திருக்குறள் குறித்து பெரியார் தெரிவித்த கருத்துகள் - நடத்திய மாநாடுகள் - மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்து ஒரு பார்வை.

பெரியாரது முக்கியக் கொள்கைகளில் ஒன்று கடவுள் மறுப்பாகும். கடவுள் பெயரால்தான் அனைத்துச் சீர்கேடுகளும் நடைபெறுகின்றன என்பதும் சமூகம் சீர் அடைய வேண்டுமானால் கடவுள் பற்றிய கற்பிதங்கள் உடைபட வேண்டும் என்பதும் பெரியார் கருத்து. சைதாப்பேட்டை திருவள்ளுவர் மன்றத்தில் பெரியார் கடவுளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

 1. தமிழனுக்கு எப்போதும் உருவக் கடவுள் இருந்ததில்லை.
 2. கடவுள் சக்தியை விஞ்ஞான அறிவு மீறி வருகிறது.
 3. அறிவுக்கு மதிப்பு மிகுந்து கடவுளுக்கு மதிப்பு மங்கி வருகிறது.
 4. சுகாதார அதிகாரிகளால் மாரியாத்தாள் மதிப்பிழந்தாள்.
 5. திருக்குறளின் வெற்றி மெய்மை அறிவொளியின் வெற்றி (‘விடுதலை’ 9.11.1949)

- எனக் குறிப்பிடுகின்றார். திருவள்ளுவர் கடவுள் பெயரால் பிரிந்து கிடக்கும் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் குறளினை பெரியார் மேற்கோள் காட்டுகிறார். “எந்த நாட்டில், சாதிப் பற்றியும், மதங்கள் பற்றியும் கடவுள்கள் பற்றியும் கூட்டங்கள் இருந்து கொண்டு அவைகளின் அடிப்படையில் உண்டாகின்ற அரசியலையும், நாடாள்பவனையும் கெடுக்கின்ற ஐந்தாம் படை உட்பகையாளர்களும் இருக்கின்றார்களோ அந்த நாடு ஒரு காலத்திலும் முன்னேராது.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும்                         வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு   (குறள் 735)

என்று குறளைக் கூறி விளக்கமளிக்கின்றார். இதே போன்று வேறொரு இடத்தில் கடவுள் சக்தியைப் பற்றி விளக்கும் பெரியார், “ஒழுக்கம் இல்லாததால் மழை பெய்யவில்லை என்று கூறுவர். ஆனால் வள்ளுவர் மழை இல்லாததால் தான் மக்களிடத்தில் ஒழுக்கம் குறைகிறது என்று கூறுகிறார். நாட்டில் மழை இல்லையெனில் பஞ்சம் ஏற்படும். பஞ்சத்தில் எப்படி ஒழுக்கத் தோடு இருக்க முடியும் எனக் கூறிச், “சிறப்போடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு” (‘விடுதலை’ 23.5.50) என்ற குறளினை மேற்கோள் காட்டுகின்றார். 

மற்றோர் இடத்தில் கடவுளுக்கு நிகராகப் போற்றப்படும் தேவர்களின் கயமைத்தனத்தினை வள்ளுவர் வழிநின்று விளக்குகிறார் பெரியார்.

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பர் யாங்கண்ட தில்

தேவரனையர் கயவர் அவருத் தாம்

மேவன செய்தெழுக லான்

மக்கள் உயர்ந்த குணமுடையவர்கள் - எனவே அவர்களுடைய உருவத்தில் இருந்து கொண்டு உள்ளனர். தேவர்கள் இழிந்த குணமுடையவர்கள் - எனவே அந்தத் தோற்றத்தில் இல்லாமல் இருக்கின்றார். குணத்தில் மட்டும் தேவர்களைப்போல அயோக்கியர்களாக உள்ளனர்” (‘விடுதலை’ 24.12.1948) எனக் குறிப்பிடு கின்றார். இதுபோன்று கடவுளை மறுக்கும் பகுதிகளைப் பெரியார் சான்று காட்டி விளக்கு கின்றார். திராவிட இயக்கத்தினர் கடவுளை மறுப்பதைப் போன்று கடவுளைக் கொண்டு சில நடைமுறைகளை உருவாக்கி வைத்துள்ள சமயக் கொள்கைகளையும் மறுத்துள்ளனர். 

