“இந்த எல்லாத் திருடர்களின் பெயர்களும் ‘மோடி’ என்று முடிவதாகவே உள்ளது ஏன்?” என காங்கிரசுத் தலைவர்களில் ஒருவரான இராகுல் காந்தி 13.04.2019 கர்நாடகத்தில் ஒரு தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசினார். மோடி என்ற பின்னொட்டு பெயருள்ள 13 கோடி மக்களையும் இராகுல் காந்தி இழிவுப்படுத்திவிட்டார் என குசராத்து பா.ச.க. தலைவர்களில் ஒருவரான புர்னேஷ் மோடி சூரத் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 2019-இல் வழக்குத் தொடுத்தார்.
3 ஆண்டுகளுக்குப் பின் 23.03.2023 அன்று அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. இராகுல் காந்தி அப்படிப் பேசியது ‘மிகக் கடுமையான குற்றம்’ என, இந்த வகைக் குற்றத்திற்கு அளிக்கக்கூடிய மிக அதிக அளவான 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவில் -கடந்த 75 ஆண்டுகளில் அவதூறுப் பேச்சுக்காக ஒரு அரசியல்வாதிக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் மக்கள் பிரநிதித்துவச் சட்டத்தின்படி :
1. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர் பதவியை இழக்க வேண்டும்.
2. தண்டனைக் காலம் முடிந்த பின் அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது. மோடியின் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டத் தீர்ப்பு இது.
அந்தத் தீர்ப்பை நிறுத்தி வைத்திடக் கோரி இராகுல்காந்தி சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அந்த நீதிமன்றம் அந்த முறையீட்டை ஏற்காமல் நிராகரிப்ப தாக 20.04.2023 அன்று கூறிவிட்டது. இதற்கிடையில் நாடாளுமன்ற மக்களவையில் இராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
இராகுல் காந்தி குசராத்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். குசராத்து உயர்நீதிமன்றத்தில் 5.7.2023 அன்று நீதிபதி ஏமந்த் எம்.பிரச்சக், “இராகுல்காந்தி இழைத்தது மிகவும் கடுமையான குற்றம் என்பதால் அவருக்கு உயர்ந்த அளவான 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது சரியே” என்று மேல்முறையீட்டினைத் தள்ளுபடி செய்தார். இராகுல் காந்தி இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
2001-இல் நரேந்திர மோடி குசராத்து மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்றது முதலே குசராத்து மாநில நிர்வாகமும் நீதித்துறையும் இந்துத்துவ மயமாக்கப்பட்டு விட்டன.
2002 குசராத்து கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கு பற்றிய உண்மையைச் சொன்னதற்காக இ.கா.ப. காவல் அதிகாரியான சஞ்சீவ் பட், பதவி நீக்கப்பட்டு, வேறொரு வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை அளித்து சிறையில் தள்ளியது எந்த வகை நீதி?
27.02.2002 அன்று குசராத்து கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் பெட்டிகள் சில எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தள் போன்ற சங் பரிவார அமைப்பினர் இசுலாமி யரின் கடைகள், வீடுகள் என சொத்துக்களுக்குத் தீ வைத்து அழித்தும் இசுலாமியப் பெண்கள் மீது பாலியல் வன் கொடுமைகளை நிகழ்த்தியும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இசுலாமியரைக் கொன்றும் வெறியாட்டம் ஆடினர். இந்தக் கலவரம் நடப்பதற்கு முன் 27.02.2002 அன்று குசராத்து முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி இல்லத்தில் உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி “இசுலாமியருக்கு எதிரான இந்துக்களின் சினத்தை வெளிப்படுத்த தடையில்லாமல் விட்டுவிடுமாறு” சொன்னார்.
சஞ்சீவ் பட் காவல் துறையில் 1999-2002-இல் (அகமதாபாத்) காந்தி நகர் புலனாய்வுப் பணியகத்தில் துணை ஆணையராகப் பணிபுரிந்தார்; முதலமைச்சர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றிருந்தார். இந்தக் காரணத்தினால் முதலமைச்சர் நரேந்திர மோடி வீட்டில் நடந்த மேலே சொன்ன கூட்டத்தில் இருந்தார்.
