கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

redfort farmers72 இரண்டாவது குடியரசு தினம் இந்திய வரலாற்றில் ஆளும் வர்க்கத்திற்கு கருப்பு தினமாகவும் ஆளப்படும் வர்க்கத்திற்கு தங்களின் போராடும் சக்தியை, போர்குணத்தை ஆளும் வர்க்கத்திற்கு நிரூபித்த நன்நாளாகவும் மாறி இருக்கின்றது. நிச்சயம் விவசாயிகள் செங்கோட்டையில் நுழைந்து தங்களின் கொடியைப் பறக்கவிடுவார்கள் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதை விவாசாயிகள் செய்தே விட்டார்கள்.

முப்படைகளையும் அதிநவீன ராணுவத் தளவாடங்களையும் உளவு அமைப்புகளையும் வைத்திருக்கும் ஒரு நாட்டின் தலைநகரில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு இடத்தில் விவசாயிகள் தங்களின் கொடியை ஏற்றி ஒட்டுமொத்த இந்திய பாட்டாளி மக்களுக்கும் கோழைகளை எதிர்ப்பது அவ்வளவு ஒன்றும் கடினமில்லை என்று காட்டி இருக்கின்றார்கள்.

ஆனால் வழக்கம் போல மோடியின் துதிபாடி ஊடகங்கள் எல்லாம் விவசாயிகள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றும், தீவிரவாதிகள் உள் நுழைந்து சதி செய்தார்கள் என்றும், செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றினார்கள் என்று குரைக்க ஆரம்பித்தன. ஆனால் அவை அனைத்தும் விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்த ஆளும் பாசிச மோடி அரசும் அதன் ஊது குழலான ஊடகங்களும் சேர்ந்து செய்த சதி என்பது தற்போது அம்பலமாகி இருக்கின்றது.

ஏதோ செங்கோட்டையில் கொடி ஏற்றியதை பாராளுமன்றத்தில் ஏற்றிவிட்டது போல சங்கிக் கும்பல் அலறிக்கொண்டு இருக்கின்றது. உண்மையில் செங்கோட்டை ஒரு சுற்றுலா தளமாகும். அங்கே யார் வேண்டுமென்றாலும் சென்று சுற்றிப் பார்க்க முடியும். 1947 ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தக் கோட்டை டிசம்பர் 2003 ஆம் ஆண்டே இந்திய சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஒரு சுற்றுலா தளத்தில் கொடியேற்றியதற்காகத்தான் இந்தச் சங்கிக் கும்பல் தேசத்தின் மானம் போய்விட்டதே என கத்திக் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கின்றது.

அவர்களின் நோக்கம் மிக தெளிவானது. இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக மக்களிடம் தோன்றியுள்ள வலுவான எண்ணத்தை சிதைக்க வேண்டும் என்பதுதான். அப்படி ஒரு நோக்கம் இல்லை என்றால் இத்தனை லட்சம் டிராக்டர்கள் அதுவும் குடியரசு தின விழாவின் போது டில்லியில் நுழைய இந்த அரசு அனுமதி கொடுத்திருக்காது.

இரண்டுமாத காலமாக கடும் குளிரில் உயிரை பணயம் வைத்து போராடும் விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதித்து, அவர்களின் கோபத்தை தூண்டுவதன் மூலம் அவர்களை வன்முறையில் ஈடுபடச்செய்து அவர்கள் மீதும் அவர்களின் போராட்டத்தின் மீது மக்களிடம் ஏற்பட்டுள்ள கருத்தை சிதைக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம்.

அதற்காகவே போராட்டத்தில் சில ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகளை ஏவி விவசாயிகளின் பாதையை மாற்றி அவர்கள் மீது காவல்துறை வன்முறையை பயன்படுத்தவும் அதன் மூலம் விவசாயிகளின் கோபத்தை தூண்டிவிடவும் முயற்சித்தது.

ஆனால் சங்கி கும்பல் எதிர்ப்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வன்முறையும் உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இல்லை என்றால் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராடிய முஸ்லிம்கள் மீது டெல்லியில் காவி குண்டர்களால் நடத்தப்பட்ட கலவரத்தை போல இதையும் நடத்தி முடித்திருப்பார்கள். ஆனால் விவசாயிகள் அவ்வாறான எதற்கும் இடம் கொடுக்காமல் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றார்கள்.

உண்மையில் சொல்லப்போனால் செங்கோட்டையை கைப்பற்றுவது ஒன்றும் சீக்கியர்களுக்கு புதிதல்ல. ஏற்கெனவே 1783 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்த சீக்கியர்கள் அங்கிருக்கும் திவான் இ அம் அதாவது மக்கள் சந்திப்பு கூடம் என பொருள்படும் இடத்தை கைப்பற்றி இருக்கின்றார்கள்.

அப்போது அந்த நகரத்தை ஆண்ட முகலாய மன்னன் வசீர் சீக்கியர்களிடம் சரணடைந்து அவர்களோடு உடன்படிக்கை செய்துகொண்டார்.

ஆனால் அப்போது சீக்கியர்கள் கோட்டையைக் கைப்பற்றியது அவர்களின் சொந்த நலனுக்கானது. தற்போதைய கைப்பற்றல் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்குமானது.

இன்று விவசாயிகள் மீது தேச துரோக முத்திரை குத்தும் யாரும் கடந்த இரண்டுமாத காலமாக 200க்கும் மேற்பட்ட விவசாயிகளை இந்த அரசு தனது அலட்சியப் போக்கால் சாகடித்திருக்கின்றது என்பதைப் பற்றியோ, 11 கட்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னும் அரசானது கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையோ சொல்லிக் கொண்ருப்பதை பற்றியோ, நாட்டின் உயரிய நீதி அமைப்பான உச்சநீதி மன்றமே கழுத்தறுக்கும் வேலையைப் பார்ப்பது பற்றியோ வாய்திறப்பதே இல்லை.