திருக்குறளைப் போன்றே பல சித்தர்கள் கருத்துகள் அமைந்திருப்பதாக பெரியார் கருதுகின்றார். பெரியார் சித்தர்கள் பற்றிக் கூறும் கருத்து வருமாறு:

“வருணாசிரம முறைமையும் கடவுள் மத மூட நம்பிக்கைகளையும் பல சித்தர்கள் வள்ளுவரைவிட இன்னும் பச்சையாக ஆணித்தரமாகக் கண்டித்திருக்கின்றனர். அதையெல்லாம் தேடிப் பிடிப்பது கடினம். இருந்தும் அது சாதாரண மக்களுக்குப் பொருந்தாது. ஞானியருக்கே பொருந்தக் கூடியது” (‘விடுதலை’ 11.11.1949) எனக் கூறி அதனைக் கடைப்பிடிக்க இயலாது என்று குறிப்பிடுகின்றார்.

ஆரியத்துக்கு எதிரானது குறள்

முடிவாக வைதீகத்திற்கு எதிராகத் தோன்றியதுதான் திருக்குறள் என்பதை அனைத்து திராவிட இயக்கச் சிந்தனையாளர்களும் கருதி யுள்ளனர். குறள் எப்படி ஆரியத்திற்கு எதிரானது என்பதை பத்திரிகையாளர் அ.மா.சாமி சிலவற்றைத் தொகுத்துக் கொடுத்துள்ளார். அவற்றின் சுருக்கம் வருமாறு:

 • ஆரியம் நான்கு வருணம் பற்றிப் பேசுகிறது. குறள் பிறப்பொக்கும் என்கிறது.
 • ஆரியம் ஏர்பிடிப்பது சூத்திரனுக்குரியதாகக் கூறுகிறது. குறள் என்ன வேலை செய்தாலும் உணவுக்கு உழவன் என்கிறது.
 • பிராமணன் பிச்சை வாங்கி உண்ண வேண்டும் என்கிறது ஆரியம். இரந்து வாழின் உலகியற்றியவன் கெட்டழியட்டும் என்கிறது குறள்.
 • மரணம் வரின் எந்தச் செயலையும் செய்யலாம் என்று ஆரியம் கருத்துகூற வள்ளுவர் மானம்வரின் உயிரையும் துறக்க வேண்டும் என்கின்றார்.
 • குழந்தை இல்லாத பெண் யாருடனும் கூடி குழந்தை பெறலாம் என்று வேதம் கூற வள்ளுவரோ பிறனில் விழையாமை பற்றிப் பேசுகிறார்.
 • ஆரிய புராணங்களில் சூதாட்டங்கள் வருகின்றன. குறள் சூதாடுவது தவறு என்று கூறுகிறது.
 • பசு, குதிரைகளை வேள்வியில் இடலாம் என்று வேதம் கூறுகிறது. குறள் கொல்லாமை பற்றி விளக்குகிறது.
 • விதி வலியது என்கிறது வேதம். குறள் விதியை முயற்சியால் வெல்லலாம். எனவே முயற்சி வலியது என்கிறது.
 • வேதம் தாழ்ந்த வருணத்தார் கல்வியைப் பக்கத்திலிருந்துகூட கேட்கக் கூடாது என்கிறது. திருக்குறள் கற்றிலனாயினும் கேட்க கற்பதனால் தாழ்ந்தவனும் உயர்வடையலாம் என்கின்றது.

இந்தக் கூற்றுகளின் மூலம் குறள் ஆரியக் கருத்தைத்தான் கூறுகிறது என்கின்ற பழைய வாதங்கள் முற்றிலும் முறியடிக்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய குறள் கருத்துகள் இன்று ஏன் தேவைப்படுகிறது என்பதற்கு பெரியார் கூறும் காரணம் வருமாறு:

“சர்வம் புராணமயம் பள்ளியில் புராணப் படிப்பு, கொட்டகையில் புராண நடிப்பு, சங்கீதத்தில் புராணப் பாட்டு, கோயில்களில் புராண காலட்சேபங்கள், பத்திரிகைகளில் புராண விமர்சனங்கள் எல்லாம் பார்ப்பனிய மயம். இவற்றிற்கெல்லாம் சரியான பரிகாரம் சரியான மருந்து நாம் நம் நாட்டைத் திருக்குறள் மயமாக்குவதுதான். திருக்குறள் ஒன்றுதான் பார்ப்பனியத்தின் சவாலை ஏற்று வெற்றி காண வல்லது.” (‘விடுதலை’ 11.11.1949) இவ்வாறு பயன்பாட்டு நோக்கில் இலக்கியத்தை அணுகி யிருக்கிறார் பெரியார்.