2002 குசராத் கலவரங்கள் தொடர்பாக பல புலனாய்வு விசாரணைகளிலும், நீதிமன்ற வழக்குகளிலும் பல உண் மைகள் வெளிவராமல் புதைக்கப்பட்டன. சஞ்சீவ் பட், 14.4.2011-இல் உச்சநீதிமன்றத்திற்கு அளித்த சான்று வாக்கு மூலத்தில் 27.02.2002 அன்று முதலமைச்சர் நரேந்திர மோடி வீட்டில் நடத்தப்பட்ட கூட்டத்தில் நரேந்திர மோடி மேலே குறிப்பிட்டவாறு சொன்னார் என்பதைத் தெரிவித்தார்.
சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்திற்கு அளித்த வாக்கு மூலத்தின் உண்மைத் தன்மையை அறிய உச்சநீதிமன்றம் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. அந்தப் புலனாய்வுக் குழு, 27.02.2002 அன்று நரேந்திர மோடி வீட்டில் ஏற்பாடு செய்திருந்தக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் பங்கேற்கவில்லை என்று உச்சநீதிமன்றத்திற்கு தெரிவித்தது. அதனடிப்படையில் சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்திற்கு அளித்த சான்று வாக்குமூலம் உச்சநீதிமன்றத்தால் 06.05.2011-இல் நிராகரிக்கப்பட்டது.
சஞ்சீவ் பட் அனுமதியின்றி பணிக்கு வரவில்லை என்றும் பணியில் இல்லாத போது அரசு மகிழுந்தைப் பயன்படுத்தினார் என்றும் 08.08.2011 அன்று ஜுனாகத், மாநில ரிசர்வ் காவல் மய்யத்தின் தலைவர் என்ற காவல் பணியிலிருந்து தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 19.08.2015-இல் காவல் பணியிலிருந்து முழுமை யாக நீக்கப்பட்டார்.
சஞ்சீவ் பட் 22 ஆண்டுகளுக்கு முன் 1989-இல் ஜாம் நகர் உதவி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். அப்போது எல்.கே. அத்வானி நடத்திய இரத யாத்திரைத் தொடர்பாக அங்கு எழுந்த கலவரத்தில் 30.10.1990-இல் 132 பேர் காவல் நிலையக் காவலில் வைத்திருந்து அப்போதே 132 பேரும் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பின் சில நாட்கள் கழித்து அதில் ஒருவரான பிரபுதாஸ் வைஷ்ணன் என்பவர் சிறுநீரகப் பழுது காரணமாக 18.11.1990 அன்று இறந்துவிட்டார். அவர் காவல் நிலையக் காவலில் இருந்ததன் காரணமாகத் தான் இறக்க நேர்ந்தது என இறந்தவரின் அண்ணன் வழக்குத் தொடர்ந்திருந்தார். கிடப்பில் கிடந்த இந்த வழக்கைத் தோண்டி எடுத்து அந்த வழக்கில் சஞ்சீவ் பட் இருந்ததால் சஞ்சீவ் பட்டுக்கு 20.06.2019 அன்று ஆயுள் சிறைத் தண்டனை அளிக்கப் பட்டது. சஞ்சீவ் பட் குசராத்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தும் 25.09.2019-இல் தள்ளுபடி செய்யப் பட்டது. இந்தக் காலப் பகுதியில் 16 ஆண்டுகளில் குசராத்தில் காவல் நிலையப் பாதுகாப்பில் இறந்த 180 நிகழ்வுகளில் இதுபோல் ஒருவரும் தண்டிக்கப்பட்டதில்லை என்பதிலிருந்து சஞ்சீவ் பட் எவ்வாறு மோடி அரசால் திட்டமிட்டுப் பழிவாங் கப்பட்டிருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
குசராத்தின் காவல்துறை கூடுதல் பொது இயக்குனராக இருந்த சிறீகுமார் என்பவர் 2002 கலவரத்தில், கலவரக் காரர்களுக்குச் சார்பாக காவல்துறை செயல்பட்டது என வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழுவும் நானாவதி-மேத்தா விசாரணை ஆணையமும் ஏற்கவில்லை. மாறாக சிறீகுமார் பொய்யான தகவல்களைத் தந்து அப்பாவிகள் மீது குற்றஞ்சாட்டுகிறார்; பொய்யானத் தகவல்களை அளித்து பரபரப்பை ஏற்படுத்தி னார் என்று 25.06.2022-இல் கைது செய்யப்பட்டார்.
