கழகத் தலைவர் கொளத்தூர் மணி - திரிபுவாதிகளுக்கு பதில்

பெரியார் குறளை எதிர்த்தார் என்று திரிபுவாதம் பேசும் பா.ஜ.க. - சங் பரிவாரங்களுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சென்னையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் விளக்கப் பொதுக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை சரியான பதில் அளித்திருக்கிறது. வள்ளுவர் - ஓர் இந்து; திருக்குறள் - ஓர் இந்து மத நூல் என்று இப்போது பா.ஜ.க.வினர் பேசுவதற்கு முன்பாகவே அக். 16இல் சென்னை அம்பத்தூரில் நிகழ்த்திய உரை:

பெரியாரை தமிழின விரோதி, தமிழ் மொழி விரோதி, தமிழ் இலக்கிய விரோதி என்று ஒரு கூட்டம் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிற வேளையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டைப் பற்றி, அதனுடைய விளக்கக் கூட்டமாக இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

kolathoor mani 2281949இல் பொங்கலை ஒட்டி நடந்த 2 நாள் திருக்குறள் மாநாட்டில்தான் எல்லா தமிழறிஞர்களையும் இணைத்து திருக்குறளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற முன்னெடுப்பை பெரியார் எடுத்தார். அந்த நினைவாகத்தான் 70 ஆண்டுகள் கழித்து திருக்குறள் மாநாட்டை நாம் நடத்தினோம். பெரியாரை ஏற்றுக் கொண்டவர்களே பெரியார் குறளுக்கு எதிரி என்பதைப் போல காட்டினார்கள்.

தோழர் பொழிலன் சொன்னதைப் போல, பெரியார் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல வேண்டும். பெரியார் பொதுவாழ்க்கைக்கு வருவதற்கு முன்னால், தன்னுடைய தங்கை மகளுக்கு மறுமணத்தை நடத்தி வைக்கிறார். ‘விதவா விவாகம் விலக்கம்’ என்று நூல் எழுதப்படுகிறது. அந்த நூலைப் பற்றி மதிப்புரை எழுதும்போதுதான் பெரியார் அவர் வீட்டில் நடந்ததைப் பற்றி சொல்கிறார். “எங்கள் வீட்டிலும் இதுபோன்ற ஒரு திருமணம் நடந்தது. நான் கன்னட பலிஜா நாயுடு சமூகத்தை சார்ந்தவன். எங்கள் வீட்டில் மறுமணம் செய்யும் பழக்கம் இல்லை. கோஷா போடுகிறவர்களாக இருந்தார்கள்” என்று சொல்லி விட்டு அந்த திருமணம் பற்றி பெரியார் சொன்னார்.

அதைப்போல போகிற போக்கில் திருக்குறளைப் பற்றி எங்காவது திறனாய்வாக சொல்லியிருப்பார். திருக்குறள் மாநாட்டு உரையில் பெரியார் சொன்னார், “தொடக்கக்காலம் முதல் என்னுடைய நண்பர்கள், குறிப்பாக பா.வே மாணிக்க நாயக்கர் அடிக்கடி என்னிடம் பேசுவார். உரையாசிரியர்களின் உரையைப் படித்ததால் எனக்கு திருக்குறள் மீது கொஞ்சம் வெறுப்புணர்வு இருந்து கொண்டே இருந்தது. உரையாசிரியர்கள் தவறான விளக்கத்தை அளித்திருந்ததால் அந்த வெறுப்புணர்வு இருக்கத் தான் செய்தது. ஆனால் காலப்போக்கில் அதை நான் உணரத் தொடங்கினேன்” என்று பேசுகிறார்.

நமக்கெல்லாம் எதைக் காட்டினாலும் பார்ப்பனர்களைத்தான் உயர்வாகக் காட்டியிருக்கிறார்கள். வள்ளுவரே பார்ப்பனருக்கு பிறந்தவர் என்பதால் அவருக்கு அறிவு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அறம் என்றால் என்ன என பரிமேலழகர் சொன்ன விளக்கத்தை பார்ப்பனர்கள் எல்லாம் தூக்கிக் கொண்டாடினார்கள்.

“மனு முதலிய நூலோர் விதித்தன செய்தலும் விளக்கென ஒலிதலுமாம் விலக்கியென” மனு சொன்னதை செய்வது அறம், மனு வேண்டாமென சொன்னதை செய்யாமலிருப்பதும்தான் அறம் என்று சொன்னார் பரிமேலழகர். அப்படியென்றால் 4 ஜாதிகளையும் ஏற்றுக் கொண்டதாகத்தான் குறள் இருக்க முடியும். ஆனால் வள்ளுவர் அப்படி எழுதவில்லை.