மாநாடுகள் - சொற்பொழிவுகள்

தந்தை பெரியார் தனது பேச்சுக்களின் வழியே கருத்துகளை எடுத்துச் சென்றார். ஊருக்கு ஊர் மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்தி னார். திருக்குறள் பற்றி அறியத் தொடங்கியதும் குறள் பற்றிப் பேசினார். திருக்குறள் மன்றங்கள் நடத்தும் சொற்பொழிவுகளில் கலந்து கொண்டு பேசியுள்ளார். குறளுக்குத் தனியாகச் சிறப்பு கொடுக்க வேண்டும் என எண்ணிய பெரியார் திருக்குறள் மாநாடு நடத்தினார்.

சென்னை பிராட்வே டாக்கீசுக்கு அடுத்த மைதானத்தில் 15, 16.1.1949ல் குறள் மாநாட்டை நடத்தினார். இதற்கான காரிய கமிட்டிக் கூட்டம் மவுண்ட்ரோடு மீரான் சாயபு தெருவிலுள்ள கட்டடம் ஒன்றில் நடைபெற்றது. இதில் 100 பேர் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொண்டு உரையைக் கேட்போருக்கு டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் விவரங்கள் பின்வருமாறு:

சாதாரணக் கட்டணம்     1 நாள் ரூ. 1-0-0

               2 நாள் ரூ. 1-8-0

உயர் வகுப்பு 1 நாள் ரூ. 3-0-0

               2 நாள் ரூ. 5-0-0

பெண்களுக்கு      1 நாள் ரூ. 0-12-0

               2 நாள் ரூ. 1-0-0

மேற்கூறியவாறு விலை கொடுத்து நிறைய கூட்டம் வந்திருந்தது. மேலும் மாநாட்டு விளம்பர அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டது. மாநாடு நடக்கும் இடம் மிகச் சிறியது. ஆதலால் குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகளே கொடுக்கப் படும். எனவே முந்த வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இன்று பணம் கொடுத்துக் கூட்டம் சேர்க்கின்றனர். ஆனால் டிக்கெட் வாங்கிக் கொண்டு மாநாட்டைக் கேட்டனர் என்பது மக்களது திருக்குறள் ஆர்வத்தைப் புலப்படுத்துகிறது. 

தற்போது கூட்டப்படும் இலக்கியக் கூட்டங்களுக்கு கூட்டம் கூடுவது அரிதாக இருக்கிறது. கூட்டம் கூட்ட உணவு தேநீர் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அன்று பணம் கொடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டதைக் காணும்போது மக்களுக்கு இலக்கியம் மீது இருந்த ஆர்வம் எப்படிப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

இந்த மாநாடு நடைபெறுவதற்கு மூன்று நாட்கள் முன்பு விடுதலை இதழில் வெளி வந்த ஓர் உரையாடல் குறள் மாநாடு குறித்த வினாக்களுக்கு விடை காணும் வகையில் அமைந்துள்ளது. அவை வருமாறு:

ஒருவர் :    குறள் மாநாடு பிராமணர்களை வைவதற்குத்தானே நடைபெறுகிறது

மற்றவர் :   பெரிய புராண மாநாடு இராமாயண மாநாடு - இது யாரைத் திட்டுவதற்கு நடைபெற்றது?

ஒருவர் :    குறள் இலக்கிய சம்பந்தமானது

மற்றவர் :   குறள் இலக்கியமில்லையா?

ஒருவர் :    ஊரில் அப்படித்தான் பேசிக் கொள்கிறார்கள்.

மற்றவர் :    குறளைப் பார்ப்பனர் ஆதரிப்ப தில்லை. குறளில் பார்ப்பனியத்திற்கு எதிராகப் பல கருத்துகள் இருக்கின்றன. அதனால் அவர்கள் குறளைப் பெரிதும் வெறுப்பார்கள். அதை நாம் நடத்துவதால் பார்ப்பனியத்தை வெறுக்கும் விஷயங்கள் பற்றிப் பேசுபவர்களே என்று அடிக்கடிச் சொல்லுகிறார்கள் (‘விடுதலை’ 12.1.49).