குசராத்து கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடிவரும் தீஸ்தா செதால்வத் குசராத்து மாநில அரசாலும் நீதித்துறை யாலும் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்.
குசராத்து மாநில அரசின் பழிவாங்கும் மேற்சொன்ன நடவடிக்கைகளுக்கு நீதித்துறையின் போக்கு இசைவாக இருந்து வருகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை ஆகும்.
அறிவாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்களை நகர்ப்புற நக்சல்கள் என நசுக்கும் புதிய நாசிச பா.ச.க.
01.01.1818-இல் மராட்டிய மாநிலம், பூனா நகரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள பீமா கேரேகான் என்ற இடத்தில் 200 ஆண்டுகளுக்கு முன், மராட்டியத்தை ஆண்ட பேஷ்வாக்களின் பெரும்படையை எதிர்த்து கிழக் கிந்தியக் கம்பெனியின் பம்பாய் மாகாண இராணுவத்தில் இருந்த மராட்டிய பட்டியல் வகுப்பினரான மகார் வீரர்களைக் கொண்ட சிறிய படை போரிட்டு வெற்றியடைந்தது; அவ்விடத் தில் வெற்றித் தூண் நிறுவப்பட்டது. அந்த நிகழ்வை ஆண்டுதோறும் சனவரி முதல் நாளில் அந்த வட்டாரத்தில் உள்ள தலித் மக்கள் அவ்விடத்தில் கூடிக் கொண்டாடுவது வழக்கம். 2018-இல் 200-ஆம் ஆண்டு என்பதால் அந்த நிகழ்வு பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
‘உரத்த அறைகூவல்’ என்ற பொருள் கொண்ட ‘எல்கர் பரிஷத்’ என்ற மாநாட்டை 31.12.2017 அன்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த் மற்றும் மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜி. கோல்சே படேல் முதலா னோர் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தனர். தலித் ஆதர வாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஏராளமான பேர் அதில் பங்கேற்றனர்.
அந்த நிகழ்வு பெரிய அளவில் நடைபெறுவதை விரும்பாத இந்துத்துவத் தலைவர்களான சாம்பாஜி பிடே, மிலிந்த் எக்போட் முதலானோர் அங்கு அடியாட்களை ஏவி கலவரத் தைத் தூண்டினர். நிகழ்விடத்தில் கல்வீச்சு நடந்தது. கலவரத்தைத் தூண்டியவர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப் பட்டது. மிலிந்த் எக்போட் என்பவரை 14.03.2018-இல் கைது செய்து, பின் பிணையில் விடுவித்தது. சாம்பாஜி பிடே என்பவர் கைது செய்யப்படவே இல்லை. அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியது காவல்துறை.
ஆனால் நிகழ்வில் பங்கேற்றவர்கள் மற்றும் இதற்கு துணைபுரிந்தவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் தில்லி, மும்பை என இந்தியா முழுவதும் பல இடங்களில் தேடித் தேடி புனா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அப்போது மராட்டியத்தின் முதலமைச்சராக இருந்த பா.ச.க. பார்ப்பன ரான தேவேந்திர பட்னாவிஸ் அரசால் அப்படி கைது செய்யப்பட்ட 16 பேர் விவரம் வருமாறு :
கபீர் கலாமஞ்ச் அமைப்பைச் சார்ந்த ஜோதி ரகோபா ஜக்தாப், சாகர் தத்யாராம் கோர்கே, இரமேஷ் முரளிதர் கெய்சார், சுகிர்தவாலே ஆகிய நால்வர்; மற்றும் வழக்கறி ஞரும் மனித உரிமை-தலித் உரிமை செயற்பாட்டாளருமான சுரேந்திர காட்லிங், மனித உரிமை செயற்பாட்டாளர் மகேஷ் ராவுத், நாக்பூர் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியரும் எழுத்தாளருமான சோமாசென், ஆராய்ச்சியாளர் ரோனா வில்சன், வழக்கறிஞர் அருண் பெரைரா, வழக்கறிஞரும் தொழிற்சங்கவாதியுமான சுதா பரத்வாஜ், கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் வெர்னான் கோன்சால்வஸ், மார்க்சிய தலித் அறிஞர் ஆனந்த் டெல்டும்டே, வழக்கறிஞர் கவுதம் நவ்லகா, தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹனிபாபு, சமூக செயற்பாட்டாளர் பாதிரியார் ஸ்டேன் சுவாமி ஆகியோர் ஆவர்.
