சென்ற இதழின் தொடர்ச்சி...
ஏஎஸ்எப்ஐ-இன் சார்பில் தாம் பயிலும் துறையின் கவுன்சிலர் பதவிக்கு கன்னையா குமார் போட்டி யிட்டார். மார்ச் 2012-ல் நடந்த இத்தேர்தலில் எஸ்எப்ஐ-யும் ஏஎஸ்எப்ஐ-ம் கூட்டுச் சேர்ந்து ஓரணியாகப் போட்டியிட்டன. எதிரணியில் ஏபிவிபியும் அகில இந்திய மாணவர் அமைப்பும் (AISA) தனித்தனியாகப் போட்டியிட்டன. குறைந்த அளவு உறுப்பினர்களே ஏஎஸ்எப்-பில் இருந்தமையால் முதலாமாண்டு மாணவராக இருந்தபோதிலும் இவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இது முதல் அனுபவமாக அமைந்தது. வாக்குச் சேகரிக்க மாணவர் விடுதிக்குச் செல்லும்போது தமக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்காமல் அறைகளில் இருந்த புத்தகங்களையும் சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது தேர்தல் பொறுப்பாளராகச் செயல்பட்ட மாணவர், இவரை வாக்கு கேட்கும்படித் தூண்டுவார். அதன் பிறகு தமக்கு வாக்களிக்கும்படி வேண்டிவிட்டு, பின் அமைதியாகி விடுவார். இது நகைப்பிற்கிடமாக அமைந்தது.
ஒவ்வொரு துறையிலும் தேர்தலுக்கு முன் அத் துறை மாணவர்களின் பொதுக்குழுக் கூட்டம் நடை பெறும். அக்கூட்டத்தின் மாணவர் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உரையாற்றுவது வழக்கம். முதல் முறையாக இவர் ஒரு கூட்டத்தில் உரையாற்றும்போது ஏபிவிபி-யைத் தோற்கடிக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். இது நல்ல வரவேற்பைப் பெற்றது. என்றாலும் அத்தேர்தலில் இவர் தோல்வியுற்றார்.
2014 நிகழ்வுகள்
2014 பொதுத்தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜேஎன்யூ வளாகத்தில் சில எதிர்மறையான மாற்றங்கள் நிகழத் தொடங்கின. கல்விக் கட்டண உயர்வு, மானியக் குறைப்பு, விடுதிக் கட்டண உயர்வு என்பன நிகழ்ந்தன. கல்வி உதவித் தொகை உயரவில்லை.
தனி மனித உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடங்கின. உணவு விடுதியில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது. மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி குறித்துப் பேசும் மாணவர்கள் நிர்வாகத்தால் குறி வைக்கப்பட்டனர். ரம்ஜான் மாதத்தின்போது குளிர்நீர் வழங்கும் கலனில் மது கலக்கப்பட்டது.
2014-இல் பிரதமர் மோடி, பிரதமராகப் பதவி யேற்கும் நாளில் ஒரு நிகழ்வு நிகழ்ந்தது. 2002-ல் அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது குஜராத்தில் உள்ள கோவில் ஒன்றில் பயங்கரவாதிகளின் தாக்குதல் ஒன்று நடைபெற்றது. இத்தாக்குதலுக்காக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். 11 ஆண்டுகள் கழித்து அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யென்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். உச்சநீதிமன்றம் குஜராத் காவல்துறையைத் தன் தீர்ப்பில் விமர்சனம் செய் திருந்தது. அப்பாவிகள் சிலரைப் போதிய சான்றுகள் இல்லாமல் சிறையில் வைத்திருந்தமை பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இவர்களில் பலர் இளைஞர்கள். செய்யாத குற்றத்திற்காகத் தமது இளமைப் பருவத்தைச் சிறையில் கழிக்க நேர்ந்தது. குஜராத் காவல் துறையைக் கண்டித்து டெல்லியில் உள்ள குஜராத் பவன் முன் ஆர்பாட்டம் நடத்த ஜேஎன்யூ மாணவர்கள் திட்டமிட்டார்கள். இதன் பொருட்டு பேருந்தில் ஏறி புறப்படும் முன், காவல்துறையினர் இவர்களைத் தடுத்து நிறுத்தினர். ஐந்து காவல்துறை வாகனங்களில் வந்த காவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்து மாணவர்கள் எங்கும் செல்லக் கூடாது என்றார்கள். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் அவர்களால் தடுக்க முடியவில்லை. இதனால் மாணவர்கள் ஏறிய பேருந்தைக் கடத்தி, டெல்லியில் அரசியல் எதிர்ப்புக் கூட்டங்கள் நிகழும் ஜந்தர் மந்தார் என்ற இடத்திற்கு கொண்டுசென்று விட்டார்கள். அங்கே இவர் ஆற்றிய உரை காவலர்களையும்கூட ஈர்த்தது.