அதேபோல ஒழுக்கம் என்றால் என்ன? “பார்ப்பனர் முதலான வர்ணத்தார் தமக்கு விதிக்கப்பட்ட கடமைகளையும், ஆசிரமங்களையும் முறையாகப் பின்பற்றுவதுதான் ஒழுக்கம்” என்று பரிமேலழகர் எழுதுகிறார். அந்தந்த வருணத்தார் அவரவருக்கு உரிய கருமங்களை செய்ய வேண்டுமென பரிமேலழகர் விளக்கவுரை எழுதினார்.

திருக்குறளுக்கு இப்படி தவறான உரையை எழுதினார்கள் என்றுதான் பெரியார் பேசினார். மக்களுக்கு சரியான உரையை கொண்டு சேர்க்க வேண்டுமென்று பெரியார் விரும்பினார். அந்த மாநாட்டிலேயே ஒரு குழுவை நியமித்தார்கள். அந்தக் குழுவினர் திருக்குறளுக்கு உரை எழுதி சரியான உரையை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் புலவர் குழந்தை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகிய 2 பேர்தான் உரை எழுதினார்கள். இவர்கள் இருவருமே பெரியாரின் இயக்கத் தோழர்களாக இருந்தவர்கள். ஆனால் அந்த பெரியார் இயக்கம்தான் தமிழுணர்வுக்கு எதிராக இருந்தது, தமிழுணர்வை மழுங்கடித்தது என்று சிலர் இப்போது பேசித் திரிகிறார்கள்.

‘ஆயிரம் உண்டு இங்கு ஜாதி, எனில் அந்நியர் வந்து இங்கு புகல் என்ன நீதி?’ என்று பாரதியார் சொன்னார். அதற்குப் பெரியார், “ஆயிரம் உண்டிங்கு ஜாதி, எனவே அந்நியர் புகுவதுதான் நீதி” என்று சொன்னார். தனித்தனியாகப் பிரிந்து கிடந்தால் அந்நியன் ஆளாமல் என்ன செய்வான் என்று பாரதியாருக்கு பெரியார் பதில் சொன்னார். தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதியார் சொன்னார். ஆனால், “இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றியான்” என்று எங்கள் வள்ளுவர் சொன்னார். ஒருவர் பிச்சையெடுத்துதான் சாப்பிட வேண்டுமென்று சொன்னால், இந்த உலகத்தை உண்டாக்கியவன் ஒழியட்டும், அப்போதுதான் பிச்சை ஒழியும் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் சொன்னார் என பெரியார் பேசினார். வள்ளுவரைப் பார்த்ததும், போற்றியதும், அவரைப் பற்றி பரப்பியதும் இந்த அடிப்படையில்தான்.

பெரியாருக்கு பிடித்த குறள்கள் பலவற்றை அவ்வப்போது சொல்லுவார். ‘குடிசெய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும்’ என்ற குறளை எடுத்துக்காட்டாக சொல்லுவார் பெரியார். அதாவது “பொது வாழ்க்கைக்கு வருபவனுக்கு சோம்பேறித்தனம் இருக்கக்கூடாது. பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு மானம் பார்க்கக் கூடாது. தன்மானத்தை விட இனமானம் பெரியது” என்ற தத்துவத்தைதான் பெரியார் சொல்லிக் கொடுத்தார். எனவே வள்ளுவத்திற்கு சரியான விளக்கம் கொடுத்தவராக பெரியார் இருக்கிறார்.

கடவுள் வாழ்த்தைப் பற்றி வ.உ.சி. எழுதினார். திருக்குறளில் முதல் 3 அதிகாரமும் திருக்குறளுடன் சேர்ந்தது அல்ல என்று வ.உ.சி. கூறினார். ஆனால் கடவுள் என்ற சொல் திருக்குறளில் எங்கே இருக்கிறது? கடவுள் வாழ்த்தை நடுவில் வந்த யாரோ திணித்து விட்டார்கள் என்று பெரியார் சொன்னார். கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் தலைப்பை பண்புச்சிறப்பு என்று மாற்றிதான் பெரியார் திருக்குறளை வெளியிட்டார். ஆறு அணா என்ற குறைந்த விலைக்கு அச்சடித்து திருக்குறளை வெளியிட்டார் பெரியார். ஆயிரக்கணக்கில் விற்பனையானது.

விற்பனைக்கு சென்ற 3 நாள் கழித்து நாங்கள் விலையை தவறாக கணக்கிட்டு விட்டோம், அடக்க விலை 5 அணா தான் வருகிறது. எனவே தோழர்கள் ஒரு அணா குறைத்து விற்க வேண்டும் என பெரியார் அறிக்கை விடுக்கிறார். பெரியார் கஞ்சன், கணக்குப் பார்ப்பார் என்பார்கள், ஆனால் திருக்குறள் அதிகாமானவர்களிடம் போய் சேர வேண்டும் என அவ்வளவு அக்கறை இருந்தது பெரியாரிடத்தில் என்பதைப் பார்க்க வேண்டும்.

