சென்ற இதழ் தொடர்ச்சி...

திருக்குறளைப் பதிப்பித்த காஞ்சிபுரம் கே.குப்புசாமி அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்தவர் 1928-29 கால கட்டத்திலேயே திருக்குறளை 10,000 படிகள் அச்சிட்டு பரப்பியுள்ளார்.

20.1.1929 குடிஅரசு இதழில் ‘திருவள்ளுவரின் பெண் ணுரிமை’ என்ற தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரையில் திருவள்ளுவர் வாசுகியின் அடிமைச் செயல்களைக் கற்பனையாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

1935 செப்டம்பர் பகுத்தறிவு மாத இதழில் ‘திரு வள்ளுவர் நாத்திகர்’ என்ற தலைப்பில் பெரியார் எழுதிய கட்டுரையில்,

“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக இவ்வுலகி யற்றியான்”

என்ற குறளை மேற்கோள்காட்டி திருவள்ளுவரை நாத்திகராகக் காண்கிறார்.

7.5.1944 குடிஅரசு இதழில் ‘குறள் பற்றிப் பெரியார்’ என்ற கட்டுரையில் திருக்குறளைப் பற்றிய பெரியாரின் அகன்ற ஆய்வு புலப்படுகிறது. அதே கட்டுரை 30.4.1949 குடி அரசு இதழில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனக்குக் குறளில் ருசியை உண்டாக்கியவர் நண்பர் காலஞ்சென்ற பா.வே. மாணிக்க நாயக்கரவர்கள்தான். அவர் என்னிடம் நகைச்சுவையாகப் பேசுவதற்கும்கூட குறளையே கையாளுவார். பார்ப்பனர்களை-ஆரியத்தைக் கிண்டல் செய்வதற்கும் குறளையே பயன்படுத்தவார். அச்சமயங்களில், நானும் குறளைச் சிறிது உணர ஆரம்பித்தேன். அதுமட்டுமல்ல, அந்த நாளிலிருந்தே நான் மற்ற ஆரியப் புராண இதிகாசங்களில்-சைவ வைணவங்களில் உள்ள குற்றங்குறைகளை எடுத்துக் கூறி வருவது போல, குறளிலும் பல குற்றங்களைக் கூறி வந்துள்ளேன். நண்பர் மாணிக்க நாயக்கர் அவர்களிடமும், நான் அடிக்கடி குறை கூறி தர்க்கிப்பதுண்டு. காரணம் அப்போது நான், குறளுக்கு ஆரியரும், ஆரிய உணர்ச்சி யுள்ள மதவாதிகளும் செய்த உரைகளை மெய்யென்று எண்ணியதேயாகும்.

இந்த இயற்கையை ஒட்டியே அந்த இடத்திற்குக் குறளை வைக்குமாறு இப்போது நான் கூறுகின்றேன். எல்லாத் துறைகளைப் பற்றியும் நல்வழிகாட்டக்கூடிய-அறிவு வழியைக் காட்டக்கூடிய நீதி நூல் நம் மக்களுக்கு இன்று குறள் ஒன்றைத் தவிர வேறில்லை. இதற்கு மேம்பட்ட ஒரு நீதி நூலை இன்று காண்பது அரிது.

நம் மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையான உயர்ந்த நெறியையும் வழிவகுக்கக் குறளுக்கு மேலான ஒரு நீதி நூல் வேறு கிடையாது என்பதே எனது எண்ண மாகும். நாகரிகம் என்பவை எல்லாம் மனிதனிடம் மனிதன் நடந்துகொள்ள வேண்டியதையே அடிப்படை யாகக் கொண்டதாகும். அதற்கான நெறிகள்-வழிகள் குறளில் காணலாம். சுலபமாகக் கூற வேண்டுமென்றால், குறள் ஒரு பகுத்தறிவு நூல்! மற்றவை நம்பிக்கை நூல்! அதாவது சரியோ, தவறோ நம்பிக்கை கொள்ள வேண்டிய நூல்!

திராவிட இயக்கத்தினராகிய நாங்கள் பல கடவுள் - அவை பற்றிய பல மதம் - புராணம் ஆகியவற்றை எதிர்த்து வருகிறோம். அவைகளை எதிர்க்கும் போது அவற்றை வளர்த்து - அவற்றால் பயனடைந்து வரும் கூட்டத்தினரோ, பொது மக்கள் எங்களைத் தவறாகக் கருதிக் கொள்ளுமாறு தந்திரம் செய்கின்றனர். பின்னர் தெளிவு பெற்று, “இப்படி எதிர்க்க, உனக்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?” என்று நம்மைக் கேட்கும் நிலையை மக்கள் அடைகின்றார்கள். இந்த நிலையில் தான், அந்த ஆதாரத்திற்கு நாங்கள் குறளையே எடுத்துக் காட்டுகிறோம்.

ஏனெனில் குறளுக்குள் “கடவுள்”, “மதம்”, “சாதி”, “மோட்சம்”, “முன்ஜென்மம்” என்பவை போன்ற சொற்கள் இல்லவே இல்லை. இவ்வாறு நான் கூறு வதைக் கேட்கச் சிலர் ஆச்சரியப்படக் கூடும். ஆனால் உறுதியாகக் கூறுகிறேன். குறள் என்கிற நூலில், கடவுள் என்ற சொல்லோ, கடவுள் என்ற ஒரு வஸ்துத் தன்மையோ அறவே இல்லை. கடவுளே இல்லையானால் மேற் சொன்ன மற்றவற்றை எப்படி அதில் காணமுடியும்?

ஆரியத்தை மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராட, வள்ளுவரின் குறள் நமக்குக் கேடயமாக இருக்கின்றது. மேலும் வள்ளுவர், பொதுநலத் தொண்டு ஆற்றுவதின் மேன்மையை மிக மிகச் சிறப்பித்து வலியுறுத்திக் கூறுகிறார்.