இந்நிகழ்வு நடந்த அன்று, பாசிச எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு என்ற இரண்டையும் நோக்கமாகக் கொண்ட அணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கருத்தைப் பலர் முன்மொழிந்தார்கள். இதனை ஏற்று இடதுசாரி முற்போக்கு அணி (எல்பிஎப்) என்ற அமைப்பை ஏஎஸ்எப்ஐ உருவாக்கியது. இடதுசாரி அமைப்பு மாணவர்கள், சமூகநீதிக்கான மாணவர் அமைப்பினர், எந்த அமைப்பையும் சாராதோர் எனப் பல்வேறு தரப்பு மாணவர்கள் இவ் அமைப்பில் இணைந்தனர். “ஜெய் பீம், லால் சலாம்” என்பது இதன் முழக்கமாக அமைந்தது.
இம்முழக்கமானது இரண்டு இயக்கங்களை இணைப்பதாக அமைந்தது. சாதியற்ற சமுதாயத்தை அமைக்கப் போராடும் தலித் அம்பேத்கரியர்களின் முழக்கமாக “ஜெய் பீம்” என்ற முழக்கம் அமைந்தது.
சமத்துவ சமூக அமைப்பை உருவாக்குவதற்குப் பாடுபடும் கம்யூனிச இயக்கத்தின் முழக்கமே “லால் சலாம்” ஆகும். இவ்விரு முழக்கங்களும் ஒன்றுட னொன்று நெருக்கமானவையாக அமைந்தன. இவ் வியக்கம் ஜேஎன்யூவின் புதிய அரசியல் உருவாக்கத்தின் அடையாளமாக அமைந்தது. என்றாலும் 2014-ல் நடந்த மாணவர் தேர்தலில் ஏபிவிபி-யே அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
அடுத்து வந்த தேர்தலில் மாற்றம் ஏற்பட்டது. பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராகக் கன்னையா குமார் தேர்வு செய்யப்பட்டார். இவரது பேச்சாற்றலும் விவாதத் திறனும் இவ்வெற்றியில் துணைநின்றன.
- ···
பிஜேபி ஆட்சிக்கு வந்தபின் பல்கலைக்கழகங்கள் உயர் ஆய்வு நிறுவனங்கள் என்பனவற்றில் நிகழ்ந்த நியமனங்கள் பண்பாட்டு நிறுவனங்களைக் கைப்பற்றும் குறுகிய நோக்கிலேயே அமைந்தன.
புனேயில் உள்ள திரைப்படத் தொலைக்காட்சி நிறுவனம், இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகம் (ICHR),, இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT)என்பனவற்றில் நிகழ்ந்த உயர்பதவி நியமனங்கள் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தச் சார்புடையனவாக அமைந்தன. சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர்கள் உருவாக்கிய அம்பேத்கர் பெரியார் ஆய்வு மையம் நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்கொண்டது. உதவித்தொகை வழங்குவதில் நிகழ்ந்த விதிமுறை மாறுதல்கள் அடித்தட்டு மக்களின் கல்வி பயிலும் உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதை எதிர்த்துப் பல்கலைக்கழக மானியக் குழுவின் வளாகத்தினுள் ஜேஎன்யூ மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அமைப்பாளர்கள் கற்பனை செய்யாத வகையில் திரளான மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் வால்தெரு எதிர்ப்பில் நிகழ்ந்த போராட்டம் போல் இது அமைந்து "Occupy UGC "என்ற புதிய முழக்கம் உருவாகி நாடு தழுவிய இயக்கமானது. மனிதவளத் துறையின் அமைச்சரான ஸ்மிருதி ராணி தன் அறையை விட்டு வெளியில் வந்து மாணவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்டார். இது குறித்து 'ஏராளமான ஊடகவியலாளர்கள் வெளியில் காத்திருந்தமைதான் இதற்குக் காரணம். புகைப்படக் கருவியும் அதன் வெளிச்சமும் அவருக்கு முக்கிய மானதாக இருந்தது. ஏழை மாணவனின் வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்துவது அவரது திட்டங்களில் இடம்பெறவில்லை' என்கிறார் கன்னையாகுமார்.
