Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

சிந்தனையாளன்

rohit 350அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ரோகித் வெமுலா 2016 சனவரி 17 அன்று பல்கலைக்கழக மாணவர் விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். ரோகித் வெமுலாவின் தற் கொலைக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அப்பாராவும் நடுவண் அரசின் தொழிலாளர் துறை யின் இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவும் காரணம் என்று கூறி இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அந்நிலையில் ரோகித் வெமுலாவின் தற்கொலை குறித்து ஆராய அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ரூபன் வால் தனிநபர் விசாரணைக் குழுவின் தலைவராக அமர்த்தப்பட்டார்.

நீதிபதி ரூபன்வால் அளித்த ஆய்வறிக்கை மீது நடுவண் அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்த அறிக்கை (Action taken report) நாடாளு மன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் இறுதிநாளில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. அந்த அறிக்கை யின் விவரம் 16.8.2017 அன்று நடுவண் அரசால் வெளியிடப்பட்டது. நீதிபதி ஏ.கே. ரூபன்வாலின் ஆய் வறிக்கையில், ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு எவரும் காரணம் அல்ல என்று திட்டவட்டமாகக் கூறப் பட்டிருப்பதால், இதுகுறித்து எத்தகைய மேல் நடவடிக் கையும் தேவைப்படவில்லை என்று நடுவண் அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எழுதப்படாத விதி என்பது போல், அரசுகள் அமைக் கின்ற விசாரணைக் குழுக்கள் அரசுக்கு எதிராக அறிக்கை அளிப்பதில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமை யிலான அ.தி.மு.க. அரசு முன்னாள் முதல்வர் செயலலிதாவின் இறப்பு குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப் போவதாக அறிவித்திருப்பது, ஆட்சிக்கு எதிராக எதுவும் எழுதப்படாது என்கிற உறுதியான நம்பிக்கையின் பேரில் தான். ஓய்வுபெற்ற நீதிபதிகள் மட்டுமல்ல - பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற - உச்சநீதிமன்ற நீதிபதிகளும் ஆட்சிக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர்.

நீதிபதி ரூபன்வால் தன்னுடைய அறிக்கையில், “ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கும் பல்கலைக் கழக நிருவாகம் அல்லது அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று அப்பட்டமான பொய்யைக் கூறியிருக்கிறார். ஆனால் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு யாரெல்லாம் கார ணம் என்று அப் போது ஊடகங்களில் விரிவாக விளக்கப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ்.-இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித் யார்தி பரிசத் (ஏ.பி.வி.பி.) மாணவர்களுக்கும் அய்தரா பாத் பல்கலைக்கழகத்தில் கருத்து மோதல் இருந்து வந்தது. 2015 ஆகத்து மாதம் இது சிறு கைகலப்பாக முற்றியது. பல்கலைக்கழக நிருவாகம் இருதரப்பினரை யும் அழைத்துப்பேசி எச்சரித்து அனுப்பியது.

அதன்பின் ஏ.பி.வி.பி. மாணவர் தலைவர் சுசில் குமார், பா.ச.க. மேலவை உறுப்பினர் ((MLC) இராமச் சந்திர ராவை அழைத்துக் கொண்டு நடுவண் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவிடம் முறையிட்டார். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் சாதிவெறியர்களாக, தேசவிரோதிகளாக, தீவிரவாதிகளாக இருக்கும் தலித் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு நடுவண் அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானிக்கு பண்டாரு தத்தாத்ரேயா மடல் எழுதினார். அதை அடிப்படையாகக் கொண்டு, ஸ்மிருதி இரானி அய்தராபாத் பல்கலைக்கழகத்துக்கு நடவடிக்கை எடுக்குமாறு மடல் எழுதினார். நான்கு நினைவூட்டு மடல்கள் எழுதி அழுத்தம் கொடுத்தார்.

இந்துத்துவ சிந்தனை கொண்டவரான அப்பாராவ் 2016 செப்டம்பரில் துணைவேந்தராகப் பதவியேற்றார். மேலிடத்தின் ஆணையை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மாணவர்களை அழைத்து எந்த விசாரணையும் நடத்தாமல், ரோகித் வெமுலா, பிரசாந்த், விசயகுமார், சேஷய்யா, சங்கண்ணா ஆகிய அய்ந்து தலித் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களை மாணவர் விடுதியிலிருந்து வெளியேற்றினார். சூலை முதல் அவர்களின் மாதக் கல்வித் தொகையான ரூ.25,000/-ம் நிறுத்தப்பட்டது. வகுப்பறை தவிர பல்கலைக்கழகத்தில் வேறு எந்த இடத்திலும் நுழையக்கூடாது என்று அவர்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக அந்த அய்ந்து மாணவர்களும் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளியில் கூடாரம் அமைத்துப் போராடினர்.

