சென்ற இதழ்த் தொடர்ச்சி...

திருவள்ளுவர் நூல் ஒன்றே போதும் - இந்நாட்டு மக்களுக்கும் அறிவை உண்டாக்க.

periyar 524திருக்குறளை மட்டுமே எடுத்துக்கொண்டு அதிலுள்ள எல்லாத் தலைப்புகளின்கீழ் வருவனவற்றையும் இரண்டு, மூன்று பிரிவுகளாக, அதாவது படித்த மாத்திரத்தில் எளிதில் பொருள் விளங்குவனவற்றைக் கீழ் வகுப்புகளுக்கும், சற்றுக் கடினமான குறள்களை நடுத்தர வகுப்புக்கும், மிகுந்த புதை பொருள் கொண்டு, கூட்டிப் பொருள் காண வேண்டியவற்றை மேல் வகுப்புக்கும் பாடமாக வைத்தால் - பள்ளிகளில் மதப்படிப்போ ஒழுக்கப் படிப்போ தனியாக வைக்க வேண்டிய அவசியமே இராது.

ஒரு மாணவன் தன்னுடைய பரீட்சைக்குள் திருக்குறள் முழுமையையும் உணரும்படி செய்யப்பட்டால் அது எவ்வளவோ நன்மை. அதாவது ஒரு பி.ஏ. படித்தவனுடைய உலக ஞானத்துக்கு மேற்பட்ட அறிவு அனுபவத் துடன் பயப்பதாக அமையும்.

இராமாயணத்தில் 100 பாட்டும், பெரிய புராணத்தில் 200 பாட்டும், பாரதத்தில் 100 பாட்டும், பாகவதத்தில் 200 பாட்டும் படிப்பதைக் காட்டிலும் திருக்குறளைப் படிப்பது எவ்வளவோ மேலாக இருக்கும். பொருளை வீணாக்கிக் காலத்தை வீணாக்கி, பி.ஏ. பட்டமும், எம்.ஏ. பட்டமும் பெறுவதைக் காட்டிலும், திருக்குறளை முற்றும் உணர்ந்து பட்டம் பெறுவது எவ்வளவோ மேலாக இருக்கும். பி.ஏ. படிப்பதாலும், எம்.ஏ. படிப்பதாலும் அனுபவ அறிவொன்றும் வாழ்க்கைக்கு உபயோகப்படக் கூடிய அறிவொன்றும் நாம் பெற்றுவிடுவதில்லை; உத்தியோகம் பெற ஒரு தகுதியாகத்தான், அதுவும் பார்ப்பனருடன் உத்தி யோகத்துக்கு நம்மைப் போட்டிப் போட முடியாமல் செய்யத்தான் பயன்படுகிறதே ஒழிய, உத்தியோகத்திற்கு அந்தப் படிப்பு ஒன்றும் பயன்படுவதில்லை. ஆனால், திருக்குறளின் ஒவ்வொரு கருத்தும் ஒருவன் வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படக் கூடியதாகயிருக்கிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் ஒவ்வொரு துறையும் நன்றாக அதில் விளக்கப்பட்டிருக்கிறது.

100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் ‘டெக்ஸ்ட்’ புத்தகங்கள் வாங்கிப் படித்து மடையர்களாவதைவிட, 3 அணாவுக்கு திருக்குறள் வாங்கிப் படித்து அறிவாளியாவது மேல் என்றுதான் நான் கூறுகிறேன். திருக்குறள் ஒன்றே போதும்; உனக்கு அறிவு உண்டாக்க; ஒழுக்கத்தைக் கொடுக்க; உலக ஞானம் ஏற்பட அப்படிப்பட்ட குறளைத் தான் நாம் இதுவரை அலட்சியப்படுத்தி வந்திருக்கிறோம். ஒரு தாசில்தார், ஒரு மாஜிஸ்ட்ரேட், ஒரு நீதிபதி, ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இவர்களுக்குக் கூடத் திருக்குறள் ஒன்றே போதும்; தமது வேலையைச் சரியாகக் செய்ய. அவர்களை உத்தியோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பரீட்சை வைக்கும்போதுகூடத் திருக்குறளிலிருந்து தான் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். திருக்குறளை நன்கு உணர்ந்திருந்தால் போதும் என்று அவர்களுக்கு உத்தியோகம் வழங்க வேண்டும். அவர்கள் உத்தியோகத்திற்கு, அவர்கள் படிக்கும் பூகோள சாஸ்திரமோ, வான சாஸ்திரமோ, திரிகணிதமோ, சரித்திரமோ பயன்படுவதில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும் (விடுதலை 25.3.1948).

