(செப்டம்பர் 17 2019 அன்று தந்தை பெரியார் அவர்களின் 141ஆம்  பிறந்தநாள் விழா ஒன்றிய அரசின் பெட்ரோலிய எரிவாயுத் துறை அமைப்பின் ((ONGC) சார்பாக அதன் எழும்பூர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் ஆற்றிய ஆங்கில உரையின் சுருக்கம்)

தந்தை பெரியார் அவர்களின் 141ஆம்  பிறந்தநாள் விழா ஊரெங்கும் நாடெங்கும் உலகெங்கும் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஒன்றிய அரசின் பெட்ரோலிய எரிவாயுத் துறை அமைப்பு (ONGC) அதன் அனைத்து கிளைகளின் தலைமை அலுவலகங்களில் கொண்டாடுவது பெருமைக்குரிய நிகழ்வாகும். இதற்கென்று இந்த நிதியாண்டில் 38 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கிக் கொண்டாடுவது பாராட்டுக்குரியதாகும்.

தந்தை பெரியார் உலகச் சிந்தனையாளர்களில் தனித்தன் மையோடு விளங்குகிறார். பெரியார் நான்காம் வகுப்பு வரையே படித்தாலும் வாழ்க்கை முழுவதும் ஒரு மாபெரும் அறிஞராகவே அவர் வலம் வந்தார். 94 ஆண்டுகள் 97 நாள்கள் வாழ்ந்தார். ஏறக்குறைய 70 ஆண்டுகள் பொதுவாழ்விற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பெரியாரின் பன்முக ஆளுமை வியக்கத்தக்கதாகும்.  எந்தப் பணியை எடுத்துக்கொண்டாலும் அந்தப் பணியை மேற்கொள்வதற்கு 100 விழுக்காடு தன்னை அர்ப்பணித்துக் கொள்வதில்தான் அவரின் தனித்த ஆளுமை ஒளிர்கிறது.

1920ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தில் காந்தியாரின் தலைமையேற்றுப் பணியாற்றிய போது பெரியாரின் ஆளுமையைக் கண்டு எவ்வாறு பிரித்தானிய ஏகாதிபத்தியம் அஞ்சியது என்பதற்கான ஒரு சான்று நம்மை வியக்க வைக்கிறது. 4.2.1924இல் பெரியார் கோவை மாவட்டத்தின் உத்தமபாளையம் என்ற ஊரில் முகமது மீரான் ராவுத்தர் என்பவரின் தலைமையில் கதர் ஆடையை மக்கள் விலை கொடுத்து வாங்கி அணிந்து பிரித்தானியாவின் ஆதிக்கத்தை வணிகத்தைத் தடுக்க வேண்டும் என ஓர் உரையை ஆற்றி யுள்ளார். கதர் ஆடைகளைத் தன் தோளில் சுமந்து ஊர்ஊராகச் சுற்றி விற்பனை செய்துள்ளார். இது காங்கிரசுக் கட்சிக்கு எழுச்சியையும் பிரித்தானிய அரசிற்கு ஒரு மிரட்சியையும் உருவாக்கியது என்பதை நாம் அறிய முடிகிறது.

பெரியாரின் கதர் பற்றிய உரை முதன்முதலாகத் தமிழில் காவல் துறையால் சுருக்கெழுத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் தேசியப் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய பெர்னாட் பார்ட் விடுதலைப் போராட்டக் காலத்தில் நடந்த தற்சார்புப் பொருளாதாரத்தை  வலியுறுத்தி தாய்மொழி யில் ஆற்றிய உரைகளை ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வில் தமிழ் மொழியில் சுருக்கெழுத்துக் கண்டுபிடித்ததைப் பற்றி ஒரு கருத்தையும் பேராசிரியர் பார்ட் பதிவு செய்துள்ளார்.