Occupy UGC படைப்பு தன்மையுடன் கூடிய போராட்டமாக பரிணமித்தது. பாடல்கள், கவிதைகள், ஓரங்க நாடகங்கள் என்பன அரங்கேறின. ஜேஎன்யூவில் இருந்தும் பிற நிறுவனங்களிலிருந்தும் வந்த ஆசிரியர்கள் அங்கு வகுப்பு நடத்தினர். நாள் முழுவதும் மாணவர்கள் அங்கு அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
ஒரு சிறு விவாதத்தின் காரணமாக காவல் துறையினர் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இப்போராட்டத்தின் போது பல முறைதடியடி நிகழ்ந்து மாணவர்கள் பலர் காயமடைந்தனர். ஒரு டஜனுக்கு மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்கள்.
அதிர்ச்சியூட்டும் வகையில் ஆண் காவலர்கள் மாணவிகளைத் தாக்கினர். அடக்குமுறையின் உச்ச கட்டமாக இது அமைந்தது. ஜேஎன்யூவில் மாணவர்கள் தம் கொள்கைக்காகப் போராடுவார்கள். ஆனால் அது காவல்துறைக்கோ அரசுக்கோ எதிரான சதி அல்ல. தம் உரிமைகள் ஏன் பறிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளவே அவர்கள் விரும்புவர். ஆனால் காவல் துறையும் அரசும் தம் எதிரிகளாக மாணவர்களைப் பாவித்தனர்.
இந்த நாட்டின் மாணவர்களாக அல்லாமல் நாட்டின் எல்லையில் வந்து நிற்கும் எதிரிகளாகப் பார்த்தது. ‘உலகமே ஒரே குடும்பம்' என்று கூறும் அரசு தன் சொந்த நாட்டுமக்களையே கொடூரமாக அடிக்கிறது. இந்நிகழ்வுகளை இவர் குறிப்பிடுகிறார்.
இப்போராட்டம் மாணவர்களிடையே ஒருங் கிணைப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழக வாழ்க் கையில் ஒவ்வொரு மாணவரும் தமக்கென ஓர் உலகை உருவாக்கிக்கொண்டு அதில் வாழ்ந்து வந்தனர். இதனால் அவர்களை ஒன்றாக இணைப்பது எளிதாக இல்லை. ஆனால் இப்போது பா.ஜ.க. அரசானது கல்விக்கும் அரசியல் அமைப்பு மக்களாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிரானது என்பதை உணர்ந்துகொண்டனர்.
இதனால் அவர்களை ஒருங்கிணைப்பது எளிதாக இருந்தது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த வேறு பாடான சித்தாந்த சார்பைக் கொண்ட மாணவர்கள் சாலையோரத்தில் ஒன்றாக அமர்ந்தார்கள். தார்பாய் களில் படுத்து உறங்கினார்கள். நெருப்பின் முன் அமர்ந்து குளிர் காய்ந்தார்கள்.
தசரா பண்டிகையன்று ராவணனின் கொடும் பாவியை எரிப்பது வழக்கம். செங்கோட்டை அருகே நிகழும் கொடும்பாவி எரிப்பில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இவர்களைக் கடந்து சென்றார். இது அவர் களுக்குப் புதிய போராட்ட வழியைக் காட்டியது. இதன்படி மத்திய அரசை உருவகப்படுத்தி கொடும்பாவி ஒன்றைச் செய்து அதைக் கொளுத்தினார்கள். நள்ளிரவில் காவல்துறையினர் இவர்களைத் தாக்கினார்கள். வலுக்கட்டாயமாகப் பேருந்துகளில் ஏற்றிச்சென்று காவல்நிலையம் ஒன்றில் இறக்கினார்கள். அங்கிருந்த காவலர்கள் இவர்களை நன்றாக நடத்தியதுடன் குளிர் காயவும் உதவினார்கள்.
