கீற்றில் தேட...

வேதத்தை விமர்சிக்கவே கூடாது; வேதத்தை நிந்திப்பவன்தான் ‘நாத்திகன்’ என்றார், இறந்து போன சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரன்!

வேதத்தை ‘சூத்திரன்’ படிக்கக் கூடாது; வேதத்தைக் காதால் கேட்கக் கூடாது; படித்தவன் நாக்கை வெட்ட வேண்டும் என்கிறது ‘மனுசாஸ்திரம்’.

முருகன் தமிழ்க் கடவுள் என்கிறார், பா.ஜ.க. முருகன்; கறுப்பர் கூட்டம் என்ற ‘யுடியூப்’ நடத்தும் இரண்டு இளைஞர்கள் தமிழ்க் கடவுளை அவமதித்து விட்டார்கள் என்று கூறி ஊர் ஊராக ‘வேல் யாத்திரை’ போனார். என்னப்பா, அவமதிப்பு என்று கேட்டால் ‘கந்தசஷ்டி கவசம்’ வரிகளைப் படித்தார்கள் என்கிறார்! கந்தனைப் போற்றிப் பாடிய பக்திப் பாசுரம் தானே கந்தசஷ்டி கவசம்.

அது ஆபாசமாக இருக்கிறது என்றால் அது பாடல் மீது குற்றமா? அதை எடுத்துச் சொன்னவர்கள் மீது குற்றமா? இந்தக் கேள்விக்கு எடுத்துச் சொன்னவர்கள் தான் ‘குற்றவாளிகள்’ பாடல் மீது குற்றமல்ல என்று தமிழக அரசு கூறி இரண்டு இளைஞர்களையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து விட்டது.

தொடர்ந்து சில தமிழ் தொலைக் காட்சிகள் கந்தசஷ்டி கவசத்தையும் அதில் அடங்கியுள்ள ஆபாச வரிகளையும் ஒவ்வொரு நாளும் சூலமங்கலம் சகோதரிகளின் பாடல் வழியாக ஒளிபரப்பி ‘பக்தி’யைப் பரப்பி வருகின்றன.

முருகன் தமிழ்க் கடவுள் என்றெல்லாம் கூறக் கூடாது என்கிறார் காஞ்சி சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரன். அவர் கூறுகிறார்:

“‘முருகனைத் தமிழ்த் தெய்வம்’ என்று குறிப்பாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் இந்தக் காலத்தில் தமிழ் மதம் வேறு; வேத நெறி வேறு என்று பேதம் செய்வதில் சிலருக்கு ருசி இருந்து வருகிறது.

இது ஆராய்ச்சி என்று சொல்லிக் கொண்டு நம் ஜனங்களைப் பேதப்படுத்துவதற்காக வெள்ளைக்காரர்கள் செய்த விஷமத்தின் அனர்த்தமான விளைவு; வேத மதம் தான் தமிழ் மதமாக இருந்திருக்கிறது என்பதுதான் என் அபிப்பிராயம்.” - தெய்வத்தின் குரல் நூல் (பக்.606)

‘தமிழ்க் கடவுள்’ என்ற போர்வைக்குள் பதுங்கி நிற்கும் பூனைக் குட்டிகளை காஞ்சி சங்கராச்சாரி வெளியே தூக்கி வந்து போட்டு விட்டார்.

பா.ஜ.க. முருகன் ‘தமிழ்க் கடவுளை’க் காப்பாற்றும் ‘வீரத் தமிழன்’ வேடம் போட்டுள்ளார் என்றால் தமிழக அரசு ‘வேதத்தையேக் காப்பாற்றும் ‘புரோகிதர்’ வேடத்தைப் போடுவோம் என்று புறப்பட்டிருக்கிறது.

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளரும் பாவலரேறு பெருஞ் சித்திரனார் மகனும், தமிழின விடுதலைப் போராளியுமான தோழர் பொழிலன், ‘வேதவெறி இந்தியா’ என்ற ஆய்வு நூலை 2018இல் எழுதி வெளியிட்டார். வேதம் குறித்து 20 தலைப்புகளில் விரிவாக விவாதிக்கும் ஆய்வு நூல்.

இந்த நூலை எழுதி வெளியிட்டது குற்றம் என்று தமிழக அரசின் காவல்துறை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் பொழிலன் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 153, 153A(a)b), 565(a)(b)(c) ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

வேதம் பற்றி ஆய்வு செய்தால் பொது மக்கள் பீதி அடைவார்கள்; பொது அமைதி குலைந்து விடும்; வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே பகைமை வளரும்; மக்களைத் தூண்டி விடும்; அதனால் கலகம் வந்து விடும் என்று இந்தக் குற்றச்சாட்டுகள் கூறுகின்றன. இதன்படி நியாயமாக வேதங்களைத்தான் தடை செய்ய வேண்டும்.

நூல் வெளியாகி இரண்டு ஆண்டுகளில் அந்தக் கலகம், பீதி, வெறுப்பு எதுவும் உருவாகியதாக தெரியவில்லை. தமிழக அரசு தான் ‘வேத புரோகிதமும் பார்ப்பனர்களும்’ கலக்கமடைந்து விடக் கூடாது என்று கவலைப்படுகிறது.

அடுத்து ‘அண்ணா’வின் ‘ஆரிய மாயை’, ‘வர்ணாஸ்ரமம்’, ‘இந்து கண்ட சாம்ராஜ்யம்’, ‘விதைக்காது விளையும் கழனிகள்’, ‘நிலையும் நினைப்பும்’ போன்ற நூல்களைத் தடை செய்தாலும் வியப்பதற்கு இல்லை.

வேதங்களைத் தடை செய்யாமல் வேதங்களைப் பற்றிய ஆய்வு நூலுக்கு மட்டும் தடை போடுகிறார்கள் அல்லவா? அதற்குப் பெயர்தான் ‘மனுசாஸ்திர’ ஆட்சி.

கருத்துரிமையைப் பறிக்கும் இந்த அடாவடித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வலியுறுத்துகிறோம்!

- விடுதலை இராசேந்திரன்