அதானிக்காவும் அம்பானிக்காவும் ஆட்சி செய்யும் மோடி அரசு அவர்களின் நலன் காக்க யாரை வேண்டுமென்றாலும் கழுவேற்ற காத்துக் கிடக்கின்றது. அவர்கள் போடும் எச்சில் காசில் வயிறு வளர்க்கும் தேச துரோகக் கும்பல் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் நாட்டின் நலனுக்காக போராடும் விவசாயிகள் மீது தேசதுரோகிகள் என்ற பட்டத்தை குத்த முயற்சித்துக் கொண்டு இருக்கின்றது.

எப்படியாவது இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட வேண்டும், அதானியும் அம்பானியும் விவசாயிகளைக் கொள்ளையடிக்க இருக்கும் சிக்கல்களை தீர்த்து வைத்து அவர்களின் சிறந்த விசுவாசி சங்கிகளைத் தவிர வேறு யாருமல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். இதைத்தவிர இந்த தேச துரோக கும்பலின் மூளைகளின் வேறு எந்த சிந்தனையும் கிடையாது.

ஆனால் விவசாயிகள் மிகத் தெளிவாக விளைபொருள் வியாபார மற்றும் வர்த்தக மசோதா 2020, விவசாயிகள் விலை உறுதி மற்றும் வேளாண் சேவைகள் தொடர்பான ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020 மற்றும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கான மின்சார சட்டத் திருத்த மசோதா (2020) போன்றவற்றை முழுவதுமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து இருக்கின்றார்கள்.

தற்போது போராட்டத்திலிருந்து ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கம் மற்றும் பாரதிய கிசான் யூனியன் சங்கம் இரண்டும் விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த இரண்டு சங்கங்களும் விலகுவதால் நிச்சயம் விவசாயிகளின் போராட்டத்திற்கு எந்தப் பின்னடைவும் ஏற்படப் போவதில்லை.

ஆளும் பாசிச மோடி அரசு தனது கைக்கூலிகள் மூலம் சிலரை விலைபேசி இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு நிச்சயம் தூண்டும். பொய்களையும் புரட்டுகளையுமே தங்களின் சித்தாந்தங்களாகவும், கொள்கைகளாகவும் கொண்ட ஒரு கட்சி எவ்வளவு கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முதலில் விவசாயிகளுக்கு இந்த சட்டத்தால் லாபம் கிடைக்கும் என சொல்லிப் பார்த்தது, விவசாயிகள் அதை நம்பாமல் போராடப் போவதாக அறிவித்த போது மோடி தனது வழமையான நடிப்புத் திறமையால் ‘தன் அரசு ஒரு போது விவசாயிகளுக்கு துரோகம் செய்யாது’ என ஏமாற்றப் பார்த்தார். ஆனால் மோடியின் நடிப்பை பார்த்து ஏமாறாமல் விவசாயிகள் போராட அணிதிரண்ட போது மோடி அரசு விவசாயிகளை மிரட்டிப் பார்த்தது.

ஆனால் எது செய்தும் விவசாயிகளை சமாதானப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டவுடன் திட்டமிட்டே பேச்சுவார்த்தை என்ற போர்வையில் விவசாயிகளை இரண்டு மாத காலமாக கடும் குளிரில் இருக்கவைத்து மனதிடத்தை சீர்குலைக்க முயற்சி செய்தது. அதுவும் முடியாது என தெரிந்த பின்தான் விவசாயிகள் மத்தில் புல்லுருவிகளை ஊடுருவச் செய்து கலவரத்தை தூண்டுவிட்டு இப்போது விவசாயிகள் மீது சேற்றை வாரி இரைக்க ஆரம்பித்து இருக்கின்றது.

இதன் மூலம் ஒரு பக்கம் விவசாயிகள் மீது தேசதுரோகிகள் என்ற முத்திரையை குத்தவும் அதை காரணம் காட்டி அவர்களின் போராட்டத்தை ஒடுக்கவும் பாசிச மோடி அரசு துணிந்திருக்கின்றது.

இதன் தொடர்ச்சியாகத்தான் டெல்லி உத்தரப் பிரதேச எல்லைப் பகுதியான காசிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் முகாம்களில் நேற்றிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு அதிகளவில் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக 20 விவசாயிகளுக்கு நோட்டீசும் கொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. சமய்பூர் பாத்லி, ரோஹினி செக்டார், ஹெய்த்பூர் பத்லி, ஜஹாங்கிர் புரி, ஆதர்ஷ் நகர், ஆசாத்பூர், மாடல்டவுன், ஜிடிபி நகர், விஸ்வா வித்யாலயா, விதான் சபா, சிவில்லைன் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது விவசாயிகள் மீது ஒரு பெரும் தாக்குதலுக்கு இந்த அரசு தயாராகி வருவதாகவே தெரிகின்றது. சங்கி கும்பல் எத்தகைய பாசிஸ்ட்கள் என்பது இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.

நிச்சயம் விவசாயிகளின் கோரிக்கையை இந்த அரசு ஒரு போது ஒத்துக்கொள்ளப் போவதில்லை. எனவே விவசாயிகளுக்கு இரண்டு வாய்ப்புகள் தான் உள்ளது. பாசிச அரசின் மிரட்டலுக்கு அடிபணியாமல் தொடர்ந்து அமைதி வழியில் போராடுவது. இல்லை என்றால்? அதை போராட்டக் களத்தில் இருக்கும் விவசாயிகளே முடிவு செய்வார்கள்.

- செ.கார்கி