மேற்குறிப்பிட்ட அறிஞர்களையும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் கைது செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் (UAPA)தின் பல பிரிவுகளில் குற்றம் சுமத்தி, விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக விசாரணை ஏதுமில்லாமல் சிறையில் வைத்துள்ளதைப் பற்றி சுதந்திரமான ஒரு விசாரணைக் குழு அமைத்து விசாரித்திடுமாறு வேண்டி ரொமிலா தாப்பர் மற்றும் அறிஞர்கள் சிலரும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் அதனை ஏற்க மறுத்து விட்டது.
22.01.2020-இல் மராட்டிய மாநில அரசு மாறியதும் இது தொடர்பான விசாரணையை மாநில அரசின் ஒப்புதல் பெறாமலே தேசியப் புலனாய்வு முகமை (NIA) கையில் எடுத்துக் கொண்டது. ரோனா வில்சன் உள்ளிட்ட சிலரின் மடி கணினியில் அவர்களுக்குத் தெரியாமலே ‘ஹேக்’ செய்து பல செய்திகளை உள்ளிட்டுவிட்டு, அவர்கள் மாவோயிய அமைப்பினருடன் தொடர்புள்ளவர்கள் என்று தேசியப் புலனாய்வு முகமை கூறியது. மோடியைக் கொல்லவும் சதி இருந்ததாகக் கதைகள் கட்டி உலவவிட்டது. நரேந்திர மோடி உள்ளிட்ட எல்லா சங்கிகளும் அவர்களுக்கு எதிராகக் கருத்து கூறும் அறிஞர்களை நகர்ப்பற நக்சல்கள் எனப் பெயர் சூட்டிப் பரப்பிக் கொண்டுள்ளனர்.
83 அகவை ஸ்டேன் சுவாமிக்கு பர்க்கின்சன் நோய் இருந்தது. அதனால் குவளையைப் பிடித்து எடுத்து நீர் அருந்தவும் முடியவில்லை என அவர் சிறை வைக்கப் பட்டிருந்த தலோஜா சிறை நிர்வாகத்திடம் உறிஞ்சு குழாய் அளிக்க வேண்டினர். ஆனால் சிறை நிர்வாகம் உறிஞ்சு குழல் அளிக்க முன்வரவில்லை. வெளியில் இருந்து பலர் சிறைக்கு உறிஞ்சு குழல்களை ஏராளமாக அனுப்பினர். அதன் பின்பே அவருக்கு உறிஞ்சு குழல் அளிக்கப்பட்டது.
சுதா பரத்வாஜ் பிணை வழக்கு 60 முறை விசா ரணைக்கு வந்தது; 40 முறை காவல் துறையினர் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை. தேசத் துரோகக் குற்றச்சாட்டுடன் உபா சட்டத்தின் கீழும் சிறையில் இருந்த 60 அகவையான சுதா பரத்வாஜ் முடக்குவாதத்தால் மிகவும் உடல்நலம் குன்றிய நிலையில் 3 ஆண்டுகள் தூய்மையற்ற மிகவும் மோசமான பைகுல்லா சிறையில் இருந்த பின் மும்பை உயர்நீதிமன்றத்தில் 09.12.2021 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
கவுதம் நவ்லகா, சுதா பரத்வாஜ் ஆகியவர்கள் படிப்பதற்கு செய்தி இதழ்கள் மற்றும் நூல்கள் அளிக்க சிறை நிர்வாகங்கள் மறுத்தன. 68 அகவை ஆன கவுதம் நவ்லகாவின் படிப்ப தற்கான கண் கண்ணாடி களவாடப்பட்டுவிட்டது. அவரது குடும்பத்தினர் வேறு புதிய கண்ணாடி வாங்கி அளித்ததை சிறை நிர்வாகம் அவருக்கு அளிக்க மறுத்தது. இதை அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பாதிரியார் ஸ்டேன் சுவாமி வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தவர். ஜார்கண்டில் பழங்குடி மக்களுக்கு நீண்டகாலமாக பல வகைகளில் உதவியாகச் செயல்பட்டவர். அவரை பயங்கரவாதி என்றது மோடியின் பாசிச அரசு. அவரது பிணை கோரிக்கை பலமுறை மறுக்கப் பட்டது. சிறையில் அவரது உடல்நிலை மிகவும் நலிவடைந்து 05.07.2021 அன்று இறந்தார்.
