கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தஞ்சையில் பெரியாரின் போர்ப்படைத் தளபதி அய்யா ஆசிட் தியாகராஜன் அவர்களைச் சந்தித்தபோது அவரது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமான ஒரு நிகழ்வு.

ஆரம்பக் காலங்களில் பொதுக்கூட்டங்களில் பெரியாருக்கு சிறப்பு செய்வதற்காக தோழர்கள் ரோஜா மலர்களாலான மாலையை அணிவிப்பார்களாம், அதைக் கவனமாக பெரியார் எடுத்து வந்து விடுவாராம். இருப்பிடத்திற்கு வந்தபின் நடந்த கூட்டத்தைப் பற்றி தோழர்களிடம் உரையாடிக் கொண்டிருப்பாராம். அந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போது பெரியார் அவருக்கு அணிவிக்கப்பட்ட மாலையில் இருக்கும் ஜரிகை நூலை மட்டும் அறுத்து நூல்கண்டு போல சுற்றிக் கொண்டிருப்பாராம். சுற்றி முடித்து அந்த நூல்கண்டை மறுபடியும் மாலைக்கடைக்காரரிடம் விற்று காசாக்கி விடுவாராம். அதுபோல பொதுக்கூட்டங்களில் தோழர்கள் புகைப்படங்களை கண்ணாடி ஃப்ரேம் போட்டு அன்பளிப்பாக அளிப்பார்களாம். அதையும் படத்தை மட்டும் வைத்துக் கொண்டு, கண்ணாடியையும், ஃப்ரேமையும் திருச்சியின் முன்னாள் மாவட்டத் தலைவர் வீரப்பா அவர்களிடம் விற்று காசாக்கி விடுவாராம்.

ஒரு மாபெரும் தலைவன், சமூகத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்ட சரித்திர நாயகன், தனது ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல், தன்னிடம் குப்பையாக குவிந்த ரோஜா மாலையில் இருந்துகூட தானே நூலைப் பிரித்து விற்பனை செய்து வருவாய் பெற்று அதை, அவரது உழைப்பின் பயனை இந்த நாட்டு மக்களின் அறியாமை இருளகற்ற, அதற்கான பிரச்சாரத்தைச் செய்ய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை ஏற்படுத்தி, கோடிக்கணக்கான தனது சொத்துக்களையும், தனக்கு மக்கள் வாரி வழங்கிய நன்கொடைகளையும் அந்த நிறுவனத்திற்கென கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். மணியம்மையார் காலத்தில் "நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த" கதையாக நீங்கள் அதற்கு ஆயுள்கால செயலாளராகி விட்டீர்கள். தெருத்தெருவாக துண்டேந்தி, பிச்சையெடுத்து சேமித்த தொகையெல்லாம் இன்று குத்தாட்டம் போடும் இரகஸியாவிற்கும், ஜோதிர்மயிக்கும் கணக்கு செட்டில் பண்ணப் பயன்படுவதைப் பார்க்கும்போது ப்ளட் ப்ரஷர் என்றால் எப்படியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

பெரியார் தந்த புத்தி போதும் என நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள். எங்கள் சிற்றறிவுக்கு அப்போது எட்டவில்லை. பெரியாரின் அறிவை - புத்தியை இப்படி அறிவுசார் சொத்துரிமையாக பதிவு செய்து காலங்காலத்துக்கும் தனது மகன், பேரன், கொள்ளுப்பேரன் என வரிசையாக அறிவுசார் சொத்துக்கு வாரிசாக்கி தனது தலைமுறைகளை நிம்மதியாக வாழ வைக்கும் தந்திர வார்த்தைகள் தான் "பெரியார் தந்த புத்தி போதும்" என்பவை என இந்த அடிமட்டத் தொண்டனுக்கு தெரியாமல் போயிற்று.

எனக்குத் தெரிந்து, நானறிந்தவரை உலக அரசியலில் பொதுவாழ்க்கையில் தன்னையும், தனது குடும்பத்தினரையும், குடும்ப வாரிசுகளையும் நிம்மதியாக வாழ வைக்க தன்னை ஆளாக்கிய ஒரு மாபெரும் தலைவனின் கருத்துக்களையே பகிரங்கமாக, வெளிப்படையாக மூலதனமாக்கிய முதல் அரசியல்வாதி நீங்கள்தான். பெரியாரின் கருத்துக்களை அறிவுசார் சொத்துரிமை கொண்டவன் நான்தான் என தமிழர் தலைவர் அறிவித்தது அனைவருக்கும் தெரியும். அந்த உரிமைக்கு வாரிசாக அவரது குடும்பத்தினர்தான் வரப் போகிறார்கள் என்பது குறித்த செய்திகள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அதற்கான ஏற்பாடுகள் வெகுவிரைவாக நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழக அரசியலில் சுப்பிரமணியசாமி வேலை பார்த்து, டெல்லியில் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் பல்லைக் கெஞ்சி, ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கி, புரோக்கர்களுக்கு கமிஷன் கொடுத்து, ஒவ்வொரு டேபிளுக்கும் கப்பம் கட்டி, யார் யார் கை கால்களிலோ விழுந்து ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கினீர்கள். பெரியாரியலைப் பரப்பவா? இல்லையில்லை. தங்கள் மகனை சொத்துக்கு வாரிசாக்க! மறுக்க முடியுமா? பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 15 பேர் கொண்ட நிர்வாகக் குழுவில் , Nominee of Funding Agency யாக நியமிக்கப்பட்டிருப்பவர் யார்? அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்க அந்தச் செம்புழுதி சுழன்றடி்க்கும் செங்காட்டிலே படுத்துக் கிடந்து கட்டிடங்களை உருவாக்கிய க.மா.குப்புசாமியின் வாரிசுகளா? இராசகிரி தங்கராசு அவர்களின் வாரிசுகளா? அந்தக் கல்லூரிக்கு அருகில் நிலம் தொடர்பாக சிக்கல் கொடுத்துக் கொண்டிருந்த தி.மு.க தொண்டரை அடித்து விரட்ட லாரி லாரியாக ஆட்களையும், தோழர்களையும் குவித்த ஒரத்தநாடு குணசேகரனா? கண்ணந்தங்குடி செயக்குமாரா? இல்லையே. தங்கள் மகன் வீ.அன்புராஜ்! மிக வினயமாக உள்ளே நுழைக்கப்பட்டிருக்கிறார். அறக்கட்டளைப் பதவியில் மட்டுமல்ல. இயக்க நடவடிக்கைகளிலும் கூட அன்புராஜ் அவர்கள் தான் முன்னிறுத்தப்படுகிறார்.