இவ்வாறு குறள் மாநாடு பற்றிய கருத்துகளை மக்களுக்குத் தெரிவிக்க வினா விடை அமைப்பில் ஒரு பக்கம் வெளி வந்துள்ளது. இது மாநாட்டைப் பற்றிய தெளிவினை விளக்குவதாக அமைந்துள்ளது. மேலும் குறள் மாநாட்டுக்கான காரணங்களையும் அன்றைய ‘விடுதலை’ நாளி தழிலேயே வெளியிட்டுள்ளார். அவை வருமாறு:

 1. திராவிடனுக்கு நீதி ஒழுக்க நூல் கிடையாது. இராமாயணம், மகாபாரதம் தான் ஒழுக்க நூல் என்று சொல்லப்படுவது ஒழிய வேண்டும்.
 2. சமய நெறி என்பவற்றின் பேரால் திராவிட மக்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கைகளை யும் காட்டுமிராண்டித்தனமான தன்மைகள் மறையும்படி செய்யவும் மக்களுக்குள் அன்பும் ஒற்றுமையும் ஏற்படுத்தவும் கூட்டுகிறோம்.
 3. திராவிடர் கழகத்தார் சுயமரியாதைக்காரர் தமிழ் இலக்கியத்தைக் கலையை அழிக்கிறார்கள். அவர்களுக்கு இலக்கிய உணர்வு, கலை உணர்வு இல்லை என்று சொல்லி மடமைப் பிரச்சாரமும் நீலிப் பிரச்சாரமும் செய்வதைத் தவறு என்று கூறி அயோக்கியர்களும் மடையர்களும் ஆரியர்களும் யார் என்று நிரூபிக்கவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது.
 4. இன்று திராவிடர்களுக்குப் பாமரர்கள் உள்பட எல்லோருக்கும் நல்ல நெறியும் ஒழுக்கமும் ஏற்பட குறளைத் தவிர வேறு நூல் இல்லை. இப்படிப்பட்ட குறளை விட்டுவிட்டு இராமாயண, மகாபாரத, பெரிய புராணம், திருவிளையாடற்புராணம் போன்றவவைகளையே சகல திராவிடரும் பிரச்சாரம் செய்கிறார்கள். இதை மாற்றவும் பொது மக்கள் இதை நிரூபிக்கவும் இந்த மாநாடு நடத்துகிறோம். (‘விடுதலை’ 12.1.1949)

குறள் மாநாட்டில் வந்து கேட்போருக்கு நிழலுக்காகப் பெரிய பந்தல் அமைக்கப்பட்டது. இப்பந்தல் 10,000 பேர் அமர்ந்து கேட்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது.

குறள் மாநாடு

1949ஆம் ஆண்டு ஜனவரி 15, 16ஆம் நாள் பெரியார் திருக்குறள் மாநாடு நடத்தினார். இதனைத் தமிழர் நெறி விளக்க மாநாடு என்றும் குறிப்பிட்டார். இம்மாநாடு மிகப் பிரபலமாக நடைபெற்றது. மாநாட்டுக்கு வருவோர் டிக்கெட் வாங்கிக் கொண்டு தான் வரவேண்டும் என்று இருந்தது. இருப்பினும் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாள் மாநாட்டில் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் திருக்குறள் வீ. முனிசாமி, சி. இலக்குவனார் போன்றோர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் திரு.வி.க., நாவலர் நெடுஞ் செழியன் போன்றோர் கலந்து கொண்டனர். முதல் நாள் இரவு அறிஞர் அண்ணா அவர்களின் நாடகம் நடைபெற்றது.

முதல் நாள் குறள் மாநாட்டில் தெ.பொ.மீ. தலைமை தாங்கினார். திருக்குறள் வீ. முனியசாமி சொற்பொழிவு ஆற்றினார். டி.எஸ். கந்தசாமி முதலியார் திருவள்ளுவரின் உருவப் படத்தினைத் திறந்து வைத்தார். எஸ். முத்தையா முதலியாரும் சி. இலக்குவனாரும் உரையாற்றினர். திரு. பி. சுப்பிர மணியம் அவர்களின் அஷ்டாவதான நிகழ்ச்சி நடைபெற்றது. (குறள் விரிவுரை அவதான நிகழ்வு)

இரண்டாவது நாள் பெரியார் தலைமை தாங்கினார். திரு.வி.க. வரவேற்புரை வழங்கினார். நாவலர் நெடுஞ்செழியன், சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, புலவர் குழந்தை, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், அறிஞர் அண்ணா ஆகியோர் உரையாற்றினர். இரவு பத்து மணிக்கு அண்ணாவின் நாடகம் ‘சந்திர மோகன்’ நடை பெற்றது. இந்த மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:

