rajini and maridhasசமூகம் எப்பொழுதெல்லாம் தன் மீது சுமத்தப்பட்ட அடிமைத் தளையை உடைத்துக் கொண்டு மேலெழ முயற்சிக்கின்றதோ, அதற்கான ஒளி தெரிகின்றதோ, அப்பொழுதெல்லாம் அதை முறியடிக்க பிற்போக்கு சக்திகள் மாரிதாஸ் போன்ற புளுகு மூட்டைகளை களத்திற்கு அனுப்புகின்றார்கள். உண்மையைவிட பொய்கள் எப்போதுமே சுவாரசியமாக இருப்பதால், அது எளிதில் மக்களைக் கவர்ந்து விடுகின்றது. கவர்ச்சி அற்ற உண்மைகளை மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. அவர்கள் அனைத்திலுமே ஒரு மசாலா படத்திற்குரிய தன்மையை எதிர்பார்க்கின்றார்கள். மக்களின் இந்த மனோபாவம்தான் பாரிசாலன், மாரிதாஸ் போன்ற அற்பப் பதர்களை எல்லாம் ஆகா ஓகோ என அகம் மகிழ்ந்து புகழ வைப்பது.

தர்க்கம் செய்வதற்கு தெளிவான மெய்ஞான அறிவு வேண்டும். அது கருத்து முதல்வாதமாகவும் இருக்கலாம், பொருள் முதல்வாதமாகவும் இருக்கலாம். ஒன்று நீங்கள் நெருப்பைக் காட்ட வேண்டும், இல்லை புகையைக் காட்ட வேண்டும். நெருப்பு இருந்தால் தான் புகை வரும், புகை வந்தால் நிச்சயம் நெருப்பு இருக்கின்றது என்று அர்த்தம். ஆனால் எந்தவித சித்தாந்தப் பின்புலத்திலும் ஆழமான அறிவற்ற, புகழை மட்டுமே விரும்பும் கூட்டம் எதைப் பற்றியும் கவலைப்படாமல், வாய்க்கு வந்ததை எல்லாம் உண்மை என்றும், அதுவே உலகின் மெய் நிலை என்றும் உதார் விட்டுக் கொண்டு சுற்றும். அதுபோன்ற கூட்டத்திற்கு எப்போதுமே சமூகத்தில் செல்வாக்கு இருந்தாலும், அறிவியல் என்னும் பேரொளியின் முன் அந்தப் பிற்போக்கின் அந்தகார இருட்டு ஒருபோதும் நிலைத்து நிற்பதில்லை.

இன்று நாட்டில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தையும், மரண விகிதம் 22 ஆயிரத்தையும் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த எண்ணிக்கை என்பது பொய் என்றும், உண்மை எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், நாம் அரசு தரும் புள்ளிவிவரங்கள்படி பார்த்தால் கூட இந்த அரசுகள் நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதில் பெரும் தோல்வியைச் சந்தித்து இருக்கின்றன என்பதை உணரலாம்.

கொரோனாவோடு வாழ பழகிக் கொள்வோம் என்ற ஆளும் வர்க்கத்தின் செயல்திட்டம்தான் கொரோனா நோய்த் தொற்றில் இன்று இந்தியாவை உலகில் மூன்றாவது இடத்திற்குக் கொண்டுவந்து நிறுத்தி இருக்கின்றது. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் மக்களை வேலைக்குத் திரும்பச் செய்வதன் மூலம் ஏறக்குறைய 5.6 லட்சம் மக்களை மூலதனத்தின் இலாப வெறிக்கு உலக முதலாளித்துவம் பலி கொடுத்திருக்கின்றது.

இந்த உலகைக் காப்பாற்றும் வல்லமை முதலாளித்துவத்திற்கு மட்டுமே உள்ளது என தறுக்கித் திரிந்தவர்கள் எதைச் சொல்லி மக்களை நம்ப வைப்பது எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் இனி எதைச் சொல்லியும் மோடியின் ‘நல்லாட்சியை’ப் பற்றி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டதால், மாரிதாஸ் போன்ற ஜால்ராக்கள் தனக்கு எலும்புத் துண்டுகளைப் போடும் எஜமானனைக் காப்பாற்ற முயல்கிறார். இன்று நோய்த் தொற்று வேகமாகப் பரவி ஆயிரக்கணக்கான மக்கள் சாவதற்குக் காரணமான மத்திய மோடி அரசையும், மாநில அடிமை எடப்பாடி அரசையும் அம்பலப்படுத்துபவர்களை எல்லாம் ஒழித்துக் கட்டாமல் விடமாட்டேன் என மிரட்டுகின்றார். மாரிதாசுக்கு ஆதரவாக அவரின் புரவலர்களான சங்கிகளும் உடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பூச்சாண்டி காட்டுகின்றார்கள்.