போஸ்டர் ஒட்ட, கொடி கட்ட, தமிழனின் பண்பாட்டு அடையாளச் சின்னங்களான பேருந்து நிலைய மூத்திரச்சுவர்களில் நாற்றத்தைப் பொறுத்துக் கொண்டு மூச்சை இறுக்கிக் கொண்டு சுவரெழுத்து எழுத, போராட்டம் நடத்த, கிராமம் கிராமமாகக் கிராமப் பிரச்சாரம் செய்யச் சென்று செருப்பிலும், வெளக்கமாற்றிலும் அடி பெத்து ஓடிவர, கமுதியில் மாணவ பிரச்சாரம் செய்யச் சென்று கொலைவெறிக் கும்பலால் விரட்டியடிக்கப் பட்டு உயிர் பிழைத்தால் போதுமென ஓடிவர, தன்னை விமர்சனம் செய்து யாராவது பேசிவிட்டால் அவர்களை அடிக்க, பாப்பாத்தி பின்னால் ஏன் செல்கிறீர்கள் எனக் கேள்வி கேட்டதால் வெளியேற்றப்பட்ட விடுதலை இராசேந்திரன் அவர்களை திண்டுக்கல்லில் கொலை செய்ய கூலி வாங்காத கூலிப் படையாகச் செல்ல - இவற்றுக் கெல்லாம் அப்பாவி கருப்புச் சட்டைத் தொண்டன் வேண்டும். ஆனால் முதல்வராக யார் இருந்தாலும் அது ஜெயலலிதா அவர்களாக இருந்தாலும் சரி, கலைஞராக இருந்தாலும் சரி அவர்களைச் சந்திக்க, அவர்களை வரவேற்க, பெருந்தலைவர்கள் பங்கேற்கும் மேடையில் அவர்களுக்குச் சமமாக நிறுத்த மட்டும் தனது மகன் அன்புராஜ் தான் வேண்டும். திராவிடர் கழக இணையதளத்தில் இருக்கும் புகைப்பட ஆதாரங்களை வைத்தே சொல்கிறேன். பல ஆண்டுகளாக குடும்பத்தை மறந்து ஓயாத உழைப்பைக் கொடுத்து தமிழகத்தின் அனைத்துக் கூட்டங்களின் மேடையிலும் உங்களின் நிழலாக இருக்கும் செயல்வீரர் ஒரத்தநாடு குணசேகரன் முதலமைச்சர்கள் பங்கேற்கும் மேடைகளில் கவனமாக ஒதுக்கப்படுவது எப்படி?

சரி, எக்கேடோ கெட்டுப் போங்கள். பெரியாரின் இயக்கமும், பெரியாரின் சொத்துக்களும் உங்கள் குடும்பச் சொத்தாகி விட்டது. வாழ்த்துகள். உங்களுக்குப் பல வரலாற்றுக் கடமைகள் இருக்கின்றன. தற்போது கலைஞர் ஆட்சியை அம்மாவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும், அடுத்து அம்மா வந்தால் அவரது ஆட்சியைக் கலைஞரிடமிருந்து காப்பாற்ற வேண்டும். நீண்ட நாட்களாக திருமாவளவன், இராமதாசு ஆகியோரும் ஆட்சியைப் பிடிப்பேன் என்கிறார்கள். அவர்களது ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும். விஜயகாந்த் வேறு பத்து சதம் வரை ஓட்டு வாங்கி வருகிறார். அவரது ஆட்சியையும், சரத்குமாரின் ஆட்சியையும் காக்க வேண்டும். புதிதாக நயன்தாரா புகழ் சிம்புவும் அரசியலுக்கு வரப் போகிறாராம் அவரது ஆட்சியையும் காக்க வேண்டும். இப்படி காலத்துக்கேற்றார் போல காக்கும் கரங்களை உருவாக்க வேண்டும். அதற்காக இப்போது அன்புராஜ், நாளை அவரது வாரிசு. நடக்கட்டும். நடக்கட்டும்.

நாங்கள் ஏதோ பொழப்பில்லாமல் வருமானம் இல்லாமல், விளம்பரம் இல்லாமல் பெரியாரின் எழுத்துக்களை தொகுத்து அடுத்த வேளைக்கஞ்சிகூட பீயள்ளினால்தான் கிடைக்கும் என்ற நிலையிலுள்ள - ஒரு மடக்கு காப்பித் தண்ணியைக்கூட சாதித் திமிர் பிடித்த இரண்டுகால் பிராணிகளின் காலடியில் மானங்கெட்டு உட்கார்ந்து தான் குடிக்க வேண்டும் என்ற இழிவில் உள்ள மக்களிடம் கொண்டு சென்று அவர்கள் மானத்தோடு வாழ வழிசெய்ய இருக்கிறோம். அடக் கொடுமையே! அதிலும் உங்கள் வணிக வேட்டை, வணிக வெறி இடைஞ்சலாக வருகிறதே!

