சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு குறைதீர்க்கும் நாள் மனு அளிக்க வந்திருந்த ஒருவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்த பணியாளர் ஒருவர்  "மனுவை அளிக்க  உனது வாக்காளர் அடையாள அட்டை உள்ளதா? ஓட்டுநர் உரிமம் உள்ளதா? வேறு ஏதேனும் சான்றிதழ்களை வைத்துள்ளாயா?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்து எடுத்தார். மனுக்களை அளிப்பதற்கான நீண்ட வரிசையில் நின்றிருந்த மக்களில் இருந்து அந்த நபர் சற்று கலக்கத்துடன் எந்த பதிலையும் அளிக்காமல் வெளியேறினார். நான் அருகில் சென்று தோளைத் தொட்டேன்; திரும்பினார். அவரது கையில் இருந்த மனுவை வாங்கிப் பார்த்தேன். செவித்திறன் குறைபாடு உடைய அவரால் எதையும் கேட்க இயலாது. எதையும் பேசவும் இயலாது. எந்த மொழியில் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதற்கான பதிலை சொல்ல இயலவில்லை. அவர்களது உலகத்தில் எந்த மொழியும் இல்லை, ‍எந்த சொற்களும் இல்லை. கைகளும், கைவிரல்களும, முக பவைனைகளும், விழியின் அசைவுகளும், உள்ளத்துக் கதைகளை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இன்னொரு செவித்திறன் குறைபாடு உடையவரை சந்திக்கும்வரை எவ்வளவு பெரிய மனிதக் கூட்டத்திலும் தனிமையில் இருக்கிறார்கள். அவர்களின் மொழி பேசும் ஒருவர் அவரைச் சந்திக்கும் வரையிலும் யாரிடமும் எதுவும் பேசாது மெளனமாக கண்களால் இந்த உலகத்தை அளந்து கொண்டிருக்கிறார்கள்.

 அவரது தேவையை எழுதிக் கொண்டு வந்திருந்த அந்த மனுவில், "சுயமாக தையலகம் ஒன்றைத் துவக்க வேண்டும். அதற்கு வங்கியின் மூலம் கடனுதவி வேண்டும்" என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்க வந்திருக்கிறார். அவரைப் புரிந்து கொள்வதற்கோ, பதில் கூறுவதற்கோ யாருமில்லை. செவித்திறன் குறைபாடு உடையவர்களின் சைகை மொழியை யாரும் அறிவதில்லை. சைகை மொழியானது சர்வதேச மொழி. செவித்திறன் குறைபாடு உடையவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எந்தக் கதைகளும், கட்டுரைகளும், நூல்களும், திரைப்படங்களும் பதிவு செய்வதில்லை. திரைப்படங்களில் செவித்திறன் குறைபாடு உடையவர்களை மையமாக வைத்து கிண்டல், கேலி, நையாண்டி செய்வது என்பதைத் தவிர வேறு எதையும் பதிவு செய்வதில்லை. கிரேஸி மோகனின் அத்தனை நாடகங்களிலும்  செவித்திறன் குறைபாடு உடையவர்களை ஒரு கதாபாத்திரமாக்கி அவர்கள் பேசுவதை வைத்து கிண்டல், கேலி செய்வது தொடர்ந்து ஒரு முக்கியமான நகைச்சுவைக் காட்சியாக சித்தரிக்கப்படுகிறது. "செவிடு, டமாரச் செவிடு" என்றெல்லாம் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளையே பயன்படுத்தி அவர்களை கேலி செய்கிறார்கள். எஸ்.வி.சேகர், மெளலி போன்றவர்களின் நாடகங்களில் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் தொடர்ந்து கேலியாக சித்ததரிக்கிறார்கள். அவர்களின் மன உணர்வுகளை, அவர்களின் துன்பத்தை, அவர்களின் இயலாமையை, அவர்களின் மாற்றுத்திறனை பதிவு செய்வதாக ஒரு காட்சி கூட இடம் பெறாது. 

 

செவித்திறன் குறைபாடு உடையவர்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. முழுவதுமாக செவித்திறன் பாதிக்கப்பட்டு பேசும் சக்தியும் இழந்தவர்கள். 2. முழுவதுமாக செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள்; ஆனால் பேச இயலும் (ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு செவித்திறன் இழந்தவர்கள்), 3. செவித்திறன் பாதிப்பு குறைந்து, பேசும் திறன் உடையவர்கள். இவர்களின் முதல் இரண்டு பிரிவைச் சேர்ந்தவர்களே அதிகம்.   செவித்திறன் குறைபாடு உடையவர்கள் படும் துயரங்கள் சொல்லி மாளாது. புதிய நபர்களிடம் பேச இயலாது. அறிமுகமான நபர்களிடம் பேசும் பொழுது அவர்களின் உதடு அசைவுகளை நன்கு கூர்ந்து கவனித்து அவர்கள் பேசுவது என்ன என்பதை அறிந்து அதற்கு தகுந்த பதில் சொல்வது எவ்வளவு கடினம் என்பதை யாரும் சிந்திப்பதில்லை. பேருந்தில் நடத்துனரிடம் பணச்சீட்டு பெறக் கூட இயலுவதில்லை. பேருந்தின் இரைச்சலில் இவர்களின் குரல் (ஓசைகள்) யாரையும் எட்டுவதில்லை. கடைகளுக்குச் சென்று எந்தப் பொருட்களையும் இவர்களால் வாங்க இயலுவதில்லை. விற்பனைப் பணியாட்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம் தொடர்ந்து பேசுவதைப் போல் இவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது அவர்களுக்கு மிகுந்த துன்பத்தையே அளிக்கிறது.