அவரின் கருத்தின்படி தற்சார்பு பொருளாதாரக் கொள்கையைச் சாதாரண  விவசாயி தொழிலாளர்கள் ஆகியோரிடம் தமிழ் மொழியில் உரையாற்றி அரசியல் கருத்தினைப் பதிவு செய்தார் பெரியார். இதன் தொடர்பாக முதன்முதலில் 60 பக்கங்களுக்குப் பெரியாரின் உரை கமுக்கமான முறையில் சுருக்கெழுத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்துள்ளார். எனவே சுருக்கெழுத்து தமிழில் நடைமுறைக்கு வந்ததற்குப் பெரியார் காரணமாக அமைகிறார் என்பதை நோக்கும் போது அக்காலக்கட்டத்தில் அவருக்கான மக்கள் செல்வாக்கும் ஆளுமையும் வெளிப்படுகிறது.

1924ஆம் ஆண்டு கேரள காங்கிரசு அமைப்பின் சார்பில் வைக்கம் மகாதேவ் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளிலும் கோயிலுக்குள்ளும் பின்தங்கிய சமுதாய மக்களும் தாழ்த்தப்பட் டோரும் செல்ல முடியாத ஒரு பெரும் சமூகத் தடை இருந்தது. அந்தத் தடையை உடைப்பதற்றாகக் களம் அமைத்த குழுவினர் தந்தை பெரியாரை அழைத்தனர். தந்தை பெரியார். மனைவி நாகம்மை சகோதரி, கண்ணம்மாள் மற்றும் இரு நண்பர்களுடன் இணைந்து வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவாகக் களம் இறங்கினார்.

அனைவரும் கைது செய்யப்பட்டனர். மக்கள் தலைவராக அவர் வலம் வந்ததன் காரணமாக இப்போராட்டம் வெற்றியில் முடிந்தது. பொதுச் சாலையிலும் கோயிலுக்குள் நுழைவதற்கும் அனைவருக்கும் உரிமை அளிக்கப்பட்டது. இந்த அரிய நினைவைப் போற்றும் வகையில் கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரசால் ஒரு நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது என்பது பெரியாரின் ஆளுமைக்கும் மனித நேயத்திற்கும் மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

1927இல் அண்ணல்  அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்துக் களம் காண்பதற்கு முன்பே இந்தத் தீண்டாமை எதிர்ப்புக் களத்தை அமைத்து வெற்றி கண்டவர் தந்தை பெரியார் என்று பல ஆய்வாளர்கள் சுட்டுகின்றன. 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாடு பெரியாரின் பரந்த விரிந்த  மனித நேயத்தைப் போற்றும்  உயரிய கருத்துகளை வெளி உலகிற்குக் கொண்டு வந்தது என்றால் அது மிகையாகாது. 

இம்மாநாட்டில் 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள் கவிஞர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். தீண்டாமை ஒழிப்பு, சாதி மத பிறப்பு அடிப்படையில் வேறுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்துவது, பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்குவது. பெண்களின் திருமண வயதை உயர்த்துவது, பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் உரிமை வழங்குவது மணமுறிவு உரிமையைப் பெண்களுக்கு அளிப்பது, விதவைகள் திருமணத்தை வரவேற்பது, இலவசக் கல்வியைத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்குவது போன்ற முற்போக்கான சமுதாய முன்னேற்றக் கொள்கைகள் இம் மாநாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டன. இத்தீர்மானங்களில் இடம் பெற்றுள்ள கருத்துகளை சமூக சீர்த்திருத்தத்தின் உரிமைப் பட்டையம் என்றே அழைக்கலாம்.

தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் தமிழர் விடுதலைக்காகவும் தமிழர்களின் சமுதாய பொருளாதார விடுதலைக்காகவும் பெரியார் அரசியல் களத்தில் அடிப்படை மாற்றத்தை உருவாக்கு வதற்குத் தொடர்ந்து களம் அமைத்தார். பொது வாழ்வில் சுயநலமற்ற முறையிலும் குற்றமற்ற முறையிலும் செயல்பட்டு மக்களைப் பாதிக்கின்ற  ஒவ்வொரு பிரச்சினையையும் தோய்ந்து ஆய்ந்து அதற்குத் தீர்வு காண களம் அமைத்த தீரர் பெரியார் என்றால் அது மிகையாகாது. ஆங்கில மொழியில் கூறுவது போல இந்தக் கருத்துகள் சமுதாயத்தில் வெற்றி பெறுவதற்காக அவர் நகர்த்தாத கல் கிடையாது. அவரின் தாக்குதலில் இருந்து தப்பித்தவரும் எவருமில்லை.

