இந்திய அச்சு ஊடகங்கள் ஒன்றிய நரேந்திர மோடி அரசின் வெளிப்படையான அச்சுறுத்தலுக்கும், கையூட்டுக்கும் சரணடைந்து, சார்புச் செய்திகளை மட்டுமே வெளியிட்டதன் விளைவு, நாம் மீண்டுமொருமுறை இந்த ஆட்சியை ஏற்க நேர்ந்தது.

“தைனிக் பாஸ்கர்”, “பாரத் சமாச்சார்”, “நியூஸ் லாண்டரி”, ”தி குயிண்ட்”, “கிரேட்டர் காஷ்மீர்”, “என்.டி.டிவி.”, “தி வயர்” உள்ளிட்ட மோடி அரசை விமர்சித்து உண்மைகளைப் பேசிய இந்திய இணைய ஊடக நிறுவனங்களும், ‘குஜராத் ஃபைல்ஸ்’ ஆவணப் படத்தை வெளியிட்டப் பன்னாட்டு ஊடகமான பி.பி.சி நிறுவனமும் ஒன்றிய சர்வாதிகார அரசின் அராஜகப் பிடிகளில் சிக்கித் தங்கள் குரல்களை இழந்திருக்கின்றன.

கடந்த செவ்வாய், 03.10.2023 அன்று “நியூஸ் கிளிக்” செய்தி நிறுவனமும், அவர்கள் தொடர்புடைய பல அறிவுசார் ஆளுமைகளின் வீடுகளும், அலுவலகங்களும், சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பல மென்பொருள் தகவல் சேமிப்புக் கருவிகளும், மடிக்கணினிகளும் கைப்பற்றப் பட்டிருக்கின்றன. ‘நியூஸ் கிளிக்’ இணையதளத்தின் நிறுவனரும் ஆசிரியருமான 76 வயது பிரபிர் புர்கயஸ்தாவும், அந்நிறுவனத்தின் மனிதவளப் பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தியும் கைது செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டு 2 நாட்களாகியும் அவர்களிடம் எதனடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதற்கான முதல் தகவல் அறிக்கை கூட கொடுக்கப் படவில்லை. ஆனால் போலீஸ் காவலில் எடுத்திருக்கிறார்கள். பயங்கர ஆள்தூக்கிச் சட்டமான உபா (UPPA) எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அந்த நிறுவனத்திற்குத் தொடர்பு எனச் சொல்லி அவர்களால் 70 நாள்கள் கைது செய்யப்பட்டு அண்மையில் வெளிவந்த மனித உரிமைச் செயல்பாட்டாளரான டீஸ்டா செடல்வாடின் வீட்டிலும் சோதனை நடத்தி உள்ளார்கள். ஊடகவியலாளர்கள் ஊர்மிலேஷ், அவுனிந்த்யோ சக்ரவர்த்தி, அபிசார் ஷர்மா, பரஞ்சோய் குஹா தாகுர்தா மற்றும் வரலாற்றாசிரியர் சோஹைல் ஹாஷ்மி ஆகியோரை 25 கேள்விகளுடன் பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) யின் தலைவர் சீதாராம் யெச்சூரி அவர்களின் வீட்டையும் சோதனையிட்டு அங்கு தங்கியிருந்த அவருடைய விருந்தினர் சோஹைல்லின் மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்களை கைப்பற்றி உள்ளனர்.

இதெல்லாம் குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிராக, விவசாய (திருத்த) சட்டங்களுக்கு எதிராக, கோவிட் பெருந்தொற்றின் போது நடந்த போராட்டங்களைக் குறித்த செய்திகளை வெளியிட்டதற்கும் 2021 முதலே இந்த இணையதளத்தின் மீது கரம் வைத்திருக்கிறது மோடி அரசு. அதுமுதலே அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளால் ‘நியூஸ் க்ளிக்’ இணையதளம் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது. அதன் ஆசிரியரைக் கைது செய்யக்கூடாது என்றும், இவ்வழக்கில் வன்முறைகள் கைக்கொள்ளக் கூடாது என்றும் டில்லி உயர் நீதிமன்றம் வலியுறுத்தி இருந்தது.

சென்ற ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் இதழ், சீனாவில் தொழில் முதலீடு செய்திருக்கும் அமெரிக்கத் தொழிலதிபரான நெவில்ராய் சிங்கம் என்பவரின் சிங்கம் நிறுவனம் சட்டவிரோதமாகப் பணம் கொடுத்து, சீனாவுக்கு ஆதரவான செய்திகள் வெளியிடுவதாக ‘நியூஸ் க்ளிக்’ இணையதளத்தின் மீது ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டது. அடுத்த நாளே செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஒன்றிய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், நியூஸ் க்ளிக் நிறுவனத்தைத் தாக்கிப் பேசி உள்ளார்.

வெறும் வாயை மென்றவர்களுக்கு, தேவையில்லாமல் ஒரு சட்டப்பூர்வமான செய்தியை, சட்டவிரோதம் போல வெளியிட்டு நியூயார்க் டைம்ஸ் அவல் அளித்தது. அதைக் காரணம் காட்டி ஒரு வெறியாட்டத்தை ஆடி, எஞ்சியிருக்கும் ஊடகவியலாளர்களையும் ஒடுக்குகிறது நரேந்திர மோடி அரசு.

இந்தியா கூட்டணி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், ஊடகக் கூட்டமைப்புகளும், குடிமைச் சமூகங்களும், பன்னாட்டு அமைப்புகளும் போராட்டங்களை அறிவித்திருக்கின்றன. நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க மக்களும் குரலெழுப்பி வருகின்றனர்.

இந்திய நாடு ஊடக சுதந்திரத்தில் 180 நாடுகளில், 161 ஆவது இடத்திலிருப்பது நரேந்திர மோடி அரசுக்கும் அவர்கள் புகழ் பாடும் சங்கிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியான செய்தியாக இருக்கலாம்! ஆனால், ‘இடிப்பாரை இலா ஏமரா மன்னன்’ கதை தெரிந்த நாம் வாளாவிருக்க இயலாது.

- சாரதாதேவி

Pin It