மத்திய அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு அந்தந்தத் துறைகளில் இருந்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இப்பபயிற்சிகளில் நன்கு காது கேட்கும் சராசரிப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் அதே பயிற்சியையே வழங்குகிறார்கள். முழுக்க முழுக்க விரிவுரையாற்றுகின்றனர். செய்முறையான பயிற்சிகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கென்று சைகைமொழி தெரிந்த நபர்களையோ நியமிக்கவில்லை. அந்தப் பயிற்சிக்குச் சென்ற செவித்திறன் குறைபாடு உடையவர்கள், பயிற்சியளிப்பவர்கள் அளிக்கும் எவ்விதப் பயிற்சியையும் புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருந்தனர். பயிற்சி காலம் முடிந்து பணிக்குச் செல்ல வேண்டிய நாளில் செவித்திறன் குறைபாடு உடைய அந்த நபர்கள் எங்களால் இந்த வேலைக்குச் செல்ல இயலாது. எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் எதையும் கற்கவில்லை. குறைபாடு இல்லாத சராசரி மனிதர்களைவிட நன்கு படித்து, அவர்களைக் காட்டிலும் போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற செவித்திறன் குறைபாடு உடைய ஒரு பெண் சரியான பயிற்சி அளிக்கப்படாத காரணத்தினால் அவளது வேலையை திறம்படச் செய்ய இயலாமல் அலுவலகத்தில் அவமானப்பட நேர்ந்தது. சக ஊழியர்களின் கிண்டல்களும் கேலிகளும் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று தீர்க்கின்றன. அலுவலகத்திலும் சைகை மொழியறிந்தவர்கள் யாருமில்லை. அவளது துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூட யாருமில்லை. அலுவலகத்தின் நடைமுறைகளைக்கூட அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை. செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஒருநாள் விடுமுறை வேண்டுமென்றாலும்‍கூட அலுவலகத்திற்குத் தெரிவிக்க இயலுவதில்லை. ஒவ்வொரு சின்னச்சின்ன விடயங்களுக்கும் யாரையாவது சார்ந்தே இருக்க வேண்டிய துயரமான நிலை.

செவித்திறன் குறைபாடு உடைய ஒருவர் மருத்துவமனையில் சென்று தனக்கான சிகிச்சைக்கூட மேற்கொள்ள இயலுவதில்லை. எனக்குத் தெரிந்த செவித்திறன் குறைபாடு உடைய நண்பர் ஒருவர் மருத்துவரிடம் சென்று அவர் கூறியதை, எழுதிக்காட்டியதை அவர் தவறாகப் புரிந்து கொண்டு மருந்துகளை அளிக்க அதனால் இவருக்கு நோயின் தன்மை கூடிப் போனதுடன் மிக ஆபத்தான நிலைக்குச் சென்று மீண்டு வந்தார். மருத்துவம் போன்ற உயிர் காக்கும் உயர்கல்வியைப் பயின்றவர்கள் சைகைமொழியினைக் கற்றால், செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும். அனைவருக்கும் சைகை‍மொழியினை கற்பிக்க அரசு முயற்சிக்க வேண்டும். அவ்வாறு கற்றுக் கொண்டால் இந்த நாட்டில் இருக்கக்கூடிய லட்சக்கணக்கான‌ செவித்திறன் குறைபாடு உடையவர்கள், தங்கள் குறைகளை மறந்து சமுகத்தின் மைய நீரோட்டத்தில் கலந்து வாழ்வில் உயர முடியும். ஒவ்வொரு வகையான உடற்குறைபாடு உடையவர்களின் துன்ப துயரங்களை நீங்கள் அறிந்து கொண்டால், அவர்களுடன் உங்களுடைய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களிடம் அன்பு செலுத்தினால் அவர்களும் உங்களிடம் அன்பு பாராட்டி உங்களை நேசித்து உங்களின் மூலமாக இந்த உலகத்தைப் புரிந்து கொண்டு அனைவரையும் நேசிப்பார்களே. இது மனித குலத்திற்கு மேலும் வலு சேர்க்கும்.

Pin It