- •••
Occupy UGC - போராட்டத்தின்போது பீகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மூன்று மாநிலங் களுக்கு கன்னையா குமார் பயணித்தார். பீகாரில் எதிர் பார்த்த்துபோலவே ஆதரவு கிட்டியது. ஜார் கண்டில் ஏபிவிபியினர் எதிராக நின்றார்கள். இப் போராட்டத்தின்போது டில்லி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஏபிவிபி மாணவர்கள் இரவு நேரத்தில் கற்களை எறிந்தார்கள். ராஞ்சி பல்கலைக்கழகத்திலும்
இதே செயலை நடத்த முன்வந்தார்கள். என்றாலும் போராட்டத்தில் ஈடபட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தமையால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. பீகாரிலும் மேற்கு வங்கத்திலும இதே நிலைதான்.
இப்பயணத்தில் ஏராளமான ஆசிரியர்களையும் மாணவர்களையும் இவர் சந்திக்க நேர்ந்தது. இச்சந்திப்பு பல உண்மைகளை இவர் உணரும்படிச் செய்தது. பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் கல்வி பயில சரியான விடுதி வசதிகள் இல்லை. லட்சக்கணக்கில் மாணவர்கள் இருக்க ஆயிரக்கணக்கான மாணவர்கள் மட்டுமே தங்குவதற்கு விடுதிகள் இருந்தன. கல்வி உதவித்தொகை பெறுவதிலும் இடர்ப்பாடுகள் இருந்தன. பல ஏழை மாணவர்கள் உதவித்தொகை பெறாமலேயே பயில நேரிட்டது. இட ஒதுக்கீட்டில் பல்கலைக்கழக மாணவர்களில் சிலர் புதிய சிந்தனைப் போக்குகளை வெளிப்படுத்தினர். இது வகுப்பறைகளில் எதிரொலித்தது... சான்றாக வரலாற்றுப்பாடம் பயிலும் ஓர் ஆதிவாசி மாணவன் ஆதிவாசிகளின் வரலாறு கற்பிக்கப்படவில்லை என்பதை உணர்கிறார்.
தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாண வர்கள் தங்கள் ஜாதி ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்டதல்ல என்றார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டு களாக இந்தியப் பண்பாட்டின் ஓர் அங்கமாக இது இருந்துவருகிறது என்று வாதிட்டனர்.
காந்தி, மார்க்ஸ் என்போருடன் அம்பேத்கரையும் மாணவர்கள் பயிலத் தொடங்கினர். இடதுசாரி இயக்க மாணவர்கள் அம்பேத்கரிய மாணவர்கள், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் என பல தரப்பினரும் ஒன்றிணைந்து ஏபிவிபியை எதிர்த்துப் போராடத் தொடங்கினர்.
- ···
2013ல் முசாபர் நகரில் நிகழந்த வகுப்புக்கலவரம் குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதைத் தடுக்கும் முயற்சியில் ஏபிவிபியினர் ஈடுபட்டனர். டில்லியில் இப்படத்தைத் திரையிடும்போது தாக்குதல் நடத்தினர். ஐதராபாத்தில் ரோஹித் வெமுலா என்ற மாணவர் உட்பட ஐந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இச்செயலில் மத்திய அரசின் மனிதவளத்துறையின் பங்களிப்பும் இருந்தது.
ஐதராபாத் மாணவர்களுக்கு ஆதரவாக டில்லியில் மனிதவளத்துறை அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு முந்திய நாளான ஜுலை 17ல் அதிர்ச்சி தரும் நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற திட்டமானது, ஓர் இயக்கமாக மாற்றமடைந்தது. ரோஹித் வெமுலாவுக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் ஏராளமானோர் திரண்டார்கள். அறிமுகமில்லாத பலரிடமிருந்தும் ஆதரவு கிட்டியது. பக்கோடா விற்பவர் ஒருவர், போராடும் மாணவர்களுக்குப் பக்கோடா வழங்கினார். காவலர்களாலும் சங்க் பரிவாரக் குண்டர்களாலும் தாக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் ஒருவர் கட்டணமின்றி சிகிச்சை அளித்தார்.
