. இன்று அதை ‘நேர மேலாண்மை’ என்கின்றனர். திட்டமிடுபவரால் தான் அரிய பெரிய வேலைகளைச் செய்ய இயலும். அவரே தலைமைக்குத் தக்கவர். எதையும் நேரம் தவறாமல் செய்து பழக்கபட்டவர்க்கே இஃது இயலும். இத்தகைய வாழ்வியலைக் கற்றுத்தரும் பழமொழி இது: ‘வேலையை பார்த்து வேலை செய்தால் விரல் மடக்கக் கூட நேரம் இருக்காது’ என்பது.

பெரியோர்கள் பலர்க்கு வழிகாட்டுவார்கள். வழியில் காணும் தீமைகளைக் களைய முற்படுவார்கள். சமுதாயக் கேடுகளைத் தடுப்பர். அது அவர்களது சமுதாய அக்கறை. தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் குழாய்களை நிறுத்துவர். செய்ய முடியாத நிலையில் அருகில் இருப்பவரிடம் கூறித் தடுப்பர். அப்படிக் கூறியவரையே செய்யச் சொல்லும் சோம்பேறிகளும் உண்டு.

‘உன் பையன் என்ன செய்கிறான் சும்மாவா இருக்கிறான்?’ என்றால் ‘நீதான் ஒரு வேலை வாங்கிக் கொடேன்’ என்பவரையும் காண்கிறோம். வேலையைத் திறமையாளர் தானே தேடிக் கொள்வது முறை. கருத்து கூறியவரையே வேலைவாங்கும் கொடுமையைக் காட்டுகிறது ஒரு பழமொழி : ‘சோளக் கொல்லையிலே மாடு மேயுதுன்னா சொன்ன வாயாலே ஓட்டு’ன்னுன்னானாம்.

’தேனெடுப்பவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?’ என்னும் பழமொழி பொது நன்மை கருதிச் சில செயல்களைச் செய்பவரே சிறுபயனையும் துய்த்துவிடுவர் என்பதை உணர்த்துகிறது. சாலையைப் போடுபவரே சாலையில் நடப்பது போல ஆயினும் பொதுப்பணியில் ஈடுபடுவோர் கிடைத்தவரை பறிக்கிற - சுருட்டுகிற காலமிது.

அதனால், மேலிடத்திலிருந்து கீழிடம் வரை ஊழல் - கையூட்டு பெருத்துவிட்டது. ஊழ்(முறை) அல்லாது ஊழல். ‘அரைக்காசு சம்பளமாயினும் அரசு வேலை போல் ஆகுமா?’ என்ற காலம் ஒன்று இருந்தது. இன்று அரசு வேலை அரை வேலை என்றாயிற்று. ஆயினும் நம்மைப் பல வழிகளிலும் காக்கும் பொறுப்பு அரசின் கையிலே உள்ளது.

சுருட்டுவதற்கும் சுரண்டுவதற்கும் வகை தொகை இல்லாமற் போய்விட்டது. விரலுக்குத்தக்க வீக்கம் இல்லை. விரல்கள் விரியன் பாம்பாய் பெருக்க நினைக்கின்றன. மலை முழுங்கி மன்னார் போல முழுமையும் சுருட்டுவாரின் நிலையைப் படம்பிடிப்பது இப்பழமொழி : ‘அண்ணாமலையாரை அண்ணாக்க விடுகிறவன்.’

இளமையில் பழகிய தீய பழக்கம் முதுமையிலும் நீங்காது. அதனால்தான் ‘தொட்டிற்பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்றனர் நம் முன்னோர். இளமையில் புகைக்க, குடிக்க பழகியவன் தன் கட்டை போகும்வரை கைவிட மாட்டான். அப்பழக்கங்கள் அவனுக்குரிய தண்டனையைத் தந்தே விடும். வாழ்க்கைத் தடத்தில் நல்லவும், தீயவும் எதிர்ப்படும். நல்லதைக் கொண்டு, தீயதை விலக்கியும் விலகியும் வாழ்பவரே சான்றோர்.

‘எப்படித்தான் இருக்கிறது’ என்பதைப் பார்ப்போமே என்பதையறிய பழகிய தீய பழக்கம் அவனிடம் மறைந்திருந்த பல தீயவற்றையும் வெளிப்படுத்தி விடும். என்பது ஒரு திருக்குறளின் (928) கருத்து. தீய ஒன்று தம் இனத்தையெல்லாம் கூட்டிக் கொண்டு வந்து குப்பை மேடாக்கி விடுவதை வாழ்வில் பலரிடம் காண்கிறோம்.

பழகிய தீய பழக்கமே வாழ்வாகிப் போனால்... ‘காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது’ என்னும் பழமொழி நமக்கு எவ்வளவு எச்சரிக்கை தருகிறது பார்த்தீர்களா?