ஆனால் ஒருபோதும் மதன்களோ, பாண்டேக்களோ, அர்னாப் கோஸ்சாமிகளோ தங்களின் கருத்துக்களை கைவிட்டுவிட்டு ஓடிவிட வேண்டும் என முற்போக்குவாதிகள் களம் இறங்கியது கிடையாது. தன்னிடம் வலுவான கருத்தியல் ஆயுதங்களை வைத்திருக்கும் யாரும் எதிர்தரப்பைப் பார்த்து அஞ்சுவதும் இல்லை, அடிபணிவதும் இல்லை.

யாருக்குப் பிரச்சினை ஏற்படுகிறதென்றால் பொய்களை மட்டுமே மூலதனமாக வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் புரட்டர்களுக்குத்தான். தன்னால் உண்மைகளை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியவில்லை என்றால், மிரட்டுவது, தாக்குவது, அவதூறு செய்வது, இறுதியில் எதற்கும் மசியாத போது கொலை செய்வது - இதுதான் உலகம் முழுவதும் வலதுசாரி பிற்போக்குக் கும்பல் கடைபிடிக்கும் வழமையான உத்தி.

இன்று நியூஸ் 18, புதிய தலைமுறை போன்ற கார்ப்ரேட் ஊடகங்களில் பணிபுரியும் பல பேருக்கு எதிராக சங்கிக் கும்பல் ஓரணியில் திரண்டிருப்பதற்குக் காரணம் தோற்றுப் போய் மக்கள் முன்னால் ஒரு அற்ப பதரைப்போல காட்சியளிக்கும் மத்திய, மாநில அரசுகளின் உண்மை முகத்தை எந்த அரிதாரத்தைக் கொண்டும் பூசி மொழுக முடியாத நிலைக்கு அது சென்று விட்டதால்தான். இத்தனைக்கும் முற்போக்குவாதிகளுக்கு விவாதங்களில் ஒரு இடம் ஒதுக்கப்படுகின்றது என்றால், சங்கிகளுக்கோ, பிஜேபி, பிஜேபி ஆதரவாளர், வலதுசாரி, ஆர்.எஸ்.எஸ், மோடி ஆதரவாளர், ஆன்மீகவாதி என பல்வேறு பெயர்களில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அப்படி இருந்தும் முற்போக்குவாதிகளால் சங்கிகள் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலை சமாளிக்க முடியாத நிலையே உள்ளது.

குணசேகரனோ, கார்த்திகைச் செல்வனோ, நெல்சன் சேவியரோ, செந்திலோ ஏதோ இந்த நாட்டில் பெரியாரியக் கொள்கையை பரப்ப வேண்டும் என்றோ, இல்லை பாட்டாளிவர்க்க புரட்சி ஏற்பட வேண்டும் என்றோ பெரியரியத்தையோ மார்க்சியத்தையோ பரப்பும் நபர்கள் அல்ல. அவர்கள் பணிபுரிவது முற்று முழுக்க கார்ப்ரேட்டுகளின் நிறுவனத்தில் அது வகுத்திற்கும் கார்ப்ரேட் தர்மத்தற்கு கட்டுப்பட்டு.

ஒரு கார்ப்ரேட் ஊடகம் என்பது எப்போதுமே ஒரு தரப்பு மக்களை மட்டுமே சார்ந்து அவர்களைத் திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கில் இயங்க முடியாது. அது அனைத்துத் தரப்பு மக்களையும், அனைத்து வகையான கருத்தியல்வாதிகளையும் திருப்தி செய்ய வேண்டி இருக்கின்றது. வடமாநில டிவி நிகழ்ச்சிகளைவிட தென்மாநில டிவி நிகழ்ச்சிகளில் முற்போக்கு விடயங்கள் அதிகம் விவாதிக்கப் படுவதற்குக் காரணம் இந்த மண்ணில் அதற்கான பெரிய ஆதரவு தளம் இருப்பதால்தான். அது இல்லை என்றால் குணசேகரனோ, கார்த்திகைச் செல்வனோ, நெல்சன் சேவியரோ, செந்திலோ என்னதான் கத்தி கூப்பாடு போட்டாலும் அதை யாருமே செவிமடுத்து கேட்கப் போவதில்லை.