சான்றாகப் பெரியார் 1930களில் 1940களில் சமூக பொருளாதாரத் தளங்களில் ஆற்றிய களப் பணிகளைப் பல உலகப் பேரறிஞர்கள் 1968க்கு பிறகே உணர்ந்து எழுதியுள்ளனர் என்பதை நோக்கும்போது பெரியார் ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளர் என்பது உறுதிப்படு கிறது. சுவீடன் நாட்டின் பொருளாதாரப் பேரறிஞர் நோபல் பரிசு பெற்ற குன்னர் மிர்தல் 1968இல் இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி ஆசிய நாடகம் (Asian Drama – 2 volumes) என்ற தலைப்பில் நூலினை வெளியிட்டார். அந்நூலில் அறிஞர் மிர்தல் இந்தியாவினுடைய பழமைக் கூறுகளில் சாதி ஆழமாக வேரூன்றியுள்ளது. இதை அழிக்க வேண்டுமென்றால் ஒரு தீவிர அறுவைச் சிகிச்சை தேவை.

இதற்கான போதிய அரசியல் அழுத்தம் இந்தியாவில் இதுவரை காணப்படவில்லை (Caste is so deeply entrenched in India’s traditions that it cannot be eradicated except by drastic surgery; and for this there has been no serious political pressure) என்று துல்லியமாகக் கணித்தார். ஆனால் பெரியார் ஒருவர்தான் தொடர்ந்து இதற்காக 60 ஆண்டுகள் களம் அமைத்துப் போராடினார். இந்தியச் சமூகத்தில் மனிதநேயத்தை பிற்போக்குத்தனமும் மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளும் தடை செய்கின்றன என்பதை அறிஞர் காரல் மார்க்சு அவர்கள் மூலதனம் நூலின் இரண்டாம் தொகுதியில் இயலில்  பக்கம் 142இல்-

விவசாயிகள் பட்டினியால் வாடும் போது

அவனுடைய மாடுகள் நன்றாக வாழ்கின்றன.

நாட்டில் மழை மீண்டும் மீண்டும் பெய்தது.

கால்நடைகளின் உணவு பெருமளவில் இருந்தது .

கொழுத்த மாடுகள் ஒரு புறமிருக்க

இந்து விவசாயி பசியால் இறந்து போவான்.

உழைக்கும் கால்நடைகள் பாதுகாப்புடன் உள்ளன.

அவை விவசாயத்திற்கு வலிமையையும்

எதிர்கால வாழ்க்கை மற்றும் வருமானத்திற்கு ஆதாரங்களையும் பெற்றுத் தருகிறது.

இத்தகைய சுழலில் தனிமனிதனுக்கு

மதம் வழங்கும் அறிவுரை கொடுமையானது.

சமுதாயத்தைப் பிற்போக்குதனமாக மாற்றுகிறது.

இந்தியாவில் ஒரு மாட்டைவிட மனிதனைச் சாகடிப்பது எளிது.

இதைச் சொல்வதற்கே கொடுமையாக உள்ளது.

என்றாலும் சொல்லியாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.