எங்களுக்கு வணிக நோக்கமா? விளம்பர நோக்கமா?

பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பல ஆண்டுகளாக 3 இலட்ச ரூபாய் நன்கொடை கொடுத்துத்தான் படிக்க முடியும் என்பது தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் செயல்பாட்டிலுள்ள அனைத்து மாவட்ட மக்களுக்கும் தெரிந்த விஷயம். குறிப்பாக கள்ளக்குறிச்சி, தருமபுரி பகுதிகளில் அனைத்து கிராமங்களிலும் 10 ஆம் வகுப்புக்கு மேல் படித்த அனைவருக்கும் தெரியும். பெரியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கு அரசு கூறும் தொகையான 32,000 மட்டும்தான் வாங்குகிறீர்களா? நிர்வாக ஒதுக்கீட்டுப் பிரிவில் பணம் வாங்காமல் தான் அனுமதிக்கின்றீர்களா? நிரூபிக்க முடியுமா?

தஞ்சை கல்லூரி வளாகத்தில் ஒரு குழந்தைகள் பழகுமுகாம் கடந்த 1990 இல் நடைபெற்றது. திராவிடர் கழகத் தோழர்களின் இல்லக் குழந்தைகள் அதில் பங்கேற்றனர். அந்த முகாமில் பங்கேற்ற குழந்தைகளைப் புகைப்படம் எடுத்து அவர்கள் அனைவரும் அனாதைக் குழந்தைகள் என விளம்பரப் படுத்தி ஒரு வண்ணத் துண்டறிக்கையை ஆங்கிலத்தில் அச்சிட்டு வெளிநாடுகளில் கல்லா கட்டியதை மறந்து விட்டீர்களா? அந்த அனாதைக் குழந்தைகளின் குழு படத்தில் எமது குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளும் இருப்பதையும், அந்த துண்டறிக்கை எங்களிடமே இருக்கிறதென்பதையும் நீங்கள் தெரிந்திருக்க மாட்டீர்கள். யார் யாரைப் பார்த்து வணிக நோக்கம் என்பது?

பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடவுளர் கதைகள் என்ற நூலை பலவண்ண அட்டையுடன் வெறும் 5 ரூபாய்க்கு அச்சிட்டு வெளியிட்டுள்ளோம். அதே நூலை தி.க ஒரு வண்ண அட்டைக்கே 10 ரூபாய்க்கு அச்சிட்டு விற்பனை செய்துள்ளது. இந்து மதப் பண்டிகைகள் என்ற சிறு நூலையும் அதே போல் பெ.தி.க வை விட 5 ரூபாய் அதிகமாய்ப் போட்டு விற்பனை செய்துள்ளீர்கள். இதுவரை பெ.தி.க வெளியிட்ட அனைத்து சிறு பெரு நூல்கள் அனைத்துமே அவற்றின் அடக்க விலைக்கே - தி.க நூல்களைவிடக் குறைவான விலையிலேயே மக்களிடம் விற்பனைக்குச் சென்றுள்ளன. குறுந்தகடுகள் விற்பனையில்கூட தி.க வில் ஒரு குறுந்தகடு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காலத்தில் அதே நேரத்தில் "சங்கராச்சாரி யார் ?" என்ற பெ.தி.க வின் குறுந்தகடுகள் வெறும் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன. அதன் பிறகு உங்கள் குறுந்தகடுகள் 50 ரூபாய்க்கு விற்பனைக்கு வரத் தொடங்கியபோது, பெ.தி.க சார்பில் "சாய்பாபாவின் உண்மை முகம்", "இடஒதுக்கீடு?" ஆகிய குறுந்தகடுகளை 25 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். நாளை விடியும் என்ற சிற்றிதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு இது தொடர்பாக விரிவான கட்டுரை வெளியானது. மிக மிகக் குறைவான விலையில் நூல்களை அச்சிடும் வெளியீட்டகங்கள் வரிசையில் பெ.தி.க நூல்களும் வந்துள்ளது. விலையைக் குறைத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கணினி அச்சுக்கோர்ப்பு, நூல் கட்டுமானம், ஒளிப்பதிவு, எடிட்டிங் உட்பட பல பணிகளை சாதாரண இயக்கத் தோழர்களே இலவசமாக செய்து மலிவு விலையில் மக்களிடம் கொண்டு சென்றுள்ளனர். திராவிடர் கழகத்திற்கு கிடைக்கும் சலுகை விலையிலான தாள், சொந்த அச்சகம் போன்றவை கிடைத்தால் திராவிடர் கழக வெளியீடுகளுக்கு இப்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைவிட பாதி விலையில் மக்களுக்கு வழங்குவோம். இதைச் சவாலாகவே அறிவிக்கிறோம். சந்திக்கத் தயாரா?