ஏன் மிதவாத (மிக முக்கியம்) முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை ஊடகங்கள் தேர்ந்தெடுக்கின்றன என்றால் குறைந்தபட்சம் செய்திகளை அறிவுப்பூர்வமாக தருவார்கள் என்ற காரணத்தால்தான். ஒரு செய்தி நிறுவனம் முற்று முழுக்க வலதுசாரிகளை மட்டுமே கொண்டு நடத்தப்பட்டால் அது தினமலத்தைப் போன்று பிற்போக்குவாதிகள் மட்டுமே படிக்கும் பத்திரிக்கையாகவும், தந்தி டிவி போல பஜனை கோஷ்டிகள் மட்டுமே பார்க்கும் காட்சி ஊடகமாகவேதான் காட்சியளிக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் லாப நோக்கில் இயங்கும் பெரும்பாலான கார்ப்ரேட் ஊடகங்கள் இந்த மிதவாத முற்போக்குவாதிகளை பணிக்கு அமர்த்திக் கொள்கின்றன.

நம்மால் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும், தீவிர இடதுசாரித் தத்துவத்தை ஆதரிப்பவர்கள் யாருக்கும் தமிழகத்தில் உள்ள அச்சு ஊடகமோ, இல்லை காட்சி ஊடகமோ பணி வழங்குவதில்லை. ஆனால் இந்த மிதவாத முற்போக்குவாதிகளைக் கூட இங்கே இருக்கும் சங்கிக் கும்பலால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பது அவர்கள் எந்தளவிற்கு அடிபட்டு நொந்துபோய் இருக்கின்றார்கள் என்பதைத்தான் கட்டுகின்றது.

ஒருவேளை மாரிதாஸ் போன்ற சங்கி கும்பலின் பேச்சைக் கேட்டு நியூஸ் 18-னோ, இல்லை புதிய தலைமுறையோ சங்கிகள் சொல்லும் சிலரை வேலையைவிட்டு நீக்குமென்றால், அந்த டிவிக்களின் டிஆர்பி ரேட் தரை மட்டத்திற்கு சென்றுவிடும் என்பதுதான் உண்மை. மக்கள் குறைந்தபட்ச நேர்மையை அந்த ஊடகங்கள் கடைபிடிப்பதாக நினைக்கும் வரைதான் அந்த ஊடகங்கள் கூட உயிர் பிழைத்திருக்க முடியும். இன்றைய இணைய உலகில் எந்த ஒரு பொய்யையும் இட்டுக்கட்டி மக்களை நம்ப வைக்க ஊடகங்களால் முடியாது என்பதுதான் உண்மை. அதனால் மாரிதாஸ் போன்ற பொய்யன்களின் அற்ப ஆசைக்கு எந்த ஊடகமும் தன்னை வலியச் சென்று பலி இட்டுக்கொள்ள விரும்பாது.

மாரிதாஸ் ஒரு கடைந்தெடுத்த பொய்யன் என்பதும், அவன் வாயில் இருந்து வரும் அனைத்துமே பல ஆண்டுகளாக தமிழகத்தில் பெரியாரிய இயக்கங்கள் மீதும், இடதுசாரி இயக்கங்கள் மீதும் அதன் எதிரிகள் சொல்லி வந்த ஆதாரமற்ற அவதூறுகள் என்பதும்தான் உண்மை.

மாரிதாஸின் மூளையில் இருக்கும் பெரும்பகுதி வேலை செய்யவில்லை என்பதற்கும், அது பார்ப்பனிய நோயால் பாதிக்கப்பட்டு செயலிழந்து விட்டது என்பதற்கும் இரண்டு மாரிதாஸின் கட்டுரைகளை மட்டும் பார்த்து விடுவோம்.

முதல் கட்டுரையின் தலைப்பு “மாரிதாஸ் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பது ஏன்?” அதில்,

“... நான் இன்றும் சேகுவேரா , காரல் மார்க்ஸ், பிடல் காஸ்ரோ போன்றவர்களை முழுமையாக மதிக்கிறேன். அன்றும் நான் ரஷ்யாவின் ஸ்டாலினை மதித்தவன் கிடையாது. காரல் மார்க்ஸ் பொருளாதாரப் பார்வையை நடைமுறைபடுத்தும் விதத்தில் நான் ரஷ்யாவின் ஸ்டாலினை முன்பும் கூட எதிர்த்தேன்.