(While the peasant farmer starves, his cattle thrive. Repeated showers had fallen in the country, and the forage was abundant.The Hindoo peasant will perish by hunger besides a fat bullock. The prescriptions of superstition, which appear cruel to the individual, are conservative for the community; and the preservation of the labouring cattle secures the power of cultivation, and the sources of future life and wealth.It may sound harsh and sad to say so, but in India, it is more easy to replace a man than an OX. -Das Capital Volume II. -chapter X11, page 142)

தமிழ்நாட்டில் உணவை உண்பதில் மத அடிப்படையில் சாதி அடிப்படையில் நடைபெறும் சண்டைகளோ சச்சரவுகளோ பெருமளவில் இல்லாமல் இருப்பதற்கு பெரியார் ஆற்றிய மானுடப் பணி என்றால் அது மிகையாகாது. சான்றாக 1970 களில் பெரியார்  திடலில் அனைத்துச் சமூகத்தினரும் மதத்தினரும் ஆடு மாடு பன்றி ஆகியவற்றின் மாமிசத்தைச் சமைத்து ஒற்று மையாக உண்பதற்கு ஒரு பெரும் விருந்தை ஒரு விழாகவே அமைத்தார். இவ்விழாவில் ஆந்திராவின் காந்திய நாத்திகர் கோராவும் கலந்து கொண்டார்.

பெரியார் கண்ட களங்கள் பல. பெரியார் மறைந்த பிறகும் அவர் எடுத்து வைத்த கருத்துகள் அரசு சட்டங்களாக மாறுகிற ஒரு போக்கு தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் இன்று உள்ளது. சான்றாக 1976ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கடமைகள் என்ற பிரிவு இணைக்கப்பட்டது. அப்பிரிவின் 51 ஏ(எச்)  சீர்த்திருத்தம், ஆய்வுமனப்பான்மை மனிதநேயம், அறிவியல் உணர்வு ஆகியன போற்றி வளர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் இப்பிரிவில் சொல்லப்பட்ட நான்கு கருத்தியல்களையும் முன்மொழிந்தவர் தந்தை பெரியார் என்பதை அவரின் வரலாறும் வாழக்கையும் போராட்டங்களாக எடுத்துரைக்கின்றன.

இந்தியாவினுடைய முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் ஓர் உரையாடலில் தனது தனிச்செயலராகப் பணியாற்றிய கோபாலகிருட்டிண காந்தியிடம் ஒரு கருத்தை வலியுறுத்தியிருந்தார். இடதுசொல் பதிப்பகம் மார்க்சினுடைய கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்ட போது அதைப் படித்த அறிஞர் கே.ஆர். நாராயணன் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறாமல் இருப்பதற்குச் சாதியம் ஒரு காரணியாக அமைகிறது என்று பெரியார் குறிப்பிட்டது மிகவும் சரியான செயல் என்று குறிப்பிட்டார்.

2010ஆம் ஆண்டில் புதுமை இந்தியாவின் சிற்பிகள் என்ற தலைப்பில் வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திர குகா இந்தியாவின் 19 தலைசிறந்த தலைவர்கள், சிந்தனையாளர்கள், சமூக சீர்த்திருத்தவாதிகள் பற்றி நூலாக வெளியிட்டார். அந்நூலில் பெரியாரினுடைய சமூக சீர்த்திருத்தத்தின் தனித்தன்மையை விளக்கியுள்ளார். இராமச்சந்திர குகா அந்நூலில் ஆசிய சமுதாயத்தில் அடிப்படை புரட்சியில்லாமல் மானுடம் தனது பயணத்தில் வெற்றி பெறுமா என்ற ஒரு கேள்வியை எழுப்பி இதற்கு எளிதாக விடை காண இயலாது என்றும் குறிப்பிட்டுள் ளார். சீனாவும் வியட்நாமும் 1940 1970களில் வெற்றிகரமான புரட்சியைக் கண்டன.

இருப்பினும் இந்த இரு நாடுகளில் அண்மை ஆண்டுகளில் சோசலிச பொருளாதார தளத்தில் பின்னடைவுகள்  ஏற்பட்டுள்ளன.  இருப்பினும் இந்த இருநாடு களிலும் மத வெறியையும் அடிப்படைவாதத்தையும் மூடக் கருத்துகளையும் காண முடியாது. சீன நாடு இன்றைக்கு உலகிலேயே அதிக வளர்ச்சியை எட்டியுள்ள நாடாக உள்ளது. வியட்நாம் கல்வி பொதுச் சுகாதாரத் துறைகளில் வெற்றி பெற்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மானுடக் குறியீடுகள் பட்டியலில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் செய்த சீர்த்திருத்தத்தின் காரணமாக தமிழ்நாடு இன்று இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் முதன்மையாக உள்ளது என்று குகா குறிப்பிட்டுள்ளார். நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென்னும் ஜீன் ட்ரெஸ்சும் 2013இல் ஒரு நிலையற்ற வெற்றி - இந்தியாவும் அதனுடைய முரண்பாடுகளும் (An Uncertain Glory : India and Its Contradictions)   என்ற நூலினை எழுதியுள்ளனர்.