மலிவு விலையில் விற்பனை செய்வது மட்டுமின்றி, திராவிடர் இணையதளத்தில் அனைத்து நூல்களையும் பதிவேற்றி உலகெங்கும் யார் வேண்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் வசதி செய்து கொடுத்துள்ளோம். நான் ஏற்கனவே உங்களுக்கு ஒரு பகிரங்க மடல் எழுதினேன். 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாளில். அதில் தி.க நூல்களை உங்கள் இணையதளத்தில் ஏன் இன்னும் பதிவேற்றவில்லை? மக்களுக்கு நூல்கள் இலவசமாகச் செல்ல வேண்டும். அனுமதி கொடுங்கள் நாங்கள் இலவசமாகப் பதிவேற்றித் தருகிறோம் என வேண்டுகோள் விடுத்து மடல் எழுதினேன். உடனே விடுதலையில் கட்டம் கட்டி ஒரு செய்தி வந்தது. தி.க இணையதளத்தில் யூனிகோட் முறையில் பெரியார் கருத்துக்கள் பதிவேற்றப்பட்டுக் கொண்டுள்ளன. இப்போது 300 பக்கங்கள் உள்ளன. விரைவில் அனைத்துக் கருத்துக்களும் யூனிகோட் முறையில் இணைய தளத்தில் வெளியிடப்படும். அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு வந்தது. அதற்கென தனியாக www.periyar.org.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டது என்றெல்லாம் அறிவிப்பு வந்தது. ஆனால் அதன் தற்போதய நிலை என்ன? ஏற்கனவே இருந்த 60 கட்டுரைகளும் இப்போது இல்லை. இலவசமாக இணையத்தில் ஏற்றிவிட்டால் நூல் விற்பனை பாதிக்கும் என்ற அச்சத்தில் இன்றுவரை அப்பணியை நீங்கள் செய்யவில்லை. யாருக்கு வணிக நோக்கம்?

எனக்கு இந்த இடத்தில் இன்னுமொரு கேள்வி. இணையத்தில் இலவசமாக யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் யூனிகோட் முறையில் சில கட்டுரைகளைப் பதிவேற்றினீர்கள். தொடர்ந்து பணி நடப்பதாக அறிவித்தீர்கள். அது 2008 ஜனவரி மாதத்தில். ஆனால் இப்போது அறிவுசார் சொத்து யாரும் பயன்படுத்தக்கூடாது என்கிறீர்கள். இது 2008 ஆகஸ்ட் மாதம். நாங்கள் குடி அரசு வெளியிடப் போகிறோம் என வெளிப்படையாக அறிவிப்பு கொடுத்தது ஜுன் முதல் வாரம் 2008 இல். இரண்டு மாதம் கழித்து திடீரென இப்போது தடை அறிவிப்பு வந்துள்ளது. நியாயமாக நீங்கள் ஜுன் மாதமே தடை அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். கொடுக்கவில்லை. ஆக மிக அண்மையில் யாரோ, அல்லது ஏதோ உங்கள் மனதை மாற்றியிருக்கின்றனர். மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?

எமது தலைவருக்கும், தலைமைப் பொறுப்பாளர்களுக்கும் சொந்தமாக வருமானத்திற்கென முறையான தொழில்கள் உள்ளன. இப்போதும் கூட தனது நிலத்தில் உழைப்பைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்தான் எமது தலைவர். அதில் போதுமான வருமானமும் வருகிறது. தனது வருவாய்க்கென எந்த உழைப்பையும் கொடுக்காத - ஒரு மாபெரும் தலைவன் கொடுத்துச் சென்ற சொத்து நிழலில் இளைப்பாறிக் கொண்டு - அதற்குத் தனது குடும்பத்தினரையே வாரிசுகளாக்க அயராது உழைத்து வரும் தாங்கள் எம்மைப் பார்த்து வணிக நோக்கமென்றால் நடுநிலையாளர்கள் உங்களைப் பார்த்து எப்படிச் சிரிப்பார்கள்?

அடுத்து விளம்பர நோக்கம் என்று கூறியுள்ளீர்கள். உங்களுக்குத் தெரியாதா கொளத்தூர் மணி எப்படிப்பட்டவர் என்பது? அவர் தி.க வில் இருந்தபோது ஈழத்திற்குச் சென்று வந்த நேரத்தில் அவரது விளம்பரம் விரும்பாத் தன்மையைப் பாராட்டி ஒரு கூட்டத்தில் பேசியுள்ளீர்கள். அந்த ஒலிநாடாவை இன்னும் வைத்துள்ளோம். வீரப்பன் பிரச்சனையிலும் நீங்கள் ஜெயலலிதா அவர்களுக்குப் பயந்து உளறாமல் இருந்திருந்திருந்தால் கொளத்தூர் மணி காட்டுக்குச் சென்றதே வெளியில் வந்திருக்காது.

பெ.தி.க வின் கூட்டத் துண்டறிக்கைகளில் கூட தோழர் என்ற சொல்தான் பயன்படுத்தப்பட வேண்டும். கலந்துரையாடல் கூட்டங்களில் பேசும்போது கூட மாவீரன், சிறைக்கஞ்சா சிங்கம், தனித்தமிழ் நாட்டின் போர்க்கள நாயகன் போன்ற எந்த ஜால்ராச் சொற்களும் பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக துண்டறிக்கைகளில் பெரியார் படத்தைத் தவிர வேறு எந்த வாழும் தலைவரின் படத்தையும் அச்சிடக்கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதித்து அதைக் கடைபிடிப்பது பெ.தி.க. இதை மீறி துண்டறிக்கையில் கொளத்தூர் மணி அவர்களின் படத்தை அச்சிட்ட ஒரு மாவட்டப் பொறுப்பாளர் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும் கொளத்தூர் மணி அவர்களும் இணைந்து நிற்கும் படத்தை விற்பனை செய்த ஒரு தோழர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விற்பனையை நிறுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் மூலையில் எங்கோ ஒரு கிராமத்தில் கொளத்தூர் மணியின் புகழ்பாடும் பாடல் பாடிய குற்றத்திற்காக தலைமைச் செயற்குழுவிலேயே தோழர்கள் கடுமையாக கண்டிக்கப்பட்டு அந்தப் புகழ்பரப்பும் பாடல் நிறுத்தப்பட்டது.

ஆனால் உங்கள் தி.க வில்......