மூன்று நபர்கள் காரல் மார்க்ஸ், சே, பிடல் காஸ்ரோ இன்றும் என் பொருளாதார, பொதுவுடமை சிந்தனைக்கு உரமிட்டவர்கள். அவர்கள் நிறைவேற்ற விரும்பிய தொழிலாளர் நலனை இன்றும் நான் அப்படியே மனதில் வைத்துள்ளேன்.

எதனால் நான் கம்யூனிஸ்ட்களை விட்டு விலகினேன்? ஏன் எதிர்க்கிறேன் இன்று??

நான் முற்றிலும் முரண்பட்டது இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியுடன் தான். அது எதனால்??? ஒரு குறிப்பிட்ட காலம் செல்லச் செல்ல என்னால் இவர்கள் கம்யூனிஸ்ட் ஆட்கள் இல்லை, சீனாவின் வாய்கள் அவ்வளவே என்று உணர முடிந்தது.

ஹிந்து மதம் சார்ந்து விமர்சனம் எழும்போது அதைக் கருத்து சுதந்திரம் என்று ஆதரிப்பதும்; அதே சிறுபான்மையினர் என்றால் அது சிறுபான்மையினர் நம்பிக்கை என்று பேசுவதும் முரண் உருவானது.

என்னைப் பொருத்தவரையில் எல்லா மத உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சாரரை ஆதரிப்பதால் அது இன்னொரு சாரரை தூண்டி விடுவதாக அமையாதா? ஆனால் அதை தானே கம்யூனிஸ்ட்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரே கல்லில் இரண்டு மதத்தையும் அழிக்கும் வேலை.

ஒரு சாதி மாணவர் தூக்கிட்டு இறந்தால் அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காத தலைவர்கள், தலித் சிறுபான்மை மாணவர்கள் என்றால் உடனே நாடு முழுவதும் குரல் எழுப்புவது எனக்கு முரண்பாடாகத் தோன்ற தொடங்கியது.(நான் சாதி பார்ப்பவன் கிடையாது)”

“… காரல் மார்க்ஸ் சொன்னதை நான் 100% கண்மூடித்தனமாக ஏற்று அப்படியே நடக்க வேண்டும் என்பதே முட்டாள் தனமான பேச்சு. அவர் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்வில் சிந்தித்த பொருளாதாரம் அந்தக் காலகட்டத்திற்க்கு ஏற்புடையதாக எந்த மண்ணிற்கு இருக்கும் என் இந்திய மண்ணுக்கு, இந்த காலகட்டத்தில் எப்படி பொதுவுடமை கொள்கை மாற வேண்டும் என்று பேச நான் 'விதாண்டவாதி' ஆனேன்.

“… அமெரிக்க, சீனா , ரஷ்யா , ஐரோப்பிய தேசம் முழுவதும் எப்படியான பொருளாதார கொள்கைகளை நாடுகள் முன்வைக்கின்றன. இந்தியா எப்படியான பொருளாதாரக் கொள்கையை முன்வைக்கிறது என்று எனக்கு படிக்க இந்தக் காலகட்டதில் தான் ஆவல் உருவானது.

அதாவது கண்மூடித்தனமாக கம்யூனிஸ்ட் கொள்கை மட்டும் படித்துவிட்டு பொருளாதாரம் தேடுவது பகுத்தறிவுக்கு சரி என்று படவில்லை. எனவே அனைத்து நாடுகள் பொருளாதாரமும் தேடி படித்தேன்.

இதில் வலதுசாரி கொள்கையும், இடதுசாரி கொள்கையும் இரண்டும் சேர்ந்து இரண்டிலும் நல்ல விசயங்களை இணைத்து பொருளாதார விதிகளை நான் யோசிக்கத் தொடங்கிய காலகட்டம் இது.”