இந்நூலில் குறைந்த காலக்கட்டத்தில் விரைந்த வளர்ச்சியைப் பெற்று கொடுமையான வறுமையும் ஏற்றத் தாழ்வும் இல்லாமல் தமிழ்நாடு உள்ளது என்று குறித்துள்ளனர்.  அனைத்துச் சாதிப் பிரிவினரும் பள்ளிக்குச் செல்லும் வண்ணம் சத்துணவுத் திட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படுகிறது. உறுதியான  சமூக அடித்தளம் இதற்கு காரணமாக அமைகிறது. சமூக உணர்வைத் தூண்டும் பெரியாரின் சமூகச் சீர்த்திருத்த இயக்கம் ஒரு காரணமாக அமைந்தது J (The social reform movement initiated by Periyar is responsible for socially engineered economic growth)  என்று இந்நூலில் இந்த இரு ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

2001ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ஒன்றிய அரசின் முதல் மானுட மேம்பாட்டு அறிக்கையைத் திட்டக்குழு வெளியிட்டது. அவ்வறிக்கையில் சமூக விழிப்புணர்வு பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது. அந்த சமூக விழிப்புணர்வைப் பெரியார் ஏற்படுத்தினார் அதன் காரணமாகத் தமிழ்நாடு கல்வி குடும்பக் கட்டுப்பாடு மற்றும் சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது (The demographic transition in Tamil Nadu has been largely a result of cumulation of gradual improvement over time in the driving variables of population growth, literacy rates along with the process of social mobilisation. The State has, historically, been a hot bed of social reform movements, often precipitating political action in the desired direction. Social consciousness inspired by leaders such as Ramasami ‘Periyar’ has influenced the people to become responsible parents, among other things, to adopt family planning as a means to bridge the gap between increasing aspirations and availability of resources to meet these aspirations) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்று தமிழ்நாட்டில் காணப்படக்கூடிய மாற்றங்களைப் பல அறிஞர்கள் குறிப்பிட்டு பெரியாரின் சமூகத் தொண்டினை போற்றியுள்ளனர்.

1967இல் அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியமைந்த போது பெரியார் வலியுறுத்திய சமூக சீர்த்திருத்தக் கொள்கையின் அடிப்படையில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது பெரியார் தன் வாழ்நாளிலேயே கண்ட வெற்றி என்று அறிஞர் அண்ணாவே குறிப்பிட்டுள்ளார்.

உடல் நலிவுற்று அமெரிக்கா வில் இருந்து பெரியாருக்கு எழுதிய கடிதத்தில் நீங்கள் செய்த பணி பெருமளவில் சமுதாய விழுப்புணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நான் அறிந்த வரையில் உங்களைப் போன்று எந்தச் சமூக சீர்த்திருத்தவாதியும் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்ற தில்லை.  அதுவும் நமது நாட்டில் என்று குறிப்பிட்டார். 

மானுட நெறிகளைப் போற்றும் பெரியாரின் கருத்துகள்தான்  இன்றைக்கு எழுகின்ற சமுதாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்று பல அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். தந்தை பெரியார் ஒரு சிறந்த மனிதநேயர் என்பதை மேற்குறிப்பிட்ட சான்றுகள் அறிஞர்களின் கூற்றுகள் மெய்ப்பிக்கினறன. தந்தை பெரியாரின் கருத்துகள் வெல்க!

பகுத்தறிவு ஓங்குக.

Pin It