துண்டறிக்கைகளில் கூட நீங்கள் சிரித்துக் கொண்டே வாக்கிங் போகும் நேரத்தில் எடுத்த புகைப்படங்கள் அச்சிடப்படுகின்றன. பெரியார் படம் ஸ்டாம்ப் சைசிலும், உங்கள் படம் ஆளுயர படமாகவும் பலவண்ண டிஜிட்டல் பதாகைகளில் இடம்பெறுகின்றனவே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கட் அவுட் கலாச்சாரத்திலும் மூழ்கிக் கிடந்தீர்கள். பல பொதுக்கூட்டங்களில்கூட உங்களுக்கு கட் அவுட் வைக்கப்பட்டது. தமிழர் தலைவர் என்ற அடைமொழி இல்லாமல் நீங்களே அறிமுகப்படுத்திய மானமிகு தோழர் என்ற அடைமொழியை பயன்படுத்திய குற்றத்திற்காக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 2000 மாவது ஆண்டில் ஜாதி ஒழிப்பு மாநாட்டுத் துண்டறிக்கையே தூக்கி எறியப்பட்டு புதிதாக அச்சிடப்பட்டதை நாங்கள் மறக்கவில்லை.

உங்கள் படம் அச்சிடப்படாமல் இன்று யாராவது ஒரு தோழர் துண்டறிக்கை அடித்து கூட்டம் நடத்த முடியுமா? டிஜிட்டல் பேனர்களிலும், சுவரொட்டிகளிலும் உங்கள் படத்தை அச்சிடக்கூடாது. பெரியார் படத்தை மட்டுமே அச்சிட வேண்டும் என்று விடுதலையில் அறிவிக்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா? கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத்தலைவர் வீரமணி அவர்களே! என்று மட்டும்தான் விளித்துப் பேச வேண்டும். வேறு எந்த புகழ் மாலைகளும், ஜால்ராத் தோரணங்களும் கட்டக்கூடாது என அறிவிக்கும் தெம்பு , திராணி, பெரியார் நெறி உங்களுக்கு உண்டா?

பெரியார் கொள்கை பரப்பும் பாடல்கள் ஒலிநாடா தேவையென்றால் உங்கள் புகழ்பாடும் ஜால்ராச் சத்தம்தான் கேட்கிறது. ஐரோப்பிய நாடுகளிலும் இதனால் உங்கள் முகமூடி கிழிகிறது என்பது உங்களுக்கும் தெரியும் தானே? இந்த யோக்கியதையில் எங்களுக்கு விளம்பர நோக்கம் என்ற குற்றச்சாட்டு நியாயமா?சரி நீங்கள் சொல்வது போல குடி அரசு வெளியிடுவதால் வருமானமும், விளம்பரமும் கிடைக்கும் என்றால் நீங்கள் அதைச் செய்யாமல் இருப்பதேன்? இந்த இரண்டுமே உங்களைக் கவர்ந்த விஷயங்கள் தானே? ஏன் செய்யவில்லை?

1983 ஆம் ஆண்டு கோடை விடுமுறை காலத்தில் புலவர் இமயவரம்பன் அவர்களது பெரும் முயற்சியால் திருச்சியில் பல பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் குடும்பம் குடும்பமாக சுமார் 60 பேர் குடி அரசு, புரட்சி, பகுத்தறிவு இதழ்களில் பெரியார் எழுதியவற்றைத் தொகுத்து கையால் எழுதி, சரிபார்த்து அச்சுக்குத் தயார் செய்தனர். சுமார் 20 ஆண்டுகள் கழித்து அதுவரை எந்த பெரியார் இயக்கமும், எந்தப் பெரியார் தொண்டனும் செய்யாத பணியைப் பெரியார் திராவிடர் கழகம் செய்தது. குடி அரசு 1925 வெளியானது. அது வரை குடி அரசை வெளியிடாத நீங்கள் அதன் பிறகாவது பெரியாரியலின் தேவையைப் புரிந்து அச்சுப் பணியைத் தொடங்கியிருக்கலாம். அதன் பிறகு 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. மொத்தம் 25 ஆண்டுகள் உருண்டோடிய பின் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் திருச்சி பெரியார் மய்யத் தோழர்கள் மூலம் முழுமையாக எமக்குக் கிடைத்தது. நீங்கள் செய்யத் தவறிய பணியைத்தான் நாங்கள் செய்கிறோம். சப்தமில்லாமல் மனதிற்குள்ளேயே பாராட்டிவிட்டுச் சென்றிருந்தால் வரலாறு உங்களை மன்னித்திருக்கும். எங்கள் கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். "வைக்கப் போரை ( வைக்கோல் ) நாய் காத்தது" போல என்று. (வைக்கோலை நாயால் உண்ணவும் முடியாது. உண்ண முடியாத அந்த நாலுகால் பிராணி, மாடுகள் வைக்கோலைத் தின்ன வந்தாலும் குலைத்து விரட்டி விடுமாம்) அது தான் நினைவுக்கு வருகிறது.

உங்களது அடுத்த குற்றச்சாட்டு கொள்கையைத் திரித்து வெளியிட்டு விடுவார்கள் என்பது. இதுதான் உச்சக்கட்ட காமெடி! கொள்கையைப் பற்றியெல்லாம் தி.க வின் தலைவர் பேசக்கூடாது என்பது தமிழ்நாட்டின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும், எழுதப் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்த செய்தியாகும்.

இதுவரை பெ.தி.க வெளியிட்ட மூன்று குடி அரசு தொகுப்புகளையும் படித்திருப்பீர்கள். அவற்றில் எதாவது ஒரு திரிபுவாதத்தைக் காட்டுங்கள். அல்லது நாங்கள் வெளியிட்ட சிறு நூல்கள் ஏதாவது ஒன்றில் ஏதாவது ஒரு கருத்து மாறுபாட்டைக் காட்டுங்கள். அப்படியே இருந்தாலும் அதைச் சரிசெய்து வெளியிடுங்கள் என அறிவுறுத்தினால் அதுதான் உங்கள் தகுதிக்கு பொருத்தமாக இருந்திருக்கும். அதை விட்டுவிட்டு, "பெரியார் நூலை அச்சிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என எச்சரித்துள்ளீர்கள்! உங்கள் சட்டப் பூச்சாண்டியெல்லாம் எங்கள் கெண்டைக்கால் மசுருக்குச் சமானம்.