இலக்கியம் என்றாலே கம்பராமாயணம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, திருக்குறளை மக்களுக்கு பரப்பினார் பெரியார். கருத்து வளர்ந்துகொண்டே இருக்கும் என்ற சிந்தனை உடையவர் பெரியார். அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும், மாறிக் கொண்டே இருக்கும். பெரியாரின் சிறந்த சொற்பொழிவுகள் நான்கை இணைத்து பெரியார் காலத்தில் ஒரு நூல் வெளியிட்டார்கள். அந்த நூலுக்கு தலைப்பு ‘அறிவின் எல்லை’. பெரியாரிடம் அதைக் கொடுத்தபோது அறிவுக்கு ஏது எல்லை என்று அந்த நூலைத் தூக்கி கீழே வீசினார். அதுபோல குறள் பற்றியும் அவருக்கு மாற்றுக் கருத்து எழுந்திருக்கும். அதற்காக முற்று முழுதாக மறுத்து விட்டதாகவும், எதிரி போலவும் நம்மவர்களே பெரியாரைக் காட்டுகிறார்கள்.

இன்றைக்கு பார்ப்பனர்கள் சங்கீத வித்வான்களாக உள்ளனர். சங்கீதமே அவர்களுடையது என்கிறார்கள். காங்கிரஸ் மாநாடு நடத்தி, அதில் சங்கீத நிகழ்ச்சி நடத்தி, அதில் மீதமான பணத்தைக் கொண்டு Music Academy கட்டினார்கள். ஆனால் அதில் இன்றைக்கு காங்கிரசுக்கு சொந்தமில்லை. பார்ப்பனர்கள் எல்லா இடத்தையும் பிடித்துக் கொள்வார்கள். சிலப்பதிகாரத்தில் புறஞ்சேரி இறுத்த காதை என்று ஒன்று உள்ளது. யாரெல்லாம் புறஞ்சேரியில் தங்கி இருந்தார்கள் என அதில் சொல்லப்பட்டிருக்கிறது. பாட்டு பாடும் பார்ப்பனர்கள் எல்லாம் அதில் ஜாதியில் இருந்து தள்ளி வைக்கப்பட்டனர். ஏனென்றால் இசைப் பாட்டு பாடுவது மனுதர்மத்தில் இல்லை. “வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து” என அதில் சொல்லப் பட்டிருக்கிறது. பார்ப்பனர்கள் பாட்டு பாடியது வேதத்திற்கு எதிரானது என்று சொல்லி, அந்த பார்ப்பனர்களை ஊருக்கு வெளியே வைத்தார்கள், அந்த இடம்தான் சேரி என்று சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இன்றைக்கு எல்லா சங்கீத சபையையும் பார்ப்பனர்கள் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அவரவர் விருப்பத்திற்குத்தான் குறள் விளக்கம் கொடுத்திருப்பார்கள். 

1930 ஈரோடு சுயமரியாதை மாநாட்டில் ஒரு மாநாடு - சங்கீத மாநாடு. பார்ப்பனர் அல்லாத சங்கீதக் கலைஞர்களின் பெயர்களை எல்லாம் குடிஅரசு ஏட்டில் பட்டியலிடுகிறார். தமிழர்கள் எல்லோரும் இனி இந்தக் கலைஞர்களையே அழைத்து நிகழ்ச்சி நடத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் வைக்கிறார். அந்தக் கலைஞர்களை வைத்து மாநாட்டில் இசைக்கச்சேரி நடத்துகிறார். பார்ப்பனரல்லாத இசைக்கலைஞர்கள் அந்த காலத்தில் எப்படி அவமதிக்கப்பட்டார்கள் என்பதைப் பற்றி அந்த மாநாட்டில் பெரியார் பேசினார். அப்போது மாலை போட வந்தால் கூட பாட்டு பாடியவருக்கு போடாமல், மிருதங்கம் வாசிக்கும் பார்ப்பனர்களுக்கு போட்ட பிறகு கடைசியாகத் தான் போடுவார்கள்.

திருவாவடுதுறை இராஜரத்தினம் தன்னுடைய நிகழ்ச்சிகளில் பட்டு சட்டை, அங்கவஸ்திரம் அணிந்துதான் நாதஸ்வரம் பாடுவார். அது அந்தக் காலத்தில் பெரிய புரட்சி. ஓர் இசைக் கலைஞன் தோளில் துண்டு போடுவதற்கே பெரியார் இயக்கம் போராட்டம் நடத்தியுள்ளது. அதற்குப் பின்னால் திராவிட இயக்க மேடைகளில் எல்லோருக்கும் துண்டு போட்டார்கள். அந்தந்த ஊரில் யாரெல்லாம் கீழ்ச்சாதி என்று கருதப்பட்டு தோளில் துண்டு அணியக் கூடாது என்று இருந்தததோ அந்த தோழர்களை எல்லாம் மேடையில் ஏற்றி துண்டு அணிவித்தார் பெரியார்.

(தொடரும்)