குறளில், மக்களின் நல்வாழ்க்கைக்கும், நல்லாட் சிக்கும் மக்கள் பூரண மனிதத் தன்மையைடை வதற்கும் ஏற்ற வழிவகைகள் குவிந்து கிடக்கின்றன. உலகக் கேடுகள் ஒழிவதற்கும் வழிவகை குறளில் இருக்கின்றன. ஆரிய மத நூல்களில், அவர்களது கடவுள் தன்மை எனக் கூறப்படும் புராண இதிகாசங் களில் இவைகளுக்கு மாறுபாடான கருத்துகளே மலிந்து கிடக்கின்றன. ஆதலால்தான் குறளைப் படி யுங்கள். ஆரிய நீதி நூல்களை - கோட்பாடுகளை அறவே விலக்குங்கள் என்று வற்புறுத்திக் கூறிவருகிறோம்.

எனது பணிவான வேண்டுகோள்!

அவ்வாறு வற்புறுத்திவரும் நான், இன்றையப் பேரறிஞர்களைக் கேட்டு கொள்வதென்னவெனில், இடைக்காலத்தில் வாழ்ந்த சில புலவர்களால், குறளில் கற்பிக்கப்பட்டுள்ள கற்பனைகளை - மாறுபாடுகளை நீக்க, நீங்கள் முன்வர வேண்டும் என்பதுதான். அந்த மாசுகளை நீக்கிவிட்டால், குற்ற உரை நீங்கிய குறளை, நம் மக்கள் அனைவரும் துணையாகக் கொண்டு, அவ்வழியே நடப்பார்களேயானால், குறைந்தது அய்ந்தே அய்ந்து ஆண்டுகளில் ஆரிய நீதி நூல்கள் எனப்படுபவைகளால் இந்த நாள் மக்கள் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சீர்கேடுகள், ஒழுக்கக் குறைவுகள், காட்டுமிராண்டித் தன்மைகள் எல்லாம் அறவே ஒழிந்து போகும் என்கிற நம்பிக்கை எனக்கு உறுதியாக உண்டு.

அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டேதான் திராவிடர் கழகமும் தொண்டாற்றி வருகிறது. திராவிடர் கழகக் கொள்கைக்குப் பெரிதும் ஆதாரம், வள்ளுவரின் குறளிலேயேயிருப்பதனால் தான் நாங்கள் அதை நாடெங்கும் எடுத்துக்கூற முற் பட்டிருக்கிறோம். அதற்கான உதவிகளைச் செய்ய புலவர் பெருமக்கள் முன்வர வேண்டும்.

7.5.44 குடி அரசு இதழில் பெரியார் திருக்குறளைப் பற்றிய தம் மதிப் பீட்டை தெளிவாக விளக்கியுள்ளார்.

பெரியார் பற்றாளரும் மாவட்ட நீதிமன்ற நடுவராக இருந்து ஓய்வுபெற்றவருமான ஆ. கசபதி நாயகர் அவர்கள் 1946இல் கடலூரில் திருக்குறள் ஆர்வலர்களின் துணைக் கொண்டு பங்குத்தொகை தண்டல் செய்து திருக்குறள் அச்சகத்தைத் தொடங்கினார். திருக்குறளார் வீ.முனுசாமி அவர்களைக் கடலூருக்கு வரவழைத்து அதில் பொறுப்பாளராக நியமித்தார். 1953-இல் உழைப்பாளர் கட்சியினரால் சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பேசும் போதெல்லாம் திருக்குறளை உதாரணமாகக் காட்டுவார்; திருவள்ளுவர் பிறந்த நாளுக்கு அரசு விடுமுறையளிக்க வேண்டினார்.

கசபதியார் ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் மாநாடுகளைத் தொடர்ந்து நடத்தி வந்தார். 14.3.1948-இல் சென்னையில் மயிலாப்பூரில் இலட்சுமிரதன் பாரதி தலைமையில் நடைபெற்ற 3-ஆவது திருக்குறள் மாநாட்டில் பெரியார் கலந்துகொண்டு உரையாற்றினார். மனுதர்மத்துக்கு மாற்றாக, ஆரியக் கொள்கைகளை மறுக்க, அவைகளை மடியச் செய்ய, அக்கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் திருக்குறள் என்று பெரியார் பேசினார்.

மேலும் பெரியார் கூறுகையில், 

என்னைப் பொறுத்தவரையில் திருக்குறளைச் சிறிதாவது ஆராய்ச்சி செய்தவன் என்று என்னால் கூறிக் கொள்ள முடியாவிட்டாலும், அதன் பெருமையை நான் ஓர் அளவுக்காவது உணர்ந்திருக்கிறேனென் பதையும், அதன்மீது எனக்கு அளவற்ற பற்றுண்டு என்பதையும் நான் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

திருக்குறளின் பெருமையைச் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எடுத்துக் காட்டியவர் காலஞ் சென்ற தோழர் என்ஜினியர் பா.வே. மாணிக்க நாயக்கர் ஆவார். அவரும் நானும் அடிக்கடி வேடிக்கையாகவும் விதண்டாவாதமாகவும் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அந்தச் சமயங்களிலெல்லாம் அவர் திருக்குறள் கருத்துகளைத்தான் மேற்கோளாக எடுத்துக் கூறி என்னை மடக்குவார். அவருடைய விளக்க உரைகளால் திருக்குறளில் அடங்கியிருக்கும் பல அற்புத அதிசயக் கருத்துகளை என்னால் அன்று அறிய முடிந்தது.

(விடுதலை 31.12.1948)

தொடரும்

Pin It