இரண்டாவது கட்டுரை பெரியார் மண் என்று கூறுவது ஒரு துரோகம்!!! அதில்,

“மூச்சுக்கு முப்பது தரம் இது பெரியார் மண் என்று கூறுவதும். பெரியார் மண்ணில் இதுலாம் நடக்காது அதுலாம் நடக்காது என்று பேசுவதும், பெரியார் வந்ததால் தான் நீங்கலாம் படித்தீர்கள் இல்லைனா சும்மா அடிமையா திரிஞ்சுருப்பீங்க தெரியுமா??? அட நமது அப்துல் கலாம் ராக்கெட் விஞ்ஞானியாக உயர்ந்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் ! நம்ம பெரியார் தான் காரணம். இப்படி வம்படியாக பெரியார் என்ற பிம்பத்தை தூக்கிப் பிடிக்கும் தேவை ஒரு பக்கம் அரசியல் காரணமாகவும் – இன்னொரு பக்கம் உழைக்காமல் ஈவெரா விட்டுச் சென்ற சில ஆயிரம் கோடி சொத்தை வைத்து காலத்தை ஓட்டும் கூட்டத்தின் தேவை காரணமாக கொஞ்சம் அதிகமாகத் தான் இவரைத் தூக்கி பிடிக்கிறார்கள்.

“உண்மையில் இந்த ஈவெரா தான் தமிழகத்தைக் காப்பாற்றினார் என்ற ரேஞ்சிக்கு பேசுவதும், அவர் இல்லை என்றால் இங்கே எதுவுமே நடந்திருக்காது என்ற அளவுக்குப் பேசுவது எல்லாம் சுத்த பிதற்றல்கள். Domino effect அப்படினு ஒண்ணு இருக்கு:

வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட சீட்டு கட்டை – முதல் சீட்டை தள்ளிவிட அது ஒரு தொடர் நிகழ்வுகளை உருவாக்கி அனைத்தும் வீழும். இது போல சமூகமும் பத்து பேரை நம்ப வைக்க அந்தப் பத்தில் 4 பேர் நம்பினாலும் அவன் போய் நாற்பது பேரிடம் பேசி பரப்பி விடுவார்கள்.

அந்த வகையில் நூலகங்கள் புத்தகங்கள் முதல் சாலைகளில் பெரியார் சிலைகளை திறப்பது தொட்டு ஊர் ஊருக்கு தெருக்களுக்கு, பேருந்து நிலையங்களுக்கும், கல்லூரிகளுக்கும் பெரியார் அண்ணா என்று பெயர் வைத்து ஒரு மொத்த சமூகத்தையே இந்த விதம் தந்திரமாக வீழ்த்தியுள்ளது திராவிட கட்சிகள்.

ஏதோ ஈவெ ராமசாமி வரவில்லை என்றால் நமக்கு சுயமாக சிந்திக்கக் கூட தெரியாமல் போய் இருக்கும் என்ற தொனிக்கு பேசுவது எல்லாம் இந்த மொத்த மக்களை அவமானம் செய்யும் வேலை. இவர் வருவதற்கு முன் யாரும் தலைவர்கள் வரவே இல்லை என்ற தொனியில் பேசுவது அயோக்கியத்தனம் தவிர வேறு இல்லை”.

இந்த இரண்டு கட்டுரைக்கும் நாம் நிச்சயம் மறுப்பு எழுதப் போவதில்லை. மாரிதாஸுக்கு மார்க்சியமும் தெரியாது, பெரியாரியமும் தெரியாது, முதலாளித்துவம் என்றால் என்னவென்று தெரியாது, கம்யூனிசம் என்றால் என்னவென்று தெரியாது, ஸ்டாலின் ரஷ்யாவில் என்ன செய்தார் என்றும் தெரியாது, இந்திய வரலாறும் தெரியாது, தமிழக வரலாறும் தெரியாது என்பதைக் காட்டவே இவற்றைக் குறிப்பிடுகின்றேன்.

போகிற போக்கில் இவன் அடித்துவிட்டுப் போகும் புருடாவுக்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருந்தால் நாம் கடைசிவரை மாரிதாஸுக்கு பதிலளிப்பதற்காகவே வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டியதுதான். எனவே மாரிதாஸுக்கு தெரிந்தது எல்லாம் பார்ப்பனிய சக்திகளை மகிழ்வித்து கல்லா கட்டுவது ஒன்றுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அற்பவாதி, பிழைப்புவாதி காசுக்காக என்ன செய்வனோ அதைத்தான் மாரிதாஸும் செய்கின்றார். பேருக்காகவும், புகழுக்காகவும் பணத்திற்காகவும் எதையும் செய்யத் துணிபவர்களின் செயலுக்கு ஒப்பானதுதான் மாரிதாஸின் செயலும்.

- செ.கார்கி

Pin It