பெரியார் கருத்துக்களைத் திரித்து அவரைக் கொச்சைப்படுத்துவது நீங்கள் தான். உங்களிடமிருந்து பெரியார் கருத்துக்களைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு பெரியாரைச் சரியாக அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் இப்பணியைத் தொடங்கியுள்ளோம்.

அண்மையில் நீங்கள் தமிழர் தலைவர் என்ற நூலின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டீர்கள். அதில் எவ்வளவு கருத்துப் பிழைகள், திரிபு வாதங்கள், தவறான செய்திகள் இருக்கின்றதென்பதை தோழர் புதியவன் திராவிடர் இணையதளத்தில் எழுதி அது பெரியார் முழக்கத்திலும் விரிவாக வந்துள்ளது. இதுவரை நீங்கள் அதற்கு பதில் சொல்லவில்லை.

அதற்கு முன்பு 2000 த்தில் விடுதலையில் ஒரு அறிக்கை வெளியிட்டீர்கள். பெரியார் தனித்தமிழ்நாடு கோரிக்கையை அவர் வாழ்ந்த காலத்திலேயே கைவிட்டுவிட்டார் என்ற பித்தலாட்டமான கருத்துத் திரிபை வெளியிட்டீர்கள். அதை மறுத்து அறிஞர் எஸ்.வி.ஆர் அவர்கள் ஒரு தனி நூலே எழுதி வெளியிட்டார். அதற்கும் இன்று வரை பதில் இல்லை.

பெரியார் வாழ்ந்த காலம்வரை பெரியார் இயக்கம் என்றாலே அது ஜாதி ஒழிப்பு இயக்கம், பள்ளன், பறையன் கட்சி என்று அழைக்கப்பட்டது. உணர்ந்து கொள்ளப்பட்டது. சேரிகளில் திராவிடர் கழகக் கொடிதான் பறந்தது. ஆனால் உங்கள் காலத்தில்? தி.க என்றால் வெறும் நாத்திக இயக்கம் மட்டுமே என்ற குற்றச்சாட்டுக்கு அல்லவா இலக்காகி இருக்கிறது. மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள் வெளிப்படையாகவே இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளார். பல்வேறு தலித் இயக்கங்களும் இந்தக் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இதுதானே நீங்கள் கொள்கையை வளர்த்தெடுத்த இலட்சணம். பெ.தி.க தொடங்கிய காலம் முதல் இன்று வரை எல்லா ஜாதி ஒழிப்பு நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்று அனைத்து தலித் இயக்கங்களாலும் தமது சகோதர அமைப்பாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் காலத்தில் முறையாகக் கொள்கையைச் சொல்லியிருந்தால் தமிழ்நாட்டில் இத்தனைத் தலித் அமைப்புகள் உருவாகியிருக்காது என்பது மறுக்க முடியாத உண்மை.

நாங்கள் குடி அரசு தொகுப்பை அதாவது 1925 லிருந்து 1938 வரை பெரியார் பேசியவற்றை உள்ளதை உள்ளபடி அச்சிட்டு வெளியிட உள்ளதற்கு இவ்வளவு எதிர்ப்பைக் கொடுக்கிறீர்கள். ஆனால் பெரியார் கருத்தை ஆளாளுக்கு கண்டபடி விமர்சனம் செய்து பெரியாரைக் கொச்சைப்படுத்திய போது அறிவுசார் சொத்துரிமை வைத்துள்ள நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார் அவர்கள் பெரியார், தலித்துகளுக்கு விரோதி என எழுதியபோது நீங்கள் செய்த எதிர்வினை என்ன? அவரையெல்லாம் பெரிய மனிதர் ஆக்கக்கூடாது என சாக்கு போக்கு சொல்லிக் கொண்டுதானே இருந்தீர்கள்?

சேலம் அரசு கலைக்கல்லூரி ஆண்டு மலர் ஒன்றில் பெரியாரைக் கொச்சைப்படுத்தி ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் கட்டுரை எழுதிப் பதிவு செய்தானே? எதிர்த்து என்ன செய்தீர்கள்?

குஷ்பு அவர்களின் இண்டியா டுடே பேட்டி விவகாரத்தில் பெண்ணியம் குறித்த பெரியாரின் கருத்துக்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானபோது தங்களது எதிர்வினை என்ன?

மொழி, பண்பாடுகள் தொடர்பான பெரியாரின் கொள்கைகள் குறித்து தமிழர் கண்ணோட்டம் இதழில் தோழர் மணியரசன் அவர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்த போது தங்களது எதிர்வினை என்ன?

பெரியாரின் உயிர் மூச்சான திராவிடர் என்ற கருத்தியல் திடீர் தமிழ்தேசிய அமைப்புகளால், புதுப்புது தமிழ் தேசிய தலைவர்களால் கொச்சைப்படுத்தப்பட்ட போதெல்லாம் நீங்கள் செய்த எதிர்வினை என்ன?

காதலர் தினம் குறித்து பா.ம.க வின் மக்கள் தொலைக்காட்சியும், தமிழ்ஓசை நாளேடும் நஞ்சைக் கக்கிக் கொண்டிருந்த போது பா.ம.க வை எதிர்த்து தங்கள் செய்த காரியம் என்ன? கலைஞர் அவர்களை இராமதாசு அவர்கள் விமர்சனம் செய்த போது ஓடோடிச் சென்று பதில் கொடுத்தீர்களே, அதே இராமதாசு அவர்கள் காதலர் தினம் குறித்து எதிர்நிலை எடுத்த போது அறிவுசார் சொத்துரிமை வைத்திருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள்?

