“The Modi Question” என்ற ஆவணப்படத்தை வெளியிட்ட பிபிசி நிறுவனத்திற்கு, மோடி அரசு கொடுக்கும் பதில்தான் வருமான வரிச் சோதனை. 2002-இல் குஜராத்தில் நடைபெற்ற சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்தை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம், அக்கலவரத்தில் மோடியின் பங்கு குறித்துப் பேசுகின்றது. இதைத் தொடர்ந்து வருமான வரிச் சோதனை பிபிசி அலுவலகங்களில் நடத்திருப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஃபாசிசத்தின் முதன்மையான அணுகு முறையே, கருத்தைத் தடியால் எதிர் கொள்ளுதல். தேசபக்தி என்கின்ற பெயரால் வளர்க்கப்பட்ட இந்த ஃபாசிசம் இரண்டாம் உலகப் போரில் இறுதியில் வீழ்ந்த பிறகு, இதில் இருந்து மனித குலம் கற்க வேண்டிய நிறையப் பாடங்கள் உள்ளன.

பிப்ரவரி 14-ஆம் நாள், வருமான வரித் துறையினர், மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் நுழைந்தனர். 3 நாள் சோதனை. 2012ஆம் ஆண்டு கணக்குகளில் இருந்து தற்போது வரை உள்ள கணக்குகள் கேட்கப்பட்டுள்ளன. ஒரு அரசு அதன் துறையின் மூலம் சோதனை நடத்துவது தவறா? அரசுக்குக் கண்டிப்பாக எல்லா அதிகாரங்களும் உண்டு. ஆனால், ஒரு செய்தி நிறுவனம் மோடிக்கு எதிராக கேள்விக் கேட்ட சில வாரங்களில், வருமான வரித் துறை அதன் மீது பாய்வதையே சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. அரசுக்குச் சகிப்புத்தன்மை என்ற ஒன்று இருக்கின்றதா என்பதை தேட வேண்டியுள்ளது.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பா ரிலானுங் கெடும் - (குறள்: 448)

ஃபாசிசம் தன்னை எதிர்த்துக் கேள்வி கேட்போரை அழித்து; இடித்து உரைப்பாரே இல்லாமல் தறிக்கெட்டு ஓடி; இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாகி, தன் உச்சம் பெற்று பல இலட்சம் உயிரைக் குடித்து, பின் தானும் அழிந்து போனது. ஃபாசிசத்தைத் தடுக்கத் தவறிய அந்நாட்டு மக்கள், பின்னர் உலக நாடுகள் முன் தலைகவிழ்ந்தனர். ஹிட்லருக்கு வாக்களித்த ஜெர்மனியில், அதன் பின் ஒரு தலைமுறைக்குத் தேர்தலையே பார்க்கவில்லை. மற்ற நாடுகளால் ஆளப்பட்டனர்.

பிபிசி நிறுவனம் தனது ஆவணப்படங்கள் இந்தியாவில் தடைச் செய்யப்பட்டாலும், இந்த டிஜிட்டல் உலகில், இணையதளத்தின் மூலம் பரவுகின்றன. ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட அக்கலவரத்தின் நேரடி சாட்சிகளின் பேட்டிகள் மற்றும் பிரிட்டன் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசி பெற்றதாகக் கூறப்படும் வெளியிடப்படாத அறிக்கை இப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மோடி அரசுக்குப் பதில் கூறும் வாய்ப்பை வழங்குவதாகவும் அதனை ஒளிப்பரப்புவதாகவும் கொடுக்கப்பட்ட அழைப்பை மோடி அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்தச் சோதனையைக் கண்டித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் “அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை. ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தைப் புகட்டுவார்கள்” என்று தன் கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.

ஃபாசிசம் அதிகாரக் குவியலில் ஈடுப்பட்டது. குவிக்கப்பட்ட அதிகாரங்களை வைத்து நாட்டை நாலுகால் பாய்ச்சலில் முன்னேற்றுவோம் என கட்டுக்கதை விட்டனர். ஆனால் தேசபக்தி, தூய்மைவாதத்தின் மூலம் அவர்கள் எந்த முன்னேற்றத்தையும் அடைய முடியவில்லை. வறுமையே எங்கும் நிலவியது. இறுதியாக தலைவர்கள் முசோலினி இத்தாலி வீதிகளில் மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். மேலும் ஃபாசிசத்தின் ஜெர்மனிய வெர்சன் ஆன நாசிசத்தின் தலைமை ஹிட்லரோ தற்கொலை செய்து கொண்டார். இந்துத்துவாவாதிகள் வரலாற்றில் இருந்து பாடம் கற்க வேண்டும். அப்படி கற்காத எல்லா இடங்களிலும் வரலாறு திரும்பும் வாய்ப்புள்ளது.

மதிவாணன்

Pin It