திருக்குறளின் முதன்மையைப் பெரியார் அம்மாநாட்டில் சிறப்பாக விளக்கியுள்ளார்.

5.11.1948-இல் ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பெரியார், திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையற்றினார். அவர் உரையின் மையக் கருத்து.

“திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துகளில் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத, வெறுக்க முடியாத கருத்துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார்.

குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது” (விடுதலை 5.11.1948).

திராவிடர் கழக மாநாட்டில் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றியது சிறப்பாகும்.

7.11.1948 அன்று சென்னை சேத்துப்பட்டு வ.உ.சி. இளைஞர் கழகம் சார்பில் நடைபெற்ற நூல் நிலையத் திறப்பு விழாவில் உரையாற்றிய பெரியார் :

நம் நாட்டுக்கும் மக்களுக்கும் இரு கண்கள் போன்றிருப்பது குறள். அரசியலார் முதல் மக்கள் வரை அதன் படி நடந்தால், நாடு விரைவில் முன்னேறும். அக்கிரமங்களும் அநீதிகளும் இன்றிருக்கும் சீர்கேடான ஆட்சி, அலங்கோலங்களும் ஒழியும். அதிலும் சில குறைகள் இருக்கலாம். அவைகளை நீக்கி நாம் நமது திருக்குறளைப் படித்து அதன்படி நடைமுறையிலும் இருப் போமானால் மீண்டும் நாம் உலகத்துக்கே கூட வழிகாட்டிகளாகவும், நாகரிகத்தை ஒழுக்கத்தைக் கற்பிக்கும் கர்த்தர்களாகவும் கூட விளங்கலாம் (விடுதலை 10.11.1948).

27.11.1948 விடுதலை ஏட்டில் ‘குறள்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய பெரியார் திருக்குறளின் முதன்மையை வலியுறுத்தியுள்ளார்.

“ஆரிய நூலும், ஆரிய தர்மமும் அகற்றப்பட்டால் உனக்கு நூலும், தர்மமும் இல்லை என்று கருத வேண்டாம். திருவள்ளுவர் குறள் இருக்கிறது; அது உனக்கு ஆகவே (திராவிடனுக்கு ஆகவே). நீ ஆரிய நூலையும், ஆரிய தர்மத்தையும் கை விட்டுவிட்டு அதற்குப் பதிலாகக் கைக்கொண்டு அறிவதற்கு ஆகவும், ஒழுகுவதற்கு ஆகவுமே ஏற்பட்டதாகும்” என்று சொல்லுவது உண்டு (விடுதலை 27.11.1948).

12.12.1948 அன்று பெத்துநாயக்கன் பேட்டையில் திராவிடர் கழகக் கூட்டத்தில் உரையாற்றிய பெரியார் :

கடவுளையும் மதத்தையும் எப்படி முட்டாள்தனமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டோமோ அதேபோன்று நீதி நூற்களிலும் நம்மை இழிவுபடுத்தும் இராமாயணம் - பாரதம் - கீதை போன்றவற்றை நம்பி வந்திருக்கிறோம். அதே சமயத்தில் உலகிற்கே பொதுவான அறிவு விளக்கத்தையும், அதற்கான அரசியல் முறைகளையும் மக்களின் வாழ்வு பற்றியும் எடுத்துக் கூறியுள்ள நமது திருக்குறளை நாம் மதிப்பதில்லை; படிப்பதுமில்லை என்று கடிந்து கூறியுள்ளார். (விடுதலை 14.12.1948)

26.12.1948 அன்று சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையில் மிக முக்கியமான கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

என்ன மதத்தினர் என்று கேட்டால், “வள்ளுவர் மதம்” என்று சொல்லுங்கள்; உங்கள் நெறி யென்னவென்றால், “குறள் நெறி” என்று சொல்லுங்கள்; குறள்நெறி என்று சொல்வீராயின், உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும், எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன்நிற்கக் கூசி ஓடிவிடுவான். குறளை எவனாலும் மறுத்துக் கூற முடியாது என்று அழுத்தம் திருத்தமாகப் பேசினார்.

(விடுதலை 31.12.1948)

- தொடரும்