பாரதீய பார்வட் பிளாக் என்ற அமைப்பின் சார்பில் வெங்கடேசன் என்பவர் ஈ.வெ.இராமசாமியின் மறுபக்கம் என்ற நூல் மூலம் மிகக் கேவலமாக பெரியாரை விமர்சித்த போது தங்களது எதிர்வினை என்ன?

எழுத்தாளர் அசோகமித்திரன் தொடங்கி ஜெயமோகன் வரை பெரியாரை விமர்சித்த போது தங்களின் எதிர்வினை என்ன?

இவை அனைத்தும் நடந்த போது இப்படியெல்லாம் விமர்சித்தவர்கள் பலர் எமக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தபோதும் அவர்களின் நட்பைத் தூக்கி எறிந்து பெரியாரியல் அடிப்படையில் கடுமையான பதிலடிகளைக் கொடுத்தது பெரியார் திராவிடர் கழகமும், அதன் தோழர்களும் தான். இப்படிக் கருத்தியல் தளத்திலும் உங்களிடம் பெரும் கோளாறுகள். சரி நடைமுறையிலாவது ஏதாவது கொள்கை கோட்பாடுகளைப் பார்க்க முடிகிறதா என்றால் அதிலும் முட்டைதான்.

இப்போது கருவறையில் தமிழனை நுழைய வைத்த தமிழக அரசைப் பாராட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்காகப் போராடியது யார்? பெரியார் அறிவித்த கடைசி போராட்டத்தை நடத்தியது யார்? நீங்களா? இல்லையே. மாறாக சுமார் ஆயிரம் தோழர்களுடன் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தி கைதானது பெ.தி. க. தானே? நீங்கள் நடத்தியது எல்லாம் வேண்டுகோள் அறப்போராட்டங்கள் தானே?

கண்டதேவி தேரோட்டத்தில் தாழ்த்தப்பட்டோரை அனுமதிக்காத ஜாதித்திமிரை எதிர்த்து தி.க கண்ட களங்கள் என்ன?

மேலவளவு படுகொலையில் ஆதிக்க சாதிகளை எதிர்த்து தங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

திண்ணியத்தில், திண்டுக்கல் காந்தி கிராமத்தில், சின்னாளப்பட்டியில், நிலக்கோட்டை பள்ளபட்டியில் தீண்டாமைக் கொடுமைகள் நடந்தபோது தி.க வின் எதிர்வினைகள் என்ன?

கோவை காளப்பட்டியில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த ஆதிக்க சாதியினரும் ஒன்று கூடி தலித்துகளைத் தாக்கிய போது உங்களது எதிர் நடவடிக்கை என்ன? மேற்கு மாவட்டங்களில் இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை கொடுமைகளுக்கு எதிராக பெ.தி.க களத்தில் நேரடி ஆய்வு, நேரடியாக இரட்டைக் குவளைகளை உடைத்தல் என களமிறங்கிக் கொண்டிருந்தபோது காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவின் ஐ.ஜி பிரதீப் திலிப் அவர்கள் தமிழகத்தில் எங்கும் இரட்டைக் குவளைகள் கிடையாது. விளம்பரம் தேடும் அமைப்புகள் சில இந்தப் பிரச்சனையைக் கிளப்புகின்றன என அறிக்கை விட்டார். அந்த அறிக்கையை அப்படியே விடுதலையில் வெளியிட்டு மகிழ்ந்தீர்கள். இரட்டைக் குவளை ஒழிப்புக்காக பெ.தி.க போராடிக் கொண்டிருந்த ஒட்டன்சத்திரம் பண்டுகிராமப் பகுதியிலேயே அதே கால கட்டத்தில் கலைஞர் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களையல்லவா நீங்கள் நடத்தினீர்கள்!

கோபி பகுதியில் தாழ்த்தப்பட்டோருக்கு திருமண மண்டபங்களில் அனுமதி மறுக்கப்படும் வன் கொடுமைகள் நடந்த போது தி.க வின் எதிர் நடவடிக்கை என்ன?

உடுமலை சாளரப்பட்டியில் தேநீர்க்கடைகளில் இருந்த இரட்டைக் குவளை முறையை ஆதித்தமிழர் பேரவை தோழர்கள் எதிர்த்ததால் தொடர்ந்து நடந்த கலவரங்களில் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்காக தி.க நடத்திய ஆதரவு நடவடிக்கைகள் என்ன? இப்படி கருத்தியலிலும் கோளாறு, எழுத்திலும் எட்டிலும் கோளாறு, நடவடிக்கையிலும் கோளாறுகளைக் கொண்ட நீங்கள் எங்களைப் பார்த்து கொள்கைகளை திரித்து விடுவார்கள் எனச் சொல்லியது தான் இந்த ஆண்டின் மாபெரும் நகைச்சுவை.