சனவரி மாத இரவின் கடுங்குளிரிலும் திறந்த வெளியில் தங்கியிருந்து போராடிய தலித் மாணவர் களைப் பல்கலைக்கழக நிருவாகம் நாயினும் கீழாகப் பார்த்தது. நீதிபதி ரூபன்வால், “பல்கலைக்கழகம் தன் மீது எடுத்த நடவடிக்கை குறித்து ரோகித் வெமுலாவுக் குச் சினம் இருந்திருக்குமாயின் அதைப்பற்றி அவருடைய மடலில் குறிப்பிட்டிருக்கலாமே! ஆனால் அவ்வாறு எதுவும் எழுதவில்லை, எனவே பல்கலைக்கழகத்தில் நிலவிய சூழல் அவருடைய தற்கொலைக்குக் காரணம் அல்ல” என்று அவருடைய அறிக்கையில் கூறியிருக் கிறார். ரோகித் வெமுலாவும் மற்ற நான்கு தலித் மாண வர்களும் 15 நாள்கள் பல்கலைக்கழக வளாகத்தின் திறந்த வெளியில் நடத்திய போராட்டம் எதற்காக என்பது நீதிபதி ரூபன்வால் மரமண்டைக்கு ஏன் உறைக்கவில்லை?

நீதிபதி ரூபன்வால் இன்னும் இழிந்த நிலைக்குப் போய், “அய்ந்து தலித் மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று பல்கலைக்கழகச் செயற் குழு எடுத்த முடிவு அப்போது நிலவிய சூழலுக்குச் சரியானதே ஆகும். மாணவர்கள் தங்கள் கல்வியில் நாட்டம் கொண்டிருக்க வேண்டும்; வேறு எதிலும் ஈடுபடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தின் அடிப்படை யிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று கூறி அதிகாரவர்க்கத்துக்கு வெண்சாமரம் வீசுகிறார். மேலவை உறுப்பினர் இராமச்சந்திர ராவ், அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி இரானி ஆகியோர் அவர்களுடைய கடமையைச் செய்தனர் என்று ரூபன் வால் நற்சான்று வழங்கியிருக்கிறார். ரூபன்வால் போன்றவர்களையே ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்து, விசாரணைக் குழுவின் தலைவர்களாக ஏன் அமர்த்து கிறார்கள் என்பதை ரூபன்வால் அறிக்கை உணர்த்துகிறது.

ரோகித் வெமுலாவின் தற்கொலையை அடுத்து போராட்டங்கள் வெடித்த போது, ஸ்மிருதி இரானி, “ரோகித் வெமுலாவின் தற்கொலை மடலில் தன் சாவுக்கு யாரும் காரணம் அல்ல என்று தெளிவாக எழுதியிருக்கிறார். எனவே இந்தச் சாவுக்குச் சாதி காரணமல்ல” என்று சொன்னார். அதையே நீதிபதி ரூபன்வால் தன்னுடைய விசாரணை அறிக்கையில் வழிமொழிந்திருக்கிறார்.

ரோகித் வெமுலாவின் தற்கொலை ஒரு மனிதனின் இறப்பு மட்டுமல்ல; மத்திய அரசின் உயர்கல்வி நிறு வனங்களில் பார்ப்பன-மேல்சாதி ஆதிக்க மாணவர்கள் தலித்துகள் மீது தொடர்ந்து ஏவப்பட்டுவரும் ஒடுக்கு முறையின் விளைவு இது. இதனால்தான் மத்திய பல்கலைக்கழகங்களில் கடந்த பத்து ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட 26 மாணவர்களில் 24 பேர் தலித்துகளாக இருக்கின்றனர். தில்லியில் சவகர் லால் நேரு பல்கலைக்கழகத்தில் 13.3.2017 அன்று சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆய்வு பட்ட தலித் மாணவர் முத்துகிருட்டிணன் தற்கொலை செய்துகொண்டார்.

இந்துத்துவத்துக்கு எதிராக எவரேனும் செயல்பட முனைந்தால் ரோகித் வெமுலாவுக்கு ஏற்பட்ட நிலைதான் என்று எச்சரிப்பதாகவே நீதிபதி ரூபன்வாலின் அறிக்கை அமைந்திருக்கிறது. மாணவர்கள் கடமை படிப்பதுதான் என்பது ஏ.பி.வி.பி.-க்கு மட்டும் கிடையாது. ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு மட்டுமே செயல்பட வேண்டும்; இதற்கு எதிரான கருத்து கொண்ட மாணவர் அமைப்பு களை ஒடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங் களும் கல்லூரிகளும் அரசுகளும் செயல்படுகின்ற சனநாயகமற்ற போக்கு மோடி ஆட்சியில் விரைவாக வளர்ந்து வருகிறது. இந்த அடிப்படையில்தான் பீகார் மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழைக் குடும்பத் தில் பிறந்து சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக உயர்ந்த கன்னையா குமார் இந்துத்துவத்துக்கு எதிராகப் போராடிய காரணத்தால் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பட்டார்.

