சேலம் சுகனேஸ்வரர் கோயிலுக்கு அர்ச்சகர் பணிக்கு ஆகமப் பயிற்சி முடித்த தகுதியானவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன என்று இந்து அறநிலையத் துறை 18.1.2018 அன்று நாளேடுகளில் விளம்பரம் செய்திருந்தது. இதை எதிர்த்து அந்தக் கோயிலில் அர்ச்சகர் பணியிலிருந்த முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் “இந்தக் கோயில் காமீக ஆகம அடிப்படை யில் அமைந்துள்ளது. நாங்கள் நீண்டகால மாக இங்கு அர்ச்சகர் பணி செய்து வருகிறோம். பாரம்பரிய முறையில் பழக்கம் வழக்கம் என்ற அடிப்படையில் சிவாச்சாரியார் பிரிவைச் சேர்ந்த நாங்கள் தான் அர்ச்சகராகத் தகுதி உடையவர்கள். எனவே தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை மேற்கொள்ளும் புதிய அர்ச்சகர் பணிநியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
8.6.2023 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆர். சிங்காரவேலன் மற்றும் எம். முருகானந்தம் ஆகியோர் வழக்காடினர். தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் சார்பில் அரசு வழக்குரைஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராசன் வழக்காடினார். நீதிபதி ஆனந்த் வெங்கடேசு முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி 26.6.2023 அன்று தன் தீர்ப்பை அளித்தார்.
“ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப் படுபவர்களுக்கு ஆகமங்களும் சடங்குகளும் தெரிந்திருந் தால் போதும். அவர்களுக்கு சாதி தடையாக இருக்க முடியாது. எவர் ஒருவரும் பரம்பரை உரிமைக் கோர முடியாது” என்று கூறினார்; பல தீர்ப்புகளில் இருந்து மேற்கோள் காட்டினார்.
1972-இல் சேஷம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அர்ச்சகர் பதவியில் பரம்பரை முறை கூடாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.
2022-ஆம் ஆண்டில் ஆதித்தியா எதிர் கேரள தேவசம் போர்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
“ஒரு ஆகமக் கோயிலில் பிராமணரோ அல்லது மலையாள பிராமணரோ அர்ச்சகராக இருந்தால் அவர்களே அவர்கள் மட்டும் தான் தொடர்ச்சியாக அர்ச்சகர்களாக இருக்க வேண்டும் என்கிற வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்கிறார்கள் என்பதன் பொருள் பிராமணர் அல்லாதார் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பது அல்ல; அதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. வேதம் படிப்பதற்குத் தடைபோடப்பட்டது. பூணூல் அணிவதற்கு தடைப்போடப்பட்டது. பிராமணர்களுக்கு மட்டுமே இந்த உரிமை இருந்த காரணத்தினால் தான் பிராம ணர்களே அர்ச்சகர்களாகத் தொடர்ந்து இருக்க முடிந்தது.
இப்போது அந்த நிலை மாறிவிட்டது. தேவசம் போர்டு அனைத்து சாதியினரும் அர்ச்ககர் ஆகும் வகையில் வேத ஆகம பாடசாலைகளை நடத்தி பார்ப்பனர் அல்லாத மற்ற சாதியினரும் அர்ச்சகர் ஆக தகுதி உண்டு என்று சான்று அளித்துள்ளதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. எனவே பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாதாரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் ஆதித்தியன் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் கேரளாவில் பட்டியல் வகுப்பினர் கூட சிவன் கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் எந்தெந்த கோயில்கள் ஆகமத்தின் கீழ் வருகின்றன என்பதைக் கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது. அதை எதிர்த்தும் பல வழக்குகள் தொடரப் பட்டுள்ளன. எனவே அந்தக் குழுவின் அறிக்கை வரும் வரையில் காத்திருக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையையும் நீதிபதி ஏற்க மறுத் தார். அந்தக் குழுவின் அறிக்கைக்காக காத்திருந்தால் அன்றாடம் நடைபெற வேண்டிய பூசை, அபிசேகம் போன்றவற்றை தடையின்றி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். எனவே அதுவரை புதிய அர்ச்சகர் நியமனம் செய்யாமல் காத்திருக்க முடியாது என்று நீதிபதி தீர்ப்பளித்தார். புதிய நியமனம் செய்யும் வரை முத்து சுப்பிரமணிய குருக்கள் அர்ச்சகராகப் பணியாற்றலாம் என்றும் புதிய அர்ச்சகர் நியமன நேர்காணலில் முத்து சுப்பிரமணிய குருக்கள் கலந்துகொள்ள வாயப்பளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தலைமை நீதிபதி கங்கா புர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு முன்பு 27.7.23 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் பி. வள்ளியப்பன் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர் களைப் பரம்பரையாகத்தான் நியமிக்க வேண்டும் என வழக்காடினார். தனி நீதிபதி தீர்ப்பு உச்சநீதி மன்றத் தீர்ப்புக்கு எதிரானது; அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றார். தமிழ்நாட்டரசின் இந்து அறநிலையத் துறை தரப்பில் வழக்குரைஞர் சண்முகசுந்தரம் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்கள் எவை? ஆகம விதிகளைப் பின்பற்றாத கோயில்கள் எவை? என்பது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இந்தப் பணி நடைபெற்றுவரும் நிலையில் தனி நீதிபதி உத்தரவுக்குத் தடைவிதிக்கக்கூடாது. 2,405 அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளன என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஆய்வுக்கு குழு இன்னும் அறிக்கை சமர்ப்பிக்காத நிலையில் சேலம் சுகவனேசுவரர் கோயில் ஆகம கோயில் தான் என எவ்வாறு முடிவு செய்தீர்கள் என அரசுக்கு கேள்வி எழுப்பினர். தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள் வழக்கை செப்டம்பர் 22ஆம் நாளுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
11.08.2023 அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்ரவர்த்தி அமர்வு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி சுவாமிநாதன் பார்ப்பனர்களே அர்ச்சகர்களாகத் தொடரவேண்டும் என்று வழங்கியத் தீர்ப்புக்கு தடை உத்தரவு அளித்துள்ளது. இது பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
தமிழ்நாட்டரசின் இந்து அறநிலையத் துறை அனைத்து சாதியினர் அர்ச்சகர் பணிக்கு காலியாக உள்ள 2,405 பணியிடங்களையும் இடஒதுக்கீடு அடிப்படையில் விரைந்து பணிநியமனம் செய்திட வேண்டும்.
- வாலாசா வல்லவன்