 1. இப்பொழுதுள்ள கல்வித் திட்டத்தில் முதல் உயர்நிலை வகுப்பு (பாரம்) தொடங்கி இளங்கலைஞர் (பி.ஏ.,) வகுப்பு முடிய திருக்குறள் முழுதும் படித்து முடிக்கும் வகையில் படிப்படியாகப் பாடத் திட்டம் வகுக்குமாறும், அதற்கென தனி வினாத் தாள் (ஷேக்ஸ்பியர் போல) ஏற்படுத்து மாறும் கல்வித் துறை அதிகாரிகளையும் பல்கலைக் கழகங்களையும் இம்மாநாடு வேண்டுகின்றது.
 2. ஆட்சி மன்றங்களில் உறுப்பினராக வரு வோர்க்கும், கல்விக் கூடங்களிலும் கல்லூரி களிலும் தலைவராக வருவோர்க்குரிய தகுதிகளில் திருக்குறள் புலமையும் ஒன்றாக வற்புறுத்துமாறு ஆட்சியாளரை வேண்டு கின்றது.
 3. திருவள்ளுவர் விழாவுக்கென ஒரு நாளைக் குறிப்பிட்டு, அரசு விடுமுறை நாளாக்கி, அந்நாளை நாடெங்கும் கொண்டாடுவதற் குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டு மென்று அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொள்கின்றது.
 4. திருக்குறள் பற்றிய விழாக்கள், மாநாடுகள் முதலியவற்றின் நிகழ்ச்சிகளை அறிவிக்கு மாறும், ஒலி பரப்புமாறும் திருச்சி வானொலி நிலையத்தாரைக் கேட்டுக் கொள்கின்றது.

இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல சொற்பொழிவுகளைப் பெரியார் நிகழ்த்தி யுள்ளார். மேற்கூறியவாறு திராவிட இயக்கக் கூட்டங்களில் பேசியது மட்டுமின்றி இயக்கம் சாராத கூட்டங்களிலும் பெரியார் உரையாற்றி யுள்ளார். அந்தக் குறிப்புகள் சில வருமாறு:

1949ஆம் ஆண்டு சைதாப்பேட்டை திருவள்ளுவர் மன்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். 1950ஆம் ஆண்டு பெங்களூரு வள்ளுவர் கழக ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இதே ஆண்டு நாகர்கோயில் திருவள்ளுவர் வாலிபர் கழக ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

1958ஆம் ஆண்டு முக்கூடல் வள்ளுவர் கழக ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். 1961ஆம் ஆண்டு தனிக்கோட்டை வள்ளுவர் படிப்பக ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

(திருக்குறளும் திராவிட இயக்கமும் - ஆய்வு நூலிலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள்)

 முனைவர் மு.பா.குப்புசாமி

திருக்குறளை வெறுத்த பார்ப்பனர்: அயோத்திதாசர் தரும் தகவல்

திருக்குறள் தாழ்ந்த வருணத்தாரால் இயற்றப்பட்ட நூல் ஆதலால் பிராமணர்கள் அதை வெறுத்தனர். இந்தக் கருத்தினை அயோத்திதாசர், எல்லீஸ் துரையுடன் நிகழ்ந்த சம்பவம் ஒன்றின் மூலம் விளக்குகிறார்.

1796இல் சென்னைக்கு வந்த எல்லீஸ் துரை தமிழ் கற்க விருப்பம் கொண்டு சில தேர்ந்த ஆசிரியர்கள் மூலம் அதனை நிறைவேற்றிக் கொண்டார். அயோத்திதாசரின் பாட்டனார் எல்லீஸ் துரைக்குத் திருக்குறள் நூல் ஒன்றினைக் கொடுத்து அனுப்பினார். இதைப் படித்த எல்லீஸ் துரை இதற்கு விளக்கமளிக்குமாறு ஆசிரியர்களைக் கேட்க, அப்பிராமணர்கள் அது தீண்டத்தகாத நூல், திருவள்ளுவர் தீண்டத்தகாதவர் என்று கூற எல்லீஸ் அவர்களுக்குத் திருக்குறள் மீது அதிக ஆர்வம் உண்டானது.

நூல் கொடுத்தனுப்பியவரை வரவழைத்துப் பிராமணர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்களே ஏன் என்று கேட்க அவர் கூறிய பதில் வருமாறு: “எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் பிராமணர் வந்தால் உங்கள் பாதம் இட்ட இடம் பழுதாகிவிடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும் சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்துச் சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள் என்று கூறினாராம்”

உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். 1819ஆம் ஆண்டு எல்லீஸ் இயற்கை எய்தியதால் அப்பணி முழுமையடையாமல் போயிற்று.                       

- மேற்குறிப்பிட்ட நூலிலிருந்து

Pin It