அவரது சாவு அவர் மோடி அரசை விமர்சித்ததற்கான விலை ஆகும். ஆனால் அவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதும் இந்திய நீதித் துறையின் மீதும் நம்பிக்கைக் கொண்டி ருந்தார். பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் இறப்பு இந்த நாட்டின் ஜனநாயக நடைமுறையிலோ அரசாட்சியின் நடைமுறையிலோ நீதித் துறையின் போக்கிலோ எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது?
அதன்பின் ஆனந்த் டெல்டும்டே பிணையில் விடுவிக்கப் பட்டார். 28.07.2023 அன்று வெர்னான் கோன்சால்வசும் அருண் பெரைராவும் உச்சநீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். பீமா கோரேகான் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு இவர்கள் மாவோயிஸ்டுகள் என்பதே ஆகும். மாவோவியக் கருத்து களைக் கொண்டிருப்பதாலோ மாவோயிஸ்டுகளை ஆதரிப்ப தாலோ ஒருவரைக் குற்றவாளி என்று கூறமுடியாது; அவர் வன்முறையில் ஈடுபடும்படித் தூண்டினால் -நேரடியாக வன்முறையில் ஈடுபட்டால் மட்டுமே குற்றஞ்சாட்ட முடியும் என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தி யுள்ளது. ஆனால் பீமா கோரேகான் வழக்கில் உச்சநீதிமன்ற விளக்கத்தின்படி கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நடந்துகொள்ளவில்லை என்பது பேரவலமாகும். மனித உரிமைகளைவிட ஆட்சியாளரின் விருப்பமே முதன்மை என்று உயர்நீதித்துறையும் கருதுகிறது என்ற முடிவுக்கு மக்கள் வரவேண்டியுள்ளது.
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மசூதியை இடித்தது குற்றம் தான் என்றாலும் அந்த இடத்தை இராமன் கோயில் கட்டுவதற்கு அளித்துத் தீர்ப்பளித்ததும் அதோடு நிற்காமல் இராமன் கோயில் கட்டுவதற்காக 3 மாதங் களுக்குள் ஒரு அறக்கட்டளை உருவாக்கிட வேண்டும் எனத் தீர்ப்பளித்ததும் நீதித்துறை வரலாற்றில் புரியாத புதிராகும். 2024 சனவரியில் அயோத்தியில் இராமன் கோயில் திறக்கப்பட உள்ளது. பா.ச.க.வுக்கு நாடாளுமன்றத் தேர்த லுக்கான துருப்புச் சீட்டாக அது இருக்கும்.
ரபேல் போர் வானூர்திகள் இறக்குமதியில் -கொள் முதலில் ஊழல் நடந்துள்ளதான வழக்கில் ஒன்றிய அரசு, அது தொடர்பான கோப்பே பாதுகாப்புத் துறை அலுவலகத் தில் இருந்து காணாமல் போய்விட்டது என்று தெரிவித்தது; உச்சநீதிமன்றம் அது தொடர்பாக எந்த விசாரணையையும் ஏற்காமல் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்துவிட்டது.
காஷ்மீரத்துக்கு இருந்த சிறப்புரிமைப் பிரிவு 370 இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருந்து நீக்கியதை ஒட்டி காஷ்மீரத்து அரசியல் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டது தொடர்பான வழக்கை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசார ணைக்கு ஏற்கவே மறுத்து விட்டார்.
நீதிபதிகள் பணிநிறைவுக்குப் பின் அரசோ, அரசியல் கட்சிகளோ வழங்கும் வேறு பதவிகளை ஏற்பது எப்படி நியாயமாகும்?
நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமே மேற்சுட்டியவாறு நடந்துகொண்டால் மக்களுக்கு நீதித்துறை மீதுள்ள நம்பிக்கை நீடிக்குமா என்பது கேள்விக்குறியே!
குடிமக்கள் தனிமனித உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் கருத்துரிமையை மீட்டெடுக்கவும் பாசிச பா.ச.க.வை அதிகாரத்திலிருந்து அகற்றுவதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.
- சா.குப்பன்