நாங்கள் அடித்தட்டு மக்களிடம் பெரியார் கருத்துக்களைக் கொண்டு செல்லப் போகிறோம் என்றவுடன் துடிதுடித்து அறிக்கை விடுகிறீர்கள். ஆனால் அமெரிக்காவிலுள்ள ஃபோர்டு ஃபவுண்டேசனும், யுனிவர்சிட்டி ஆஃப் சிகாகோவும் குடி அரசு ஏடுகளை மைக்ரோஃபிலிம் முறையில் பாதுகாத்து காப்பிரைட் செய்துள்ளோம் என விளம்பரமும் தந்துள்ளனரே அந்த நிறுவனங்கள் மீதும் வழக்குப் போடுவீர்களா? இது இன்று நேற்று நடக்கவில்லை. 2006 ஆம் ஆண்டே பணிகள் முடிந்து அறிக்கைகள் வந்துவிட்டன. நாங்கள் சின்னாளப் பட்டியில் இருந்து திண்டுக்கல்லுக்குப் போவதுபோல சென்னைக்கும் சிகாகோவுக்கும் பறந்து கொண்டிருக்கும் உங்களுக்கு - பெரியார் பன்னாட்டமைப்பு நடத்தும் உங்களுக்கு - சோம.இளங்கோவன் அவர்களை வைத்திருக்கும் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்? ஏன் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை?

கடந்த 2003 ஆம் ஆண்டில் நாங்கள் குடி அரசு 1925 நூலை வெளியிட்ட போது எங்கே தி.க. வினர் தப்பித்தவறி குடி அரசை வாங்கி விடுவார்களோ என்ற அச்சத்தில் தி.க சார்பில் உலகத்தில் எவனுமே சொல்லாத தத்துவங்கள் அடங்கிய "வாழ்வியல் சிந்தனைகள்" நூலை வெளியிட்டு தோழர்களை விற்பனை செய்யச் செய்தீர்கள். இப்போதும் அதே போல குடி அரசு முழு தொகுப்பும் வெளிவர உள்ள இந்தக் கால கட்டத்தில் "வீரமணி ஒரு வீர விதை" என்ற, உங்களுக்கு ஜால்ரா அடிக்கும் புத்தகத்திற்கு விளம்பரம் விடுதலையிலேயே வருகிறது. செப்டம்பரில் நீங்களே வெளியிட உள்ளீர்கள். தப்பித் தவறி தி.க விலுள்ள மிச்சமீதி கொள்கைக் காரர்கள் யாரும் குடி அரசு தொகுப்பை வாங்கிவிடக் கூடாதல்லவா? நல்ல அரசியல்! வீரமணி ஒரு வீரவிதை நல்ல பெயர்தான். ஒரு திருத்தம். அது உலகமயமாக்கலில் கரைந்து போன - மரபணு மாற்றம் செய்யப்பட்ட மலட்டு விதை. அந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதை, தன்னை மாற்றியதுமல்லாமல் பெரியாரின் மரபையும் மாற்றத் துணிந்துள்ளது.

அறிவு என்பது ஒரு கூட்டத்திற்கே சொந்தம் என்பது ஆரியம், அதை மறுத்து அனைவருக்கும் அறிவைப் பொதுவாக்கச் செய்வதுதான் பெரியாரியம். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே, சூத்திரன் வேதத்தைப் படித்தால் அவனது நாக்கை அறுக்க வேண்டும். சூத்திரன் வேதத்தை மனப்பாடம் செய்தால் வாயில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற கட்டுக்களை விதித்தது மனுதர்மம். அதன் மறு உருவாக நகலாகத் தான் இப்போது நீங்கள் எச்சரித்துள்ளீர்கள். இன்று பெரியாரின் எழுத்துக்களை அச்சிடுவது மட்டும் தான் குற்றம்; நாளை பெரியாரின் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதும்கூட குற்றமாக அறிவிக்கப்படும் நான் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய வேண்டுமென்றால் பெரியார் திடலில் அனுமதி கேட்டுத்தான் செய்ய வேண்டும். நான் நாத்திகனாக வாழ வேண்டுமென்றால் தளபதி அன்புராஜ் அவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் நாத்திகனாக வாழ முடியும். சாதி மற்றும் மதச் சடங்குகளை சொந்த வாழ்க்கையில் மறுக்க வேண்டுமென்றால், எதிர்த்து வாழ வேண்டுமென்றால் தளபதி அன்புராஜ் அவர்களின் வாரிசுகளிடமிருந்து அனுமதி வாங்கத்தான் எதிர்க்க வேண்டும் என்ற காலக் கொடுமையெல்லாம் நடந்தே தீரும். உலகமயமாக்கமும், பார்ப்பன - பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளை நிறுவனங்களுக்கான சட்டங்களும், உங்கள் குடும்பப் பாசமும் இப்படியெல்லாம் உங்களைப் பேச வைக்கத்தான் போகின்றன.

உண்மைப் பெரியார் தொண்டர்கள் இந்த அறிவுசார் சொத்துரிமைக் கூட்டத்தை உடனடியாக கடுமையாக எதிர்த்துப் போராடி இச்சிக்கலுக்கு இப்போதே முடிவு காணாவிட்டால் எமது தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியவை உண்மையாகிவிடும். அவர் சொன்னதாவது:-

பெரியார் திடலில் இரண்டு கல்லறைகள் உள்ளன. ஒன்று பெரியாரின் உடலுக்கு; இன்னொன்று பெரியாரின் கொள்கைக்கு.

(உங்களைப் போலவே அச்சு அசலாக - உங்களுக்குப் போட்டியாக ஒரு பெரியார் வியாபாரி இருக்கிறார். அவருடன் கூட்டு சேர்ந்து கொள்வது உங்கள் பெரியார் வணிகத்துக்கு நல்லது. கி.பி 2000 ஆவது ஆண்டிலிருந்து குடி அரசு வெளியாகும் இந்த 2008 ஆம் ஆண்டு வரை குடி அரசு வெளியீட்டுக்காக பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் எடுத்த நடவடிக்கைகள், கொடுத்த உழைப்புகள், சந்தித்த துரோகங்கள், நடந்த பேரங்கள், முறிந்த உடன்பாடுகள் என அனைத்தையும் அடுத்த பதிவில் விரிவாகப் பதிவு செய்வேன். )

- அதிஅசுரன்

Pin It