மக்களில் ஒவ்வொருவருக்கும் சில திறமையும் சில ஆற்றலும் இருக்கும். அவற்றை அவரவரே வெளிப்படுத்த வேண்டும். அவற்றை அறிவார் யார்? அவருக்குப் பயிற்றுவித்த நல்லாசானும் ஊருக்கு வழிகாட்டும் உறவோரும் உற்றாருமே. அவற்றை யுடையாருக்குத் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைத்தால் சிறந்து விளங்குவரே! காக்கை உட்காரப் பனம் விழுந்தாற் போல பொருத்தமில்லா  வேலை புறவழியில் கிடைத்தால் பத்தோடு பதினொன்றாய் இருப்பரே.

இன்றைய கல்வி முறையில் திறமை, ஆற்றல், கூர்மை, பண்பு முதலியன அறிய வழியுண்டா? இவற்றையுடையார்க்குப் பொருத்தமான வேலை கிடைக்கின்றதா? வாய்ப்பும், வசதியும் உள்ளார்க்கே மேற்படிப்பும், மேற்பணியும் என்றால் திறமை முதலியன பெற்றவர் என்னாவர்? இவையுடையார் அயல்நாட்டுக்குச் சென்றால் கல்வி தந்து வளர்த்த இந்நாடு எந்நிலை ஆவது? செயற்குரிய ஆற்றல் இல்லாதவர் செயற்கரிய செயல்கள் செய்வாரா? அரிய செயல்கள் செய்பவரே சமுதாயத்தை வழிநடத்த இயலும்.

எளிய செயலைக் கூடச் செய்ய மாட்டாதவர் அரிய செயல்களை எப்படிச் செய்வர்! சோற்றிலே கிடக்கிற ஈயை எடுக்க மாட்டாதவன் சேற்றிலே கிடக்கிற எருமையைத் தூக்குவானா? என்னும் பழமொழியை எண்ணிப் பாருங்கள்!

சில வேலைகளுக்குப் படிப்பறிவைவிட பட்டறிவு (அனுபவம்) முதன்மையானது. தனியார் பட்டறிவின ரையே தேர்ந்தெடுப்பர். படிப்பறிவு தெரியியல் (Theory); பட்டறிவு (Practical) அதனால்தான் ஆசிரியர், மருத்துவர் முதலிய படிப்புகளுக்கு பயிற்சி எனத் தனியே வைத்துள்ளனர். பழகியவன் கையை விட்டுவிட்டு மிதிவண்டி ஓட்டுவது போல பட்டறிவு மிக்கவன் பணி திறமையானது, நுட்பமானது.

பயிற்சி நுட்பத்தைத் தரும். இசைக்கருவி இயக்குவார் நாளும் பயிற்சி பெறுவதைக் காண்கிறோம்! படித்தவர் பல மணி நேரம் செய்வதை பட்டறிவு மிக்கார் சில மணிகளில் செய்து முடிப்பர். உழவின் பயன் விளைச்சலை வீட்டில் சேர்ப்பதுதான். இட்ட வெள்ளாமை வீட்டுக்கு வராமல் உழவன் படும்பாடு சொல்லி மாளாது. பட்டறிவின் பயனை வலியுறுத்தும் பழமொழி இது. விளையாட்டுப் பிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது.

பண்டைக் காலத்தில் மன்னர்களே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கினர். பின்னர் ஊரவையினர் தீர்ப்புரைத்தனர். ஆங்கிலேயர் வருகைக்குப் பின் வழக்கு மன்றங்கள் வந்தன. இவை பெரும்பாலும் வட்ட, மாவட்ட வருவாய் அலுவலகங்களோடு இணைந் திருந்தன. அதனால் அவற்றைக் கச்சேரி என்றனர்.

வழக்கு மன்றங்களில் வழக்கு நாள் குறிக்கப்படும். வழக்குரைஞர் சொல்வதை நம்பிப் படிக்காதவர்கள் வழக்குக்குச் செல்வர். பல மணிநேரம் காத்துக் கிடப்பர். உண்பதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் சென்ற வேளையில் உசாவல் அழைப்பு வரும். ஆள் இல்லையென்று நாள் ஒத்துவைக்கப்படும். பின்னர் அலைய வேண்டிவரும், கச்சேரி காத்தவர் பாடு பெரும்பாடுதான்.

கடன் கொடுத்தலும் வாங்கலும் மக்கள் வழக்கம். தன்னிடம் இருந்தால் கொடுத்தலும் இல்லாவிட்டால் நெருக்கமானவரிடத்தும், பழகியவரிடத்தும் கடன் வாங்கிக் கடன் கொடுப்பவரும் உண்டு. நாள் கடந்தால் கடன் கொடுத்தவர் நெருக்குதலாலும், வாங்கியவர் இயலாமையாலும் அவர் இருதலைக் கொள்ளி எறும்பாய் படும் இடர்ப்பாடு பெரிது. இவ்விரண்டையும் இணைத்து ஒரு பழமொழி எழுந்தது. ‘கச்சேரி காத்தவனும் கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கடைத்தேறான்.’

(வளரும்)