ஓர் இயக்கமானது மக்களின் உணர்வுகளைத் தொட்டு, அவர்களின் பிரச்சினைகளை சரியான முறையில் சரியான நேரத்தில் பேசினால் அது பேரியக்கமாக மாறும். கடந்த காலங்களில் பிரமாண்டமான மக்கள் இயக்கங்கள் வலுவான தலைமையில் நிகழ்ந்தன. தற்போது வேறுபாடான முறையில் இயக்கங்கள் நடக்கின்றன. பல்வேறு இடங்களில் சிறு இயக்கங்கள் ஒன்றிணைந்து மக்கள் இயக்கங்களாக உருவெடுக்கின்றன.
எல்லா இடங்களிலும் மக்களுக்கென்று குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இவை தலைவர்களால் கண்டுகொள்ளப்படுவதில்லை. இக் கண்டுகொள்ளாமையே வட்டார அளவிலான சிறு இயக்கங்களை உருவாக்குகின்றன. ஆனால் இவற்றிற்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை. இவ்வியக்கங்களை முன்னெடுத்தும் செல்லும் மக்கள், தங்களைப் போலவே இப்பிரச்சினைகளை எதிர்கொள்வோர் இருப்பதை உணர்கிறார்கள். இருதரப்பினருக்கும் ஒரே எதிரிதான் இருக்கிறார் என்பதைக் கண்டறியும்போது அவர்கள் ஒன்றிணைகிறார்கள். இயக்கம் விரிவடைய மக்கள் ஒன்றிணைவது அவசியமான ஒன்று.
இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் ஒன்றாக வசிப்பவர்கள் மாணவர்கள்தாம். இவர்களில் பலர் இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை வாயிலாக உயர் கல்வியைப் பெறுகிறார்கள். கல்வியைத் தனியார் மயமாக்கல், நிதி நல்கையைக் குறைத்தல் என்பன, தாம் உறுதியற்ற தளத்தில் நிற்கிறோம் என்ற உணர்வைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த உடனேயே மாணவர்கள் உணரும்படி செய்துவிடுகின்றன.
அதே நேரத்தில், தம் குடும்பப் பின்புலத்தையும், தம் சொந்த சமூகத்தையும், தம் கல்வி, ஆய்வு நோக்கு ஆகியவற்றின் துணையுடன் ரோஹித் வெமுலா போல் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். இதுவே தெருவுக்கு வந்து போராடும்படி, அவர்களைத் தூண்டி விடுகின்றது.
தம் சொந்த சமூகத்துடன் அவர்கள் இணைந்திருப் பதால், அவர்கள் கிளர்ந்து எழும்போது அவர்களது சமூகமும் அதில் இணைந்துகொள்கிறது. இதனால் மாணவர் இயக்கம் சமூக இயக்கமாக மாறுகிறது. இதன் விளைவாக நம் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள், குறிப்பாகப் பல்கலைக்கழகங்கள் போர்க்களங்களாகி விடுகின்றன. மாணவர்களுக்கும் ஒடுக்கப்பட்ட சமூகங் களுக்கும் இடையிலான ஒற்றுமையை அரசு விரும்புவது இல்லை. இதில் தொடர்புடையவர்களைத் தண்டிக்கப் பட வேண்டியவர்கள் பட்டியலில் அரசு சேர்த்து விடுகிறது. இவ்வகையில், குறிப்பாக ஜேஎன்யூ, அவர்கள் தாக்குதலுக்கு உரியதாக உள்ளது. பயங்கரவாதிகள் வாழும் இடமாகக் குறிப்பிடப்படுகின்றது.
ரோகித் வெமுலாவின் மரணத்திற்கு நீதி கேட்டுத் தொடங்கிய இயக்கம் குறித்து கன்னையா குமார் விரிவாகக் கூறிச் செல்கிறார்.
தொடரும்