2015 திசம்பர் 18 அன்று ரோகித் வெமுலா தன் முகநூலில், “மக்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்ட முயலும் போதெல்லாம் வஞ்சகமான வழிமுறை கள் மூலமே ஒடுக்கப்படுகின்றனர்” என்று பதிவு செய்தார். ரோகித் வெமுலாவின் தற்கொலை குறித்த விசாரணையும் இதே வஞ்சகமான வழிமுறையையே பின்பற்றி உள்ளது.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Anandhagiri 2017-09-14 13:19
நீட்டினால் உயிரிழப்பு!
எளியவர்கள் தங்கள் தலைகளை மேலே நீட்டினாலே உயிரிழப்பு ஏற்படுத்தப்படும ் இது எழுப்படாத விதிதானே? இதற்கு ஏன் இவ்வளவு குரல்கள் பல கோணங்களிலிருந்த ும் ஒலிக்கின்றன? இதற்கு காரணம் ,இப்பொழுது பாதிப்புக்குள்ள ானது தலித்துகள் மட்டுமல்ல ; ஒட்டுமொத்த தமிழகமும்!

இக்குரல்களில் சில திரைநடிகர்களின் பேச்சுக்களையும் , எழுத்துக்களையும ் காணும்பொழுது வெறுப்பும் , அயர்ச்சியும் ஏற்படுகிறது.

தன்னிடமுள்ள கலைத்திறமையை மட்டும் நம்பாமல் தன்னை நிலைநிறுத்திக்க ொள்ள பெரும்பான்மை சாதிகளை சார்ந்த நாயகனாக தன்னைக் காட்டி காலம் காலமாக பிழைப்பு நடத்தும் கமல், ரஜினி உள்ளிட்ட இன்றைய கதாநாயகர்கள் வரை, சாதி ஒழிப்பைப் பற்றி பேசுவதை சகிக்கமுடியவில் லை.  இதன் விளைவு, உண்மையான சமூக அக்கரையோடு தங்கள் படங்களில் சாதியைத் தவிர்த்து, நாயகனை ஒரு பொது மனிதனாகக்காட்டி படங்கள் எடுக்கும் திரு.சேரன்,திரு .பார்த்திபன்,தி ரு.ராம்,திரு.நா சர்,திரு.மிஷ்கி ன்,திரு.சீமான் மற்றும் இன்னும் பல இளம் திரைக்கலைஞர்களி ன் குரல்கள் ஓங்கி ஒலிக்காமல் போய்விடுகிறது.

அனிதாவின் கனவு நனவாகாமல் மரிக்கப்பட்டது. ஆனால் ரோஹித் வெமூலாவின் நனவாகிய கனவு மரிக்கப்பட்டது. உங்கள் குரல்கள் அப்பொழுதே ஓங்கி ஒலித்திருக்க வேண்டும். ஆனால் ஒலிக்கவில்லை. காரணம் ரோஹித்தின் மரணத்தை நீங்கள் தலித் பிரச்சினை என்று அணுகியததால்தான்! 

நாங்கள் நிஜத்திலும் நாயகனாக முடியாது; திரையிலாவது நாயகனோடு பொருத்திப்பார்த ்து மகிழலாம் என்றால் அவரோ மீசையை முருக்கிக்கொண்ட ு சாதிப் பெருமை பேசிக்கொண்டிருக்கிறார்!

கற்பனையில் கூட நாங்கள் நாயகர்கள் ஆக முடியாது எனும்பொழுது கோபமும், விரக்தியுமே மிஞ்சுகின்றன!

முடிவாக ஒன்று,ஆகச்சிறந் த கலைஞன் சிவாஜிகணேசன் என்று தன் திரைப்படங்களில் தன் சாதியைத் தூக்கிப்பிடித்த ாரோ அன்றே அவரின் அரசியல் வாழ்வு முடிந்துபோனது. இதனை ஞாபகம் வைத்துக்கொள்ளுங ்கள். எனவே நீங்கள் பேசவோ,எழுதவோ வேண்டும் என்றால் முதலில் உங்களை திருத்திக்கொள்ள ுங்கள், முடியவில்லை என்றால் உண்மையான சமூக அக்கறையுடன் செயல்படும் மேற்சொன்னவர்கள் போன்ற மனிதர்களின் பின்னால் நில்லுங்கள்!

துரை.அனந்தகிரி, இலால்குடி,திருச ்சி.
Report to administrator

Add comment


Security code
Refresh